மீண்டும் மோதி- தேர்தல் முடிவுகளை எப்படிப் புரிந்துகொள்வது?

Narendra Modi படத்தின் காப்புரிமை Getty Images

பாரதிய ஜனதா கட்சி பெருவெற்றி பெற்று, பல சாதனைகளை முறியடித்து, மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றியுள்ளது. நரேந்திர மோதி பிரதமராகத் தொடர்வார். தமிழகம், கேரளம், ஆந்திரம் என்ற மூன்று தென்னிந்திய மாநிலங்கள் தவிர்த்து இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் பாஜக அழுத்தமாக தன் முத்திரையைப் பதித்துள்ளது.

தேர்தல் முடிவுகளை எப்படிப் புரிந்துகொள்வது?

இந்து உயர்சாதியினர் பாஜகவை ஜெயிக்கவைத்தார்கள், இது இந்துத்துவத்தின் வெற்றி என்றெல்லாம் பார்ப்பது மக்களைக் கேலி செய்வதற்கு ஒப்பானதாகும். யாரும் ஒற்றைக் காரணத்துக்காக ஒரு கட்சியை ஜெயிக்கவைப்பதில்லை. தங்கள் வாழ்க்கை முன்னேற இதுதான் சரியான தேர்வு என்று பெருமளவு மக்கள், சாதி, மதங்களையெல்லாம் தாண்டிச் சிந்தித்திருக்கிறார்கள். பணமதிப்பிழப்பு, ஜிஎஸ்டி வரிவிதிப்பு, வேலையில்லாத் திண்டாட்டம் அதிகரிப்பு, மதவாதம், ரஃபேல் ஊழல் என்று பாஜகமீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளை மக்கள் அங்கீகரிக்கவில்லை, அல்லது சிலவற்றில் உண்மை இருந்தாலும் பாஜகவுக்கு வாக்களிப்பதே சரியானது என்று பெரும்பாலானோர் முடிவெடுத்தனர் என்பதையே இந்தத் தீர்ப்பு காட்டுகிறது.

ரஃபேல் போர்விமானங்கள் வாங்குவதில் நரேந்திர மோதி தனிப்பட்ட முறையில் ஊழல் செய்தார் என்று காங்கிரஸ் கடுமையான பிரசாரம் செய்தது. மோதி ஒரு திருடன் என்று ராகுல் காந்தி தொடர்ந்து சொல்லிவந்தார். தனக்கு ஆதரவாக, உச்சநீதிமன்றம் சொல்லாத ஒன்றைச் சொன்னதாகப் பொய் சொன்னார். பின்னர் அதற்காக அவர் நீதிமன்றத்தில் வருத்தம் தெரிவித்து அவமானப்படவேண்டியிருந்தது. இந்த அவதூறுகளை உதறி எறிந்த நாட்டு மக்கள், மோதி திருடன் அல்லர் என்று அழுத்தம் திருத்தமாகப் பதில் சொல்லியுள்ளனர்.

பணமதிப்பிழப்பு, ஜிஎஸ்டி இரண்டுமே இந்தியப் பொருளாதாரத்தின் முதுகெலும்பையே ஒடித்துவிட்டன என்று முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், முன்னாள் நிதியமைச்சர் சிதம்பரம் முதற்கொண்டு பலரும் பேசினார்கள். இவை இரண்டுமே கடினமான முடிவுகள், இவற்றால் குறுகிய காலத்தில் மக்களுக்கு நிறைய பிரச்னைகள் இருந்தாலும் நீடித்த நன்மைகள் இருக்கும் என்று மோதி விளக்கினார். மோதி எதிர்பார்த்ததைவிடச் சிக்கல்கள் அதிகமாக இருந்தன. ஆனாலும் மக்கள் இந்தப் பிரச்னைகளைப் புரிந்துகொண்டனர். இந்தச் செயல்பாடுகளின் பின் உள்ள நோக்கத்தை மிகச் சரியாகவே கணித்தனர். எதிர்க்கட்சிகளின் பிரசாரம் வேலை செய்யவில்லை.

படத்தின் காப்புரிமை Getty Images

வேலையில்லாத் திண்டாட்டம் என்பது திடீரென்று வந்த ஒன்றல்ல. படித்த இளைஞர்களுக்கு வேலை கிடைப்பதில் நிறைய சிக்கல்கள் உள்ளன. இதற்கு மத்திய அரசை மட்டும் குறை சொல்வது எவ்விதத்திலும் நியாயம் இல்லை. ஆனாலும் பாஜக அரசு 2014-ல் ஒரு தவறைச் செய்திருந்தது. இத்தனை லட்சம் வேலை வாய்ப்புகளை உருவாக்குவோம் என்று உறுதி அளித்திருந்தது. எந்த அரசுமே அதுபோன்ற வாக்குறுதியைத் தரக்கூடாது. தந்தாலும் அதை நிறைவேற்ற முடியாது. இம்முறை பாஜக அப்படிப்பட்ட தவறைச் செய்யவில்லை. பொருளாதாரத்தை வளப்படுத்துவதுடன், இளைஞர்களின் தொழில்திறனையும் மென்திறனையும் மேம்படுத்தினால் மட்டுமே வேலைவாய்ப்புகளை அதிகப்படுத்த முடியும். மேலும், மக்களுக்கு ஏதோ ஒரு வேலை கிடைத்துக்கொண்டுதான் இருக்கிறது. உண்மையான பிரச்னை வேலை கிடைக்காமல் இருப்பதல்ல; சரியான ஊதியத்துடனன வேலை கிடைக்காததே.

பாஜக இந்துத்துவத்தை முன்வைக்கும் கட்சி. சில வட மாநிலங்களில் பசுக்காவலர்கள் என்ற பெயரில் உதிரிக் கும்பல்கள் முஸ்லிம்களைத் தாக்கின. உயிரிழப்பும் நிகழ்ந்தது. ஆனால் இதனை பாஜகவின் அடிப்படைத் திட்டம் என்று முன்வைத்து பத்திரிகைகளில் நடந்த பிரசாரம் எடுபடவில்லை. அதேபோல, சில கிறிஸ்தவ தேவாலயங்களில் மர்மமான முறையில் தாக்குதல் நடந்ததை, பாஜகவின் திட்டமிட்ட சதி என்று பத்திரிகைகள் காட்ட முயன்றதும் மக்கள்மத்தியில் எடுபடவில்லை. இதனால் பாஜக, மதத்தைக் கையில் எடுக்கவே இல்லை என்று சொல்ல முடியாது. முக்கியமாக உத்தரப் பிரதேசத்திலும், மேற்கு வங்கத்திலும், தெலங்கானாவிலும் மத அடையாளக் கூர்மைப்படுத்தல் பாஜகவுக்கு உதவியுள்ளது.

பயங்கரவாதக் குற்றச்சாட்டில் சிக்கியிருக்கும் சாத்வி பிரக்ஞா சிங் தாக்கூரை மத்தியப் பிரதேசத்தில் வேட்பாளர் ஆக்கியது மட்டுமல்ல, அவர் காங்கிரஸின் திக்விஜய் சிங்கை தோற்கடித்திருப்பதை எப்படிப் புரிந்துகொள்வது? பாஜக பலவிதமான உறுப்பினர்களைத் தன்னை நோக்கி ஈர்க்கிறது. அதில் ஒருசாரார் படுதீவிர இந்துத்துவர்களும்கூட. அந்தத் தொகுதியைத் தன்னிடம் வைத்திருக்க பாஜகவுக்கு பிரக்ஞாவும் தேவைப்படுகிறார். பிரக்ஞாவுக்கு இடம் கொடுத்தால் தான் விலகிவிடுவேன் என்று எந்த கூட்டணிக் கட்சியும் சொல்வதில்லை; பொதுமக்களும் பாஜகவுக்கு வாக்களிப்பதிலிருந்து பின்வாங்குவதில்லை. பிரக்ஞாவையும் உள்ளடக்கியதுதான் இந்திய அரசியல்.

ஆனால் தமிழகத்தில் இவை எவையும் பாஜகவுக்கு உதவவில்லையே?

படத்தின் காப்புரிமை Getty Images

திமுகவும் காங்கிரசும் தமிழகத்தில் கூட்டு சேர்ந்தபின், பாஜகவுக்கான ஒரே வாய்ப்பு ஒரு பெரும் கூட்டணியை உருவாக்குவதுதான். அதில் பாஜக வெற்றி அடைந்தது. ஆனால், தினகரன் அதிமுகவின் ஒரு குழுவைப் பிரித்தது, அக்கூட்டணிக்குப் பின்னடைவைக் கொடுத்தது. இருந்தும், பாஜக+அதிமுக கூட்டணி ஒட்டுமொத்தமாக வீழ்ந்ததற்கு காரணம், திமுகவின் வலுவான பிரசாரமே. தேர்தலுக்குப் பல மாதங்களுக்கு முன்பிருந்தே, மோதி தலைமையிலான பாஜக அரசு என்பது தமிழக விரோத அரசு என்று மக்களை நம்பவைப்பதில் திமுக பெரும் வெற்றி பெற்றிருந்தது. அது இந்திய அளவிலான பாஜக எதிர்ப்புப் பிரசாரத்தின் அடிப்படையிலானதல்ல. டெல்டா ஹைட்ரோகார்பன் பிரச்னை, தூத்துக்குடி ஸ்டெர்லைட் பிரச்னை, நீட் தேர்வுப் பிரச்னை என்று தொடங்கி, தமிழக வேலைகள் பறிபோகின்றன, தமிழகத்துக்கு வேண்டிய நிதி ஆதாரத்தை மத்திய அரசு தருவதில்லை என்று விரிந்து, "மோடியே திரும்பிப் போ" என்ற போராட்டமாக மாற்றம் எடுத்து, அனைவரையும் சென்றடைந்தது திமுகவின் பிரசாரம். இதனை எதிர்கொள்ள பாஜகவுக்கு வலு இருக்கவில்லை. தேர்தலை ஒட்டி அதிமுகவின் கூட்டணி அமைந்தபின்னரே, அதிமுக அமைச்சர்களும் பிற அதிமுகவினரும் பாஜகவுக்கு ஆதரவாகப் பேசத் தொடங்கினர்.

இன்றைய நிலையில், பாஜகவுக்கு வலுவான மாற்று என்று எதுவும் இல்லை என்பதுதான் உண்மை. இரண்டாம், மூன்றாம், நான்காம் அணி என்று யாரையும் கை காண்பிக்க முடியாது. வரும் ஐந்தாண்டுகளில் எதிர்க்கட்சிகள் வரிசையிலிருந்து ஒரு புது, இளம் தலைவர் உருவாகி வந்தால் மட்டுமே பாஜகவின் தேர்தல் இயந்திரத்தை எதிர்கொள்ள முடியும். அது நிச்சயமாக ராகுல் காந்தியாகவோ பிரியங்கா காந்தியாகவோ இருக்க முடியாது என்று தோன்றுகிறது. பாஜகவின் தவறுகள் போதும், நாம் உழைப்பின்றி ஜெயித்துவிடலாம் என்று எதிர்க்கட்சிகள் நினைத்துக்கொண்டிருந்தார்கள் என்றால், அதைவிடப் பெரியதவறு எதுவும் இருக்கமுடியாது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்