மக்களவைத் தேர்தல் 2019: தமிழக நட்சத்திர வேட்பாளர்களின் வெற்றியும், தோல்வியும்

கனிமொழி படத்தின் காப்புரிமை ARUN SANKAR/GETTY IMAGES

2019ம் ஆண்டு இந்திய மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற்று மே 19ம் தேதியோடு நிறைவடைந்தது.

வாக்கு எண்ணிக்கை நடைபெற்ற மே 23ம் தேதி முதல் அதன் முடிவுகள் வெளியாக தொடங்கி, 24ம் தேதி அனைத்து மக்களவைத் தொகுதிகளின் முடிவுகளும் வெளிவந்தன.

இந்த தேர்தலில் தமிழ்நாட்டில் இருந்து போட்டியிட்ட நட்சத்திர வேட்பாளர்களின் நிலை என்ன என்பதை இதில் பார்ப்போம்.

கனிமொழி Vs தமிழிசை சௌந்தரராஜன்

தூத்துக்குடி மக்களவைத் தேர்தலில் திராவிட முன்னேற்ற கழகத்தின் கனிமொழியை எதிர்த்து பாரதிய ஜனதா கட்சியின் தமிழக மாநில தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் போட்டியிட்டார்.

2018ம் ஆண்டு மே மாதம் 22ம் தேதி, தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடத்திய 100வது நாள் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டத்தின்போது, நடைபெற்ற துப்பாக்கி சூட்டில் 13 பேர் கொல்லப்பட்டிருந்ததால், இந்த மக்களவைத் தேர்தலில் இந்த தொகுதி பெரும் முக்கியத்துவம் பெற்றிருந்தது.

படத்தின் காப்புரிமை Twitter

நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினராக இருந்து வந்த தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதியின் மகளான கனிமொழில் முதல் முறையாக மக்களவைத் தேர்தலில் போட்டியிட்டுள்ளார்.

இந்த தேர்தலில் கனிமொழி 3 லட்சத்து 47 ஆயிரத்து 209 வாக்குகள் வித்தியாசத்தில் தமிழிசை சௌந்தரராஜனை வென்றுள்ளார்.

கார்த்தி சிதம்பரம் Vs ஹெச் ராஜா

படத்தின் காப்புரிமை Twitter

முன்னாள் நிதியமைச்சர் ப. சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் சிவகங்கையில் மக்களவைத் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக களம் கண்டார்.

திமுக தலைமையிலான கூட்டணியில் 10 இடங்களை பெற்றிருந்த இந்திய தேசிய காங்கிரஸ் முதலில் 9 இடங்களுக்கான வேட்பாளர்களை அறிவித்துவிட்டு, இரண்டு நாட்களுக்கு பின்னர்தான் சிவகங்கை தொகுதியின் வேட்பாளரை அறிவித்தது குறிப்பிடத்தக்கது.

அதிமுக தலைமையிலான கூட்டணியில் பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயலாளர்களில் ஒருவரான ஹெச். ராஜா இங்கு போட்டியிட்டார்.

சர்ச்சையான கருத்துக்களை தெரிவித்து பரபரப்பை ஏற்படுத்தும் ஹெச். ராஜாவின் பரப்புரைகள் மிகவும் உற்றுநோக்கப்பட்டன.

இறுதியில், கார்த்தி சிதம்பரம் ஹெச். ராஜாவை 3 லட்சத்து 32 ஆயிரத்து 244 வாக்குகள் வித்தியாசத்தில் வென்றுள்ளார்.

எஸ். ஜோதிமணி Vs எம். தம்பிதுரை

படத்தின் காப்புரிமை Getty Images

கரூர் மக்களவைத் தொகுதியில் திமுக தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ் சார்பில் எஸ். ஜோதிமணி களம் இறக்கப்பட்டார்.

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் மக்களவைத் தலைவரும், மக்களவைத் துணை சபாநாயகருமான எம். தம்பிதுரையும் கரூர் மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டார்.

ஆனால், 4 லட்சத்து 20 ஆயிரத்து 546 வாக்குகள் வித்தியாசத்தில் ஜோதிமணி தம்பிதுரையை வென்றுள்ளார்.

ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் Vs ஒ. பி. எஸின் மகன் ரவீந்திரநாத்

தேனி மக்களவைத் தொகுதியில் திமுகவின் தலைமையிலான கூட்டணியில் தேனி தொகுதியில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ஈ.வி.கே. எஸ். இளங்கோவன் போட்டியிட்டார்.

அவரை எதிர்த்து அதிமுக சார்பில் களம் இறங்கியவர் தமிழக துணை முதல்வர் பன்னீர்செல்வத்தின் மகன் ரவீந்திரநாத்.

பன்னீர்செல்வத்தின் வாரிசான ரவீந்திரநாத் முதல் முறையாக அரசியலில் குதித்ததால், தேனி தொகுதி அதிக கவனம் பெற்றது.

இறுதியில், அதிமுக இந்த தேர்தலில் வென்றுள்ள ஒரேயொரு தொகுதியாக, 76 ஆயிரத்து 693 வாக்குகள் வித்தியாசத்தில் ரவீந்திரநாத் வெற்றிபெற்றுள்ளார்.

ஹெச். வசந்தகுமார் Vs பொன். ராதாகிருஷ்ணன்

கடந்த மக்களவைத் தேர்தலில் கன்னியாகுமரி தொகுதியில் வென்று அமைச்சரான பொன்.ராதாகிருஷ்ணனை எதிர்த்து காங்கிரஸ் கட்சியின் ஹெச். வசந்தகுமார் 2019ல் களம் கண்டார்.

கடந்த முறை இதேபோல போட்டியிட்ட வசந்த குமார் இரண்டாம் இடத்தைத்தான் பெற முடிந்தது.

பாரதிய ஜனதாவின் தமிழக தலைவராக தமிழிசை சௌந்திரராஜன் இருந்தாலும், 2014ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் பாதிய ஜனதா கட்சி தமிழகத்தில் வெற்றி பெற்றிருந்த ஒரேயொரு தொகுதியில் வென்ற பொன். ராதாகிருஷ்ணன் அமைச்சர் பொறுப்பை பெற்றிருந்தார்.

இறுதியில், 2 லட்சத்து 59 ஆயிரத்து 933 வாக்குகள் வித்தியாசத்தில் ஹெச். வசந்தகுமார் வெற்றி பெற்றுள்ளார்.

படத்தின் காப்புரிமை PRAKASH SINGH

ஆ. ராசா

திமுக சார்பில் முன்னாள் மத்திய அமைச்சர் ஆ. ராசா நீலகிரி மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டார்.

2ஜி அலைக்கற்றை ஊழல் தொடர்பான வழக்கில் சிறப்பு நீதிமன்றம் இவரை விடுதலை செய்த தீர்ப்பு வெளியான பிறகு, இந்த தொகுதியில் ஆ. ராசா மீண்டும் போட்டியிட்டுள்ளார்.

அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின சார்பாக போட்டியிட்ட எம். தியாகராஜனை, 2 லட்சத்து 5 ஆயிரத்து 823 வாக்குகள் வித்தியாசத்தில் ஆ. ராசா வென்றுள்ளார்.

தமிழச்சி தங்கபாண்டியன்

தென் சென்னை தொகுதியில் திமுக வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியன் போட்டியிட்டார். இந்த மக்களவைத் தேர்தலில் போட்டியிட்ட இலக்கியவாதிகள் ஐந்து பேரில் இவர் ஒருவர்.

இந்த மக்களவைத் தொகுதியில் அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் சார்பாக போட்டியிட்ட டாக்டர் ஜே. ஜெயவர்தனை 2 லட்சத்து 62 ஆயிரத்து 223 வாக்குகள் வித்தியாசத்தில் தமிழச்சி தங்கபாண்டியன் வென்றார்.

திருமாவளவன்

திமுக தலைமையிலான கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் சிதம்பரம் தொகுதியில் அக்கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் போட்டியிட்டார்.

வாக்கு எண்ணிக்கையின்போது இவர் முன்னிலையில் இருப்பதும், பின்னடைவை சந்திப்பதும் மாறிமாறி இருந்து வந்த நிலையில், யார் வெற்றி பெறுவார் என்ற எதிர்பார்ப்பு கடைசி வரை நிலவி வந்தது.

இறுதியில், அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் சார்பாக போட்டியிட்ட பி. சந்திரசேகரை 3 ஆயிரத்து 219 வாக்குகள் வித்தியாசத்தில் தொல். திருமாவளவன் தோற்கடித்தார்.

தயாநிதி மாறன்

படத்தின் காப்புரிமை Getty Images

மத்திய சென்னை மக்களவைத் தொகுதியில் திமுக சார்பில் முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி மாறன் வேட்பாளராக களம் இறங்கியிருந்தார்.

மத்திய சென்னை தொகுதியில் கடந்த கால தேர்தல் முடிவுகளில் பெரும்பாலும் திமுகவே அதிக முறை வெற்றி பெற்றுள்ளது.

எந்த ஒரு குறிப்பிட்ட வர்க்கத்தினைரை மட்டுமல்லாது, பொருளாதாரத்தின் அனைத்து அடுக்குகளையும் சேர்ந்த வாக்காளர்களையும் பெரும்பான்மையாக கொண்டிராமல் கலவையான தொகுதியாக இருக்கிறது மத்திய சென்னை.

இந்த தேர்தலில், அதிமுக தலைமையிலான கூட்டணியில் மத்திய சென்னையில் போட்டியிட்ட எஸ்.ஆர். சாம் பாலை, 3 லட்சத்து ஆயிரத்து 520 வாக்குகள் வித்தியாசத்தில் தயாநிதி மாறன் தோற்கடித்தார்.

அன்புமணி ராமதாஸ்

அதிமுக கூட்டணியில் இடம்பெற்ற பாட்டாளி மக்கள் கட்சியின் இளைஞர் அணித்தலைவர் அன்புமணி தர்மபுரி மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டார்.

அதிமுக அரசை கூட்டணிக்கு முன்பு வரை விமர்சித்து வந்த பாட்டாளி மக்கள் கட்சி, திடீரென அதனோடு கூட்டணி வைத்து கொண்டது அனைவருக்கும் அதிர்ச்சைியை ஏற்படுத்தி இருந்தது.

தேர்தல் முடிவுகளில், திமுக சார்பாக போட்டியிட்ட எஸ். செந்தில் குமாரிடம் 70 ஆயிரத்து 753 வாக்குகள் வித்தியாசத்தில் அன்புமணி ராமதாஸ் தோல்வியடைந்திருந்தார்.

திருநாவுக்கரசர்

திமுக தலைமையிலான கூட்டணியில் திருச்சி மக்களவைத் தொகுதியில் தமிழக காங்கிரஸின் முன்னாள் தலைவர் திருநாவுக்கரசர் போட்டியிட்டார்.

வாக்குகள் எண்ணப்பட்போது, தொடக்கத்தில் இருந்தே முன்னிலையில் இருந்து வந்த திருநாவுக்கரசு, தன்னை எதிர்த்து தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் சார்பாக போட்டியிட்ட டாக்டர். இளங்கோவனை 4 லட்சத்து 59 ஆயிரத்து 286 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.

பச்சமுத்து

படத்தின் காப்புரிமை facebook

திமுகவுடன் கூட்டணி வைத்த இந்திய ஜனநாயக கட்சியின் (ஐஜேகே) நிறுவனர் பச்சமுத்து பெரம்பலூர் மக்களவைத் தொகுதியில் வேட்பாளராக போட்டியிட்டார்.

திமுகவின் உதய சூரியன் சின்னத்தில் போட்டியிட்ட இவர், தன்னை எதிர்த்து போட்டியிட்ட அண்ணா திராட முன்னேற்ற கழகத்தை சேர்ந்த என்.ஆர். சிவபதியை 4 லட்சத்து மூவாயிரத்து 518 வாக்குகள் வித்தியாசத்தில் வென்றார்.

டி. ஆர் பாலு

ஸ்ரீபெரும்புதூர் மக்களவைத் தொகுதியில் திமுக வேட்பாளர் டி.ஆர்.பாலு களம் இறக்கப்பட்டிருந்தார்.

இவரை எதிர்த்து அதிமுக தலைமையிலான கூட்டணியில் பாட்டாளி மக்கள் கட்சியின் ஏ. வைத்தியலிங்கம் போட்டியிட்டார்,

டி. ஆர். பாலு 5 லட்சத்து 7 ஆயிரத்து 955 வாக்குகள் பெற்று வென்றுள்ளார்.

2019 மக்களவைத் தேர்தலில் தமிழ்நாட்டில் 5 லட்சத்துக்கு மேலான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இரு வேட்பாளர்களில், திண்டுக்கல் மக்களவைத் தொகுதியில் 5 லட்சத்து 38 ஆயிரத்து 972 வாக்குகள் வித்தியாசத்தில் வென்ற பி. வேலுசாமிக்கு (திமுக) அடுத்ததாக டி. ஆர். பாலு வருகிறார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :