மேற்கு வங்கத்தில் தொடர்ந்து அதிக வாக்குப்பதிவு சதவீதம் இருக்க காரணம் என்ன?

மோதி - மம்தா படத்தின் காப்புரிமை Getty Images

நடைபெற்ற மக்களவைத் தேர்தலில், மேற்கு வங்க மாநிலம்தான் பல விவாதங்களின் மையமாக இருந்தது. நரேந்திர மோதி மற்றும் மம்தா பேனர்ஜிக்கு இடையேயான போர், பாஜகவின் பிரசாரம், தேர்தலின் போது நடந்த வன்முறை, என இவையெல்லாம் மேற்கு வங்கத்திலேயே ஒரு தேசிய தேர்தல் நடப்பது போன்ற தோற்றத்தை ஏற்படுத்தியது.

இவ்வளவு குழப்பத்திற்கு இடையேவும், மேற்கு வங்கத்தில் பதிவான வாக்குகளின் சதவீதத்தை பார்த்தீர்களா? அது உங்களை வியக்க வைக்கும். நடந்து முடிந்த ஆறு கட்டத் தேர்தல்களில் மேற்கு வங்கத்தின் வாக்குப்பதிவு சதவீதம் 80.73 ஆகும்.

60 சதவீதத்துக்கே மகாராஷ்டிரா தடுமாறிக் கொண்டிருக்க, மேற்கு வங்கம் அதனை விட 20 சதவீதம் அதிகமுள்ளது. இந்தியாவிலேயே அதிக வாக்குப்பதிவு சதவீதம் பெற்ற மாநிலம் இதுதான்.

மேற்கு வங்கத்தில் மொத்தம் 42 தொகுதிகள் உள்ளன.

ஞாயிற்றுக்கிழமையான நேற்று அங்கு ஏழாம் கட்டத் தேர்தல் நடந்து முடிந்தது. முதல் ஆறு கட்ட தேர்தல்களில் வாக்குப்பதிவு சதவீதம் எவ்வளவு?

  • முதல் கட்டம் - 83.80%
  • இரண்டாம் கட்டம் - 81.72%
  • மூன்றாம் கட்டம் - 81.97%
  • நான்காம் கட்டம் - 82.84%
  • ஐந்தாம் கட்டம் - 73.72%
  • ஆறாம் கட்டம் - 80.35%

இவ்வளவு அதிகமான வாக்குப்பதிவு சதவீதம் பெற என்ன காரணம்? எப்போதுமே அதிகமான வாக்குப்பதிவை மேற்கு வங்கம் கண்டுள்ளது. வட கிழக்கு மாநிலங்கள் அல்லது கேரளா போன்ற சிறிய மாநிலங்கள் அதிக வாக்குப்பதிவு சதவீதம் பெற்றிருக்கின்றன. ஆனால், மேற்கு வங்கம் போன்ற அதிக நிலப்பரப்பு கொண்டு, அதிக தொகுதிகள் கொண்ட மாநிலங்களை பொறுத்த வரை மேற்கு வங்கம் வாக்குப்பதிவு சதவீதத்தில் ஒரு முன்னோடியாக திகழ்கிறது.

2014 மக்களவைத் தேர்தலில் மேற்கு வங்கத்தில் பதிவான வாக்கு சதவீதம் 82.16. அதன் பிறகு 2017 சட்டசபை தேர்தலில் மம்தாவின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றது. சட்டசபை தேர்தலில் 79.22 சதவீதம் வாக்குப்பதிவு இருந்தது.

படத்தின் காப்புரிமை Getty Images

வரலாற்றை சற்று திரும்பி பார்த்தால், மேற்கு வங்க மாநில தேர்தல்கள் அனைத்தும் வன்முறையும் மற்றும் வாக்குச்சாவடிகளை கட்டுப்பாட்டுக்குள் எடுத்துக் கொள்வது என்பது போன்ற சம்பவங்களே இருக்கின்றன. ஆனால் அதே சமயத்தில் அங்குதான் அதிகளவிலான வாக்குப்பதிவு சதவீதமும் இருந்துள்ளது.

அது ஏன்?

மேற்கு வங்கத்தில் வாக்குப்பதிவின் கலாசாரம் ஒரு பரிணாம வளர்ச்சி பெற்றுள்ளது என்கிறார் பிரபல பத்திரிகையாளரான ஷிகா முகர்ஜி.

"இங்குள்ள மக்கள் வாக்களிக்க வேண்டும் என்றும், முடிவெடுக்கும் செயல்முறையில் கலந்து கொள்ள வேண்டும் என்றும் நினைக்கிறார்கள். அவர்கள்தான் தேர்வு செய்ய வேண்டும் என்று நினைப்பார்கள். இதுபோன்று வாக்களிக்கும் கலாசாரத்தை விதைத்ததில் கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஒரு பெரும் பங்கு இருக்கிறது. ஒரு காலத்தில் கம்யூனிஸ்ட் எதிர்கட்சியாக இருந்தது. பிறகு அவர்கள் ஆட்சிக்கு வந்தபோது, அனைத்து நிலை பணியாளர்களும் மக்களின் வீடுகளுக்கு சென்று அவர்களை வாக்குச்சாவடிக்கு அழைத்து வருவார்கள். தற்போது திரிணாமுல் கட்சியும் பாஜகவும் அதையே பின்பற்றுகிறது" என்கிறார் அவர்.

தொண்டர்களையே அடிப்படையாகக் கொண்ட கட்சி அமைப்பையே மேற்கு வங்கம் கொண்டிருக்கிறது. அதுவே அனைத்து நிலை மக்களுக்கும் கட்சியின் கொள்கைகளை எடுத்து செல்கிறது. இது வாக்குப்பதிவு சதவீதம் அதிகரிக்க உதவுகிறது.

"1980 மற்றும் 90களிலும் வாக்குப்பதிவு, 80 சதவீதத்திற்கும் மேல் இருந்துள்ளதை நான் கண்டுள்ளேன்." என்கிறார் பத்திரிகையாளர் ரஜத் ராய். இவர் அம்மாநிலத்தின் அனைத்து பகுதிகளுக்கும் சென்று செய்தி சேகரித்துள்ளார்.

"1977 - 2011 வரை ஒரே கட்சி ஆட்சி அமைத்ததில் இருந்து நாம் ஒன்று புரிந்து கொள்ள வேண்டும். அவர்களுக்கு என்று ஒரு முறை வைத்திருந்தார்கள். மக்களை வாக்களிக்க வற்புறுத்தினார்கள் என்பது உண்மைதான். ஆனால், அதுமட்டும் வாக்குப்பதிவு சதவீதத்தை அதிகரிக்கக் காரணமாகாது. ஆளுங்கட்சியிடம் இருந்து அழுத்தம் வந்தால், மக்கள் வீட்டில் இருந்து வெளியே வந்து வாக்களிப்பார்கள்தான். அதனால், அதிக மக்கள் வாக்களிப்பது என்பது இங்கு ஒரு கலாசாரமாகி விட்டது. 2011 மற்றும் 2018ஆம் ஆண்டுகளிலும் கூட எங்கெல்லாம் ஆளுங்கட்சிக்கு அதிக வாக்குகள் தேவைப்பட்டதோ, அங்கெல்லாம் அதிக வாக்குப்பதிவு சதவீதம் இருந்துள்ளது. அச்சத்தினாலும் வாக்குப்பதிவு சதவீதம் அதிகரிக்கலாம். அது மேற்கு வங்கத்தில் நடந்துள்ளது" என்று ரஜத் ராய் கூறுகிறார்.

இந்தாண்டும் மேற்கு வங்கத்தில் வாக்குப்பதிவு சதவீதம் அதிமாக உள்ளது. ஆட்சியை அகற்ற வேண்டும் என்ற எண்ணத்தில் மக்கள் இருந்தால், அதிகளவில் வாக்குப்பதிவு இருக்கும் என்பது பொதுவான நம்பிக்கை. இந்த நம்பிக்கை மேற்கு வங்க மாநிலத்திற்கு பொருந்துமா?

இந்த கருத்தை ரஜத் ராய் ஒப்புக் கொள்ளவில்லை.

"அதிக வாக்குப்பதிவு சதவீதம் இருக்கும் போதெல்லாம், மக்கள் ஆளுங்கட்சிக்கு எதிராக இருப்பார்கள் என்று சொல்வது சரியாக இருக்காது. மேற்கு வங்கத்தில் பல முறை இதற்கு எதிராக நடந்துள்ளது. ஆனால், இந்த முறை நான் வேறொரு விஷயத்தை கவனித்தேன். வாக்காளர்கள் அமைதியாக இருந்தார்கள். பெரிதாக பேசவில்லை. அந்த அமைதி அபாயகரமானது. இது போன்ற சமயங்களில், ஆளுங்கட்சிக்கு எதிராக இது செல்ல வாய்ப்பிருக்கிறது" என்று ராய் தெரிவிக்கிறார்.

இந்த ஆண்டு கடுமையான போட்டி நிலவியதால் அதிக வாக்குப்பதிவு சதவீதம் இருந்ததாக கூறுகிறார் ஷிகா முகர்ஜி. பல இடங்களில் மூன்று அல்லது நான்கு வேட்பாளர்கள் இடையே போட்டி நிலவுகிறது. இந்த முறை மேற்கு வங்கத்தில் பாஜக அதிக வேலை பார்த்துள்ளது. திரிணாமுல் மற்றும் பாஜகவிற்கு இடையே கடும் போட்டி நிலவும் என்று ஷிகா கூறுகிறார்.

பிற செய்திகள் :

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :