காங்கிரஸ் கட்சி தோல்வியடைய முக்கிய காரணமென்ன?

ராகுல் காந்தி
படக்குறிப்பு,

ராகுல் காந்தி

"தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகள் வெளியான போது, இந்த அளவிற்கு அதீத எண்ணிக்கையில் பாஜக வெற்றிபெறுமா என்று நாம் அனைவரும் சந்தேகமடைந்தோம். பண மதிப்பிழப்பு, ஜிஎஸ்டி, பொருளாதார மந்தநிலை, 45 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு வேலைவாய்பின்மை என பல்வேறு குழப்பங்கள் நீடித்ததால் மக்களின் ஆதரவை பாஜக பெறுமா என்ற சந்தேகமும் எழுந்தது"

"ஆனால், தற்போது வெளியான முடிவுகளை பார்க்கும் போது இந்திய அரசியல் களத்தில் பாஜக மிக அழுத்தமாக தனது காலை பதித்துள்ளது. எதிர்தரப்பில் கூட்டணிக் கட்சிகளிடம் ஒற்றுமை இல்லாததையும் தேர்தல் முடிவுகள் வெளிப்படுத்தியுள்ளன" என்று பிபிசி தமிழுடனான நேர்காணலின்போது மூத்த பத்திரிகையாளரும், எழுத்தாளருமான வாஸந்தி கூறினார்.

கேள்வி: சமீபத்தில் நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தல்களில் காங்கிரஸ் வெற்றிபெற்ற மாநிலங்களில் கூட பாஜக முன்னிலை பெற்றுள்ள காரணம் என்ன?

பதில்: சத்தீஸ்கர் தவிர மத்திய பிரதேசம் மற்றும் ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில் காங்கிரஸ் பெரிய அளவில் வெற்றிபெறவில்லை. அதே போன்று வெற்றிபெற்ற 4 மாதங்களில் அவர்கள் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவதும் கடினம்.

மேலும், மத்தியில் யார் வர வேண்டும் மாநிலத்தில் யார் வர வேண்டும் என இந்திய மக்கள் தெளிவுடன் உள்ளனர். எதிரணியிடம் தலைமையை தீர்மானிப்பதில் பிரச்சனை உள்ளது. பாஜகவை பொறுத்தவரை அமித் ஷாவின் திட்டங்கள் துல்லியமாக இருந்தன. பிரதமர் வேட்பாளரை பார்த்து மக்கள் வாக்களிக்கும் நிலை உருவாகியுள்ளது.

படக்குறிப்பு,

வாஸந்தி

கேள்வி:2004-ம் ஆண்டில் நடைபெற்ற தேர்தலில் வாஜ்பாய் அவர்களை பிரதமர் வேட்பாளராக நிறுத்திய பாஜக தோல்வியை சந்தித்தது. அப்போதும் காங்கிரஸ் தனது பிரதமர் வேட்பாளரை அறிவிக்கவில்லையே?

பதில்: 2004-ம் ஆண்டிலிருந்து இப்போது வரை 15 ஆண்டுகளாக பல்வேறு மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. உலக அரசியலே மாற்றம் கண்டுள்ளது. வலிமையான தலைவர் வேண்டும் என்ற எண்ணம் மக்களிடையே பரவியுள்ளது. வலதுசாரி பாதையை நோக்கி உலகம் சென்று கொண்டிருக்கிறது. இந்த நிலையில் தான் மோதி தன்னை வலிமையான தலைவராக முன்னிறுத்தியுள்ளார்.

மக்களை ஈர்க்கக்கூடிய வசீகரம் மோதியின் பேச்சில் உள்ளது. பல்வேறு நடவடிக்கைகள் மக்களுக்கு எதிராக இருந்தாலும், அனைவரது மனதையும் அவர் மாற்றியுள்ளார். முக்கியமாக புல்வாமா தாக்குதல் விவகாரத்தை மிகவும் சாமர்த்தியமாக தனக்கு சாதகமாக மாற்றிக் கொண்டார்.

கேள்வி:பாஜக மேல் எழுந்த குற்றச்சாட்டுகளை காங்கிரஸ் மக்களிடம் எடுத்துச் செல்லவில்லையா?

பதில்: சில நடவடிக்கைகளை மக்களிடம் காங்கிரஸ் எடுத்துச் சென்றது. அதே நேரத்தில் தவறான விஷயங்களுக்கு அதீத முக்கியத்துவம் கொடுத்தார்களோ என்ற ஐயமும் எழுகிறது. காங்கிரஸ் சிறப்பான தேர்தல் அறிக்கையை தயாரித்திருந்தாலும் அதை மக்களிடன் கொண்டு செல்வதில் காலதாமதமாகிவிட்டது.

கட்சியில் பல்வேறு தலைவர்கள் இருந்தும் ராகுல் காந்தி மட்டுமே மக்களிடம் அதிகமாக கலந்துரையாடினார். ஆனால், பாஜகவின் நிர்வாகத்திறன், தேர்தல் பணிகள் மற்றும் ஆர்எஸ்எஸ் அளித்த ஆதரவு பெரிய வலிமையாக மாறியது.

படக்குறிப்பு,

நரேந்திர மோதி

கேள்வி:தமிழ்நாடு மற்றும் கேரளா இதில் விதிவிலக்காக உள்ளதே?

பதில்: விந்திய மலைக்கு மேல், விந்திய மலைக்கு கீழ் என இந்தியாவை இரண்டு விதமாக பிரிக்கலாம். இந்தியா - பாகிஸ்தான் பிரிவினை வட மாநிலங்களில் அதிகமான பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆனால், தென் மாநிலங்களுக்கு இந்த பிரச்சனை இல்லை.

மேலும் தென் மாநிலங்களில் மத நல்லிணக்கம் பரவலாக உள்ளது. குறிப்பாக தமிழ்நாட்டில் திரவிடப் பண்பாடு வேரூன்றியுள்ளது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :