'நோட்டா' வாக்குகள் தமிழகத்தில் குறைய கமல், சீமான் காரணமா?

நோட்டா

நடந்து முடிந்துள்ள நாடாளுமன்ற தேர்தலில், வாக்குப்பதிவு இயந்திரத்தில் இடம்பெற்றுள்ள எந்த வேட்பாளருக்கும் என்னுடைய வாக்கு கிடையாது என்ற 'நோட்டா' விருப்பத்தை மட்டும் தமிழகத்தில் 5,53,349 பேர் தேர்வு செய்துள்ளனர்.

தேர்தல்களில் வாக்காளர்கள் தங்களுடைய ஜனநாயக கடமையை ஆற்றும்போது, வேட்பாளர்களை தேர்ந்தெடுத்து கொள்ளும் சுதந்திரத்தை உறுதிசெய்யும் வகையில் 2013ஆம் ஆண்டு தேர்தல் ஆணையத்துக்கு இந்திய உச்ச நீதிமன்றம் ஓர் உத்தரவை பிறப்பித்தது. அதுதான், வாக்குப்பதிவு இயந்திரத்தில் 'நோட்டா' தேர்வு.

படத்தின் காப்புரிமை ARUN SANKAR

நோட்டாவுக்கு ஒருவர் வாக்களிப்பதால் அவரது வாக்கு கணக்கில் கொள்ளப்படும். ஆனால், அந்த வாக்குகள் எண்ணிக்கையின்போது கணக்கில் கொள்ளப்படாது.

2013ஆம் ஆண்டு சத்தீஸ்கர், மிசோரம், ராஜஸ்தான் மற்றும் மத்திய பிரதேசத்தில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலின்போது, வாக்குப்பதிவு இயந்திரங்களில் நோட்டா அறிமுகப்படுத்தப்பட்டது.

2014 பொதுத் தேர்தலில், 'நோட்டா' வாக்காளர்களிடையே மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. அந்த பொதுத் தேர்தலில் மட்டும் இந்தியா முழுவதும் சுமார் 60 லட்சத்துக்கும் மேற்பட்டோர் நோட்டாவை தேர்ந்தெடுத்திருந்தனர். அதாவது, இந்தியா முழுவதும் பதிவான மொத்த வாக்குகளில் 1.1 சதவிகித வாக்குகள் நோட்டா வாக்குகள்.

2015ஆம் ஆண்டு நோட்டாவுக்கென தனி சின்னம் அறிமுகப்படுத்தப்பட்டது.

நோட்டாவுக்கு விழுந்த வாக்குகளால் இந்தியாவில் பல அரசியல்வாதிகள் நூலிழையில் வெற்றி வாய்ப்பை தவறவிட்டு இரண்டாம் இடத்திற்கு தள்ளப்பட்ட வரலாறும் உண்டு.

2014ல் தமிழகத்தில் என்ன நடந்தது?

16வது மக்களவைத் தேர்தலின்போது, ஜெயலலிதா தலைமையிலான அ.தி.மு.க பிரம்மாண்ட வெற்றி பெற்றது. கருணாநிதி தலைமையிலான தி.மு.க படுதோல்வியை சந்தித்தது. அந்தத் தேர்தலில், தமிழகத்தில் பதிவான நோட்டா வாக்குகளின் எண்ணிக்கை 6,04,050.

2ஜி ஊழல் குற்றச்சாட்டில் சிக்கி பின்னர் சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்ட ஆ.ராசா அப்போது தி.மு.க சார்பில் நீலகிரி தொகுதியில் களம் கண்டு தோல்வியை தழுவினார். அப்போது அந்த தொகுதியில் பதிவான நோட்டா வாக்குகள் மட்டும் 46,559.

இந்தியாவிலேயே, நோட்டாவுக்கு பதிவான அதிக வாக்குகள் இந்த தொகுதியில்தான். தமிழகத்திலேயே கன்னியாகுமரி தொகுதியில்தான் மிகவும் குறைந்தளவில் 4,150 வாக்குகள் நோட்டாவுக்கு பதிவாகி இருந்தன.

மத்திய சென்னை, தெற்கு சென்னை, சேலம், திருவள்ளூர், ஸ்ரீபெரும்புதூர் ஆகிய தொகுதிகளில் 20,000க்கும் மேற்பட்ட நோட்டா வாக்குகள் பதிவாகி இருந்தன.

தமிழகம் தவிர்த்து புதுச்சேரி யூனியன் பிரதேசத்திலும் அதிகளவில் 22,268 வாக்குகள் நோட்டாவுக்கு விழுந்துள்ளன.

2019ல் நோட்டா ஏற்படுத்திய தாக்கம் என்ன?

இந்தமுறை, வேலூர் மக்களவைத் தொகுதிக்கான தேர்தல் ஆணையத்தால் ரத்து செய்யப்பட்டது. மீதமுள்ள 38 தொகுதிகளில் நடைபெற்ற வாக்குப்பதிவில் 5,53,349 வாக்குகள் நோட்டாவுக்கு பதிவாகியுள்ளன.

படத்தின் காப்புரிமை ARUN SANKAR

அதிகப்பட்சமாக ஸ்ரீபெரும்புதூரில் 23,343 நோட்டா வாக்குகள் பதிவாகியுள்ளன. இங்கு, தி.மு.க வேட்பாளரும், முன்னாள் மத்திய அமைச்சரும் டி.ஆர். பாலு 7,93,281 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.

குறைந்தப்பட்சமாக, கன்னியாகுமரியில் 6,131 வாக்குகள் நோட்டாவுக்கு பதிவாகியுள்ளன. இங்கு தி.மு.க கூட்டணியில் அங்கம் வகிக்கும் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் வசந்த குமார் பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.

கடந்த 2014 தேர்தலோடு ஒப்பிடும்போது, இந்தாண்டு பதிவான நோட்டா வாக்குகளின் எண்ணிக்கை சற்று குறைவு என்பது குறிப்பிடத்தக்கது. இந்த தேர்தலில், புதிதாக களமிறங்கிய சீமானின் நாம் தமிழர் கட்சியும், நடிகர் கமல் ஹாசனின் மக்கள் நீதி மய்யமும் வாக்காளர்கள் மத்தியில் ஏற்படுத்திய தாக்கம் அவர்கள் இந்த இரு கட்சிகளை தேர்வு செய்வதற்கு வாய்ப்பாக அமைந்திருக்கலாம். தமிழகத்தில் அடுத்து வரக்கூடிய சட்டப்பேரவைத் தேர்தலிலும் இதே நிலை எதிரொலிக்குமா என்பது தற்போதைய ஆட்சியாளர்களின் கைகளிலே இருக்கிறது.

இம்முறை அரசு ஊழியர்கள் செலுத்திய தபால் வாக்குகளில்கூட நோட்டாவுக்கு வாக்களித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

பிற மாநிலங்களில் நோட்டாவின் நிலை என்ன?

இந்த தேர்தலில் இந்தியா முழுவதும் பதிவான வாக்குகளில் சுமார் 1.04 சதவிகித வாக்குகள் நோட்டாவுக்கு விழுந்துள்ளன. வாக்கு சதவிகித அடிப்படையில், பிகார் மாநிலத்தில் 2 சதவிகித வாக்குகளும், குறைந்தப்பட்சமாக சிக்கிமில் 0.65 சதவிகித வாக்குகளும் பதிவாகியுள்ளன.

படத்தின் காப்புரிமை STR

பிகார் மாநிலத்தில் அதிகப்பட்சமாக 8,17,139 பேர் நோட்டாவுக்கு வாக்களித்துள்ளனர். குஜராத்தில் மாநிலத்தில் சுமார் நான்கு லட்சத்துக்கும் அதிகமானோரும், மகாராஷ்டிர மாநிலத்தில் 4,88,766 வாக்குகளும், ஒடிஷாவில் 3,10,824 வாக்குகளும், ராஜஸ்தானில் 3,27,559 வாக்குகளும், உத்தர பிரதேசத்தில் 7,25,079 வாக்குகளும், மேற்கு வங்கத்தில் 5,46,778 வாக்குகளும் பதிவாகியுள்ளன.

தலைநகர் டெல்லியில் பதிவான மொத்த வாக்குகளில் ஒரு சதவிகிதத்துக்கும் குறைவான வாக்குகள் நோட்டாவுக்கு பதிவாகியுள்ளன.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :