கல்விக் கட்டணம் கட்டாத மாணவன்; கையில் ஸ்டாம்ப் அடித்த பள்ளி

கல்விக் கட்டணம் கட்டாத பெற்றோர்; கையில் ஸ்டாம்ப் அடித்த பள்ளி படத்தின் காப்புரிமை HARSHDEEP FAMILY

கல்விக் கட்டணம் கட்டாத ஏழாம் வகுப்பு மாணவனின் கையில், 'தயவுசெய்து கட்டணம் செலுத்துங்கள்' என்று ஸ்டாம்ப் அடித்து வீட்டிற்கு அனுப்பிய பஞ்சாபிலுள்ள தனியார் பள்ளியின் ஆசிரியரின் செயல் கடும் கண்டனத்தை பெற்றுள்ளது.

பல முறை கூறியும் கல்விக் கட்டணத்தை கட்டாத மாணவரின் பெற்றோருக்கு மீண்டுமொருமுறை நினைவுப்படுத்துவதற்காக இவ்வாறு செய்ததாக அந்த ஆசிரியர் கூறினாலும், இதுகுறித்த விசாரணைக்கு அம்மாநில கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. கடந்த வெள்ளிக்கிழமையன்று லூதியானாவிலுள்ள எஸ்டிஎன் எனும் தனியார் பள்ளியில் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது.

"நான் என் குழந்தையின் மாதாந்திர கல்விக் கட்டணத்தை செலுத்த வேண்டியிருந்தது. அதை நினைவூட்டுகிறோம் என்ற பெயரில், எனது மகனின் கையில் ஸ்டாம்ப் அடித்த செயல் எங்களது குடும்பத்தை அவமானத்துக்குள்ளாக்கியுள்ளது" என்று அந்த மாணவனின் தந்தையான குல்தீப் தெரிவித்துள்ளார்.

"நான் ஆட்டோவை ஓட்டியே பணம் சம்பாதிக்கிறேன். இம்மாதம் தாமதமாக கட்டணம் செலுத்துவது குறித்து பள்ளி நிர்வாகத்திற்கு ஏற்கனவே தெரிவித்து விட்டேன். அப்படி இருந்தும் கூட, பள்ளி நிர்வாகத்தினர் ஏன் இப்படி செய்தார்கள் என்று எனக்கு புரியவில்லை" என்று அவர் மேலும் கூறினார்.

பள்ளி நிர்வாகத்தின் கருத்து என்ன?

படத்தின் காப்புரிமை HARSHDEEP FAIMLY

இதுகுறித்து பிபிசியிடம் பேசிய எஸ்டிஎன் பள்ளியின் தலைமையாசிரியர் ஷாமா டுக்கல், "ஹர்ஸ்தீப்பின் கல்விக் கட்டணம் கடந்த இரண்டு மாதங்களாக நிலுவையில் உள்ளது. இதுதொடர்பாக மாணவனது பெற்றோர்க்கு நினைவூட்டல்கள் வழங்கப்பட்டாலும், எங்களுக்கு எவ்வித பதிலும் கிடைக்கவில்லை" என்று கூறுகிறார்.

"கல்விக் கட்டணம் நிலுவையிலுள்ள மாணவர்களுக்கு கடந்த வெள்ளிக்கிழமையன்று நினைவூட்டப்பட்டது. அப்போது, ஹர்ஸ்தீப் தனது குறிப்பு புத்தகத்தை வைத்தில்லாததால், அவரது கையில் ஸ்டாம்ப் அடிக்கப்பட்டது" என்று அவர் மேலும் கூறினார்.

மாணவனது கையில் அடிக்கப்பட்ட ஸ்டாம்ப்பை வெகு எளிதாக அழித்துவிடலாம் என்று பள்ளி நிர்வாகத்தினர் தெரிவிக்கின்றனர்.

விசாரணை குழு அமைப்பு

இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி, அறிக்கை சமர்பிப்பதற்கு தனிப்பட்ட குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளதாக கூறுகிறார் மாவட்ட கல்வித்துறை அதிகாரியான ஸ்வர்ன்ஜீத் சிங்.

படத்தின் காப்புரிமை HARSHDEEP FAIMLY

"கல்விக் கட்டணத்திற்கான நினைவூட்டலை மாணவனின் கையில் ஸ்டாம்ப் அடித்து தெரியப்படுத்தியது மிகவும் தவறான போக்கு. விசாரணை முடிந்ததும், சம்பவத்துக்கு காரணமானவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும்" என்று அவர் மேலும் கூறுகிறார்.

பள்ளிக்கு செல்வதை நிறுத்திய மாணவன்

"எனது தந்தை ஆட்டோ ஓட்டுகிறார். நான் காலணி கடையொன்றில் பணிபுரிகிறேன். கல்விக் கட்டணத்தை தாமதமாக கட்டுவதற்கு கூடுதல் அவகாசம் வழங்குமாறு நாங்கள் பள்ளி நிர்வாகத்திடம் கோரிக்கை விடுத்திருந்தோம். இருப்பினும், எனது தம்பியின் கையில் ஸ்டாம்ப் அடித்துள்ளனர்" என்று கூறுகிறார் பாதிக்கப்பட்டுள்ள பள்ளி மாணவனின் அண்ணனான யுவராஜ் சிங்.

"எனது தம்பியின் கல்வி பாதிக்கப்படாமல் இருப்பதற்காக உதவுமாறு கல்வித்துறையிடம் கோரிக்கை விடுக்கிறோம். தனது கையில் ஸ்டாம்ப் அடிக்கப்பட்டதைத் தொடர்ந்து, என் தம்பி பள்ளிக்கு செல்வதை நிறுத்திவிட்டான். எனவே, எனது தம்பி கல்வியை தொடரும் வகையில், அரசுப் பள்ளியில் படிக்க அதிகாரிகள் உதவ வேண்டும்" என்று அவர் மேலும் கூறினார்.

பிற செய்திகள் :

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்