ராகுல் காந்தி: காங்கிரஸ் தலைவர் பதவியை ராஜிநாமா செய்வதில் உறுதி

ராகுல் காந்தி: காங்கிரஸ் தலைவர் பதவியை ராஜிநாமா செய்வதில் உறுதி படத்தின் காப்புரிமை Getty Images

முக்கிய இந்திய நாளிதழ்கள் சிலவற்றில் வெளியான கட்டுரைகள் மற்றும் செய்திகளைத் தொகுத்து வழங்குகிறோம்.

தினமணி: 'வேண்டாம் தலைமை - ராகுல் காந்தி'

மக்களவைத் தேர்தல் தோல்விக்குப் பொறுப்பேற்று, காங்கிரஸ் தலைவர் பதவியை ராஜிநாமா செய்வதில் ராகுல் காந்தி பிடிவாதமாக இருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன என்கிறது தினமணி நாளிதழ் செய்தி.

பின் வருமாறு அந்நாளிதழ் விவரிக்கிறது:

கட்சியின் மூத்த தலைவர்கள் பலரும் சமாதானம் செய்தபோதிலும் ராகுல் காந்தி தனது முடிவை மாற்றிக் கொள்ளாமல் இருப்பதாகக் கூறப்படுகிறது.

நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி படுதோல்வியைச் சந்தித்தது. இந்த தோல்விக்கு பொறுப்பேற்று கட்சியின் தலைவர் பதவியை ராஜிநாமா செய்வதாக ராகுல் காந்தி அறிவித்தார். ஆனால், அவரது முடிவை காங்கிரஸ் செயற்குழு ஒருமனதாக நிராகரித்து விட்டது.

படத்தின் காப்புரிமை Getty Images

எனினும், தனது ராஜிநாமா முடிவில் ராகுல் காந்தி பிடிவாதமாக இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்து தகவல் அறிந்த வட்டாரங்கள் திங்கள்கிழமை கூறியதாவது: காங்கிரஸ் தலைவர் பதவியை ராஜிநாமா செய்யும் முடிவில் ராகுல் காந்தி உறுதியாக இருக்கிறார். கட்சியின் மூத்த தலைவர்கள் அகமது படேல், கே.சி.வேணுகோபால் ஆகியோரைச் சந்தித்து தனது நிலைப்பாட்டை தெரிவித்து விட்டார். எனினும், புதிய தலைவரைத் தேர்ந்தெடுப்பதற்கு சிறிது அவகாசம் அளிப்பதாகவும், அதுவரை தலைவர் பதவியில் தொடர்வதாகவும் அவர்களிடம் ராகுல் காந்தி கூறியுள்ளார்.

மேலும், தாம் வேறு எங்கேயும் சென்றுவிடப்போவதில்லை; தொடர்ந்து கட்சிக்காகப் பாடுபட இருப்பதாகவும் கூறியுள்ளார். காங்கிரஸ் தலைவர் பதவிக்கு பிரியங்கா காந்தியின் பெயரை சிலர் பரிந்துரை செய்தபோது, அந்தப் பதவிக்கு எனது குடும்பத்தில் இருந்து ஒருவர் வரவேண்டிய தேவையில்லை; அந்தப் பதவிக்கு எனது சகோதரியின் பெயரை பரிசீலிக்க வேண்டாம் என்று ராகுல் காந்தி திட்டவட்டமாகக் கூறிவிட்டார்.

இந்து தமிழ்: 'மலை கிராமம் ஒன்றில் முதல்முறையாக மின் இணைப்பு'

திருநெல்வேலி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட சின்ன மயிலாறு, பெரிய மயிலாறு, இஞ்சிக்குழி, சேர்வலாறு ஆகிய மலை கிராமங்களில் காணி பழங்குடியின மக்கள் வசிக்கின்றனர். இப்பகுதி குடியிருப்புகளுக்கு இதுவரை மின்சார வசதி வழங்கப்படாமல் இருந்தது.

பெரிய மயிலாறு, இஞ்சிக்குழி ஆகிய பகுதிகள் பாபநாசம் அணைக்கு மேல் அடர்ந்த வனப்பகுதியில் இருப்பதால், அங்கு மின் இணைப்பு கொடுக்க முடியாத நிலை உள்ளது.

ஆனால், சின்ன மயிலாறு கிராமம் பாபநாசம் அணை அருகில் அமைந்துள்ளது. இங்கு, சுமார் 60 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.

30-க்கும் அதிகமானோர் பள்ளி, கல்லூரிகளில் படித்து வருகின்றனர். இங்கு வசிக்கும் மக்கள் தங்கள் குடியிருப்புகளுக்கு மின் இணைப்பு வழங்க வேண்டும் என நீண்ட காலமாக கோரிக்கை விடுத்துவந்தனர். காப்புக்காடு பகுதி என்பதால் இதற்கு வனத் துறையினர் அனுமதி அளிக்காமல் இருந்தனர்.

இதற்கிடையே சமீபத்தில் மின் இணைப்பு கொடுக்க வனத் துறையினர் அனுமதி அளித்தனர். அத்துடன், முழு நிதியுதவியையும் வனத்துறையினரே வழங்கினர். இதையடுத்து, கடந்த 3 மாதங் களுக்கு முன் மின் வாரியத்தினர் சின்ன மயிலாறு பகுதிக்கு மின்சாரம் கொண்டு செல்வதற்காக, மின் கம்பங்கள் மற்றும் மின்மாற்றி அமைக்கும் பணியில் ஈடுபட்டனர். இப்பணிகள் முடிவடைந்து, 48 குடியிருப்புகளுக்கு மின் இணைப்பு வழங்கப்பட்டது. இதனால், காணியின மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

மின் இணைப்பு வழங்க நட வடிக்கை எடுத்த வனத்துறையினர் மற்றும் மின்வாரிய அதிகாரிகளுக்கு, காணியின மக்கள் நன்றி தெரிவித்துக்கொண்டனர். மழைக் காலங்களில் ஆற்றை கடந்து செல்ல முடியாத நிலை இருப்பதால், சின்ன மயிலாறுக்கு ஆற்றின் குறுக்கே பாலம் அமைத்து தர வேண்டும் என்று அப்பகுதி மக்கள் வலியுறுத்துகின்றனர்.தினத்தந்தி: 'தமிழகத்துக்கு தண்ணீர் திறப்பு உறுதி ஆகுமா?'

டெல்லியில் இன்று காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம் நடைபெறுகிறது. தமிழகத்துக்கு தண்ணீர் திறந்து விடுவது பற்றி இந்த கூட்டத்தில் முடிவு செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது என்கிறது தினத்தந்தி நாளிதழ் செய்தி.

படத்தின் காப்புரிமை M Niyas Ahmed

தமிழ்நாடு, கர்நாடகம், கேரளா, புதுச்சேரி மாநிலங்கள் காவிரி நீரை பகிர்ந்து கொள்ள காவிரி மேலாண்மை ஆணையம் மற்றும் காவிரி நீர் ஒழுங்காற்று குழு ஆகியவற்றை சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின் அடிப்படையில் மத்திய அரசு அமைத்தது. 4 மாநிலங்களும் இந்த இரு அமைப்புகளுக்கு தங்களது தரப்பில் தலா ஒரு பிரதிநிதியை நியமித்து உள்ளன.

காவிரி மேலாண்மை ஆணையம் இதுவரை 2 முறை கூடி இருக்கிறது. கடைசியாக கடந்த ஆண்டு டிசம்பர் 3-ந் தேதி கூடியது. ஒழுங்காற்று குழு கூட்டம் கடைசியாக 23-ந் தேதி நடைபெற்றது. இந்த கூட்டத்தில், மேட்டூர் அணையில் தண்ணீர் இருப்பு குறைவாக இருப்பதால் கர்நாடக அரசு தண்ணீர் திறந்துவிட்டால் மட்டுமே சமாளிக்க முடியும் என தமிழக அதிகாரிகள் வாதிட்டனர். ஆனால் அதுபற்றி அந்த கூட்டத்தில் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை.

இந்நிலையில் காவிரி மேலாண்மை ஆணையத்தின் 3-வது கூட்டம் டெல்லியில் உள்ள மத்திய நீர்வள ஆணைய அலுவலகத்தில் காவிரி மேலாண்மை ஆணைய தலைவர் மசூத் உசைன் தலைமையில் இன்று (செவ்வாய்க்கிழமை) காலையில் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் 4 மாநிலங்களை சேர்ந்த அதிகாரிகளும் கலந்துகொள்கிறார்கள்.

கூட்டத்தில், "காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்ட கர்நாடக அரசு முயற்சி செய்வதை தடுக்க வேண்டும், தமிழகத்துக்கு திறந்துவிடப்பட வேண்டிய 9.19 டி.எம்.சி. தண்ணீரை ஜூன் 1-ந் தேதி முதல் திறந்து விட வேண்டும். ஜூலை மாதம் 30 டி.எம்.சி. தண்ணீர் தர வேண்டும்" என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை தமிழக அதிகாரிகள் வலியுறுத்த இருப்பதாக கூறப்படுகிறது.

சமீபத்தில் கர்நாடக பொதுப்பணித்துறை மந்திரி ரேவண்ணா தமிழகம் வந்திருந்தபோது, காவிரியில் தற்போது தண்ணீர் திறந்துவிட இயலாது என்றும், அதிக மழை பெய்தால் மட்டுமே திறந்து விட முடியும் என்றும் கூறியிருந்தார்.

இந்த சூழ்நிலையில், தமிழகத்துக்கு தண்ணீர் திறந்துவிட காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் தமிழக அரசு வலியுறுத்த இருக்கிறது. இதற்கு ஆணையம் என்ன முடிவு எடுக்கப்போகிறது? தமிழகத்துக்கு தண்ணீர் திறப்பு உறுதி ஆகுமா? என்பது இந்த கூட்டத்தில்தான் தெரியும்.

- இவ்வாறாக அந்நாளிதழ் விவரிக்கிறது.

படத்தின் காப்புரிமை இந்து தமிழ்

டைம்ஸ் ஆஃப் இந்தியா : உலகக்கோப்பை தொடங்க இரண்டே நாட்கள்

படத்தின் காப்புரிமை Getty Images

2019 ஐசிசி உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் வரும் மே 30-ஆம் தேதியன்று பிரிட்டனில் துவங்கவுள்ள நிலையில், இன்று (செவ்வாய்க்கிழமை) தனது இரண்டாவது மற்றும் இறுதி பயிற்சி ஆட்டத்தில் இந்தியா வங்கதேசத்தை எதிர்கொள்வது குறித்த செய்தியை டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளிதழ் வெளியிட்டுள்ளது.

நியூஸிலாந்துக்கு எதிரான முதல் பயிற்சி ஆட்டத்தில் இந்தியா 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோல்வியுற்ற நிலையில், கார்டிப்பில் நடக்கும் இன்றைய போட்டியில் தனது பேட்டிங்கை பலப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த போட்டியில் ரவீந்திர ஜடேஜாவை தவிர மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். இதனால் 179 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுக்களை இந்தியா இழந்தது.

இதனிடையே லண்டன் ஓவல் மைதானத்தில் நடந்த மற்றொரு பயிற்சி ஆட்டத்தில் வங்கதேசத்தை இங்கிலாந்து மிக எளிதாக வென்றுள்ளது.

இந்த போட்டியில் முதலில் பேட் செய்த வங்கதேசம் 160 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதனையடுத்து பேட் செய்த இங்கிலாந்து தனது அதிரடி பேட்டிங்கில் 17.3 ஓவர்களில் இலக்கை எட்டியது. ஜேசன் ராய் 46 பந்துகளில் 89 ரன்கள் எடுத்தார்.

மற்றொரு பயிற்சி ஆட்டத்தில் இலங்கை அணியை 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா வென்றது குறித்தும் இந்த நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :