இந்தியாவில் குடும்ப ஆட்சிக்கு முடிவு கட்டிவிட்டாரா மோதி?

இந்தியாவில் குடும்ப ஆட்சிக்கு முடிவு கட்டிவிட்டாரா மோதி? படத்தின் காப்புரிமை Getty Images

நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் நரேந்திர மோதியின் வெற்றி, முன்னெப்போதுமில்லாத பல கேள்விகளை எழுப்பி உள்ளது.

இதற்கு காரணமாக பல்வேறு விஷயங்கள் முன்வைக்கப்படுகின்றன. குறிப்பாக, தனது இளமைக் காலத்தின்போது குடும்பத்தில் நிலவிய வறுமையின் காரணமாக, தேநீர் விற்றது போன்ற மோதி தனது வாழ்க்கை குறித்து விளக்கும் விடயங்கள் மில்லியன்கணக்கான இந்தியர்களுக்கு தத்தமது வாழ்க்கையுடன் பொருந்தி பார்க்க வைக்கிறது என்று கூறலாம்.

எனவே, மக்கள் தன்னை போன்ற ஒருவர், தனக்கு ஆதரவாக போராடவும், பேசவும் இருக்கிறார் என்று மோதியை பார்க்கிறார்கள்.

அதே சூழ்நிலையில், தான் மிகப் பெரிய அரசியல்வாதிகள், பணக்காரர்கள் மற்றும் அதற்கு மேல் மிகவும் முக்கியமாக, நாட்டின் மிகப் பெரிய அரசியல் பணியாக விளங்கும் குடும்ப ஆட்சிக்கு எதிராக தான் போராடியதாக நரேந்திர மோதி கூறுகிறார்.

2014ஆம் ஆண்டு தேர்தல் பிரசாரத்தின் போது, நரேந்திர மோதி தற்போதைய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை 'இளவரசர்' என்றே பல இடங்களில் முழங்கினார்.

அதாவது, இந்தியா 1947இல் சுதந்திரமடைந்தது முதல், அதன் வரலாற்றில் பெரும்பாலான காலம் ஆட்சி செய்த நேரு-காந்தி குடும்பத்தினரை மையப்படுத்தியே மோதி அதனை குறிப்பிட்டார்.

ஆனால், தற்போது நிலைமை தலைகீழாகிவிட்டது.

படத்தின் காப்புரிமை Getty Images

காங்கிரஸ் கட்சி மீண்டுமொருமுறை, மோசமான தோல்வியை சந்தித்து இருப்பதால், அதன் தலைவர் ராகுல் காந்தி நிச்சமற்ற எதிர்காலத்தை எதிர்நோக்கி இருக்கிறார்.

காந்தி குடும்பத்தினரின் கட்டுப்பாட்டில் காலங்காலமாக இருந்து வரும் அமேதி தொகுதியில் இந்தாண்டு பாஜகவின் ஸ்மிரிதி இராணியிடம் ராகுல் காந்தி தோற்றது நிலைமையை இன்னும் மோசமாக்கியுள்ளது.

ஆனால், நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலை பொறுத்தவரை, காங்கிரஸ் கட்சி மட்டுமின்றி இந்தியா முழுவதுமுள்ள பல்வேறு கட்சியின் குடும்ப அரசியலும் அடியோடு பாதிக்கப்பட்டுள்ளது.

2004 முதல் 2014ஆம் ஆண்டுக்கு இடைப்பட்ட காலத்தில் மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட 30 சதவீத உறுப்பினர்கள் குடும்ப அரசியலை பின்னணியாக கொண்டவர்கள் என்று திரிவேதி அரசியல் தரவு ஆய்வு மையம் மேற்கொண்ட ஆய்வில் தெரியவந்துள்ளது. இந்நிலையில், நடந்து முடிந்த தேர்தலில் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சியினரின் தோல்வி, இந்தியாவில் குடும்ப அரசியல் இன்னமும் எடுபடுகிறதா என்ற கேள்வியை உண்டாக்கியுள்ளது.

இந்தியாவின் மிகப் பெரிய மக்கள் தொகையை கொண்ட மாநிலமான உத்தரப் பிரதேசத்தின் முன்னாள் முதலமைச்சர் அகிலேஷ் யாதவ் ஒருமுறை என்னிடம் இவ்வாறு கூறினார் - "2019ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் சமாஜ்வாதி கட்சி தோற்றால் நான் வேறு வேலை தேட வேண்டியிருக்கும்" என்று கூறினார்.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption தனது மனைவி டிம்பிள் யாதவ் உடன் அகிலேஷ் யாதவ்

நடந்து முடிந்த தேர்தலில் வெற்றிபெறுவதற்குரிய அனைத்து முயற்சிகளையும் அவர் எடுத்தார்.

குறிப்பாக, அவரது கட்சியின் முக்கிய அரசியல் எதிராளியாக பார்க்கப்பட்ட மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சியுடன் கூட்டணியை ஏற்படுத்தினார்.

தான் போட்டியிட்ட தொகுதியில் அகிலேஷ் வெற்றியடைந்துவிட்டார். ஆனால், அவரது கூட்டணி பெரும்பாலான தொகுதிகளில் படுதோல்வியை சந்தித்தது. அதாவது, உத்தரப் பிரதேசத்திலுள்ள 80 மக்களவைத் தொகுதிகளில் 62இல் பாஜக வெற்றியடைந்தது. இதற்கு முன்னதாக, கடந்த 2017ஆம் ஆண்டு நடந்த உத்தரப் பிரதேச மாநில சட்டமன்றத் தேர்தலிலும் தனது ஆட்சியை பாஜகவிடம் அகிலேஷ் பறிகொடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

அம்மாநிலத்தின் கண்னுஜ் என்ற தொகுதியில் போட்டியிட்ட அகிலேஷின் மனைவி டிம்பிள் யாதவ் தோல்வியடைந்தார்.

அகிலேஷுக்கும் அவரது தந்தையும், இந்தியாவின் பாதுகாப்புத்துறை அமைச்சராகவும், உத்தரப் பிரதேசத்தின் முதலமைச்சராக மூன்று முறை இருந்தவருமான முலாயம் சிங் யாதவுக்கும் இடையே இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் நிலவிய பதவி போட்டிக்கான நாடகம் அம்மாநில மக்களிடையே கட்சிக்கு அவப்பெயரை உண்டாக்கியது.

படத்தின் காப்புரிமை Getty Images

இந்நிலையில், தனது மகனுடன் நிலவிய கருத்து வேறுபாட்டால் தனித்திருந்த முலாயம், நடந்து முடிந்த மக்களைவைத் தேர்தலுக்கு சற்று முன்னதாக அகிலேஷுக்கு ஆதரவாக களமிறங்கினார். முலாயமுக்கும் அகிலேஷுக்கும் இடையே நிலவிய இந்த மோதலை கையில் எடுத்துக்கொண்ட பாஜக, உத்தரப் பிரதேசத்தின் காங்கிரஸ்தான் சமாஜ்வாதி என்றும், மக்கள் அக்கட்சியை ஆதரிக்கக் கூடாது என்றும் வலுவான பிரசாரத்தை முன்னெடுத்தது.

குடும்ப அரசியல் என்பது இந்தியாவில் மட்டுமே காணப்படும் ஒன்றல்ல. தென்கிழக்கு ஆசிய நாடுகளான வங்கதேசம், பாகிஸ்தான், இலங்கையில் குடும்ப அரசியல் என்பது சர்வ சாதாரணமான ஒன்றாக உள்ளது.

ஜார்ஜ் புஷ் சீனியரும், அவரது மகனான ஜார்ஜ்புஷ் ஜூனியரும் அமெரிக்க அதிபர் பதவியில் இருந்துள்ளனர். கனடாவின் பிரதமராக இப்போது உள்ள ஜஸ்டின் ட்ரூடோவின் தந்தை பியர்ரி ட்ரூடோவும் நாட்டின்பிரதமராக இருந்தவர்தான்.

சரியான நேரத்தில், சரியான விஷயத்தை முன்னிறுத்துவது அரசியலில் மிகவும் முக்கிய ஒன்று என்று கூறுகிறார். கண்ட்ரோல் ரிஸ்க்ஸ் எனும் ஆலோசனை நிறுவனத்தின் ஆசிய பிராந்தியத்துக்கான இணை இயக்குநர் பிரத்யுஷ் ராவ்.

"மோதி தனது தந்திரமான நடவடிக்கை மூலம் இந்தியாவின் அரசியல் ஒழுங்கை தலைகீழாக மாற்றியமைத்துவிட்டார். இந்தியா சுதந்திரம் அடைந்தவுடன் முதல் சில தசாப்தங்களுக்கு குறிப்பிட்ட சில குடும்பத்தின் பெயரே உச்சரிக்கப்பட்டது. ஆனால், சமீபகாலத்தில் அந்த அமைப்பு முறை முற்றிலுமாக மாறிவிட்டது. இதற்கு உதாரணமாக அமேதியில் ராகுல் காந்தியின் தோல்வியை குறிப்பிடலாம்.

படத்தின் காப்புரிமை Getty Images

உத்தரப் பிரதேசத்தை போன்று, பீகாரிலும் அந்த மாநிலத்தின் குடும்ப அரசியல் கட்சியும் நடந்து முடிந்த தேர்தலில் படுதோல்வியை சந்தித்துள்ளது.

முன்னாள் மத்திய அமைச்சரான லாலு பிரசாத் ஊழல் குற்றஞ்சாட்டில் தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் இருக்கும் நிலையில், அவரது ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியை அவரது மகன் தேஜஸ்வி யாதவ் கைப்பற்றினார்.

அடிப்படையில் கிரிக்கெட் வீரரான தேஜஸ்வி, மாநில கிரிக்கெட் அணியிலும், ஐபிஎல் தொடரில் டெல்லி டேர்டெவில்ஸ் அணியிலும் இடம் பெற்று விளையாடினார். ஆனால், அவரால் கிரிக்கெட்டில் குறிப்பிடத்தக்க அளவுக்கு சோபிக்க முடியாததை அடுத்து, தனது தந்தையின் வழியை பின்பற்ற தொடங்கினார்.

மோதியை போன்றே அடிமட்டத்தில் இருந்து வளர்ந்து வந்த ஒருவராக லாலுவை அம்மாநில மக்கள் கருதினர். ஆனால், அரசியலுக்கு ஏற்ப தன்னை இன்னமும் தகவமைத்து வரும் தேஜஸ்வியை முன்னிறுத்தி பிரசாரம் செய்தது பலத்த அடியை கொடுத்தது. பீகாரில் மொத்தமுள்ள 40 மக்களவைத் தொகுதிகளில் ஒரேயொரு தொகுதியில்தான் ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியால் வெற்றிபெற முடிந்தது.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption தேஜஸ்வி யாதவ்

இந்தியாவின் மற்ற மாநிலங்களிலும், இதை ஒட்டிய சம்பவங்கள் பல நடந்தன.

மத்தியப் பிரதேசத்தை முன்னொரு காலத்தில் ஆண்ட வம்சத்தை சேர்ந்தவரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான மாதவராவ் சிந்தியாவின் மகனான ஜோதிராதித்ய சிந்தியா தான் போட்டியிட்ட தொகுதியில் தோல்வியடைந்தார்.

அதேபோன்று, ராஜஸ்தானில் அசோக் கெலாட்டுக்கும், மும்பையில் தியோரா குடும்பத்துக்கும் மக்கள் அதிர்ச்சியளித்தனர்.

தென்னிந்தியாவை பொறுத்தவரை, கர்நாடகாவில் அம்மாநில முதலமைச்சர் குமாரசாமியின் மகன் நிகில் குமாரசாமி அவரை எதிர்த்து போட்டியிட்ட சுயேச்சை வேட்பாளரிடம் தோல்வியடைந்தார்.

இந்திய அரசியலை பொறுத்தவரை, குடும்ப அரசியலில் ஈடுபட்டுள்ளவர்கள் மகன்கள் தோற்பது என்பது அடிக்கடி நடக்கும் சம்பவமல்ல. ஒரே சமயத்தில், நாடு முழுவதும் குடும்ப அரசியலில் ஈடுபட்டுள்ளவர்கள் பெருமளவில் தோல்வியடைவதற்கு காரணமாக மோதியின் அரசியல் உத்திகளே பலராலும் முன்னிறுத்தப்படுகின்றன.

ஆனால், பாஜகவில் குடும்ப அரசியலே இல்லையென்று சொல்லிவிட முடியாது.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption ஜோதிராதித்ய சிந்தியா

இமாச்சலப் பிரதேசத்தின் முன்னாள் முதலைச்சர் அனுராக் தாக்கூரின் மகனான பிரேம் குமார் துமால் அம்மாநிலத்தின் ஹமிர்பூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்றுள்ளார்.

அதே சூழ்நிலையில், ஆந்திரப் பிரதேசத்தில் அதன் மறைந்த முன்னாள் முதல்வரான ஒய். எஸ். ராஜசேகர ரெட்டியின் மகன் ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான ஒய். எஸ். ஆர். காங்கிரஸ் கட்சி மக்களவைத் தேர்தல் மட்டுமின்றி, அதனுடன் ஒன்றாக நடத்தப்பட்ட சட்டமன்றத் தேர்தலிலும் பெரும் வெற்றிபெற்றது.

அதேபோன்று, தமிழ்நாட்டின் மறைந்த முன்னாள் முதல்வரான கருணாநிதியின் மகன் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திராவிட முன்னேற்ற கழகம் மக்களவைத் தேர்தலில் பெரும் வெற்றியைப் பெற்றுள்ளது. திமுக தலைமையிலான கூட்டணி தமிழகம் மற்றும் புதுவையில் போட்டியிட்ட 39 தொகுதிகளில் 38ஐ கைப்பற்றியது. பாஜக ஒரு இடத்தில்கூட வெல்ல முடியாத சூழ்நிலையில், அதன் கூட்டணிக் கட்சியான அதிமுக மட்டும் ஒரே ஒரு இடத்தில் வெற்றி பெற்றது.

குடும்ப ஆட்சியை மேற்கொண்ட பல கட்சிகள் தோற்ற இந்த தேர்தலில் ஜெகன் மற்றும் ஸ்டாலின் ஆகியோர் மட்டும் விதிவிலக்குகள்.

எனவே, இதன் மூலம் இந்தியாவில் குடும்ப அரசியல் முடிவுக்கு வந்துவிட்டது என்று கூறலாமா? என்று பிரத்யுஷ் ராவிடம் கேட்டபோது, "இப்போதைக்கு மட்டும்" என்று கூறுகிறார்.

"இவ்வளவு குறுகிய காலத்தில், இந்தியாவில் குடும்ப அரசியல் முடிவுக்கு வந்துவிட்டதா கூற முடியாது. இப்போது கூட பாஜக உள்ளிட்ட பல கட்சியினர் குடும்ப அரசியலை மேற்கொண்டு வருகின்றனர். ஆனால், அரசியல் தலைவர்கள் தங்களது குடும்பத்தினரின் பெயரை மட்டுமே பயன்படுத்தி தேர்தலில் இனி வெற்றிபெற முடியாது என்பதையே இது காட்டுகிறது" என்று அவர் கூறுகிறார்.

பிற செய்திகள் :

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்