இந்திய ரயில்வேவுக்கு பயணச்சீட்டை ரத்து செய்தவர்களால் மலைக்க வைக்கும் லாபம்

ரயில் பயணச்சீட்டு படத்தின் காப்புரிமை Getty Images

முக்கிய இந்திய நாளிதழ்கள் சிலவற்றில் வெளியான கட்டுரைகள் மற்றும் செய்திகளைத் தொகுத்து வழங்குகிறோம்.

தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்: 'தொடர்வண்டி பயணச்சீட்டை ரத்து செய்தவர்களால் ரயில்வே துறைக்கு 5366 கோடி லாபம்'

தொடர்வண்டி பயண்ச்சீட்டை ரத்து செய்தவர்களால் ரயில்வே துறை 5366 கோடி லாபம் அடைந்துள்ளதாக தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழ் செய்தி கூறுகிறது.

தொடர்வண்டி பயணச்சீட்டை ரத்து செய்தால் கட்டணம் வசூலிக்கப்படும் என்று 2015ஆம் ஆண்டு நவம்பர் மாதம் கொள்கை முடிவு எடுத்தது. 2015-2019ம் ஆண்டு காலக்கட்டத்தில் ரத்து செய்தவர்களிடமிருந்து இந்த 5366 கோடி ரூபாய் தொகை கட்டணமாக வசூலிக்கப்பட்டுள்ளதாக தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழ் விவரிக்கிறது.

படத்தின் காப்புரிமை இந்து தமிழ்

தினமணி: 'குடிநீருக்காக பவானி ஆற்றுக்கு படையெடுக்கும் யானைகள்'

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption கோப்புப் படம்

சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் கடும் வறட்சி நிலவுவதால் அப்பகுதியிலிருந்து பவானிசாகர் அணை நீர்த் தேக்கப் பகுதிக்கு யானைகள் கூட்டமாச் சென்று தாகத்தைத் தணித்துக்கொள்கின்றன என்கிறது தினமணி நாளிதழ் செய்தி.

"ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் புலிகள் காப்பகம், தமிழகத்தில் உள்ள நான்கு புலிகள் காப்பகங்களில் அதிக பரப்பளவைக் கொண்டதாகும். புலிகள் காப்பக வனப் பகுதியில் யானைகள் அதிக அளவில் உள்ளன. சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப் பகுதியில் கடுமையான வறட்சி நிலவுவதால் பள்ளங்கள், தடுப்பணைகள், வனக் குட்டைகள் உள்ளிட்ட நீர்நிலைகள் வறண்டு காணப்படுகின்றன. இதன் காரணமாக யானைகள் கூட்டம் தாகத்தைத்தணிப்பதற்காக பவானிசாகர் அணையின் நீர்தேக்கப் பகுதியில் உள்ள பவானி மற்றும் மாயாறு ஆகிய இரண்டு ஆறுகளுக்குச்சென்று தண்ணீர் குடிக்கின்றன.

நீலகிரி கிழக்கு சரிவு வனப் பகுதியில் இருந்து திங்கள்கிழமை காலையில் குட்டிகளுடன் வந்த யானைகள் ஒவ்வொன்றாக பவானி ஆற்றில் இறங்கி தண்ணீர் குடித்துவிட்டு, சிறிது நேரம் ஆற்று நீரில் விளையாடிய பின்னர் மீண்டும் வனப் பகுதிக்குச் சென்றன. இந்நிலையில், பவானிசாகர் அணை நீர்த்தேக்கப் பகுதியில் ஆடு, மாடு போன்ற கால்நடைகளை மேய்ப்பவர்கள் யானைகள் நடமாட்டம் உள்ளதால் கவனத்துடன் இருக்க வேண்டுமென வனத் துறையினர் எச்சரித்துள்ளனர்." என்று விவரிக்கிறது அந்நாளிதழ்.

இந்து தமிழ்: 'தமிழகத்தில் போக்சோ சட்டத்தில் கைதானவர்களில் 10% குற்றவாளிகளுக்கு மட்டுமே தண்டனை'

போக்சோ சட்டத்தின் கீழ் 10 சதவீதத்துக்கும் கீழான குற்றவாளிகளுக்கு மட்டுமே தண்டனை வழங்கப்பட்டுள்ளது. எனவே, சிறப்பு நீதி மன்றங்களை அமைக்க வேண்டும் என்று குழந்தைகள் உரிமை செயற்பாட்டாளர்கள் கோரிக்கை வைத்துள்ளனர் என்கிறது இந்து தமிழ் நாளிதழ் செய்தி.

அந்நாளிதழ் செய்தி பின்வருமாறு விவரிக்கிறது:

"குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களை தடுப்பதற்காக போக்சோ சட்டம் கடந்த 2012ம் ஆண்டு நடைமுறைக்கு கொண்டு வரப்பட்டது. இந்த சட்டத்தின் கீழ் அதிகபட்சமாக மரண தண்டனை வரை விதிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. போக்சோ சட்டத்தின்கீழ் ஆண்டுதோறும் பதிவு செய்யும் வழக்குகளின் எண் ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இருப்பினும், குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுதருவதில் தேக்க நிலையே இருந்து வருகிறது.

தேசிய குற்ற ஆவண காப்பகத் தின் அறிக்கையின் அடிப்படையில், தமிழகத்தில் போக்சோ சட்டத்தின் கீழ் 2014-ம் ஆண்டு 1065 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. தீர்ப்பு பெறப்பட்ட வழக்குகளின் எண்ணிக்கை 73. அதில் தண்டிக்கப் பட்டவர்கள் 65. 2015-ம் ஆண்டு 1,544 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 133 வழக்குகளில் தீர்ப்பு பெறப்பட்டு 143 பேர் தண்டிக்கப் பட்டுள்ளனர். 2016-ம் ஆண்டு 1,583 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. தீர்ப்பு பெறப்பட்ட வழக்குகள் 199, தண்டிக்கப்பட்டவர்கள் 214. இவ்வாறு, 10 சதவீதத்துக்கும் கீழான குற்றவாளிகள்தான் தண்டிக்கப்பட்டுள்ளனர்.

இந்தச் சட்டத்தின் மூலம் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களில் ஈடுபடுவோர் மீதான வழக்கை 3 மாதங்களுக்குள் முடித்து தண்டனை கொடுக்க வேண்டும். இதற்காக, சிறப்பு நீதிமன்றங்களை அமைக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி ராஜஸ்தான், குஜராத் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் சிறப்பு நீதிமன்றங்கள் அமைக் கப்பட்டுள்ளன. ஆனால், தமிழகத் தில் சிறப்பு நீதிமன்றங்கள் இதுவரை அமைக்கப்படவில்லை. அதற்கு பதிலாக, மகிளா நீதிமன்றங்களில் இந்த வழக்குகள் விசாரணை செய் யப்பட்டு வருகின்றன. எனவே, குற்றவாளிகளுக்கு விரைவாக தண்டனை பெற்றுத் தர சிறப்பு நீதிமன்றங்களை அமைக்க வேண்டும் என்று குழந்தைகள் உரிமை செயற்பாட்டாளர்கள் கோரிக்கை வைக்கின்றனர்."

தினத்தந்தி: 'பி.எஸ்.எல்.வி. சி-46 ராக்கெட் நாளை விண்ணில் பாய்கிறது'

பூமி கண்காணிப்புக்கான செயற்கைகோளை சுமந்தப்படி பி.எஸ்.எல்.வி. சி-46 ராக்கெட் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து நாளை விண்ணில் பாய்கிறது என்கிறது தினத்தந்தி.

ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து நாளை (புதன்கிழமை) காலை 5.27 மணிக்கு பி.எஸ்.எல்.வி. சி-46 ராக்கெட் விண்ணில் ஏவப்படுகிறது. 'ரீசாட்-2பிஆர்1' என்ற பூமியை கண்காணிப்பதற்காக வடிவமைக்கப்பட்ட செயற்கைகோளை இந்த ராக்கெட் சுமந்துகொண்டு செல்கிறது.

இதற்கான இறுதிகட்ட பணியான 25 மணி நேர 'கவுண்ட்டவுன்' இன்று (செவ்வாய்க்கிழமை) அதிகாலை 4.27 மணிக்கு தொடங்கியது. தொடர்ந்து ராக்கெட்டின் செயல்பாட்டை விஞ்ஞானிகள் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

விண்வெளி ஆராய்ச்சியை மேம்படுத்துவதுடன், விண்வெளி தொடர்பான தகவல்களை பொதுமக்கள் தெரிந்துகொள்வதற்காக ராக்கெட் ஏவுவதை பார்வையிட அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். இதற்காக சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் 5 ஆயிரம் பேர் அமர்ந்து பார்வையிடும் அளவில் 'கேலரி' அமைக்கப்பட்டு உள்ளது. 10 வயதுக்கு மேற்பட்டவர்கள் இஸ்ரோ இணையதளத்தில் பெயர் பதிவு செய்ய அறிவுறுத்தப்பட்டு இருந்தனர். அதன்படி பலர் பதிவு செய்து உள்ளனர்.

இந்த 'கேலரி', ஏவுதளத்தில் இருந்து 3 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது. அங்கிருந்து பார்வையாளர்களால் ஏவுதளத்தை பார்வையிட முடியும் என இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.

- என்கிறது தினத்தந்தி நாளிதழ்.

பிற செய்திகள் :

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :