ஜெட் ஏர்வேஸ் முன்னாள் தலைவர் நரேஷ் கோயல் விமானத்திலிருந்து இறக்கி விடப்பட்டது ஏன்?

விமானத்திலிருந்து இறக்கி விடப்பட்ட ஜெட் ஏர்வேஸ் முன்னாள் தலைவர் படத்தின் காப்புரிமை Getty Images

முக்கிய இந்திய நாளிதழ்கள் சிலவற்றில் வெளியான கட்டுரைகள் மற்றும் செய்திகளைத் தொகுத்து வழங்குகிறோம்.

தினத்தந்தி: விமானத்திலிருந்து இறக்கி விடப்பட்ட ஜெட் ஏர்வேஸ் முன்னாள் தலைவர்

ஜெட் ஏர்வேஸ் முன்னாள் தலைவர் நரேஷ் கோயல், அவருடைய மனைவியுடன் வெளிநாடு செல்ல அனுமதி மறுக்கப்பட்டு விமானத்தில் இருந்து இறக்கி விடப்பட்டார் என்கிறது தினத்தந்தி நாளிதழ் செய்தி.

பின்வருமாறு அந்நாளிதழ் செய்தி விவரிக்கிறது,

ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தை 25 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கியவர் நரேஷ் கோயல். அந்நிறுவனத்தின் தலைவராகவும், நிர்வாக இயக்குனராகவும் அவர் இருந்தார். அவருடைய மனைவி அனிதா கோயல், நிர்வாக குழு உறுப்பினராக செயல்பட்டார்.

நிதி நெருக்கடி காரணமாகவும், வங்கி கடனை திருப்பி செலுத்த முடியாததாலும் ஊழியர்களுக்கு சம்பளம் தர முடியாமல் அந்நிறுவனம் தடுமாறியது. இதையடுத்து அந்த நிறுவனம் அனைத்து சேவைகளையும் தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது.

படத்தின் காப்புரிமை Getty Images

இந்நிலையில் வங்கிகளின் நெருக்கடியால் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் பொறுப்பில் இருந்து நரேஷ் கோயல் விலகினார். நிர்வாக குழு உறுப்பினராக இருந்த அவருடைய மனைவி அனிதா கோயலும் பதவியை ராஜினாமா செய்தார்.

ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் சம்பள பாக்கி வைத்துள்ளதால் அந்நிறுவனத்தின் அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் அமைப்பின் தலைவர் கிரண் பவாஸ்கர் கடந்த மாதம் மும்பை போலீஸ் கமிஷனரிடம் ஒரு புகார் மனு அளித்தார். அதில், ஊழியர்களுக்கு பல மாதமாக சம்பள பாக்கி வைத்திருக்கும் ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தின் தலைவர், இயக்குனர்கள், நிர்வாக குழு உறுப்பினர்களின் பாஸ்போர்ட்டுகளை முடக்க வேண்டும் என அவர் கோரியிருந்தார்.

இந்நிலையில் நரேஷ் கோயல், தன் மனைவி அனிதா கோயலுடன் நேற்று துபாய் செல்லும் விமானத்தில் ஏறி அமர்ந்தார். அப்போது நரேஷ் கோயலையும், அவருடைய மனைவியையும் குடியுரிமை அதிகாரிகள் வெளிநாடு செல்ல அனுமதி மறுத்ததுடன், அவர்களை விமானத்தை விட்டு கீழே இறக்கினர்.

இருவர் மீதும் போலீசில் புகார் இருப்பதால் இந்த நடவடிக்கையை எடுத்திருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர். அவர்களிடம் அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்து தமிழ்: 'போதைப் பொருள் கடத்தும் குழுவின் தலைவன் கைது'

மலேசியாவுக்கு கடத்தும் திட்டத்துடன் சென்னையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 49.5 கிலோ போதைப் பொருளை மத்திய போதைப் பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸார் பறிமுதல் செய்துள்ளனர். கடத்தல் கும்பல் தலைவன் கைது செய்யப்பட்டார் என்கிறது இந்து தமிழ் நாளிதழ் செய்தி.

படத்தின் காப்புரிமை Getty Images

"போதைப் பொருள் கடத்தலை தடுத்து நிறுத்த மத்திய போதைப் பொருள் தடுப்பு பிரிவு போலீஸார் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக, சில நாட்களுக்கு முன்பு மும்பை, டெல்லியில் திடீர் சோதனை நடத்தினர். அங்கு சென்னையை சேர்ந்த 4 பேர் பிடிபட்டனர். அவர்களிடம் இருந்து 25 கிலோ போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்டது.

கைது செய்யப்பட்ட 4 பேரிடமும் நடத்திய விசாரணையில், கடத்தல் கும்பல் தலைவன் சென்னையில் பதுங்கி இருப்பது தெரியவந்தது.

இந்நிலையில், மயிலாப்பூரில் பதுங்கி இருந்த போதைப் பொருள் கடத்தல் கும்பல் தலைவனை போலீஸார் தற்போது கைது செய்துள்ளனர்.

பிடிபட்டவரின் விவரங்களை வெளியிட்டால், அவருடன் தொடர்புடைய மற்றவர்கள் தப்பிவிடுவார்கள். எனவே, அனைவரும் கைது செய்யப்பட்ட பிறகு, முழு விவரங்களும் வெளியிடப்படும் என்று போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.

இதற்கிடையில், சூளைமேட்டில் ஒரு குடோனில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 49.5 கிலோ போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. சென்னையில் இருந்து மலேசியாவுக்கு கடத்துவதற்காக இவை பதுக்கி வைக்கப்பட்டிருந்ததாக போதைப் பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸார் தெரிவித்தனர்."

- இவ்வாறாக அந்நாளிதழ் விவரிக்கிறது.

தினமணி: 'புதிய இந்தியாவை உருவாக்கப் புதிய பயணம்'

படத்தின் காப்புரிமை Getty Images

"புதிய இந்தியாவை உருவாக்கப் புதிய உத்வேகத்துடன் புதிய பயணத்தை தொடங்குவோம்' என்று பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி எம்.பி.க்களின் கூட்டத்தில் நரேந்திர மோதி சனிக்கிழமை தெரிவித்தார். மேலும், மக்களிடையே எவ்வித பாகுபாடும் காட்டாமல் அவர்களுக்காக பணியாற்ற வேண்டும் என்று கூட்டணி எம்.பி.க்களை அவர் கேட்டுக் கொண்டார் என்கிறது தினமணி நாளிதழ் செய்தி.

"புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட தேசிய ஜனநாயகக் கூட்டணி எம்.பி.க்களின் கூட்டம், தில்லி நாடாளுமன்றத்தில் உள்ள மைய மண்டபத்தில் சனிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்தின் முதல் நிகழ்ச்சியாக, வந்தே மாதரம் பாடல் இசைக்கப்பட்டது. பின்னர், பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா வரவேற்புரையாற்றினார். அதன் பின்னர், தேசிய ஜனநாயகக் கூட்டணியின் எம்.பி.க்கள் குழு தலைவர் பதவிக்கு (பிரதமர்) மோதியின் பெயரை பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா முன்மொழிந்தார். அதனை, பாஜக மூத்த தலைவர்கள் ராஜ்நாத் சிங், நிதின் கட்கரி ஆகியோர் வழிமொழிந்தனர். பின்னர், புதிய எம்.பி.க்கள் மற்றும் கூட்டணி கட்சித் தலைவர்களின் ஏகோபித்த ஆதரவுடன் மீண்டும் பிரதமராக நரேந்திர மோதி தேர்வு செய்யப்பட்டார். இதற்கான அறிவிப்பை அமித் ஷா வெளியிட்டார்.

இக்கூட்டத்தில், பாஜக மூத்த தலைவர்கள் எல்.கே.அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, தமிழக முதல்வரும் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வரும் அதிமுக ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர் செல்வம், ஐக்கிய ஜனதா தளம் தலைவர் நிதீஷ் குமார், சிவசேனை கட்சித் தலைவர் உத்தவ் தாக்கரே, அகாலி தளம் தலைவர் பிரகாஷ் சிங் பாதல் உள்ளிட்டோர் பங்கேற்றனர். அவர்கள் அனைவரும் மோதிக்கு வாழ்த்துகளை தெரிவித்தனர்." என்கிறது அந்நாளிதழ்.

தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்: 'தமிழ் நாடு நதிநீர் இணைப்பு'

கோதாவரி - காவிரி நதியை இணைக்க மத்திய நீர் வளத் துறை அமைச்சர் நிதின் கட்கரி உறுதி அளித்துள்ளதாக பாரதிய ஜனதா கட்சியின் தமிழக தலைவர் தமிழிசை செளந்தராஜன் கூறி உள்ளார்.

கட்கரி கூறியதை கேட்டு எனக்கு கன்ணீரே வந்துவிட்டது. தமிழகம் பா.ஜ.கவை நிராகரித்த அடுத்த நாள் இவ்வாறு நிதின் கட்கரி கூறி உள்ளார். இதுதான். பா.ஜ.க . நிராகரிக்கப்பட்டாலும் அவர்கள் தங்கள் கடமையை செய்வார்கள் என தமிழிசை பகிர்ந்த ஒரு ட்வீட்டில் குறிப்பிட்டுள்ளார்.

'டைம்ஸ் ஆஃப் இந்தியா': உலகக்கோப்பை பயிற்சி ஆட்டத்தில் நியூஸிலாந்திடம் இந்தியா தோல்வி

படத்தின் காப்புரிமை AFP

2019 கிரிக்கெட் உலகக்கோப்பை பயிற்சி ஆட்டத்தில் நியூஸிலாந்து அணியிடம் இந்தியா 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது குறித்த செய்தியை டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளிதழ் வெளியிட்டுள்ளது.

உலகக்கோப்பைக்கான பயிற்சி போட்டிகள் வெள்ளிக்கிழமை துவங்கியது.

இந்நிலையில் லண்டனில்இந்தியா மற்றும் நியூஸிலாந்து அணிகளுக்கு இடையே நடந்த பயிற்சி ஆட்டத்தில் முதலில் பேட் செய்த இந்தியா தொடக்கம் முதலே தடுமாறியது.

தொடக்க வீரர்கள் ரோகித் சர்மா மற்றும் ஷிகர் தவான் ஆகியோர் ஒற்றை இழக்க ரன்களில் ஆட்டமிழந்தனர். தொடர்ந்து களமிறங்கிய மற்ற வீரர்களும் பெரிதாக ரன் குவிக்கமுடியவில்லை. அணித்தலைவர் கோலி 18 ரன்கள் எடுத்தார்.

ஜடேஜா 54 ரன்கள் எடுத்தார். போல்ட் 4 விக்கெட்டுகள் எடுத்தார்.

இதனையடுத்து பேட் செய்த நியூஸிலாந்து 37.1 ஓவர்களில் இலக்கை எட்டியது.

இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் வரும் மே 30 முதல் ஜூன் 14 வரை நடக்கவுள்ளது.

45 லீக் போட்டிகள் மற்றும் 2 அரையிறுதி போட்டிகள் மற்றும் இறுதியாட்டம் என 48 போட்டிகள் சுமார் 12 நகரங்களில் நடக்கவுள்ளது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :