மோதியின் வெற்றி பாகிஸ்தான், அமெரிக்கா, பிரிட்டனில் கொண்டாடப்பட்டதா? #BBCFactCheck

மோதியின் வெற்றி பாகிஸ்தான், அமெரிக்கா, பிரிட்டனில் கொண்டாடப்பட்டதா? படத்தின் காப்புரிமை Pacific Press

பிரதமர் நரேந்திர மோதி நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் வெற்றிபெற்றதை மக்கள் கொண்டாடுவதாக கூறி பல்வேறு புகைப்படங்கள் மற்றும் காணொளிகள் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகின்றன.

முன்னெப்போதும் இல்லாத வகையில் 300க்கும் மேற்பட்ட தொகுதிகளில் பாஜக வெற்றிபெற்றதை அடுத்து, இரண்டாவது முறையாக பிரதமராக பதவியேற்கிறார் நரேந்திர மோதி.

இருந்தபோதிலும், பிரதமர் நரேந்திர மோதியின் வெற்றியை கொண்டாடுவதாக சமூக ஊடகங்களில் பகிரப்படும் பல புகைப்படங்களுக்கும், காணொளிகளுக்கும் நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலுடன் எவ்வித தொடர்பும் இல்லை என்று தெரியவந்துள்ளது.

பணமழை கொண்டாட்டம்

நரேந்திர மோதியின் வெற்றியை கொண்டாடும் வகையில், இந்தியாவை பூர்வீகமாக கொண்ட பணக்காரர் ஒருவர், அமெரிக்காவின் நியூயார்க் நகரில் ஒரு லட்சம் டாலர்களை கொண்டு பண மழையை உண்டாக்கியதாக சமூக ஊடகங்களில் வெளியிடப்பட்ட காணொளி ஒன்று வைரலானது.

அந்த காணொளியில், கையில் நிறைய பணத்தை வைத்திருக்கும் ஒருவர், ஒரு குறிப்பிட்ட இடத்தை சுற்றி சுற்றி பணத்தை வீசுகிறார்.

இந்த காணொளி கனடாவில் எடுக்கப்பட்டதாக சிலர் தெரிவிக்கின்றனர்.

இதுகுறித்து பிபிசி ஆய்வு செய்தபோது, அந்த காணொளி உண்மையானது என்பதும், ஆனால் அதுதொடர்பாக தெரிவிக்கப்படும் செய்தி தவறானது என்றும் தெரியவந்துள்ளது.

உண்மையிலேயே அந்த காணொளியில் பணத்தை வாரி இரைப்பது இசை தயாரிப்பாளரான ஜோ குஷ் ஆவார்.

ஜோ குஷின் இதற்கு முந்தைய இன்ஸ்டாகிராம் பதிவுகளை ஆராயும்போது, அவர் இதுபோன்ற காணொளிகளை பல்வேறு இடங்களில் எடுத்து பதிவிடுவதும், அதற்கும் மோதியின் வெற்றிக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை என்பதும் தெரியவந்துள்ளது.

மோதியின் வெற்றியை கொண்டாடும் பாகிஸ்தான் மக்கள்

நரேந்திர மோதியின் வெற்றியை பாகிஸ்தானின் பலூசிஸ்தான் மாகாணத்திலுள்ள மக்கள் கொண்டாடுவதாக மற்றொரு காணொளி சமூக ஊடகங்களில் வலம் வருகிறது.

படத்தின் காப்புரிமை Facebook

அந்த காணொளியில், பாஜகவின் கொடியை கையில் ஏந்தியிருக்கும் சிலர், ஆடிப்பாடி கொண்டிருப்பதாக தெரிகிறது.

"பாஜக தனது முதலாவது கிளையை பாகிஸ்தானில் தொடங்கியுள்ளது" என்று அவ்வாறு பகிரப்பட்ட காணொளியின் விளக்க பிரிவில் குறிப்பிடப்பட்டிருந்தது.

ஆனால், இந்த காணொளியும் தவறான செய்தியை பரப்பும் எண்ணத்துடன் பகிரப்பட்டது என்று தெரியவந்துள்ளது.

இதற்கு முன்னர், இதே காணொளி வேறொரு பொருளுடன் சமூக ஊடகங்களில் பரப்பப்பட்டபோது அது போலியானது என்று பிபிசி செய்தி வெளியிட்டிருந்தது.

அதாவது, தற்போது பகிரப்பட்டு வரும் இந்த காணொளிக்கும் பாகிஸ்தானுக்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இது இந்தியாவின் ஆளுகைக்குட்பட்ட காஷ்மீரில் எடுக்கப்பட்டது என்று தெரியவந்துள்ளது.

காஷ்மீரின் அனந்த்நாக் மக்களவைத் தொகுதியில் பாஜகவின் சார்பாக களமிறக்கப்பட்ட சோபி யூஸுப் என்பவர் தனது வேட்புமனுவை தாக்கல் செய்ய சென்றபோது இந்த காணொளி எடுக்கப்பட்டது.

இதே காணொளி, ஜம்மு & காஷ்மீர் மாநில பாஜகவின் அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் கடந்த மார்ச் 31ஆம் வெளியிடப்பட்டது.

பிரிட்டனின் பேருந்துகளில் மோதியின் வெற்றிக் கொண்டாட்டம்

லண்டனிலுள்ள இரண்டு அடுக்கு பேருந்து ஒன்றில், பிரதமர் நரேந்திர மோதி மீண்டும் தேர்தலில் வெற்றிபெற்றதை குறிக்கும் வகையிலான வாசகங்கள் பொறிக்கப்பட்டுள்ளதாக கூறி புகைப்படம் ஒன்று சமூக ஊடகங்களில் பெருமளவில் பரப்பப்பட்டு வருகிறது.

அந்த புகைப்படத்தில் இருக்கும் "Welcome Modi Ji in London" என்ற வாசகத்தை இணையத்தில் தேடியபோது, 2015ஆம் ஆண்டு மோதி பிரிட்டனுக்கு சென்றபோது, அவரை வரவேற்கும் வகையில் அங்கு வாழும் இந்தியர்கள் சிலர் 'மோடி எக்ஸ்பிரஸ்' என்ற பேருந்தை அந்நகர் முழுவதும் ஒரு மாதத்துக்கு வலம் வர வைத்தது தெரியவந்துள்ளது.

எனவே, இந்த புகைப்படத்திற்கும் மோதியின் சமீபத்திய தேர்தல் வெற்றிக்கும் எவ்வித தொடர்புமில்லை என்று தெரியவருகிறது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்