தூத்துக்குடி துப்பாக்கி சூடு: ஸ்னோலின் நினைவஞ்சலிக்கு போலீசை அழைத்த தாய்

ஸ்னோலின்

கடந்த ஆண்டு மே 22ம் தேதி தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட கோரி நடந்த நூறாவது நாள் போராட்டத்தில் கலந்துகொண்டு துப்பாக்கிச்சூட்டுக்கு பலியானார் 18 வயது ஸ்னோலின்.

வழக்கறிஞராக வேண்டும் என்ற உறுதியடன் இருந்தவர் ஸ்னோலின். தூத்துக்குடி மக்கள் பலரும் குடும்பத்துடன் கலந்துகொண்ட போராட்டத்தில், ஸ்டெர்லைட் ஆலையை மூடவேண்டும் என்ற கோரிக்கைக்காக மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நோக்கி நடந்த மக்கள் திரளில் இருந்தார்.

துப்பாக்கிச்சூட்டில் ஸ்னோலின் கோரமாக வாயில் சுடப்பட்டு இறந்தார். போராட்டத்தில் இறந்த 13 நபர்களில் இளவயது நபர் இவர்தான். ஸ்னோலினின் இழப்பிலிருந்து மீளாத அவரது குடும்பத்தைச் சந்தித்தோம்.

மினிசஹாயபுரத்தில் உள்ளது ஸ்னோலினின் வீடு. அவரது இல்லத்திற்கு அருகில் உள்ள சர்ச்சில் நடக்கும் நினைவேந்தலுக்காக அவரது நண்பர்கள் ஸ்னோலினின் படங்களை தந்துள்ளார்கள். வீட்டின் முன் அறை முழுவதும் ஸ்னோலினின் படங்கள் ஆக்கிரமித்துள்ளன.

ஸ்னோலினின் முதலாமாண்டு நினைவேந்தலுக்காக அச்சிடப்பட்ட அழைப்பிதழை கொடுத்தார் அவரது தாய் வனிதா. அதில், வீட்டுக்காக 2000ல் பிறந்த ஸ்னோலின் நாட்டுக்காக 2018ல் மறைந்தார் என குறிப்பிடப்பட்டுள்ளது.

''இனி என் மகளுக்கு கல்யாணமா நடத்தப்போறேன். முதல் ஆண்டு நினைவேந்தல் நிகழ்ச்சிக்கு எல்லோரையும் அழைச்சிருக்கேன். எத்தனையோ மக்கள் என் மகளுக்காக கண்ணீர் விட்டாங்க. எளிமையாக சர்ச்சில் நடக்கும் இந்த நிகழ்ச்சிக்கு எல்லோரும் வரணும். அரசு அதிகாரிங்க, போலீஸ்காரங்களையும் அழைச்சிருக்கேன். அவுங்கள மன்னிச்சிட்டேன். அன்பு மட்டும்தான் நிஜம்னு என்னோட ஸ்னோலின் சொல்லுவா. அவளுக்காக, அவளுக்கு பிடிச்ச மாதிரி நடந்துக்கிறேன்,'' என கண்ணீருடன் அழைப்பிதழை தந்தார் வனிதா.

''என் அருகில் அவள் படுத்துக்கொள்வாள். நிறைய பேசுவாள். விதவிதமான கனவுகளை சொல்லுவாள். குடும்ப உறுப்பினர்கள் மீது வைத்துள்ள அன்பு போலவே அவளது நண்பர்களிடமும் அன்பு. எல்லோருக்கும் உதவவேண்டும் என எண்ணம். ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக முன்னர் நடந்த போராட்டங்களை பார்த்துவிட்டு, வீட்டில் எல்லோரிடமும் பேசுவாள்'' என ஸ்னோலின் போராட்டத்தில் கலந்துகொண்ட நினைவுகளை பகிர்ந்தார் தாய் வனிதா.

''புற்றுநோயால் இறந்த கணவர், குழந்தைகளை பற்றி இளம்பெண்கள் பேசிய உரைகளை கேட்ட ஸ்னோலின் நம் வீட்டில் இதுபோல நடந்தால் அமைதியாக இருப்போமா? என பேசுவாள். போராட்டத்திற்கு கண்டிப்பாக போகவேண்டும் என முடிவுசெய்தாள்,'' என அவர் மேலும் கூறினார்.

படத்தின் காப்புரிமை Getty Images

ஸ்னோலினின் இழப்பை அடுத்து, ஒரு விஷயம் அவரது வீட்டில் மாறியுள்ளது. இல்லத்தரசியாக மட்டுமே இருந்து வந்த வனிதா, தற்போது தன்னைச் சுற்றி, தமிழகம், இந்தியா, உலகம் முழுவதும் நடக்கும் சுற்றுச்சூழல் பிரச்சனைகள், வன்முறை சம்பவங்கள், அரசியல் குழப்பங்கள் என எல்லா செய்திகளை கூர்ந்து கவனித்துவருகிறார்.

''அவளது இழப்பை ஈடுகட்ட முடியாது. எல்லோரும் ஆறுதல் சொல்வார்கள். இழப்பின் வலி எனக்குதான் அதிகம்''

''இப்போதெல்லாம், எல்லா செய்திகளையும் பார்க்கிறேன். நம்மைச் சுற்றி என்ன நடக்கிறது என்பதை கவனிக்கவேண்டும் என கற்றுக்கொடுத்துவிட்டாள் என் மகள். என்னை சந்திக்க எத்தனையோ பேர் வருகிறார்கள். என் மகளைப் பற்றி பேசுகிறார்கள். அவளது தியாகத்தை பற்றி என்னிடம் கேட்கிறார்கள். இந்த வாழ்க்கை எனக்கு புதிது. உலகம் முழுவதும் பல சொந்தங்களை எனக்கு என் மகள் அள்ளித்தந்துவிட்டு போய்விட்டாள்,''என்கிறார் வனிதா.

ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்கப்படாது என்ற நம்பிக்கையுடன் இருப்பதாக கூறும் வனிதா, போராட்ட மனநிலையில் இருந்த மக்கள் அமைதியோடு வாழ தினமும் பிரார்தனை செய்துவருவதாக கூறுகிறார்.

''என் மகளை மேலும் படிக்கவைக்கவேண்டும், அவளுக்கு நல்ல வாழ்க்கையை அமைத்துதரவேண்டும் என்பதுமட்டும் என் இலக்காக இருந்தது. அவள் தியாக மரணம் அடைந்துவிட்டதால், பிரார்தனை மட்டுமே எனக்கான வாழ்க்கையாக மாறிவிட்டது,'' என்றார் வனிதா.

பிற செய்திகள் :

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்