அதிமுகவில் ஸ்லீப்பர் செல்கள் தொடர்ந்து இயங்குகிறார்கள்: டி.டி.வி.தினகரன்

டி.டி.வி. தினகரன்
Image caption டி.டி.வி. தினகரன்

தமிழக சட்டமன்றத்தில் விரைவில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்படும் என்ற எதிர்பார்ப்பில் உள்ளார் அமமுகவின் பொது செயலாளர் டிடிவி தினகரன்.

2019 மக்களவை தேர்தல் மற்றும் 22 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் அமமுக படுதோல்வியை சந்தித்துள்ளது. தேர்தல் முடிவுகள் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய தினகரன் மக்களின் தீர்ப்பை மதிப்பதாகவும், மாபெரும் வெற்றியை எதிர்பார்த்து தோல்வியை தழுவியதாக கூறினார்.

அதிமுகவில் உள்ள ஸ்லீப்பர் செல்கள் ஏன் அவருக்கு தேர்தலில் உதவவில்லை என்று கேட்டபோது, ''விரைவில் சட்டமன்றத்தில் நம்பிக்கையில்லா தீர்மானம் வரும். அப்போது அதிமுக ஸ்லீப்பர் செல்கள் உதவுவார்கள். எங்களுக்கு வாக்குகள் கிடைகாததற்கு காரணம் போக போக தெரியும்,'' என்றார்.

தமிழகத்தில் சுமார் 300 வாக்குச்சாவடிகளில் அமமுகவுக்கு ஒரு ஓட்டு கூட பதிவாகவில்லை என்று கூறிய அவர், ''எங்களுக்கு வந்த தகவலின்படி, சுமார் 300 வாக்கு சாவடிகளில் எங்களுக்கு பூஜ்யம் ஒட்டுதான் கிடைத்துள்ளது. ஒவ்வொரு வாக்கு சாவடியில் எங்கள் முகவர்கள் நான்கு பேர் இருந்தனர். எங்கள் முகவர்களின் ஓட்டுகள் எப்படி கிடைக்காமல் போகும்? நான் வாக்களித்த பூத்தில் என்னுடைய வாக்கு உள்பட எங்கள் குடும்பத்தினர் மற்றும் ஆதரவாளர்கள் சுமார் 100 பேர் வாக்களித்திருப்பார்கள். ஆனால் வெறும் 14 ஓட்டுகள் மட்டுமே பதிவாகியுள்ளது. என்னுடைய வாக்கு பதிவாகியதா என்பது சந்தேகமாக உள்ளது. இதற்கு நீதிமன்றம் செல்லமுடியாது, இதற்கு தேர்தல் ஆணையம்தான் பதில் சொல்லவேண்டும்,''என்றார் தினகரன்.

ஊட்டியில் பல பூத்களில் பூத் ஏஜென்ட்கள் மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

எந்த கட்சியிலும் யாரும் தொடர்ந்து இருக்கவேண்டும் என்ற கட்டாயம் இல்லை என்று கூறும் தினகரன், ''தனி நபர்கள் யாராவது கட்சியில் இருந்து போனால் அதைப் பற்றி கவலை இல்லை. எங்கள் வேலைகளை தொடர்ந்து செய்வோம். அரசியலில் ஒரே நாளில் எல்லாம் மாறிவிடும் என்பதில்லை. தமிழகத்தில் 37 இடங்களில் திமுக வெற்றிபெற்றுள்ளது. எப்படி தேனி மாவட்டத்தில் மட்டும் அதிமுக வெற்றி பெற்றுள்ளது. வெற்றி பெற்றாலும், தோல்வி அடைந்தாலும் எங்கள் முடிவில் மாற்றமில்லை. எப்போதும் பாஜகவுக்கு ஆதரவில்லை.

தேர்தல் தோல்வியை தந்தாலும் தொடர்ந்து கட்சி பணிகளில் ஈடுபடவுள்ளதாக கூறுகிறார் தினகரன். கட்சியினருடன் அடுத்த மாதம் முதல் வாரத்தில் சந்திப்பு ஒன்றை ஏற்பாடு செய்துள்ளதாகத் தெரிவித்தார்.

பிற செய்திகள் :

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :