பா.ஜ.க. தமிழகத்தில் தோல்வியடைய காரணம் என்ன? - விவரிக்கிறார் தமிழிசை

மோதி படத்தின் காப்புரிமை Getty Images

முக்கிய இந்திய நாளிதழ்கள் சிலவற்றில் வெளியான கட்டுரைகள் மற்றும் செய்திகளைத் தொகுத்து வழங்குகிறோம்.

தினத்தந்தி: `தமிழகத்தில் பா.ஜ.க. தோல்வியடைய காரணம் என்ன?'

தமிழகத்தில் பா.ஜ.க. தோல்வியடைய காரணம் என்ன? என்பது குறித்து தமிழிசை சவுந்தரராஜன் விளக்கம் அளித்துள்ளார்.

கடந்த சில ஆண்டுகளாக நல்ல திட்டங்களையும் தவறான திட்டங்களாக முன்னிறுத்தி அது மிக அதிகளவில் பிரசாரங்களாக முன்னெடுத்து செல்லப்பட்டு, இன்று தமிழக மக்கள் அதற்கு செவிசாய்த்து வாக்குகளை கொடுத்து இருக்கிறார்கள் என்று தமிழிசை கூறியதாக செய்தி வெளியிட்டுள்ளது தினத்தந்தி.

படத்தின் காப்புரிமை Twitter

"தூத்துக்குடியில் மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்று தான் வேட்பாளராக இங்கு வந்தேன். இந்த பகுதி மக்களுக்கு என்ன செய்ய வேண்டும் என்று குறித்து வைத்திருந்தேன். எனக்கு வாக்களித்தவர்கள், வாக்களிக்காதவர்களும் பயன்பெறும் வகையில் தூத்துக்குடியில் எனது மக்கள் பணி தொடரும். கூட்டணி கட்சியினர் அனைவருக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

கடந்த கால அரசியலை கொண்டு பார்க்கும்போது, மக்கள் தேர்ந்தெடுத்தவர் ஊழல் குற்றச்சாட்டு உள்ளவர் என்பதை மறந்து விடக்கூடாது. எது எப்படி இருந்தாலும் மக்களால் தேர்வு செய்யப்பட்டவர்களை வாழ்த்துகிறேன். மக்கள் தீர்ப்பை நான் ஏற்றுக்கொள்கிறேன். தமிழகம், கேரளாவில் தோல்விக்கான காரணம் தொடர் எதிர் பிரசாரம்தான். பிரதமர் மோடிக்கு பாரத தேசம் முழுவதும் வரவேற்பு இருக்கும்போது, தமிழகத்தில் மட்டும் எதிர்ப்பை காண்பிக்க வேண்டும் என்று எதிர்ப்பை காண்பித்தனர். நல்ல திட்டங்களை மற்ற மாநில மக்கள் ஏற்றுக்கொண்டனர். அதே நல்ல திட்டங்கள் தமிழகத்தில் தவறான திட்டங்களாக முன்னெடுத்து செல்லப்பட்டது.

நாங்கள் தமிழகத்தில் வெற்றி பெறவில்லை என்று ஆதங்கம் இல்லை. ஆனால் உரிமையுடன் தமிழகத்தில் பல திட்டங்களை கொண்டு வரலாம் என நினைத்து இருந்து தற்போது அது முடியாமல் போனது தான் எங்களுக்கு கவலை. அதே நேரத்தில் இடைத்தேர்தலில் எங்களின் கூட்டணி கட்சி வெற்றி பெற்றதற்கு வாழ்த்துகள்." என்று தமிழிசை கூறியதாக விவரிக்கிறது அந்நாளிதழ்.

இந்து தமிழ்: 'கொங்கு மண்டலத்தில் அதிமுக சரிவை சந்தித்தது ஏன்?'

அதிமுகவின் கோட்டையாக கருதப்பட்ட கொங்கு மண்டலத்தில் இந்த தேர்தலில் ஏற்பட்ட சரிவு அதிமுகவினரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என்கிறது இந்து தமிழ் நாளிதழ் செய்தி.

"பொதுவாகவே, அதிமுகவின் அபார வெற்றிக்கு பெரிதும் கை கொடுப்பது கொங்கு மண்டலம் தான். கோவை, திருப்பூர், நீலகிரி, பொள்ளாச்சி, ஈரோடு, நாமக்கல், சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, கரூர் ஆகிய 10 மக்களவைத் தொகுதிகளை உள்ளடக்கிய பகுதிகள் கொங்கு மண்டலமாகும்.

2004-ல் நடைபெற்ற மக்களவைத் தேர்தலின்போது அனைத்து தொகுதிகளையும் வென்ற திமுக கூட்டணியால் 2009-ல் 4 தொகுதிகளை மட்டுமே கைப்பற்ற முடிந்தது. 2014-ல் கொங்கு மண்டலத்தில் உள்ள அத்தனை தொகுதிகளையுமே அதிமுகவிடம் பறிகொடுத்தது திமுக கூட்டணி. அதேபோல, சட்டப்பேரவைத் தேர்தல்களிலும் அதிமுகவின் பெரும் வெற்றிக்கு கைகொடுத்தது கொங்குமண்டலம் தான்.

இந்த தேர்தலைப் பொறுத்த வரை, கொங்கு மண்டலத்தைச் சேர்ந்தவர்தான் தமிழக முதல்வராகப் பொறுப்பு வகிக்கிறார். தமிழக அமைச்சரவையிலும் சக்திவாய்ந்த அமைச்சர்களாக கொங்கு மண்டலத்தைச் சேர்ந்தவர்களே இருக்கிறார்கள். இதனால் இந்த மக்களவைத் தேர்தலிலும் கொங்கு மண்டலம் கைகொடுக்கும் என அதிமுகவினர் நம்பியிருந்த சூழலில், அதிமுக கூட்டணிக்கு பலத்த ஏமாற்றமே கிடைத்துள்ளது.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவு, கொங்கு மண்டலத்தில் அதிமுகவுக்கு சரிவு ஏற்படுத்தியிருக்கலாம். இந்த மண்டலத்தில் கவுண்டர் சமூகத்தினர் பெரும்பான்மையாக உள்ள நிலையில், கொமதேக திமுகவுடன் கைகோர்த்ததும் அதிமுகவின் தோல்விக்கு காரணமாக இருக்கலாம்.

அதேசமயம், சிறு, குறுந்தொழில் நிறுவனங்கள் நிறைந்துள்ள கொங்கு மண்டலத்தில், பண மதிப்பு நீக்கம், ஜிஎஸ்டி ஆகியவை தொழில் நிறுவனங்களுக்கு பெருத்த பாதிப்பை ஏற்படுத்தியது. அந்த அதிருப்தியும் அதிமுக- பாஜக கூட்டணியின் தோல்விக்கு காரணம்" என்கின்றனர் அரசியல் விமர்சகர்கள்.

இது தொடர்பாக கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி பொதுச் செயலாளர் இ.ஆர்.ஈஸ்வரன் கூறும் போது, "கொங்கு மண்டலத்தில் அதிமுக வலுவாக இருப்பதாக கருதிக் கொண்டு, மற்றவர்களின் ஆதரவு எதற்கு என்று அலட்சியமாக இருந்துவிட்டார்கள். இந்த எண்ணத்தை மக்கள் தகர்த்துவிட்டார்கள். திமுக கூட்டணியைப் பொறுத்தவரை, கொமதேக உள்ளிட்ட எல்லா கூட்டணிக் கட்சிகளும் கடுமையாக உழைத்தன.

குறிப்பாக, கொங்கு மண்டலத்தில் கொமதேக திமுக கூட்டணிக்கு பெரிதும் வலிமை சேர்த்தது. திமுகவினரும் கடுமையாகப் பணிபுரிந்தனர். இதுவே, பெரும் திமுக கூட்டணியின் வெற்றிக்கு காரணம். கொமதேகவின் வலிமை இப்போது அதிமுகவுக்குப் புரிந்திருக்கும். கொமதேகவுக்கு முதல் வெற்றி கிடைத்துள்ளது.

இந்த வெற்றி தொடர, இன்னும் கடுமையாக மக்கள் பணியில் ஈடுபடுவோம். கட்சியை வலுப்படுத்தவும் தீவிர முயற்சிகளை மேற்கொள்வோம்" என்றார்.

- இவ்வாறாக விவரிக்கிறது அந்நாளிதழ்.

தினமணி: 'மத்தியில் புதிய அரசு 29இல் பதவியேற்பு?'

படத்தின் காப்புரிமை 'மத்தியில் புதிய அரசு 29இல் பதவியேற்பு'

நாடு முழுவதும் தேர்ந்தெடுக்கப்பட்ட பாஜக எம்.பி.க்கள் வரும் சனிக்கிழமை பிரதமர் மோடியை நேரில் சந்தித்து வாழ்த்து பெற திட்டமிட்டுள்ளதாகவும், மத்தியில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள பாஜக அரசு வரும் 29ஆம் தேதி பதவியேற்க உள்ளதாகவும் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன என்கிறது தினமணி நாளிதழ்.

இதுகுறித்து பாஜக ஆட்சிமன்றக்குழுவில் வியாழக்கிழமை நிறைவேற்றப்பட்ட தீர்மானம் வருமாறு: புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள பாஜக எம்.பி.க்கள் வரும் சனிக்கிழமை பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து வாழ்த்து பெற திட்டமிட்டுள்ளனர். இதைத்தொடர்ந்து, குடியரசுத் தலைவரை நேரில் சந்தித்து, புதிய அரசு அமைக்க உரிமை கோரப்பட உள்ளது.

பிரதமர் மோடி ஏழைகளுக்கு ஆதரவான கொள்கைகளை கடைப்பிடித்து வந்தது, தேசப்பாதுகாப்பில் தெளிவான அணுகுமுறை, உலகளவில் இந்தியாவுக்கு கெளரவமான இடத்தை தேடித்தந்தது போன்ற காரணங்களால் இந்த வெற்றி சாத்தியமானது.

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் குறித்து, எதிர்க்கட்சிகள் தொடர்ந்து கூறி வந்த அபாண்டமான புகார்களை மக்கள் புறந்தள்ளி விட்டதுடன், அதுதொடர்பான எதிர்மறை கருத்துக்களையும், எதிர்க்கட்சிகளையும் மக்கள் முற்றிலுமாக புறக்கணித்து விட்டனர்.

மேற்கு வங்கத்தில் வன்முறையை ஏற்படுத்தி பாஜக தொண்டர்களை தாக்க முயன்றவர்களையும் அந்த மாநில மக்கள் புரிந்துக் கொண்டு பாஜகவுக்கு ஆதரவளித்துள்ளனர். அதற்கும் நன்றி தெரிவித்துக் கொள்ளப்பட்டது.

உத்தரப் பிரதேசம், பிகார் மாநிலங்களில் மகா கூட்டணி அமைத்த போதிலும் அதையும் கடந்து பெரும் வெற்றியை வழங்கியதற்காகவும், வடகிழக்கு மற்றும் மேற்கு வங்க மாநிலங்களிலும், தென்னிந்தியாவிலும் பாஜகவுக்கு பெரும் வெற்றியைத் தேடித்தந்த மக்களுக்கு ஆட்சி மன்றக்குழு சார்பில் நன்றி தெரிவிக்கப்பட்டது.

அநேகமாக, மே 29ஆம் தேதியன்று புதிய அரசின் பதவியேற்பு விழா நடைபெற உள்ளதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

படத்தின் காப்புரிமை இந்து தமிழ்

தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்: தேர்தல் வரலாற்றில் அதிக பெண் எம்பிக்கள் தேர்வு

மக்களவை  தேர்தல் நடந்து முடிந்துள்ள நிலையில், மொத்தம் 76 பெண் எம்பிக்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

முதல்முதல் மக்களவை தேர்தல் நடந்ததில் இருந்து, இதுவே அதிக எண்ணிக்கை ஆகும். மொத்தமுள்ள 542 தொகுதிகளில் சுமார் 124 சதவீதம் அளவிற்கு பெண்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். கடந்த மக்களவை தேர்தலில் மொத்தம் 66 பெண் எம்பிக்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

அதிகபட்சமாக உத்தர பிரதேசம் மற்றும் மேற்கு வங்கம் மாநிலங்களில் இருந்து தலா 11 பெண் எம்பிக்கள் மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

இத்தேர்தலில் 47 பெண்களை பாஜக களமிறக்கியது. இதில் 34 பேர் வெற்றி பெற்றுள்ளார்கள்.

தமிழகத்தில் திராவிட முன்னேற்ற கழகம் சார்பாக போட்டியிட்ட தமிழச்சி (சுமதி) தங்கபாண்டியன் மற்றும் கனிமொழி ஆகிய இருவரும் வெற்றி பெற்றுள்ளார்கள். காங்கிரஸ் சார்பில் ஜோதிமணி வெற்றிபெற்றுள்ளார். ஆந்திராவில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் சார்பாக போட்டியிட்ட நான்கு பெண்களும் இத்தேர்தலில் வெற்றி பெற்றுள்ளனர்.

பிற செய்திகள் :

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :