தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் தேவையா அதனை எந்த அளவுக்கு நம்பலாம்? - விவரிக்கிறார் மூத்த பத்திரிகையாளர்

கருத்து கணிப்புகளை எந்த அளவுக்கு நம்பலாம்? படத்தின் காப்புரிமை Getty Images

இந்திய மக்களவை தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பு முடிவுகள் தொடர்பாக மூத்த பத்திரிகையாளர் ஏ.எஸ். பன்னீர்செல்வத்துடன் பிபிசி தமிழ் நேர்காணல் நடத்தியது. அதில் அவர் கூறியவற்றின் சுருக்கத்தை இங்கு தருகிறோம்.

2004 காலக்கட்டம்

பிரக்ஸிட், ஆஸ்திரேலிய தேர்தல் தொடர்பான கருத்துக் கணிப்புகளே பொய்க்கும் போது,இந்தியா போன்ற நாடுகளில் இந்த கருத்து கணிப்புகள் சரியாக இருக்குமா? என்ற சந்தேகம் எனக்கு உள்ளது. அதற்கு காரணம் என்னவென்றால் வாக்கு சதவீதத்தை கணிக்கும் அளவு அது சீட்டாக மாறுமா என்கிற விஷயத்தில் குழப்பம் இருக்கிறது என்கிறார் ஏ.எஸ். பன்னீர்செல்வம்.

முந்தைய கருத்துக்கணிப்புகளும் பொய்த்துள்ளன. தெலுகு தேசத்தின் வெற்றியை கருத்துகணிப்புகள் கணிக்கவில்லை. 2004ம் ஆண்டு வாஜ்பாயின் தோல்வியை கணிக்கவில்லை. அதனால் ஒரு அளவுக்கு மேல் கருத்துக் கணிப்புகள் குறித்து ஓர் ஊடகவியலாளர் கவலை கொள்ள தேவையில்லை என்று பிபிசி தமிழிடம் தெரிவித்தார் ஏ.எஸ்.பன்னீர்செல்வம்.

மேலும் அவர் "2004ம் ஆண்டு தேர்தல் கணிப்புகள் பொய்த்திருக்கின்றன தானே? 'இந்தியா ஒளிர்கிறது' என்ற கோஷத்தை பா.ஜ.க முன் வைத்த போது, பெரும்பாலான கருத்துக்கணிப்புகள் சரியாக பா.ஜ.கவின் தோல்வியை கணிக்கவில்லை" என்கிறார்.

2016 காலக்கட்டம்

2016ம் ஆண்டு நடந்த தேர்தலை சுட்டிகாட்டி பேசும் அவர், "ஒரே மாநிலத்தில் வெவ்வேறு பகுதியை சேர்ந்தவர்களின் மனநிலை 2016ல் மாறியது. அதுவரை தமிழகமெங்கும் ஒரே மாதிரியாக வாக்களித்தவர்கள், இந்த தேர்தலில் வேறு மாதிரியாக வாக்களித்தார்கள். மேற்கு மண்டலத்தை சேர்ந்தவர்கள் ஒரு கட்சிக்கு வாக்களித்தார்கள். இதை எல்லாம் கருத்து கணிப்புகள் உள்வாங்குகின்றனவா?" என்று அவர் கேள்வி எழுப்புகிறார்.

படத்தின் காப்புரிமை Getty Images

மக்களின் கணக்குகள் வேறாக உள்ளன. பத்திரிகைகளின் கொள்கைகளுக்கு ஏற்றவாரு அவர்கள் அந்த பத்திரிகையிடம் தங்கள் கருத்துகளை கூறுகிறார்கள். அதாவது, வலதுசாரி சிந்தனையுடைய பத்திரிகை மக்களை அணுகும் போது அவர்களுக்கு ஏற்றவாரும், மதசார்பின்மை சிந்தனையுடைய பத்திரிகை மக்களை அணுகும் போது அவர்களுக்கு ஏற்றவாரும் கருத்துகளை கூறுகிறார்கள். இதனை என் சொந்த அனுபவத்தில் உணர்ந்திருக்கிறேன். சூழல் இப்படியாக இருக்கும் போது கருத்துக்கணிப்புகளை எந்த அளவுக்கு நம்ப முடியும் என்கிறார் பன்னீர்செல்வம்.

வாக்களிப்பதை மட்டும் ரகசியமாக மக்கள் வைத்து கொள்வதில்லை. யாருக்கு வாக்களித்தோம் என்பதையும் ரகசியமாக வைத்து கொள்கிறார்கள் என்கிறார் அவர்.

தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகள் தேவையா?

"தேர்தல் பல கட்டமாக இரண்டு மாதங்கள் நடக்கும் போது. அந்த தேர்தல் முடிவுகள் குறித்த ஏக்கம் இயல்பாக மக்களுக்கு வருகிறது. அதனை எதிர்கொள்ளும் கடமை ஊடகங்களுக்கு இருக்கிறது. சரி தவறுகளை கடந்து யார் வெல்வார்கள் என்று தெரிந்து கொள்ள மக்களுக்கு உள்ள விருப்பத்தின் வெளிபாடுதான் இந்த கருத்துக் கணிப்புகள்" என்று பிபிசி தமிழிடம் தெரிவித்தார் ஏ.எஸ் பன்னீர்செல்வம்.

விரிவான நேர்காணலை காண:

பிற செய்திகள் :

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :