சந்திரபாபு நாயுடுவை நம்பாமல் ஜெகன் மோகனை ஆதரித்த ஆந்திர மக்கள் - பின்னணியும் காரணமும்

  • ஜி.எஸ்.ராம்மோகன்
  • பிபிசி தெலுங்கு, ஆசிரியர்
படக்குறிப்பு,

சந்திரபாபு நாயுடு - ஜெகன் மோகன் ரெட்டி

சந்திரபாபு நாயுடு என்ற ஒரு நபரின் பெயரை சொன்னால் பலரது நினைவுக்கு வருவது 'விஷன் 2020'. ஆனால், தற்போது சந்நிதரபாபு நாயுடுவின் அரசியல் எதிர்காலமானது 2020 வரை இருக்குமா என்பதே சந்தேகம்தான்.

கடந்த 37 ஆண்டுகால அரசியலை எடுத்துப் பார்த்தால், தெலுகு தேசம் கட்சி இப்படி ஒரு மோசமான தோல்வியை சந்தித்ததில்லை.

ஆந்திராவின் மொத்தமுள்ள 175 சட்டமன்ற தொகுதிகளில், வெறும் 23 தொகுதிகளை மட்டுமே அக்கட்சி வென்றுள்ளது.

1983ஆம் ஆண்டு என்.டி. ராமாராவ் தலைமையில் வரலாற்று வெற்றி பெற்று சாதனை படைத்த அக்கட்சி, இன்று படுதோல்வியை சந்தித்திருக்கிறது. எதிர்பார்ப்புகளை எல்லாம் தகர்த்தெறிந்து ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி இமாலய வெற்றியை பெற்றுள்ளது.

ராயலசீமா பகுதியின் நான்கு மாவட்டங்களில் சந்திரபாபு நாயுடு, அவரது மருமகன் என்.பாலகிருஷ்ணா மற்றும் பயவுல கேஷவ் ஆகியோர் மட்டுமே வெற்றி பெற முடிந்துள்ளது. ஆந்திரா முழுவதுமே கிட்டத்தட்ட இதே நிலைதான்.

1984 மக்களவை தேர்தலில் நாட்டின் எதிர்க்கட்சி அந்தஸ்தை பெற்றது தெலுகு தேசம் கட்சி. ஒரு மாநிலக் கட்சி, நாட்டின் எதிர்க்கட்சி அந்தஸ்தை பெற்றது அந்த ஒரு முறை மட்டுமே. அப்படியான பெருமை பெற்ற தெலுகு தேசம் கட்சி, மூன்றே மூன்று மக்களவை தொகுதிகளில் மட்டுமே தற்போது வெற்றி பெற்றுள்ளது.

இந்திய அளவில் முக்கிய பங்காற்றலாம் என்று நினைத்து, பல்வேறு மாநிலக் கட்சி தலைவர்களை சந்தித்த சந்திரபாபு நாயுடுவின் நம்பிக்கையை இத்தேர்தல் முடிவுகள் தகர்த்துவிட்டன.

விஜயவாடாவில் கிருஷ்ணா நதி அருகே ஒரு சுவாராஸ்யமான பேனர் ஒன்று வைக்கப்பட்டது. அதில் ஒய்.எஸ். ஜெகன் மோகன் ரெட்டி மற்றும் என்.டி ராமாராவின் புகைப்படங்கள் இடம் பெற்றிருந்தன. அதில் மாநிலக் கட்சிகளை உருவாக்கி பெரும் வெற்றி பெற்ற பெரும் தலைவர்கள் என்று எழுதப்பட்டிருந்தது.

ராஜசேகர ரெட்டி மற்றும் அவர் கொண்டுவந்த நலதிட்டங்களின் வாரிசாக ஜெகனை மக்கள் ஏற்றுக் கொண்டுள்ளனர்.

மக்கள் அளித்துள்ள வாக்குகள், ஜெகனை எந்த சந்தேகமும் இன்றி வெற்றி பெற வைத்துள்ளது. ஆனால், தேர்தலுக்கு முன்னால் சந்திரபாபு நாயுடு எடுத்த நடவடிக்கைகளும், செய்த செயல்களும், ஜெகன் வெற்றி பெறுவாரா என்ற சந்தேகத்தை எழுப்பியது.

அதே போல தேர்தலில் போட்டியிட்ட பவன் கல்யாண் வாக்குகளை பிரிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், தற்போது தேர்தல் முடிவுகளை பார்க்கும்போது இது போன்ற எந்தக் காரணிகளும், சந்திரபாபு நாயுடுவுக்கு சாதகமாக இருக்கவில்லை என்று தெரிகிறது.

சொல்லப்போனால், சந்திரபாபு நாயுடுவை மக்கள் நம்பவில்லை என்றும், 'காபு' சாதியினருக்கு இடஒதுக்கீடு வழங்கியும், அந்த குறிப்பிட்ட மக்களின் வாக்கு இவருக்கு எதிராக திரும்பியதையும், தேர்தல் முடிவுகள் தெளிவாக கூறுகிறது.

பவன் கல்யானின் கட்சி தேர்தலில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை. அவ்வப்போது அவர் பேசிய பெரும் பேச்சுகளை மக்கள் தீவரமாக எடுத்துக்கொள்ளவில்லை. மேலும் அவரது கொள்கைகளில் தெளிவு இல்லாததும் ஒரு காரணமாகும். அவர் போட்டியிட்ட இரு தொகுதிகளிலுமே பவன் கல்யான் தோற்கடிக்கப்பட்டுள்ளார்.

கடந்த தேர்தல்களில் பல விஷயங்கள் சந்திரபாபு நாயுடுவிற்கு சாதகமாக அமைந்திருந்தது. கடந்த தேர்தலில்கூட ஜெகன், வலுவான போட்டியாளராக இருந்தார். இன்றும் ஒய்.எஸ். ராஜசேகர ரெட்டிக்கு மக்கள் அனுதாபம் உள்ளது.

ஆனால், கடந்த தேர்தலில் நரேந்திர மோதி, சந்திரபாபு நாயுடு மற்றும் பவன் கலயான் ஒன்றாக பிரசாரம் செய்தது, விவசாய கடன் தள்ளுபடி அறிவிப்பு, புதிதாக பிரிக்கப்பட்ட மாநிலத்திற்கு மூத்த தலைவரை தேர்ந்தெடுப்பது சரியாக இருக்கும் என்ற தோற்றம், இவையெல்லாம் சந்திரபாபு நாயுடுவுக்கு சாதகமாக அமைந்தது.

எனினும், இந்த முறை சூழல் மாறிவிட்டது. தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து வெளியேறி தெலுங்கு தேசம் கட்சியின் பரம எதிரியான காங்கிரசுடன் கைக்கோர்த்தார் சந்திரபாபு நாயுடு. இது எந்த வகையிலும் அவருக்கு உதவவில்லை.

நரேந்திர மோதி உலகிலேயே மிகச்சிறந்த மனிதர் என்று புகழ்ந்த சந்திரபாபு நாயுடு, திடீரென அவருக்கு எதிராக வசை பாடியதை மக்கள் நம்பவில்லை.

ஆந்திர மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் விவகாரத்தில் மோதி மீது குற்றஞ்சாட்டினார் சந்திரபாபு நாயுடு. சிறப்பு அந்தஸ்து விஷயத்தில் மோதி மீது மக்கள் வருத்தத்தில் இருந்தாலும், இதில் அவர்கள் சந்திரபாபு நாயுடுவின் வார்த்தைகளை நம்பவில்லை.

மேலும் பல விவகாரங்களில் மக்களின் நம்பிக்கையை பெற சந்திராபாபு நாயுடு தவறிவிட்டார்.

படக்குறிப்பு,

ஜெகன் மோகன் ரெட்டி

இந்நிலையில், எதிர்க்கட்சியின் பலவீனத்தை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டார் ஜெகன். சந்திரபாபு நாயுடுவை நம்பமுடியாது என்றும், அவர் எப்படி மாறி மாறி பேசுகிறார் என்பதையும் அழுத்திக்கூறி அவர் பிரசாரம் செய்தார்.

அவரது தந்தையின் பிரபலமும் ஜெகனுக்கு உதவியது. ஆனால், புதிய முதலமைச்சராக பதவியேற்கவுள்ள ஜெகன் மோகன் ரெட்டிக்கு பல சவால்கள் காத்திருக்கின்றன.

ஜெகனின் 'நவரத்நலு' திட்டத்திற்கு (ஒன்பது நலத்திட்டங்கள் அடங்கியது) ஆந்திராவிடம் போதிய பணம் இருக்கிறதா என்ற கேள்விக்கு விடையில்லை. பொதுநல திட்டங்கள் மற்றும் மாநில வளர்ச்சி இரண்டையும் சமமாக வைக்க வேண்டிய தேவை உள்ளது.

வாஷிங்டனை போன்ற ஒரு தலைநகரத்தை உருவாக்க வேண்டும் என்பது ஜெகனின் கனவு என்று அவருக்கு நம்பிக்கைக்குரிய நபர்கள் கூறுகிறார்கள். ஆனால், நம்பிக்கை என்பது வேறு நிஜம் என்பது வேறு.

ஜெகன் மோகன் ரெட்டி மீது ஊழல் குற்றச்சாட்டுகள் இருந்தாலும், அதையெல்லாம் மீறி அவர் ஒரு செயல்திறன் வாய்ந்தவர் என்றும் கடின உழைப்பாளி என்றும் பெயர் வாங்கிவிட்டார். அவர் ஒரு நல்ல ஆட்சியாளர் என்று நிரூபித்து காட்டுவாரா என்பதை காலம்தான் பதில் சொல்லும்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :