மக்களவை தேர்தல் 2019: தேமுதிக தோல்வியும், கட்சியின் எதிர்காலமும்

2019 நாடாளுமன்றத் தேர்தல் தோல்வியும் கட்சியின் எதிர்காலமும்

கடந்த சட்டமன்றத்தில் தமிழகத்தின் எதிர்க்கட்சியாக இருந்த தே.மு.தி.க., 2019ஆம் ஆண்டின் நாடாளுமன்றத் தேர்தலில் பெரும் தோல்வியைச் சந்தித்திருக்கிறது. ஆளும்கட்சிக் கூட்டணியில் இருந்தபோதும் அக்கட்சி பெற்ற வாக்குகள் மிகப் பெரிய அளவில் சரிந்திருக்கின்றன. அக்கட்சியின் எதிர்காலம் என்ன?

தமிழ்நாட்டில் நாடாளுமன்றத் தேர்தலுக்கான கூட்டணிப் பேச்சு வார்த்தைகள் உச்சகட்டத்தில் இருந்தபோது மிகவும் பரபரப்பாக இருந்த இடங்களில் தே.மு.தி.க. கட்சி அலுவலகமும் ஒன்று.

அக்கட்சியின் தலைவரும் பொதுச் செயலாளருமான விஜயகாந்த் உடல்நலம் குன்றியிருந்த நிலையில் அவரது மனைவி பிரேமலதா, விஜயகாந்த்தின் மைத்துனரும் கட்சியின் இளைஞரணித் தலைவருமான எல்.கே. சுதீஷ் ஆகியோர் பேச்சுவார்த்தை தொடர்பான விவகாரங்களில் மிகத் தீவிரமாக ஈடுபட்டிருந்தனர்.

படத்தின் காப்புரிமை FACEBOOK

அந்தக் கட்டத்தில் அ.தி.மு.க., தி.மு.க. ஆகிய இரு கட்சிகளுமே தே.மு.தி.க. தங்கள் கூட்டணியில் இருக்க வேண்டுமென விரும்பி, பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டிருந்தன. ஒரு கட்டத்தில் அ.தி.மு.க. - பா.ஜ.க. கூட்டணியில் தே.மு.தி.க. இடம்பெறுவது கிட்டத்தட்ட உறுதியாகியிருந்தது.

இந்த நிலையில் மார்ச் 6ஆம் தேதி நடந்த சம்பவங்கள், தே.மு.தி.கவின் இமேஜை முழுமையாக குலைத்துப் போட்டன. அன்றைய தினம் சென்னையை அடுத்துள்ள வண்டலூரில் பிரதமர் நரேந்திர மோதியின் பிரம்மாண்டமான பொதுக்கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

அந்தக் கூட்டத்தில் தமிழ்நாட்டில் பா.ஜ.கவுடன் கூட்டணி அமைந்திருந்த கட்சித் தலைவர்கள் அனைவரும் பங்கேற்றனர். கூட்டணித் தலைவர்களின் படங்களுடன் தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்தின் படமும் மேடையில் வைக்கப்பட்டிருந்தது. ஆனால், பிரதமர் வரும் நேரம் நெருங்கிய நிலையிலும் தே.மு.தி.க. முடிவைச் சொல்லாத நிலையில், கடைசி நிமிடத்தில் மேடையிலிருந்து விஜயகாந்தின் படம் அகற்றப்பட்டது.

பொதுக்கூட்ட மைதானத்தில் விஜயகாந்த்தின் கட் - அவுட் வைப்பதற்காக விடப்பட்டிருந்த இடத்தில் பா.ஜ.க. தலைவர் ஒருவர்களின் கட் - அவுட்கள் வைக்கப்பட்டன.

இது போதாதென்று, தே.மு.தி.க. கட்சியைச் சேர்ந்த சிலர் தி.மு.க. பொருளாளர் துரைமுருகனிடமும் கூட்டணி தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தச் சென்றதும் ஊடகங்களில் வெளியானது. பா.ஜ.க. கூட்டணியில் இணையப் போவதைப்போல பேச்சுவார்த்தை நடத்தியபடியே, பிரதமர் வரும் நாளில்கூட தி.மு.கவுடனும் கூட்டணி அமைக்க அக்கட்சி முயற்சித்தது தே.மு.தி.கவின் தோற்றத்தைக் கடுமையாக பாதித்தது.

படத்தின் காப்புரிமை TWITTER

இதற்கு சில நாட்களுக்குப் பிறகு, செய்தியாளர்களைச் சந்தித்த விஜயகாந்தின் மனைவி பிரேமலதா, எதிர்க்கட்சிகளைக் கடுமையாக வசைபாடியதோடு செய்தியாளர்களையும் ஒருமையில் பேசியதும் தேர்தல் நெருங்கி வரும் தருணத்தில் அக்கட்சி பற்றிய இமேஜை சுத்தமாக உடைத்தது.

இந்தக் குழப்பங்களையெல்லாம் தாண்டி ஒருவழியாக அ.தி.மு.க.கூட்டணியில் 4 இடங்களைப் பெற்றுப் போட்டியிட்ட தே.மு.தி.க., நான்கு தொகுதிகளிலுமே படுதோல்வி அடைந்தபோது பெரிதாக யாருக்கும் ஆச்சரியம் ஏற்படவில்லை.

"விஜயகாந்தின் உடல்நலம் பாதிக்கப்பட்ட நிலையில், பேச்சுவார்த்தைகளை முன்னின்று நடத்திய பிரமலதா தேர்தலுக்கு முன்பும் பிறகும் நடந்தகொண்டவிதம் வாக்காளர்களால் ரசிக்கப்படவில்லை. எந்தக் கொள்கையையும் முன்வைக்காமல் தங்கள் பேரத் திறனை மட்டுமே அவர்கள் நம்பினார்கள். இந்தத் தோல்வி எதிர்பார்க்கப்பட்ட ஒன்றுதான்" என்கிறார் ஃப்ரண்ட்லைன் இதழின் மூத்த செய்தியாளர்களில் ஒருவரான இளங்கோ ராஜசேகரன்.

இந்த நடாளுமன்றத் தேர்தலில் வட சென்னைத் தொகுதியில் ஆர். மோகன்ராஜும் கள்ளக்குறிச்சியில் எல்.கே. சுதீஷும் திருச்சியில் வி. இளங்கோவும் விருதுநகரில் அழகர்சாமியும் தே.மு.தி.க. சார்பில் போட்டியிட்டனர்.

இவர்களில் விருதுநகர் தொகுதியில் போட்டியிட்ட இளங்கோ மட்டுமே ஒன்றரை லட்சம் வாக்கு வித்தியாசத்தில் தோல்வியடைந்தார். மற்றவர்கள் அனைவருமே மூன்று லட்சத்திற்கு அதிகமான வாக்கு வித்தியாசங்களில் தோல்வியை எதிர்கொண்டனர். முடிவில் சுமார் 2 சதவீத வாக்குகளை மட்டுமே அக்கட்சியால் பெற முடிந்தது.

தமிழக அரசியலில் மிகப் பெரிய அரசியல் சக்தியாக வருமென எதிர்பார்க்கப்பட்ட தேசிய முற்போக்கு திராவிடர் கழகம் இந்தப் பேரழிவை சந்தித்தது எப்படி?

பிரம்மாண்டமான துவக்கம்

2005ஆம் ஆண்டு செப்டம்பர் 14ஆம் தேதி. மதுரை நகரமே பெரும் பரபரப்பில் மூழ்கியிருந்தது. மதுரையைச் சேர்ந்தவரும் பிரபல நடிகருமான விஜயகாந்த் புதிய அரசியல் கட்சியை துவங்குவதற்கான மாநாட்டை கூட்டியிருந்தார். இந்த மாநாட்டிற்காக மாநிலம் முழுவதுமிருந்து லாரிகளிலும் பேருந்துகளிலும் விஜயகாந்தின் ரசிகர்கள் மதுரையில் குவிந்தனர். 'விஜயகாந்த் இன்னொரு எம்.ஜி.ஆராக உருவெடுப்பாரா?" என கட்டுரைகள் எழுதப்பட்டன.

அந்த மாநாட்டில் தேசியம் - திராவிடம் - முற்போக்கு ஆகிய வார்த்தைகளை இணைத்து தேசிய முற்போக்கு திராவிடர் கழகம் என கட்சிப் பெயரை விஜயகாந்த் அறிவித்தபோது, தொண்டர்களாக உருவெடுத்த ரசிகர்கள் உற்சாகமடைந்தனர். ஊழல் ஒழிப்பு, வறுமை ஒழிப்பு, வேலைவாய்ப்பு போன்ற பொதுவான விஷயங்களைக் கொள்கைகளாகவும் அறிவித்தார் விஜயகாந்த்.

1979ல் திரைப்படங்களில் நடிக்க ஆரம்பித்து, சுமார் 150 படங்கள் வரை நடித்திருந்த விஜயகாந்த் தன் ரசிகர் மன்றங்களை மிகுந்த கட்டுக்கோப்புடன் உருவாக்கி வைத்திருந்தார். விஜயகாந்த் முறைப்படி கட்சியைத் துவங்கும் முன்பாகவே, அவரது ரசிகர்கள் பலர் உள்ளாட்சித் தேர்தல்களிலும் போட்டியிட்டு சிறுசிறு பதவிகளைப் பிடித்துவந்தனர். இந்நிலையில்தான் 2003-04வாக்கில் கட்சிக்கான பணிகளைத் தீவிரப்படுத்தினார் விஜயகாந்த். இதன் உச்சகட்டமாகத்தான் தன் ரசிகர்களை ஒருங்கிணைத்து புதிய கட்சியைத் துவங்கினார் விஜயகாந்த்.

அவரது ரசிகர் மன்றத்தின் மாநிலத் தலைவராக இருந்த ராமு வசந்தன், கட்சியின் பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டார். கட்சி துவங்கியதிலிருந்தே அ.தி.மு.க. - தி.மு.க. ஆகிய இரு பிரதான கட்சிகளுக்கும் மாற்றாக இருக்கும்; எந்த ஒரு கட்சியுடனும் கூட்டணி வைக்காமல், தனித்தே போட்டியிடுவோம் என அக்கட்சித் தலைவர் விஜயகாந்த் தொடர்ந்து சொல்லிவந்தார்.

இதற்கு அடுத்த ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் 234 இடங்களிலும் அக்கட்சி போட்டியிட்டது. 232 இடங்களில் முரசு சின்னத்திலும் இரு தொகுதிகளில் மோதிரச் சின்னத்திலும் அக்கட்சி போட்டியிட்டது.

படத்தின் காப்புரிமை HTTP://DMDKPARTY.COM/
Image caption பிரேமலதா விஜயகாந்த் (கோப்புப் படம்)

விருத்தாசலம் தொகுதியில் போட்டியிட்ட கட்சித் தலைவர் விஜயகாந்தைத் தவிர, போட்டியிட்ட அனைவருமே அந்தத் தேர்தலில் தோல்வியைத் தழுவினர். விஜயகாந்த், பண்ருட்டி ராமச்சந்திரன் தவிர, அறியப்பட்ட தலைவர்கள் யாரும் இல்லாத நிலையில் கிட்டத்தட்ட அனைத்துத் தொகுதியிலும் போட்டியிட்ட தே.மு.தி.க. பிரதான கட்சிகளையே பெரும் ஆச்சரித்திற்குள்ளாக்கியது.

பலரது அறிவுரையையும் மீறி, பாட்டாளி மக்கள் கட்சியின் செல்வாக்கு நிரம்பிய விருதாச்சலம் தொகுதியில் போட்டியிட்டார் கட்சித் தலைவர் விஜயகாந்த். போட்டியிட்ட 234 பேரில் அவர் மட்டுமே வெற்றிபெற்று ஆச்சரியப்படுத்தினார். இருந்தபோதும் அவரது கட்சி, ஒட்டுமொத்தமாக 27 லட்சத்து 64 ஆயிரம் வாக்குகளைப் பெற்றிருந்தது.

இது பதிவான வாக்குகளில் 8.4 சதவீத வாக்குகளாகும். முந்தைய ஆண்டுதான் துவக்கப்பட்ட கட்சி என்று பார்க்கும்போது இது அந்தத் தருணத்தில் மிகப் பெரிய சாதனையாவே இருந்தது.

இதற்கடுத்துவந்த 2009ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலிலும் தனித்துப் போட்டியிட முடிவுசெய்த தே.மு.தி.க. நாற்பது தொகுதியிலும் வேட்பாளர்களை நிறுத்தியது. விஜயகாந்தின் மைத்துனர் எல்.கே. சுதீஷ், மஃபா பாண்டியராஜன் ஆகியோர் அந்தக் கட்சியின் சார்பில் போட்டியிட்டவர்களில் தெரிந்த முகங்களாக இருந்தனர்.

இந்தத் தேர்தலில் எந்தத் தொகுதியிலும் வெற்றிபெறாவிட்டாலும், ஒட்டுமொத்தமாக 31 லட்சத்து 26 ஆயிரம் வாக்குகளைப் பெற்றது. பதிவான வாக்குகளில் இது 10.3 சதவீத வாக்குகளாகும். பெரிய வெற்றி ஏதும் இல்லாவிட்டாலும் தே.மு.தி.கவின் வாக்கு சதவீதம் தொடர்ந்து அதிகரித்துவந்ததையே இந்தத் தேர்தல் முடிவு காட்டியது.

இந்த நிலையில் 2011ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல்கள் நெருங்கியபோது, தே.மு.தி.கவுடன் பேச்சுவார்த்தை நடத்த ஆரம்பித்தார் ஜெயலலிதா. அதுவரை கடவுளோடும் மக்களோடும்தான் கூட்டணி என்று கூறிவந்த விஜயகாந்த் அ.தி.மு.கவுடன் கூட்டணி அமைக்க ஒப்புக்கொண்டார்.

2011ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.கவுடன் இணைந்து போட்டியிட்ட தே.மு.தி.கவுக்கு 41 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டன. விஜயகாந்த் அ.தி.மு.கவுடன் கூட்டணி அமைத்தது நல்ல முடிவு என்பதை தேர்தல் முடிவுகள் காட்டின. தே.மு.தி.க. 29 இடங்களையும் 7.9 சதவீத வாக்குகளையும் கைப்பற்றியது.

இதனால், கட்சியைத் துவங்கி சிறிது காலத்திலேயே தமிழ்நாட்டின் எதிர்க்கட்சித் தலைவராக உயர்ந்தார் விஜயகாந்த். ஆனால், அக்கட்சியின் சரிவு இந்தக் கட்டத்திலிருந்துதான் துவங்கியது.

துவங்கியது சரிவு

சட்டமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவராக இருந்த விஜயகாந்த்தின் செயல்பாடுகளும் அவரது கட்சியினரின் செயல்பாடுகளும் பெரும் ஏமாற்றத்தை அளித்தன. எதிர்க்கட்சி என்ற அந்தஸ்திற்குப் பொருந்தும்வகையில் எவ்விதமான நடவடிக்கையிலும் அக்கட்சி ஈடுபடவில்லை.

2014ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகளில் மக்களின் அதிருப்தி தெளிவாக வெளிப்பட்டது. அந்தத் தேர்தலின்போது பா.ஜ.க., பா.ம.க., ம.தி.மு.கவுடன் இணைந்து தேர்தலை சந்தித்த அக்கட்சி, 14 இடங்களில் போட்டியிட்டு அனைத்து இடங்களிலும் தோல்வியடைந்தது. பதிவான வாக்குகளில் 5.1 சதவீத வாக்குகளை, அதாவது 20 லட்சத்து 79 ஆயிரம் வாக்குகளை மட்டுமே அக்கட்சியால் பெற முடிந்தது.

இதற்குப் பிறகும் சரிவு தொடர்ந்தது. 2016ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் மக்கள் நலக் கூட்டணி என்ற பெயரில் ம.தி.மு.க, இடதுசாரிக் கட்சிகள், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியுடன் இணைந்து 104 இடங்களில் போட்டியிட்டது தே.மு.தி.க. ஆனால், போட்டியிட்ட ஒரு இடத்திலும் அக்கட்சியால் வெற்றிபெற முடியவில்லை. அக்கட்சி பெற்ற வாக்குகளின் சதவீதம் 2.41 சதவீதமாகக் குறைந்திருந்தது.

அதாவது அக்கட்சி வெறும் 10 லட்சத்து 34 ஆயிரம் வாக்குகளை மட்டுமே பெற்றிருந்தது. கட்சி துவங்கிய இரண்டாவது ஆண்டிலேயே தனித்துப் போட்டியிட்டு 27 லட்சம் வாக்குகளைப் பெற்ற அக்கட்சிக்கு இது மிகப் பெரிய சரிவு.

உளுந்தூர்பேட்டைத் தொகுதியில் போட்டியிட்ட கட்சித் தலைவர் விஜயகாந்த், சுமார் 34 ஆயிரம் வாக்குகளுடன் மூன்றாவது இடத்தையே பிடித்தார்.

இதற்குப் பிறகு கட்சித் தலைவர் விஜயகாந்திற்கு ஏற்பட்ட உடல்நலக் குறைவு, அக்கட்சியை பெரிதும் பாதிக்க ஆரம்பித்தது. பலரும் அக்கட்சியிலிருந்து விலகி தி.மு.க. உள்ளிட்ட கட்சிகளில் இணைய ஆரம்பித்தனர். கட்சியினர் விலகுவதும், தேர்தல் தோல்வியும் சேர்ந்து அக்கட்சியை ஒரு பலவீனமான கட்சி என்ற தோற்றத்தை ஏற்படுத்தியது.

2019 நாடாளுமன்றத் தேர்தல் தோல்வியும், கட்சியின் எதிர்காலமும்

2019ஆம் ஆண்டின் நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கிய நிலையில், விஜயகாந்த் சிகிச்சைக்காக அமெரிக்காவில் இருந்தார். தேர்தல் கூட்டணிகள் குறித்த பேச்சுவார்த்தைகள் துவங்கிய நிலையில்தான் அவர் அமெரிக்காவிலிருந்து இந்தியா திரும்பினார்.

படத்தின் காப்புரிமை TWITTER

இருந்தபோதும், கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தைகளை விஜயகாந்தின் மனைவியும் இளைஞரணித் தலைவருமான சுதீஷுமே நடத்தினர். தி.மு.க., அ.தி.மு.க. ஆகிய இருகட்சிகளுடனுமே பேச்சு வார்த்தை நடத்திய அக்கட்சி, தி.மு.க. கூட்டணியில் தே.மு.தி.க. 5 மக்களவை இடங்களையும் ஒரு மாநிலங்களவை இடத்தையும் கோரியதாகச் சொல்லப்பட்டது. அ.தி.மு.கவுடன் பேச்சுவார்த்தை நடத்தியபோது, பா.ம.கவுக்கு அளித்ததைப்போல 7 மக்களவை இடங்களை அளிக்க வேண்டுமெனக் கேட்டதாக சொல்லப்பட்டது.

இந்தக் கட்டத்தில் தே.மு.தி.க. தரப்பிடமிருந்து கசியவிடப்பட்ட சில செய்திகள் எல்லாக் கட்சிகளுக்குமே சங்கடத்தை ஏற்படுத்தின. அதாவது தி.மு.க. - அ.தி.மு.க. ஆகிய இரு கட்சிகளுடனும் தாங்கள் தொடர்ந்து பேசி வருகிறோம் என்பதை அவ்வப்போது வெளிப்படுத்திவந்தது தே.மு.தி.க. இதன் மூலம் தாங்கள் பலம் வாய்ந்த கட்சி என்ற எண்ணத்தை ஏற்படுத்தி, தங்கள் பேர பலத்தை உயர்த்த நினைத்தது அக்கட்சி.

ஆனால், தேர்தல் முடிவுகள் வெளிவந்தபோது, அக்கட்சியின் எதிர்காலம் மிக மோசமாக இருப்பது புரிந்தது. சந்தித்த முதல் தேர்தலில் சுமார் 27 லட்சத்து 60 ஆயிரம் வாக்குகளையும் இரண்டாவது தேர்தலில் சுமார் 31 லட்சம் வாக்குகளையும் பெற்றிருந்த அக்கட்சி இந்த நாடாளுமன்றத் தேர்தலில் சுமார் 9 லட்சத்து 29 ஆயிரம் வாக்குகளையே பெற முடிந்தது. அக்கட்சியின் வாக்குவங்கி வெகுவேகமாக மறைந்துவருவதையே இந்தத் தேர்தல் முடிவுகள் காட்டின.

"தே.மு.தி.க. துவக்கத்திலிருந்தே பாட்டாளி மக்கள் கட்சியின் வாக்குவங்கியின் ஒரு பெரிய பகுதியைப் பெற்றுவந்தது. அந்த நிலையில், இரு கட்சிகளும் 2014ல் ஒரே கூட்டணியில் இடம்பெற்றதில் இரு கட்சிகளின் தொண்டர்களுமே குழம்பிப்போனார்கள். பிறகு, இப்போதும் அதேபோல ஒரு கூட்டணியை பெரும் பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு அமைத்தால் அந்தக் கூட்டணிக்கு எப்படி வெற்றி கிடைக்கும்?" என்கிறார் இளங்கோ ராஜசேகரன்.

படத்தின் காப்புரிமை Twitter

2021ஆம் ஆண்டிலோ அதற்கு முன்பாகவோ வரவிருக்கும் தமிழக சட்டமன்றத் தேர்தல் தே.மு.தி.கவிற்கு மிகப் பெரிய அக்னிப் பரிட்சையாக இருக்கக்கூடும். "அந்தத் தேர்தலின்போது அ.தி.மு.க. - தி.மு.க. ஆகிய இரு கட்சிகளில் ஏதாவது ஒன்று தே.மு.தி.கவை சேர்த்துக்கொண்டால் அக்கட்சி சில இடங்களைப் பெறலாம். இல்லாவிட்டால் அக்கட்சியின் எதிர்காலம் கேள்விக்குறிதான். தொண்டர்களும் நிர்வாகிகளும் வேறு கட்சிகளை நாடிச் சென்றுவிடுவார்கள்" என்கிறார் ஆழி. செந்தில்நாதன்.

தமிழ்நாட்டில் எப்போதுமே தி.மு.க., அ.தி.மு.கவிற்கு வாக்களிக்க விரும்பாத வாக்காளர்கள் 10-15 சதவீதம் உண்டு. அந்த வாக்காளர்களில் ஒரு பகுதியும் தே.மு.தி.கவிற்கு வாக்களித்து வந்தனர். தற்போதைய சூழலில் நாம் தமிழர் கட்சி, கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் ஆகியவை அந்த வாக்குகளைப் பெறும் சூழல் வந்துவிட்ட நிலையில், தே.மு.தி.க. தனது பிரதானமான வாக்குவங்கியைப் பறிகொடுத்துவிட்டு நிற்கிறது என்கிறார் அவர்.

மேலும், 2011ஆம் ஆண்டிலும் இப்போதும் தே.மு.தி.க. பெற்ற வாக்குகளில் எத்தனை சதவீதம் அந்தக் கட்சிக்கு உரிய வாக்குகள் என்பதைச் சொல்வது கடினம் என்றுகூறும் செந்தில்நாதன், அப்படி ஒரு வாக்குவங்கி அக்கட்சிக்கு இருந்தால் அது மிகக் குறைவாகவே இருக்கும் என்கிறார்.

படத்தின் காப்புரிமை dmdk party/ facebook
Image caption தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த்

தொண்டர்களை உற்சாகப்படுத்த மீண்டும் விஜயகாந்த் களமிறங்குவாரா என்பது அவரது உடல்நலத்தைப் பொறுத்தது. அவர் உடல்நலம் குன்றிய பிறகு அக்கட்சி எந்தப் பிரச்சனை குறித்தும் பெரிதாக எந்தப் போராட்டங்களையும் அக்கட்சி முன்னெடுக்கவில்லை. கட்சியில் விஜயகாந்துக்கு அடுத்த நிலையில் உள்ள அவரது மனைவி பிரேமலதாவும் அவரது மகனும் செய்தியாளர்களிடமும் கூட்டங்களிலும் பேசும் உரைகள், பல சமயங்களில் அதிர்ச்சிகளையே தருகின்றன.

நாடாளுமன்றத் தோல்விக்குப் பிறகு தே.மு.தி.க. முகாம் மிக அமைதியாக இருக்கிறது. சட்டமன்றத் தேர்தலையொட்டி மீண்டும் அக்கட்சித் தலைவர்கள் சுறுசுறுப்பாகக்கூடும். ஆனால், அப்போதும் இரு பிரதான கட்சிகளும் தே.மு.தி.கவை கூட்டணியில் இணைத்துக்கொள்ள இதே ஆர்வத்தை காட்டுமா என்பதில் இருக்கிறது அக்கட்சியின் எதிர்காலம்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :