எக்சிட் போல் முடிவுகள் சொல்லும் செய்தி என்ன? தேர்தல் முடிவுகளுக்குப் பின் கூட்டணி கணக்குகள் மாறுமா?

மோதி ராகுல் காந்தி படத்தின் காப்புரிமை Getty Images

மக்களவைத் தேர்தலுக்கான இறுதிகட்ட வாக்குப் பதிவு முடிந்த அன்றே, இந்திய செய்தி ஊடகங்கள் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகளை வெளியிட்டன.

தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகள் நிஜமாகும்பட்சத்தில் ஆளும் பாரதிய ஜனதா கட்சி, தேசிய ஜனநாயக கூட்டணி மீண்டும் ஆட்சியை பிடிக்கும்.

தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகளின் படி, தேசிய ஜனநாயக கூட்டணி 300 இடங்கள் வரை வெல்லும். இந்தியாவில் மத்தியில் ஆட்சி அமைக்க 273 இடங்கள் தேவை.

தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகளுக்கு அப்பால், பாரதிய ஜனதா கட்சி கூறுவதில் நாம் கவனம் செலுத்த வேண்டும். தனித்தே 300 இடங்களில் வெல்வோமென பா.ஜ.க கூறுகிறது. 2014ம் ஆண்டு தேர்தலில், பா.ஜ.க 273 இடங்களை கைப்பற்றியது.

யாருடன் பா.ஜ.க கரம் கோர்க்கும்?

தேசிய ஜனநாய கூட்டணி போதுமான இடத்தை பெறாத பட்சத்தில், அவர்கள் தெலுகானா ராஷ்ட்ரிய சமிதியுடன் மற்றும் ஜெகன் மோகன் ரெட்டியுடன் கரம் கோர்ப்பதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன.

படத்தின் காப்புரிமை Getty Images

தேர்தல் தொடங்கிய சமயத்தில் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பின் போது அமித் ஷா கூறியது நினைவிருக்கலாம். எங்களது கொள்கைகளுடன் ஒத்து போகும் கட்சிகளை தேசிய ஜனநாயக கூட்டணி வரவேற்கிறது என்றார். இப்போது பா.ஜ.க கதவை மட்டும் திறந்து வைக்கவில்லை, ஜன்னலையும் திறந்து வைத்திருப்பது தெரிகிறது.

ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் இருக்கும் கட்சிகளை தேசிய ஜனநாயக கூட்டணி பக்கம் இழுக்கும் வேலையை பா.ஜ.க தொடங்கிவிட்டது.

தேர்தலுக்கு பிந்தைய எந்த கருத்து கணிப்பும் காங்கிரஸ் தனித்து 100 இடங்களை கைப்பற்றுமென்று கூறவில்லை. ஆனால், அதே சமயம் 2014ம் ஆண்டு நிலையைவிட காங்கிரஸ் கட்சியின் நிலை மேம்பட்டு இருப்பது தெரிகிறது. ராகுலின் தலைமையை இப்போது யாரும் விமர்சிப்பது இல்லை. ஆனால், பிரியங்கா காந்தி குறித்த மக்கள் எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகவில்லை.

காங்கிரஸ் கூட்டணி

கிழக்கு உத்தர பிரதேசத்திற்கான பொறுப்பு ப்ரியங்கா காந்திக்கு கொடுக்கப்பட்டது. அந்த பகுதியில்தான் காங்கிரஸின் நிலைமை கவலைகிடமாக உள்ளது. இதற்கு குறிப்பிடதகுந்த சில காரணங்கள் உள்ளன. அனைவருக்கும் குறைந்தபட்ச வருவாய் உறுதி திட்டமான காங்கிரஸின் நியாய் திட்டம் மக்களிடம் சென்று சேரவில்லை. இந்த திட்டம் செயல்பாட்டுக்கு வருமா என மக்கள் சந்தேகித்தனர். இதனை கடந்து ஒரு முக்கியமான காரணம் உள்ளது. அந்த பகுதியில் பல இடங்களில் கட்சி கட்டமைப்பே காங்கிரஸிற்கு இல்லை.

உத்தர பிரதேசத்தில் தனித்து போட்டியிடுவோம் என்று காங்கிரஸ் முடிவு செய்தது சரியான விஷயம். பகுஜன் சமாஜ் கட்சிக்கும், சமாஜ்வாதிக்கும் நண்பர்களாகவே தொடர்ந்து தேர்தலை சந்திப்பார்களாயின், காங்கிரஸ் கட்சியினர் அயர்ச்சி அடைந்திருப்பார்கள். இருந்தபோதிலும், காங்கிரஸ் கட்சி அங்கு இன்னும் அயராது உழைக்க வேண்டும்.

கூட்டணி விஷயத்தில் காங்கிரஸ் மென்மையாக நடந்து கொண்டு பிழை செய்துவிட்டது என்பதும் சரியான கூற்றல்ல. காங்கிரஸ் ஒரு தேசிய கட்சி. அனைவரையும் ஒன்றிணைத்து இயங்க வேண்டிய தேவை அவர்களுக்கு உள்ளது.

மம்தா - பி.ஜே.பி

வங்காளத்தை பொறுத்தவரை தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு முடிவுகள் பா.ஜ.க இரண்டு இலக்க எண்ணிக்கையில் வெற்றி பெறுமென்று கூறுகின்றன.

படத்தின் காப்புரிமை Getty Images

திரிணாமூல் காங்கிரஸை சேர்ந்தவர்களில் 10 முதல் 15 பேர் தங்களுடன் தொடர்பில் இருப்பதாக பா.ஜ.க கூறுகிறது. வங்கத்தில் சட்டமன்ற தேர்தலும் நெருங்கும் நேரத்தில் இது மிக முக்கியமான விஷயம். ஆனால், அதே நேரம் திரிணாமூல் காங்கிரஸும் அமைதியாக இருக்காது. வரும் நாட்களில் திரிணாமூல் காங்கிரஸுக்கும், பா.ஜ.கவுக்குமான விரோதம் அதிகமாகும்.

மூன்றாம் அணியின் முகம் யார் என்பது தேர்தலுக்கு பின்தான் தெரியும். காங்கிரஸ் கணிசமான தொகுதிகளை வென்றால், இந்த மூன்றாம் அணியில் உள்ள கட்சிகளுடன் இணைந்து அவர்கள் அரசமைக்க கோரலாம். பா.ஜ.க அதிகமான தொகுதிகளை பெற்றால், இவர்கள் பா.ஜ.க பக்கம் சாய்வதற்கும் வாய்ப்பு இருக்கிறது. ஆனால், அதற்காக பா.ஜ.க அதிகம் மெனக்கட வேண்டி இருக்கும். அவர்களுக்கு புதிய புதிய வாக்குறுதிகளை வழங்க வேண்டி இருக்கும்.

படத்தின் காப்புரிமை Getty Images

தெலுங்கானா பிரசாரத்தின்போது அமித் ஷாவும், நரேந்திர மோதியும், காங்கிரஸை குறி வைத்து பேசினார்களே தவிர டி.ஆர்.எஸ் கட்சியை குறி வைக்கவில்லை. அது போல ஆந்திரத்திலும், பா.ஜ.கவினர் தெலுகு தேசத்தை குறி வைத்தார்கள், ஒய்.எஸ்.ஆர் கட்சியை அல்ல.

ஒடிசாவில் நவீன் பட்நாயக்கை தொடர்ந்து தாக்கி பேசி வந்தது பா.ஜ.க. ஆனால் கடைசி நேரத்தில், குறிப்பாக ஃபானி புயல் தாக்கிய பின் பிரதமர் ஒடிசாவை பார்வையிட்டார். மீட்பு பணிகள் தொடர்பாக பட்நாயக்கை பாராட்டினார். தேர்தல் முடிவுகளுக்கு பிந்தைய கூட்டணிக்கான சமிக்ஞையாக இதனை புரிந்து கொள்ளலாம்.

தமிழ்நாட்டை பொறுத்தவரை சூழல் வேறு விதமாக உள்ளது. தேசிய ஜனநாயக கூட்டணி 7 தொகுதிகள் வரை வெல்லும் என கணிப்புகள் கூறுகின்றன. அதுவும் அதிமுகதான் வெல்லுமென தெரிகிறது. இங்கு ஐக்கிய முற்போக்கு கூட்டணிதான் வலுவாக உள்ளது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :