மக்களவை தேர்தல் முடிவுகள்: சாதி வெறியர்களும், மத வெறியர்களும் தமிழகத்தில் வீழ்த்தப்பட்டிருக்கிறார்கள் - தொல்.திருமாவளவன்

2:15 PM: சிதம்பரம் தொகுதியில் வென்றுள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் இன்று மதியம் செய்தியாளர்களை சந்தித்தார்.

அகில இந்தியளவில் எது நடக்கக்கூடாது என்று நினைத்தோமோ அது நடந்துவிட்டது. சங் பரிவார் அமைப்புகள் ஆட்சி அமைத்துவிட கூடாது என்று எதிர் கட்சிகள் அனைத்தும் ஒன்றினைத்து செயல்பட்டிருந்தால் பாஜகவை புறமுதுகிட்டு ஓடவிட்டிருக்க முடியும். எதிர் கட்சிகள் சிதறியதால் வாக்குகள் சிதறிவிட்டது, என்று அவர் அப்போது கூறினார்.

திட்டமிட்டு சங் பரிவார் அமைப்புகளை சார்ந்தவர்கள் ராகுல் காந்தி இந்துக்களுக்கு எதிரிகள் போன்ற பிரசாரத்தை முன்னெடுத்தார்கள். கேதர்நாத் குகைக்குள் சென்று ஒரு நாடகத்தை அரங்கேற்றினார் நரேந்திர மோதி.

வட மாநிலங்களில் வாக்குப்பதிவு இயந்திரங்களை முறையாக பாதுகாப்பு கையாளவில்லை. இதுபோன்ற காரணங்களால் பாஜக பெரும் வெற்றியை பெற்றிருக்கிறது. ஆந்திரம், கேரளா, தமிழகம் போன்ற மாநிலங்களில் அவர்களுடைய பிரசாரம் எடுபடவில்லை. சாதி வெறியர்களும், மத வெறியர்களும் தமிழகத்தில் இன்று வீழ்த்தப்பட்டிருக்கிறார்கள்.

சிதம்பரத்திலிருந்து என்னை வீழ்த்த 50 கோடி ரூபாய் செலவிட்டிருக்கிறார்கள். வாக்களித்த மக்களுக்கு அனைவருக்கும் நன்றி என்றார் திருமாவளவன்.

1:00 PM : கர்நாடக மாநில அரசுக்கு எந்த அச்சுறுத்தலும் இல்லை என்று அம்மாநில முதலமைச்சர் சித்தராமையா தெரிவித்துள்ளார். கர்நாடகாவில் மொத்தம் உள்ள 28 மக்களவை தொகுதிகளில், 26 தொகுதிகளை பாஜக கைப்பற்றியுள்ளது.

11:55 AM : நரேந்திர மோதிக்கு உலகத் தலைவர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

11: 20 AM : கமல் செய்தியாளர்கள் சந்திப்பு

படத்தின் காப்புரிமை Getty Images

சென்னையில் பத்திரிகையாளர்களிடம் பேசிய மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல் ஹாசன், "14 மாதங்களே ஆன இந்த குழந்தையை வாக்காளர்கள் வாரியணைத்து, ஓடவிட்டு பார்ப்பார்கள் என்று சற்றும் எதிர்பார்க்கவில்லை.

இந்த தேர்தலில், மக்கள் நீதி மய்யத்துக்கு வாக்காளர்கள் நேர்மையாக வாக்களித்து, எங்களிடம் வேறெந்த பிரதிபலனும் எதிர்பார்க்காத வாக்காளர்களுக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.

அடுத்து வரக்கூடிய சட்டசபை தேர்தலுக்கு ஒத்திகையாக அமைந்த இந்த நாடாளுமன்ற தேர்தலில் மக்கள் எங்கள் மீது வைத்துள்ள நம்பிக்கைக்கு நாங்கள் கடமைப்பட்டுள்ளோம்; தொடர்ந்து செயலாற்றுவோம்." என்றார்.

ஹைட்ரோகார்பன் திட்டம் குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், "விவசாயம் கெட்டுப்போகாத திட்டங்களை மத்திய அரசு இங்கே கொண்டுவர வேண்டும். தொழிற்சாலைகளுக்கு எதிரான கொள்கைகளை மக்கள் நீதி மய்யம் கொண்டதல்ல. தமிழகத்தில்தான் அமைக்க வேண்டும் என்று கட்டாயப்படுத்த கூடாது. அதைத்தான் எதிர்க்கிறோம். விவசாயத்தை பாதிக்கும் எந்தவொரு திட்டத்திற்கும் நாங்கள் எதிராகதான் இருப்போம்." என்றார்.

பிக்பாஸ் 3 மற்றும் இந்தியன் 2 திரைப்படம் குறித்த கேள்விக்கு பதிலளித்த கமல் ஹாசன், "சினிமா என்னுடைய தொழில். அரசியல் எனது தொழில் அல்ல. அது என்னுடைய கடமை." என்றார்.

11:00 AM : முரளி மனோகர் ஜோஷியிடம் ஆசி பெற்ற மோதி

10:45 AM : பாஜக மூத்த தலைவர் எல்.கே அத்வானியை சந்தித்து மோதி மற்றும் அமித் ஷா ஆகியோர் வாழ்த்து பெற்றனர்.

பாரதிய ஜனதா கட்சி இந்த அளவிற்கு வெற்றி பெற்றதற்கு அத்வானி போன்ற தலைவர்கள்தான் காரணம் என்று மோதி தனது ட்வீட்டில் குறிப்பிட்டுள்ளார்.

10:30 AM : 17வது மக்களவை தேர்தல் முடிந்து பெரும்பாலான முடிவுகள் வெளியாகிவிட்டன.சுமார் 300க்கும் மேற்பட்ட இடங்களில் தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற்றுள்ளது.

அதிகாரப்பூர்வ முடிவுகளை இந்திய தேர்தல் ஆணையம் இன்று வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :