தமிழக மக்களவை உறுப்பினர்களால் தமிழ்நாட்டிற்கு எந்த பயனும் இல்லையா?

Su Venkatesan Jothimani

தமிழகத்திலிருந்து மக்களவை செல்லும் உறுப்பினர்களின் பட்டியல் கலவையானது. பல முறை தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் உறுப்பினர்களும் இருக்கிறார்கள், முதல்முறையாக மக்களவை செல்லும் உறுப்பினர்களும் இருக்கிறார்கள். இலக்கியவாதிகள் இருக்கிறார்கள்.

இந்தத் தேர்தலில் தமிழகத்தின் அனைத்து பெரிய கட்சிகளும் அனுபவம் வாய்ந்தவர்களுக்கு எந்த அளவுக்கு வாய்ப்பளித்ததோ அதே அளவு புதுமுகங்களுக்கும் வாய்ப்பளித்து இருக்கிறது. களம் கண்ட புது முகங்கள் வெற்றியும் கண்டிருக்கிறார்கள்.

அனுபவமும் புதுமுகமும்

கரூர் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு வென்ற ஜோதிமணி, மதுரை தொகுதியில் மார்க்சிஸ்ட் சார்பாக போட்டியிட்டு வென்ற எழுத்தாளர் சு. வெங்கடேசன், தேனி தொகுதியில் வென்ற அதிமுகவை சேர்ந்த ரவீந்திரநாத் குமார், தென் சென்னையில் வென்ற திமுகவை சேர்ந்த தமிழச்சி தங்கபாண்டியன், திமுக சின்னத்தில் போட்டியிட்டு விழுப்புரத்தில் வென்ற விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த ரவிக்குமார், காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு சிவகங்கையில் வென்ற கார்த்தி சிதம்பரம் ஆகியோர் குறிப்பிடத்தக்க புது முகங்களாக பார்க்கப்படுகிறார்கள்.

மற்றொரு பக்கம், அனுபவம் வாய்ந்த நாடாளுமன்றவாதிகளும் இந்தத் தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்கள்.

படத்தின் காப்புரிமை Getty Images

தஞ்சாவூரிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் திமுக உறுப்பினர் எஸ்.எஸ்.பழனிமாணிக்கம், ஸ்ரீபெரும்புதூரில் வென்ற டி.ஆர். பாலு, நீலகிரி தொகுதியில் வென்ற ஆ.ராசா, அரக்கோணம் தொகுதியில் வென்ற எஸ்.ஜெகத்ரட்சகன், மத்திய சென்னையில் வென்ற தயாநிதிமாறன், கம்யூனிஸ்ட் கட்சி சார்பாக போட்டியிட்டு நாகப்பட்டினத்தில் வென்ற எம்.செல்வராஜ் ஆகியோர் இதற்கு முன்பே நாடாளுமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்கள். அமைச்சர்களாகவும் இருந்திருக்கிறார்கள்.

புதுமுகமாக தேர்ந்தெடுக்கப்பட்டவர்களில் பெரும்பாலானவர்கள் இலக்கியவாதிகள்.

'வெறும் எழுத்தாளர்கள் அல்ல'

சமூக ஊடகங்களில் தீவிர வலதுசாரிகள் இலக்கியவதிகளால் என்ன மாற்றத்தை கொண்டு வந்துவிட முடியும். அதுவும் எதிரணியில் அமர்ந்து கொண்டு என்ற கேள்வியை முன் வைக்கிறார்கள்.

இதே கேள்வியை செயற்பாட்டாளர் ஆழி செந்தில்நாதனிடம் முன் வைத்தோம்.

அவர், "அவர்கள் வெறும் இலக்கியவாதிகள் அல்ல. பல்வேறு சித்தாந்த அரசியலை சார்ந்த அறிவுஜீவிகள்." என்கிறார்.

"இப்போதுள்ள அரசியல் சூழலில் தமிழகத்திற்கு மட்டுமல்ல, ஒட்டுமொத்த இந்தியாவுக்கே இவர்கள் தேவை. இந்தியா முழுவதும் ஒடுக்கப்பட்டோர், சிறுபான்மையினரின் குரலாக இவர்கள் இருக்க போகிறார்கள். இவர்கள் முன்பே அரசியல் களங்களில் நிரூப்பித்தவர்கள்" என்று பிபிசி தமிழிடம் கூறுகிறார் செந்தில்நாதன்.

பிற மாநிலங்களில் வெறுப்பை விதைப்பவர்கள் மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் போது, தமிழகத்திலிருந்து அறிவுஜீவிகள் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பது தமிழ் சமூகம் எவ்வளவு புத்தி கூர்மையுடன் இருக்கிறது என்பதையே காட்டுகிறது என்கிறார் அவர்.

அனுபவஸ்தர்கள், புதுமுகங்கள் எல்லாம் இருக்கட்டும். ஆனால், இவர்கள் எதிர்க்கட்சிகள். இவர்களால் தமிழகத்திற்கு எந்த நன்மையும் இல்லை என்பது போன்ற பதிவுகளும் சமூக ஊடகங்களில் பகிரப்படுகின்ற.

எதிரணியில் இருந்து கொண்டு இவர்களால் என்ன செய்துவிட முடியும் என்ற கேள்வியே ஜனநாயகத்திற்கு எதிரானது என்கிறார் ஆழி செந்தில்நாதன்.

அவர், "இதுவொரு விஷமப் பிரசாரம். தமிழ்நாட்டின் எம்.பி.கள் தில்லியில் எதுவும் செய்யமுடியாது என்கிற கருத்தை விதைப்பது ஜனநாயக விரோதமானது. ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் எந்தக் கட்சியைச் சேர்ந்தவராக இருந்தாலும் அவர் நாடாளுமன்ற நடவடிக்கைகளில் ஈடுபடும் உரிமையை உடையவர். அவரது முடிவுக்கு பெரும்பான்மை கிடைக்காமல் போகலாம். ஆனால் அவரது கோரிக்கைகளை அரசு பரிசீலித்தே ஆகவேண்டும். அப்படி செய்யவில்லை என்றால் அது ஆளும் கட்சியின் தவறே ஒழியே கேள்விகேட்கும் உறுப்பினரின் தவறு இல்லை.

ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் கட்சிக்கும் மாநிலத்துக்கும் அப்பாற்பட்டு மக்கள் பிரதிநிதி என்கிற அடிப்படையில் சம உரிமை உடையவர். அவர் இந்தியாவின் சட்டமியற்றும் அதிகாரம் கொண்ட பாராளுமன்றத்தின் உறுப்பினர். அங்கே பெரும்பான்மை, சிறுபான்மை என்கிற பலம் மாறுபடலாம். உறுப்பினரின் உரிமை மாறுபடாது. ஒரு குறிப்பிட்ட துறையின் அதிகாரம் மத்திய அரசுக்கு உட்பட்டதாக இருந்தாலும் மாநிலக் கட்சியின் உறுப்பினர் அது குறித்து ஒரு சட்டமுன்வரைவைத் தாக்கல் செய்யலாம்." என்கிறார்.

'கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிரானது'

மக்களவைத் தேர்தலில் நாகப்பட்டினம் தொகுதியிலிருந்து நான்காவது முறையாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள செல்வராஜ், "இவ்வாறான கருத்துகள் கூட்டாட்சி தத்துவத்திற்கே எதிரானது" என்கிறார்.

"நாடாளுமன்றத்தில் தனி நபர் மசோதாவை கொண்டு வர இயலும் எனும் போது எதிரணியில் அமர்ந்து கொண்டு என்ன முடியும் என கேட்பது அறிவீனம். ஒரு செழுமையான ஆட்சிக்கு எதிர்க்கட்சிகளின் பங்கு மிக முக்கியமானது. அவர்களால் எந்த பயனும் இல்லை என்று சொல்வதெல்லாம் எதேச்சாதிகாரத்தை ஆதரிப்பதாகும்." என்று தெரிவிக்கிறார் செல்வராஜ்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :