நரேந்திர மோதி: 5 ஆண்டுகளில் முதன்முறையாக செய்தியாளர்கள் சந்திப்பு; கேள்விகளை எதிர்கொள்ளவில்லை

மோதி படத்தின் காப்புரிமை ANI

கடந்த ஐந்து ஆண்டுகளில் முதல் முறையாக பிரதமர் நரேந்திர மோதி இன்று (வெள்ளிக்கிழமை) டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், இரண்டாவது முறையாக பெரும்பான்மையுடன் ஆட்சி அமைப்போம் என்று தெரிவித்தார்.

இந்திய மக்களவை தேர்தலுக்கான பிரசாரம் இன்று மாலையுடன் நிறைவடைகிறது. இந்நிலையில், பிரதமர் நரேந்திரமோதி மற்றும் பாஜக தலைவர் அமித் ஷா இருவரும் இன்று கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர்.

மேலும், கடந்த இரு மக்களவை தேர்தல்களின்போது (2009, 2014), ஐபிஎல் போட்டிகளைக்கூட நடத்த முடியவில்லை. அரசாங்கம் வலுவாக இருந்தால், ஐபிஎல், ரம்சான், பள்ளித் தேர்வுகள் என அனைத்தும் அமைதியாக நடக்கும் என்று பிரதமர் மோதி கூறினார்.

செய்தியாளர்களின் அனைத்து கேள்விகளுக்கும் அமித் ஷாவே பதிலளித்தார். அவருடன் பிரதமர் மோதி இருந்தாலும், அவர் எந்த கேள்வியையும் எதிர்கொள்ளவில்லை.

படத்தின் காப்புரிமை ANI

சந்திப்பின்போது பேசிய அமித் ஷா, இந்த அரசாங்கத்தின் திட்டங்கள் அனைத்து நிலை மக்களையும் சென்றடைந்ததாக கூறினார்.

ஏழைகளுக்காக பல திட்டங்களை பாஜக கொண்டு வந்ததாக குறிப்பிட்ட அமித் ஷா, மக்கள் மீண்டும் இந்த ஆட்சியே வர வேண்டும் என்று விரும்பவதாக தெரிவித்தார்.

பல கேள்விகள் பாஜக வேட்பாளர் பிரக்யா சிங் தாக்கூரை பற்றி இருந்தது.

அது தொடர்பான கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த அமித் ஷா, "கோட்சேவை தேச பக்தர் என்று கூறியது தொடர்பாக பிரக்யா சிங் தாக்கூருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. 10 நாட்களுக்குள் விளக்கமளிக்க வேண்டுமென்று கோரப்பட்டுள்ளது. அவர் பதிலளித்தவுடன் கட்சியின் ஒழங்கு நடவடிக்கைக்குழு அதற்கேற்ப நடவடிக்கையை எடுக்கும்" என்று தெரிவித்தார்.

"ஊழல் இல்லாது நடந்த முதல் தேர்தல் இதுதான். நீண்ட காலத்திற்கு பிறகு மக்கள் இதுபோன்ற ஒரு தேர்தலை பார்த்துள்ளனர்.

2014ஆம் ஆண்டு பாஜக ஆட்சி அமைத்த போது, எங்களிடம் ஆறு மாநில அரசுகள்தான் இருந்தன. தற்போது 16 மாநிலங்களில் நாங்கள் ஆட்சி அமைத்துள்ளோம்.

5 கோடி ஏழை மக்களின் வாழ்க்கைத்தரத்தை உயர்த்தியுள்ளோம்" என்றும் அமித் ஷா தெரிவித்தார்.

பிற செய்திகள் :

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்