அன்புமணி ராமதாஸ்: மீண்டும் மாநிலங்களவை உறுப்பினராகிறார்

Anbumani அன்புமணி படத்தின் காப்புரிமை facebook

முக்கிய இந்திய நாளிதழ்கள் சிலவற்றில் வெளியான கட்டுரைகள் மற்றும் செய்திகளைத் தொகுத்து வழங்குகிறோம்.

தினத்தந்தி: 'மீண்டும் நாடாளுமன்றம் செல்கிறார் அன்புமணி ராமதாஸ்'

அடுத்த மாதம் மாநிலங்களவை உறுப்பினர்கள் தேர்தல் நடைபெறும் நிலையில், ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ, பா.ம.க. இளைஞரணித் தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் ஆகியோர் எம்.பி.யாக தேர்வு பெற இருக்கிறார்கள் என்கிறது தினத்தந்தி நாளிதழ் செய்தி.

பின்வருமாறு விவரிக்கிறது இந்நாளிதழ்:

நாடு முழுவதும் உள்ள மாநிலங்களின் பரப்பளவு, மக்கள்தொகை அடிப்படையில் நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர்களுக்கான இடங்கள் ஒதுக்கப்படுகின்றன. அந்த வகையில், தமிழ்நாட்டிற்கு 18 இடங்கள் உள்ளன. ஒரு மாநிலங்களவை இடத்தை பெற 34 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவை பெற வேண்டும்.

சட்டமன்ற தேர்தலில் அரசியல் கட்சிகளின் பலத்தின் அடிப்படையிலேயே மாநிலங்களவை உறுப்பினர்களுக்கான இடங்கள் கிடைக்கும். ஒரு மாநிலங்களவை எம்.பி.யின் பதவிக் காலம் 6 ஆண்டுகள் ஆகும். இவை சுழற்சி முறையில் காலியாகும். இந்த நிலையில், தமிழகத்தை சேர்ந்த 6 மாநிலங்களவை எம்.பி.க்களின் பதவி காலம் ஜூலை 24-ம் தேதியுடன் முடிவடைகிறது.

அதாவது, அ.தி.மு.க.வை சேர்ந்த வி.மைத்ரேயன், கே.ஆர்.அர்ஜூனன், டி.ரத்னவேல், ஆர்.லட்சுமணன், தி.மு.க.வை சேர்ந்த கனிமொழி, இந்திய கம்யூனிஸ்டு கட்சியை சேர்ந்த டி.ராஜா ஆகியோரது பதவி காலம் நிறைவடைகிறது. புதிய மாநிலங்களவை எம்.பி.க்களை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் அடுத்த மாதம் (ஜூன்) நடக்க இருக்கிறது.

படத்தின் காப்புரிமை Facebook

தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தலுடன் நடத்தப்பட்ட 22 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் தி.மு.க. 13 இடங்களையும், அ.தி.மு.க. 9 இடங்களையும் கைப்பற்றியது. அ.தி.மு.க.வின் எம்.எல்.ஏ.க்களின் பலம் குறைந்துள்ளதால், ஒரு மாநிலங்களவை எம்.பி. இடத்தை அக்கட்சி இழக்கிறது. அந்த ஒரு இடம் தி.மு.க.வுக்கு கூடுதலாக கிடைக்கிறது.

234 தொகுதிகள் கொண்ட தமிழக சட்டசபையில் அ.தி.மு.க.வின் பலம் 123 ஆகவும், தி.மு.க.வின் பலம் 110 ஆகவும் உள்ளது. இதன் அடிப்படையில், மாநிலங்களவையில் அ.தி.மு.க., தி.மு.க.வுக்கு தலா 3 இடங்கள் கிடைக்கும். ஒரு மாநிலங்களவை உறுப்பினருக்கு 34 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு தேவை. இதை வைத்து பார்க்கும்போது அ.தி.மு.க.வில் 3 மாநிலங்களவை உறுப்பினர்களுக்கு 102 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு தேவையாக உள்ளது. மீதம் 21 எம்.எல்.ஏ.க்கள் உபரியாக இருக்கின்றனர்.

நாடாளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க.வுடன் பா.ம.க. கூட்டணி அமைத்தபோது ஒரு மாநிலங்களவை இடம் வழங்கப்படுவதாக உறுதி அளிக்கப்பட்டது. அதன்படி, பா.ம.க. இளைஞர் அணித் தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் மாநிலங்களவை எம்.பி.யாகிறார். ஏற்கனவே இவர் 2004-ம் ஆண்டு முதல் 2010-ம் ஆண்டு வரை மாநிலங்களவை எம்.பி.யாக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்: 'கேட்கலாம் ஆனால் அழுத்தம் தர முடியாது'

படத்தின் காப்புரிமை Getty Images

அந்திர பிரதேசத்திற்கு சிறப்பு அந்தஸ்தை கேட்கலாம் ஆனாம் பெரிதாக அழுத்தம் தர முடியாது என ஆந்திர முதல்வராக பொறுப்பேற்க இருக்கும் ஜெகன் மோகன் கூறி உள்ளார். " "பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி பெரும்பான்மையுடன் மாபெரும் வெற்றி கண்டுள்ளது. 250 தொகுதிகளில் மட்டும் வென்று இருந்தால் அவர்களுக்கு நமது ஆதரவு தேவைப்பட்டிருக்கும். நாம் நமது கோரிக்கைகளுக்கு அழுத்தம் தந்திருக்கலாம். ஆனால், இப்போது அதற்கான வாய்ப்பில்லை" என்று அவர் கூறியதாக விவரிக்கிறது அந்நாளிதழ்.

இந்து தமிழ்: 'ப.சிதம்பரம், கமல்நாத், அசோக் கெலாட் மீது ராகுல் புகார்'

"வாரிசு அரசியலால்தான் காங்கிரஸ் தோற்றது என்றும் ப.சிதம்பரம், கமல்நாத், அசோக் கெலாட் ஆகியோர் தங்கள் மகன்களுக்கு தேர்தலில் போட்டியிட சீட் கேட்டு வற்புறுத்தியதாக அக்கட்சியின் தலைவர் ராகுல் காந்தி குற்றம்சாட்டி உள்ளார். இதுபோல, இந்தத் தேர்தலில் மோடியை எதிர்த்து ராகுல் காந்தி தனியாக போராடியதாகவும் அவருக்கு ஆதரவாக யாரும் செயல்படவில்லை என்றும் பிரியங்கா காந்தி குற்றம்சாட்டினார்." - என்கிறது இந்து தமிழ் நாளிதழ்.

காங்கிரஸ் கட்சியின் காரியக் கமிட்டி கூட்டம் கட்சித் தலைவர் ராகுல் காந்தி தலைமையில் டெல்லியில் நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில், ஐக்கிய முற்போக்குக் கூட்டணி தலைவர் சோனியா காந்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உள்ளிட்ட மூத்த தலைவர்கள் பங்கேற்றனர். சுமார் 4 மணி நேரம் நடைபெற்ற இக்கூட்டதில் தேர்தல் தோல்வி குறித்து விரிவாக ஆலோசனை நடத்தப்பட்டது. அப்போது, ராகுல் காந்தி, தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்று தலைவர் பதவியை ராஜினாமா செய்ய முன்வந்தார். ஆனால், காரியக் கமிட்டி அதை ஏற்கவில்லை. அத்துடன் கட்சியை மறுசீரமைக்கும் அதிகாரம் ராகுலுக்கு வழங்கப்பட்டது.

இந்நிலையில் இந்தக் கூட்டத்தில் பங்கேற்ற தலைவர்கள் சிலர், அங்கு நடந்த காரசார விவாதங்கள் குறித்த விவரங்களை தெரிவித்துள்ளனர். ராகுல் காந்தி கட்சித் தலைவர் பதவியை ராஜினாமா செய்ய முன்வந்தபோதும் தனது குடும்பத்தினர் யாரும் இந்தப் பதவிக்கு வருவதை விரும்பவில்லை என தெரிவித்ததாகக் கூறப்படுகிறது. குறிப்பாக தனது சகோதரி பிரியங்கா தலைவர் பதவியை ஏற்கமாட்டார் என ராகுல் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

கட்சியின் பொதுச் செயலாளர் (உ.பி.கிழக்கு) பிரியங்கா காந்தி பேசும்போது, "தேர்தல் தோல்விக்கு இங்கு கூடியுள்ள அனைவருமே பொறுப்பு ஏற்க வேண்டும்" என தெரிவித்ததாக கூறப்படுகிறது.

மேலும் ராஜினாமா முடிவை திரும்பப் பெறுமாறு ராகுல் காந்தியை மூத்த தலைவர்கள் வலியுறுத்தினர். அப்போது, குறுக்கிட்ட பிரியங்கா, "தேர்தல் பிரசாரத்தில் நரேந்திர மோடியை எதிர்த்து எனது சகோதரர் தனியாக போராடியபோது நீங்கள் எல்லாம் எங்கே சென்றீர்கள்" என கோபமாக பேசியுள்ளார்.

கூட்டம் முடியும் வரை இருந்த பிரியங்கா இறுகிய முகத்துடன் காணப்பட்டார். மேலும் ரஃபேல் முறைகேடு மற்றும் 'காவலாளி-திருடன்' என்பன குறித்து நடந்த பிரச்சாரத்தில் ராகுலுக்கு ஆதரவாக கட்சியினர் யாரும் பேசவில்லை என்றும் பிரியங்கா குற்றம்சாட்டினார்.

தினமணி: 'பாதுகாப்பு வளையத்தில் கேரள கடல் பகுதி'

படத்தின் காப்புரிமை Getty Images

இலங்கையில் இருந்து 15 ஐஎஸ் பயங்கரவாதிகள் கேரள கடற்கரை வழியாக இந்தியாவின் லட்சத்தீவுக்குள் ஊடுருவியுள்ளதாக இந்திய உளவுத்துறை விடுத்த எச்சரிக்கையையடுத்து, இந்திய கடலோரப் பகுதிகளில் கடற்படை, கடலோர காவல்படை, கடற்படை போலீஸார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர் என்கிறது தினமணி.

கடற்படை அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை பிடிஐ செய்தியாளர்களிடம் கூறியதாவது: உளவுத்துறை எச்சரிக்கையையடுத்து, கடற்படை, கடலோர காவல்படையினர் கேரள மற்றும் லட்சத்தீவுகளின் கடற்கரைப்பகுதியில் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

கப்பல்கள், ஹெலிகாப்டர் போன்றவற்றையும் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். அதேபோல, கடலோர காவல்படையும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறது என்று தெரிவித்தனர்.

கேரள போலீஸாரும், கடலோர காவல் நிலையங்களை சேர்ந்த காவல்துறையினரும், உயரதிகாரிகளுக்கு தகவல் அளித்து பாதுகாப்பை பலப்படுத்தியுள்ளனர்.

- இவ்வாறாக விவரிக்கிறது அந்நாளிதழ்.

பிற செய்திகள் :

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :