ரஜினிகாந்த்: பா.ஜ.க கொண்டு வந்த திட்டங்களால் மோதிக்கு எதிரான அலை

'தமிழ்நாட்டில் மோதிக்கு எதிரான அலை' - ரஜினிகாந்த் படத்தின் காப்புரிமை Getty Images

பாரதிய ஜனதா கட்சி கொண்டு வந்த திட்டத்தால் தமிழ்நாட்டில் மோதிக்கு எதிரான அலை வீசியதாக நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்தார்.

இன்று (செவ்வாய்க்கிழமை) சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த ரஜினிகாந்த் கேள்விகளுக்கு பதில் அளித்தார்.

கவர்ச்சி மிகுந்த தலைவர்

"மக்களவை தேர்தலில் பா.ஜ.கவுக்கு கிடைத்த வெற்றி மோதி எனும் தனி மனிதருக்கு கிடைத்த வெற்றி. மோதி கரிஷ்மா (கவர்ச்சி) மிகுந்த தலைவர். இந்தியாவை பொறுத்தவரை தலைவரை பொறுத்துதான் வெற்றி கிடைக்கும். நேரு, இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி, வாஜ்பேயி ஆகியோர் கரிஷ்மா மிகுந்த தலைவர்கள். அவர்கள் வரிசையில் மோதி இருக்கிறார்" என்றார் நடிகர் ரஜினிகாந்த்.

நிதின் கட்கரியின் அறிவிப்பு பற்றி

காவிரியும் கோதாவரியையும் இணைப்போம் என நிதின் கட்கரி கூறி இருப்பது வரவேற்கதக்கது என்றார் ரஜினி.

"தமிழ்நாட்டில் தேசிய ஜனநாயகக் கூட்டணி தோல்வி அடைந்திருந்தாலும் கோதாவரி, காவிரி இணைப்பு திட்டத்தை கொண்டு வருவேன் என்று சொல்வது பாராட்டுக்குரியது." என்று கூறினார்.

தமிழ்நாட்டில் பா.ஜ.கவின் தோல்வி குறித்த கேள்விக்கு, "ஒரு முறை அரசியல் எதிர்ப்பு அலை உருவாகிவிட்டால் அந்த அலைக்கு எதிராக யாரும் நீந்த முடியாது. அந்த அலையோடு சென்றவர்கள்தான் வென்று இருக்கிறார்கள்.

ஹைட்ரோ கார்பன், ஸ்டெர்லைட், நீட் பிரச்சனைகள் மற்றும் அது தொடர்பான எதிர்க்கட்சிகளின் சூறாவளி பிரசாரத்தால் தமிழ்நாட்டில் பா.ஜ.க தோல்வி அடைந்துள்ளதாகவும் ரஜினி செய்தியாளர்களிடம் கூறினார்.

படத்தின் காப்புரிமை Getty Images

தமிழ்நாட்டிற்கு நல்ல திட்டங்களை பா.ஜ.க அரசு கொண்டுவர வேண்டும். குறிப்பாக நதிகளை இணைக்க வேண்டும் என்றார் ரஜினி

கமல் பெற்ற வாக்கு சதவீதம் கணிசமான ஒன்று. "அவருக்கு என் பாராட்டு" என்று கூறினார் ரஜினிகாந்த்.

ராகுல் பதவி விலகத் தேவையில்லை

"காங்கிரஸ் கட்சியை கையாள்வது கடினம். அது மிகவும் பழமையான கட்சி. மூத்த தலைவர்கள் அங்கு இருக்கிறார்கள். ஒரு இளைஞராக இவற்றை கையாள்வது கடினம். நான் கவனித்தவரை மூத்த தலைவர்கள் சரியாக பணியாற்றவில்லை, ஒத்துழைக்கவில்லை.தோல்விக்காக ராகுல்காந்தி பதவிவிலக தேவையில்லை. அவர் அங்கு நின்று தன்னை நிரூபிக்க வேண்டும். ஜனநாயகத்தில் எதிர்க்கட்சிகளின் பங்கும் முக்கியமானது" என்றார்.

தேசிய ஜனநாயகக் கூட்டணி பதவியேற்பில் பங்கேற்க போவதாகவும் அவர் தெரிவித்தார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்