மாட்டிறைச்சி தொடர்பான ஃபேஸ்புக் பதிவிற்காக பழங்குடியின பேராசிரியர் கைது

ஜீதராயி ஹான்சதா படத்தின் காப்புரிமை SARTAJ ALAM
Image caption ஜீதராயி ஹான்சதா

மாட்டிறைச்சி தொடர்பாக இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஃபேஸ்புக் பதிவிட்ட ஒரு பழங்குடியினர் வகுப்பை சேர்ந்த பேராசிரியர் மற்றும் நாடக நடிகருமான ஜீதராயி ஹான்சதாவை ஜார்கண்ட் மாநில காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

ஹான்சதா, ஜெம்ஷெட்பூர் கோஆப்பரேடிவ் கல்லூரி பேராசிரியர் ஆவார். நேஷனல் ஸ்கூல் ஆஃப் ட்ராமாவில் படித்துள்ள அவர், அவ்வப்போது சில தேர்ந்தெடுக்கப்பட்ட பழங்குடியின நாடகங்களில் கலந்து கொள்வார்.

பழங்குடியின மேம்பாட்டை மையமாக கொண்ட அவருடைய 'ஃபெவிகால்' என்னும் நாடகம் பெரும் சர்ச்சையை கிளப்பியது. ஆனால் அது நாட்டின் பல்வேறு இடங்களில் காட்சிப்படுத்தபட்ட பின்பு, மக்களின் வரவேற்பை பெற்றது.

ஜார்கண்ட் போலீஸார் அவர் கைது செய்யப்பட்டதை உறுதிப்படுத்தியுள்ளனர்.

ஜெம்ஷெட்பூரில் இருக்கும் சாகசி காவல்நிலையத்தின் ராஜீவ் குமார் சிங் பிபிசியிடம் பேசிய போது, நீண்ட நாட்களாக ஹான்சதா வெளியில் இருந்துள்ளார் என்றும் தற்போது அவர் நீதிமன்ற காவலில் எடுக்கப்பட்டு காகிடீஹ் சிறையில் உள்ளார் என்றும் கூறினார்.

படத்தின் காப்புரிமை SARTAJ ALAM / BBC
Image caption ஃபேஸ்புக் பதிவு

மேலும் ஜீதராயி ஹான்சதாக்கு எதிராக ஜூன் 2017 ஆம் ஆண்டு காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. 15 மாதங்களாக காவல்துறையிடம் பிடிபடாமல் இருந்த ஜீதராயி மீது குற்ற பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.

அதன்பிறகு அவர் நீதிமன்றத்தின் நடவடிக்கைகளில் ஈடுபடவில்லை. காவல்துறையிடமிருந்தும் தலைமறைவாக இருந்து வந்தார். அவர் மேல் மதங்களுக்கு இடையே விரோதங்கள் பரப்புவது, இரண்டு சமூகத்திற்கு இடையேயான அமைதியில் பங்கம் விளைவிப்பது போன்ற குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

ஜீதராயி ஹான்சதா மே 29, 2017ல் தன்னுடைய ஃபேஸ்புக் பக்கத்தில் மாட்டிறைச்சி சாப்பிடுவதை ஆதரித்து ஒரு பதிவு செய்த்துள்ளார் என்று காவல்துறையின் அறிக்கை கூறுகிறது. அந்தப் பதிவு சமுதாய ஒற்றுமையை குலைக்கும் விதமாக இருப்பதாக அதில் கூறப்பட்டுள்ளது.

பின்னர் இதனை விசாரிக்கும் பொறுப்பு, சாகசி காவல்நிலையத்தின் உதவி ஆய்வாளர் அனில் குமார் சிங்கிடம் வழங்கப்பட்டது.

நான்கு நாட்களில் இது தொடர்பான விசாரணை முடிக்கப்பட்டு 2017 ஆம் ஆண்டு ஜூன் 2ஆம் தேதி ஹான்சதாவுக்கு எதிராக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது. அப்போது அவர் ஜெம்ஷெட்பூர் பட்டப்படிப்பு கல்லூரியில் பேராசிரியராக இருந்தார்.

படத்தின் காப்புரிமை SARTAJ ALAM / BBC

ஃபேஸ்புக் பதிவு

உதவி ஆய்வாளர் அனில்குமார் சிங்கின் ஆய்வு அறிக்கைபடி, ஜீதராய் ஹான்சதா தன்னுடைய ஃபேஸ்புக் பக்கத்தில், "பழங்குடியினர்களான நாங்கள் மாட்டிறைச்சி சாப்பிடுவோம். இறுதி சடங்கு நடக்கும்போது அதை கொல்வோம்" என்று எழுதியிருந்ததாக கூறுகிறது.

"அதைத் தவிர, எங்கள் பாரம்பரிய திருவிழாக்களின் போது பலி தருவோம். இந்திய சட்டத்திற்காக எங்களுடைய பாரம்பரியத்தையும் பழக்கவழக்கத்தையும் நிறுத்த முடியுமா? இந்துவாக மாற முடியுமா? பழங்குடியினத்தை விட முடியுமா ? இது ஓரு காலமும் நடக்காது. உண்மையில் பழங்குடியினரை இந்திய குடிமக்களாக கருதினால் அவர்களின் பாரம்பரியத்தை அழிக்கும் இதுபோன்ற சட்டங்களை உருவாக்குவதை நிறுத்துங்கள்" என பதிவிட்டிருந்ததாக கூறப்படுகிறது.

எனினும், தற்போது அவரது ஃபேஸ்புக் பக்கத்தில் அந்த பதிவு இல்லை. அந்த பதிவை அவர் எடுத்திருக்கலாம் என்று அவரது மனைவி மாஹி சோரேன் கூறுகிறார்.

இது குறித்து பிபிசியிடம் பேசிய மாஹி சோரேன், "இந்த பிரச்சனை முடிந்தது என்று நினைத்தோம். ஆனால் அவர் தன் நண்பர்களுடன் இருக்கும்போது அவரை காவல்துறையினர் கைது செய்தனர். சில மணி நேரம் கழித்துதான் எனக்கு தகவல் கிடைத்தது. அதன் பிறகு அவருடன் கைப்பேசியில் பேசினேன். பின்னர் சிறையில் சென்று சந்தித்தேன். இப்படி திடீரென்று அவரை கைது செய்தது எனக்கு ஆச்சர்யத்தை ஏற்படுத்துகிறது. ஞாயிற்றுக்கிழமை என்ற போதும்கூட, அவர் நீதிமன்றத்திற்கு கொண்டு செல்லப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இனி நாங்கள் சட்டப்படி போராடுவோம்" என்று கூறினார்.

ஜீதராய் ஹன்சதாவின் ஃபேஸ்புக் பதிவை தொடர்ந்து இந்திய மாணவர் சங்கத்தை சேர்ந்த சில மாணவர்கள் கல்லூரி முதல்வரை சந்தித்து அவரை தற்காலிக வேலைநிறுத்தம் செய்யவேண்டும் என்று கேட்டுக்கொண்டனர். அதன் பிறகு ஆகஸ்ட் 2017 ல் அவர் பணிநீக்கம் செய்யப்பட்டார்.

படத்தின் காப்புரிமை SARTAJ ALAM / BBC

பழங்குடியினரின் முக்கிய அமைப்பிலிருந்து பல்கலைக்கழக துணை வேந்தருக்கு கடிதம் மூலமாக ஹான்சதாவுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவேண்டாம் என்று கேட்டுக்கொண்ட போதிலும் பல்கலைக்கழகம் அதனை ஏற்கவில்லை.

ஹான்சதா, பழங்குடி சமுதாயத்தின் பாரம்பரியத்தை பற்றி எழுதினார். இதில் வேறு எந்த சமுதாயத்துக்கும் பங்கம் விளைவிக்கும் கருத்து இல்லை. அவர் பல நாட்களாக நாடகத்திலும் பழங்குடியினர் விடயங்களிலும் ஈடுபட்டிருந்தார் என மாஹி சோரேன் அமைப்பு வாதிட்டது.

ஒரு மாதத்திற்கு முன்பு அவர் ஜெம்ஷெட்பூரின் கோஆப்பிரேட்டிவ் கல்லூரியில் பேராசிரியராக சேர்ந்தார். இது அவருக்கு எதிராக நடக்கும் சூழ்ச்சி என ஜார்கண்ட் மாநில சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர். ஜார்கண்ட் மொழி இலக்கிய கலாசார அமைப்பின் பொது செயலாளர் மற்றும் சர்ச்சைக்குரிய எழுத்தாளரான வந்தனா டேடே நிபந்தனை இல்லாமல் அவரை விடுவிக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.

சட்டத்துக்கு புறம்பாக அவர் எதுவும் எழுதவில்லை என்று கூறும் வந்தனா,. தன்னுடைய சமூகத்தின் பாரம்பரியத்தையே ஃபேஸ்புக்கில் பதிவிட்டுள்ளார். இதனால் அவரை கைது செய்தது சரியல்ல எனக் கூறியுள்ளார்.

பிற செய்திகள் :

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்