பிபிசியும் சிஐஏவும் இணைந்து சர்வே எடுத்ததாக வைரலாகும் போலி செய்தி #BBCFactcheck

தேர்தல்

பிபிசியால் நடத்தப்பட்டதாக கூறப்படும் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு என்று சமூக வலைதளங்களில் போலியான சர்வே ஒன்று பகிரப்பட்டு வருகிறது.

அந்த சர்வேயில் பிபிசி நடத்திய தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பில் நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி தோல்வியடையும் என்று சொல்வதாக கூறப்படுகிறது.

வைரலாகும் அந்த சர்வே, பிபிசி மற்றும் அமெரிக்க உளவு முகமையான சிஐஏ இணைந்து நடத்தியதாக கூறப்படுகிறது. அதில் மக்களவைத் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி 177 இடங்களில் வெற்றி பெறும் என்றும், ஐக்கிய முற்போக்குக் கூட்டணி 200 இடங்களுக்கு மேல் கைப்பற்றும் என்றும் கூறப்பட்டுள்ளது.

படத்தின் காப்புரிமை SM Viral Post
Image caption இது போலியான கணிப்பு. பிபிசி இப்படி எந்தக் கணிப்பும் நடத்தவில்லை.

இந்த சர்வே வாட்சப்பில் பரவலாக பகிரப்பட்டு வருகிறது. அதில் உத்தரப் பிரதேசத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணி 18-23இடங்களை கைப்பற்றும் என்றும், மேற்கு வங்கத்தில் 3-5 இடங்களை கைப்பற்றும் என்றும், பிகாரில் 8-9 இடங்களைக் கைப்பற்றும் என்றும் கூறப்பட்டுள்ளது.

எங்கள் நேயர்களில் 300க்கும் மேற்பட்டவர்கள் இந்த செய்தியை வாட்சாப்பில் பகிர்ந்து அதன் உண்மைத் தன்மையை சோதிக்குமாறு கேட்டனர்.

பிபிசியின் விளக்கம்

பிபிசி இம்மாதிரி எந்த கருத்துக் கணிப்பும் எடுப்பதில்லை என்று பலமுறை தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. இந்த முறையும் பிபிசி எந்த கருத்துக் கணிப்பும் நடத்தவில்லை.

இது பற்றிக் கூறிய பிபிசி தமிழ் சேவை ஆசிரியர் தங்கவேல் அப்பாச்சி, "பிபிசி கருத்துக் கணிப்புகள் நடத்தியதாக பலமுறை தவறான தகவல்கள் பரப்பப்பட்டுள்ளன. இப்போதுகூட பிபிசி வாக்குப் பதிவுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பு நடத்தியதாக ஒரு தகவல் வாட்சாப்பில் பரப்பப்படுகிறது. ஆனால் உண்மையில் பிபிசி அப்படி எந்த கணிப்பும் நடத்தவில்லை. எப்போதும் நடத்துவதும் இல்லை" என்று தெரிவித்துள்ளார்.

"பிபிசி எந்த ஒரு தேர்தல் சர்வேயும் எடுப்பதில்லை அல்லது எதாவது ஒரு தரப்பால் எடுக்கப்பட்ட சர்வேயையும் பிரசுரிப்பதில்லை. சிலர் பிபிசியின் நம்பகத்தன்மையை பயன்படுத்திக் கொள்ள முயல்கின்றனர். இம்மாதிரியான சர்வே மாநில சட்டசபை தேர்தல்களில் கூட பகிரப்பட்டது ஆனால் அம்மாதிரி எந்த ஒரு சர்வேயும் எடுக்கப்படுவதில்லை."என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

பழைய சர்வேகள்

தேர்தல் முடிவுகள் குறித்து தவறான தகவல்களை பரப்ப பிபிசியின் பெயரை பயன்படுத்துவது இது முதல்முறையல்ல.

ஹரியானா, மத்தியப் பிரதேசம், உத்தரப் பிரதேசம் மற்றும் ராஜஸ்தான் ஆகிய மாநில தேர்தல்களிலும் இம்மாதிரியாக பிபிசி பெயரில் போலி சர்வே முடிவுகள் பகிரப்பட்டன

இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் பிபிசி வெளியிட்ட செய்தியில் சமூக வலைதளங்களில் பிபிசியின் பெயரால் வைரலாகும் சர்வேக்கள் போலியானவை என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

ஒரு நம்பகத்தன்மைக்காக பிபிசி முகப்பு பக்கமும் அந்த செய்தியுடன் இணைக்கப்பட்டது.

வாட்சாப்பிலோ அல்லது ஃபேஸ்புக்கிலோ பிபிசி பெயரில் நீங்கள் ஏதாவது கருத்துக் கணிப்புகளைக் கண்டால் அதை நம்பாதீர்கள்.

பிற செய்திகள் :

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்