தேர்தல் முடிவுகள் 2019: தேசிய கவனம் பெற்ற வேட்பாளர்களின் நிலை என்ன?

ஸ்மிரிதி இராணி படத்தின் காப்புரிமை Getty Images

இந்திய மக்களவைத் தேர்தல் 2019, நட்சத்திர வேட்பாளர்கள் சிலருக்கு வீழ்ச்சியாகவும், வேறு சிலருக்கும் எழுச்சியாகவும் அமைந்து விட்டது.

அவ்வாறு இந்த மக்களவைத் தேர்தலில், வென்ற, வீழ்ந்த பெருந்தலைவர் யார் என இதில் பார்ப்போம்.

ராகுல் காந்தி - வயநாடு

படத்தின் காப்புரிமை Getty Images

ராகுல் காந்தி உத்தர பிரதேச அமேதி மக்களவைத் தொகுதியிலும், கேரள மாநிலம் வயநாடு மக்களவைத் தொகுதியிலும் போட்டியிட்டார்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பாக போட்டியிட்ட பி.பி. சுனீரை விட 4 லட்சத்து 31 ஆயிரத்து 770 வாக்குகள் அதிகமாக பெற்று ராகுல் காந்தி வெற்றி பெற்றார்.

அவர் பெற்ற மொத்த வாக்குகள் ஏழு லட்சத்து ஆறாயிரத்து 367 வாக்குகள் (64.67 சதவீதம்). பி.பி.சுனீர் 2 லட்சத்து 74 ஆயிரத்து 597 வாக்குகள் (25.14 சதவீதம்) பெற்றார்.

ஆனால், பாரம்பரியமாக நேரு குடும்பத்தினர் போட்டியிட்டு, வெற்றிபெற்று வந்த உத்தர பிரதேசத்தின் அமேதி மக்களவைத் தொகுதியில் ராகுல் காந்தி தோல்வியடைந்தார்.

ஸ்மிரிதி இரானி - அமேதி

39 ஆண்டுகளாக நேரு குடும்பத்தினர் மட்டுமே வெற்றிபெற்று வந்த அமேதி தொகுதியில் பாரதிய ஜனதா கட்சியின் சார்பாக போட்டியிட்ட ஸ்மிரிதி இரானி 55 ஆயிரத்து 120 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றுள்ளார்.

மொத்தம் 4 லட்சத்து 85 ஆயிரத்து 524 வாக்குகளை (49.71 சதவீதம்) ஸ்மிரிதி இரானி பெற்றிருக்கிறார்.

காங்கிரஸ் கட்சியின் தலைவரான ராகுல் காந்தி அங்கு 4 லட்சத்து 13 ஆயிரத்து 394 வாக்குகளை (43.86 சதவீதம்) பெற்றிருந்தார்.

கவுதம் கம்பீர் - டெல்லி கிழக்கு

படத்தின் காப்புரிமை DIBYANGSHU SARKAR

டெல்லி கிழக்கு மக்களவைத் தொகுதியில் பாஜக சார்பாக போட்டியிட்ட கிரிக்கெட் வீரர் கவுதம் கம்பீர், அவரை எதிர்த்து போட்டியிட்ட இந்திய தேசிய காங்கிரஸின் அரவிந்தர் சிங் லவ்லியை மூன்று லட்சத்து 91 ஆயிரத்து 222 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றுள்ளார்.

கவுதம் கம்பீர் பெற்ற மொத்த வாக்குகள் ஆறு லட்சத்து 96 ஆயிரத்து 156 வாக்குகளாகும்.

டெல்லியை சேர்ந்த கிரிக்கெட் வீரரான கவுதம் கம்பீர் இந்த ஆண்டு மார்ச் மாதம்தான் பாரதிய ஜனதா கட்சியில் சேர்ந்த்து குறிப்பிடத்தக்து.

ஹேமாமாலினி - மதுரா

படத்தின் காப்புரிமை Hindustan Times

உத்தர பிரதேச மாநிலத்திலுள்ள மதுரா மக்களவைத் தொகுதியில் 2வது முறையாக போட்டியிட்ட மூத்த நடிகை ஹேமாமாலினி இந்த தேர்தலிலும் வெற்றி பெற்றுள்ளார்.

இரண்டாவது இடம் பெற்ற ராஸ்டிரிய லோக் தளத்தின் வேட்பாளர் குன்வார் நரேந்திர சிங்கைவிட இரண்டு லட்சத்து 93 ஆயிரத்து 471 வாக்குகள் வித்தியாசத்தில் ஹேமாமாலினி வெற்றிபெற்றுள்ளார்.

ஹேமாமாலினி பெற்ற மொத்த வாக்குகள் ஆறு லட்சத்து 71 ஆயிரத்து 293 வாக்குகளாகும் (60.88 சதவீதம்).

கடந்த 2014ம் ஆண்டு பாஜக சார்பில் போட்டியிட்ட இதே மக்களவைத் தொகுதியில் வெற்றிபெற்ற ஹேமாமாலினி, மூன்றரை லட்சம் வாக்கு வித்தியாசத்தில் ராஷ்டிரிய லோக் தளம் கட்சி வேட்பாளர் ஜெயந்த் சவுத்ரியை தோற்கடித்தது குறிப்பிடத்தக்கது.

பிரகாஷ் ராஜ் - மத்திய பெங்களூரு

படத்தின் காப்புரிமை PRAKASHRAJOFFICIAL

நடிகரான பிரகாஷ் ராஜ் மத்திய அரசின் செயல்பாடுகளையும், பிரதமர் நரேந்திர மோதியையும் தொடர்ந்து விமர்சனம் செய்து வந்த நிலையில், மத்திய பெங்களூரு மக்களவைத் தொகுதியில் போட்டியிட போவதாக அறிவித்தார்.

சுயேச்சையாக தான் போட்டியிடுவதற்கு காங்கிரஸ் ஆதரவு அளிக்க வேண்டுமென வேண்டுகோள் விடுத்தார்.

ஆனால், இது பற்றி கலந்து பேசிய கர்நாடக மாநில காங்கிரஸ் கட்சி, தங்களின் கட்சியில் சேர்ந்தாலொழிய ஆதரவு அளிக்க முடியாது என்று கூறிவிட்டது.

மத்திய பெங்களூரு தொகுதியில் 28 ஆயிரத்து 906 வாக்குகளை (2.41 சதவீதம்) பிரகாஷ் ராஜ் பெற்றார்.

இந்த தொகுதியில் போட்டியிட்ட பாரதிய ஜனதா கட்சியின் வேட்பாளர் பி.சி. மோகன், ஆறு லட்சத்து இரண்டாயிரத்து 853 வாக்குகள் (50.35 சதவீதம்) பெற்று, 70 ஆயிரத்து 968 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். 2014ம் ஆண்டு மக்களவைத் தேர்தலிலும் பி.சி. மோகன் ஒரு லட்சத்து 37 ஆயிரத்து 500 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது குறிப்பிடத்தக்கது.

இந்திய தேசிய காங்கிரஸ் வேட்பாளர் ரிஸ்வான் ஹர்‌ஷத் 5 லட்சத்து 31 ஆயிரத்து 885 வாக்குகள் பெற்று (44.43 சதவீதம்) இரண்டாம் இடம்பெற்றார்.

பிரகாஷ் ராஜ், பிரதமர் நரேந்திர மோதியின் பல்வேறு செயல்பாடுகளை கடுமையாக விமர்சித்து வந்தது குறிப்பிடத்தக்கது.

ஜெயப்பிரதா - ராம்பூர்

படத்தின் காப்புரிமை Getty Images

பாரதிய ஜனதா கட்சியில் இணைந்து 2019ம் ஆண்டு ராம்பூர் தொகுதியில் போட்டியிட்ட ஜெயப்பிரதா 4 லட்சத்து 49 ஆயிரத்து 180 வாக்குகள் (42.34 சதவீத வாக்குகள்) பெற்று இரண்டாம் இடத்தையே பெற்றுள்ளார்.

சமாதிவாதி கட்சியை சேர்ந்த முகமது அஸாம் கான் 5 லட்சத்து 59 ஆயிரத்து 177 வாக்குகள் (52.71 சதவீத வாக்குகள்) பெற்று வெற்றிபெற்றார்,

ஆந்திர பிரதேசத்தின் முன்னாள் முதலமைச்சர் என்.டி.ராமராவுடன் ஏற்பட்ட நட்டபால் தெலுங்கு தேசம் கட்சியில் இணைந்து மாநிலங்களவை உறுப்பினராக நடிகை ஜெயபிரதா பணியாற்றினார்.

சமாஜ்வாதி கட்சியில் இணைந்த பின்னர், 2004 மற்றும் 2009ம் ஆண்டுகள் நடைபெற்ற உத்தர பிரதேசம் ராம்பூர் மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு ஜெயப்பிரதா வெற்றி பெற்றார்,

2014ம் ஆண்டு ராஷ்டிரிய ஜனதா தளம் சார்பாக பிஜ்னோர் மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு தோல்வியுற்றது குறிப்பிடத்தக்கது.

நிதின் கட்கரி - நாக்பூர்

படத்தின் காப்புரிமை HINDUSTAN TIMES

பாரதிய ஜனதா கட்சியின் சார்பாக மகாராஷ்ராவின் நாக்பூர் மக்களவைத் தொகுதியில் போட்டியிட்ட நிதின் கட்கரி மொத்தம் 6 லட்சத்து 60 ஆயிரத்து 221 வாக்குகள் (55.67 சதவீதம்) பெற்று முதலிடம் பெற்றார்.

இந்திய தேசிய காங்கிரஸின் சார்பாக போட்டியிட்ட நானா பட்டோலி 4 லட்சத்து 44 ஆயிரத்து 212 வாக்குகள் (37.45 சதவீதம்) பெற்றிருந்தார்.

பிரதமராக உருவாக நிதின் கட்சரி முயன்று வருவதாக செய்திகள் வெளிவந்த நிலையில், தான் பிரதமர் நாற்காலிக்கு போட்டியிடவில்லை என்று தேர்தல் பரப்புரையில் நிதின் கட்கரி கூறிவந்தது குறிப்பிடத்தக்கது.

தேவ கௌடா - தும்கூர்

கர்நாடகாவின் தும்கூர் மக்களவைத் தேர்தலில் போட்டியிட்டார் முன்னாள் இந்திய பிரதமரும், காநாடக முன்னாள் முதலமைச்சரும், மதசார்பற்ற ஜனதா தளம் கடசியின் முன்னாள் தலைவருமான ஹெச். டி. தேவ கௌடா.

படத்தின் காப்புரிமை RAVEENDRAN / getty

ஆனால், அவர் ஐந்து லட்சத்து 82 ஆயிரத்து 788 வாக்குகள் (46.82 சதவீதம்) பெற்று இரண்டாம் இடமே பெற முடிந்தது.

பாரதிய ஜனதா கட்சியின் சார்பாக போட்டியிட்ட ஜி.எஸ். பாசவராஜ் ஐந்து லட்சத்து 96 ஆயிரத்து 127 வாக்குகள் (47.89 சதவீதம்) பெற்று வெற்றிபெற்றார்.

சுமலதா அம்பரிஷ் - மாண்டியா

கர்நாடகாவின் மாண்டியா மக்களவைத் தேர்தலில் சுயேச்சையாக போட்டியிட்டு ஒரு லட்சத்து 25 ஆயிரத்து 876 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றவர்தான் சுமலதா அம்பரிஷ்.

ஏழு லட்சத்து மூவாயிரத்து 660 வாக்குகள் (51.02 சதவீதம்) பெற்று வென்ற இவர், மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியின் சார்பாக போட்டியிட்ட, இந்தியாவின் முன்னாள் பிரதரும், கர்நாடகாவின் 14வது முதலமைச்சருமான தேவ கவுடாவின் பேரனும், தற்போது அம்மாநில முதலமைச்சராக இருக்கின்ற குமாரசாமியின் மகனுமான நிக்கில் குமாரசாமியை தோற்கடித்துள்ளார்.

நிக்கில் குமாரசாமி 5 லட்சத்து 77 ஆயிரத்து 784 வாக்குகள் (41.89 சதவீதம்) பெற்றார்.

கண்ணைய்யா குமார் - பெகுசராய்

படத்தின் காப்புரிமை EPA

பிகார் மாநிலத்தின் பெகுசராய் மக்களவைத் தொகுதியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பாக கண்ணைய்யா குமார் போட்டியிட்டார்.

இந்த தேர்தலில், இரண்டு லட்சத்து 69 ஆயிரத்து 976 வாக்குகளை (22.03 சதவீதம்) பெற்று இரண்டாவது இடமே பெற முடிந்தது.

நான்கு லட்சத்து 22 ஆயிரத்து 217 வாக்குகள் வித்தியாசத்தில் இவர் தோற்றார்.

பாரதிய ஜனதா கட்சியின் வேட்பாளரான கிரிராஜ் சிங் ஆறு லட்சத்து 92 ஆயிரத்து 193 வாக்குகள் (56.48 சதவீதம்) பெற்று வெற்றிபெற்றார்.

டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் மாணவர் தலைவர் கண்ணைய்யா குமார் மீது தொடுக்கப்பட்ட தேசதுரோக வழக்கால் அவர் பிரபலமானார்.

இந்திய நாடாளுமன்றம் மீதான தாக்குதல் வழக்கில் அப்சல் குருவுக்கு மரண தண்டனை விதித்தது தவறு என்று கூறி நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்தில் இந்தியாவுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பப்பட்டதாக மாணவர் அமைப்புத் தலைவர் கண்ணையா குமார் கைதுசெய்யப்பட்டு தேசத் துரோக வழக்கு தொடுக்கப்பட்டது.

பிரக்யா சிங் தாக்கூர் - போப்பால்

மத்திய பிரதேசத்தின் போபால் மக்களவைத் தொகுதியில் பாரதிய ஜனதா கட்சியின் சார்பாக, மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கில் பிணையில் வெளிவந்துள்ள பிரக்யா சிங் தாக்கூர் போட்டியிட்டார்.

மகாத்மா காந்தியை சுட்டு கொன்ற நாதுராம் கோட்சே ஒரு தேச பக்தர் என்று இந்த தேர்தல் பரப்புரையின்போது கருத்து தெரிவித்து பிரக்யா சிங் தாக்கூர் சர்ச்சையில் சிக்கினார்.

சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி நாதுராம் கோட்சே என்ற இந்து என மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல் ஹாசன் பேசியது தொடர்பாக கருத்து தெரிவித்தோதே பிரக்யா சிங் தாக்கூர் இந்த கருத்தை தெரிவித்திருந்தார்.

“நாதுராம் கோட்சே ஒரு தேச பக்தராக இருந்தார். தேச பக்தராக இருக்கிறார். தேச பக்தராக இருப்பார். அவரை தீவிரவாதி என்று கூறுவோர் தங்களை சுய ஆய்வுக்கு உட்படுத்திகொள்ள வேண்டும். அவ்வாறு சொல்வோருக்கு இந்த தேர்தல்களில் தகுந்த பதில் வழங்கப்படும்" என்று பிரக்யா சிங் தாக்கூர் தெரிவித்திருந்தார்.

இதற்கு அவர் மன்னிப்பு கேட்டதாக பின்னர் செய்திகள் வெளியாகின.

போபால் மக்களவைத் தொகுதியில் பிரக்யா சிங் எட்டு லட்சத்து 66 ஆயிரத்து 482 வாக்குகள் (61.54 சதவீதம்) பெற்று வெற்றிபெற்றார்.

இவரை எதிர்த்து காங்கிரஸ் சார்பாக போட்டியிட்ட திக்விஜய் சிங்கை விட, பிரக்யா சிங் மூன்று லட்சத்து 64 ஆயிரத்து 822 வாக்குகள் அதிகமாக பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :