பொறியியல் படிப்பு: 188 படிப்புகளை கைவிடும் 89 கல்லூரிகள் - காரணம் என்ன?

பொறியியல் படிப்பு: 188 படிப்புகளை கைவிடும் 89 கல்லூரிகள் - காரணம் என்ன? படத்தின் காப்புரிமை Getty Images
Image caption சித்தரிப்புக்காக

முக்கிய இந்திய நாளிதழ்கள் சிலவற்றில் வெளியான கட்டுரைகள் மற்றும் செய்திகளைத் தொகுத்து வழங்குகிறோம்.

தினமணி: '188 படிப்புகளை கைவிடும் 89 பொறியியல் கல்லூரிகள்'

மாணவர் சேர்க்கை இல்லாத காரணத்தால் தமிழகத்தில் 9 நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள் உள்பட 89 பொறியியல் கல்லூரிகள் பி.இ., எம்.இ. உள்ளிட்ட 188 முதுநிலை, இளநிலை பொறியியல் படிப்புகளைக் கைவிடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன.

இந்தக் கல்லூரிகளின் முடிவுக்கு அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி கவுன்சிலும் (ஏஐசிடிஇ) அனுமதியளித்திருப்பதால், 2019-20 கல்வியாண்டில் இந்தப் படிப்புகளில் மாணவர் சேர்க்கை நடத்தப்படமாட்டாது.

மென்பொருள் நிறுவனங்களின் ஆள்குறைப்பு, ஊதியக் குறைப்பு நடவடிக்கைகள் காரணமாக கடந்த 2013-ஆம் ஆண்டு முதல் பொறியியல் படிப்புகளில் மாணவர் சேர்க்கை தொடர்ந்து குறைந்து வந்தது. இந்த நிலையில், 2017-ஆம் ஆண்டில் முதல் அரையாண்டுக்குப் பிறகு, மென்பொருள் நிறுவனங்கள் ஏற்றம் கண்டன. வேலைவாய்ப்புக்கான ஆள்கள் தேர்வையும் அதிகரித்தது. இதன் காரணமாக, பொறியியல் படிப்புகள் மீது மாணவர்களின் கவனம் மீண்டும் திரும்பியிருக்கிறது.

இருந்தபோதும், பி.இ. கணினி அறிவியல், இசிஇ போன்ற கணினி சார்ந்த பொறியியல் படிப்புகள் மீது மட்டுமே மாணவர்களின் ஆர்வம் அதிகரித்திருக்கிறது.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption சித்தரிப்புக்காக

அதேபோல, இளநிலை பொறியியல் படிப்புகளை முடித்தவுடன் மென்பொருள் நிறுவனங்களில் அதிக ஊதியம் கிடைப்பதன் காரணமாகவும், பொறியியல் கல்லூரி ஆசிரியர் பணி வாய்ப்பு அரிதாகிவரும் காரணத்தாலும் எம்.இ., எம்.டெக். போன்ற முதுநிலை பொறியியல் படிப்புகள் மீதான மாணவர்களின் ஆர்வம் வெகுவாகக் குறைந்துவிட்டது.

இதன் காரணமாக, கணினி சாராத இளநிலை பொறியியல் படிப்புகளை மட்டுமின்றி, முதுநிலை பொறியியல் படிப்புகளிலும் மாணவர் சேர்க்கையை பொறியியல் கல்லூரிகள் முழுமையாக நிறுத்தி வருவது ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருகிறது.

அதேபோல, 2019-20-ஆம் கல்வியாண்டிலும் தமிழகத்தில் 9 நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள் உள்பட 89 பொறியியல் கல்லூரிகள் 188 முதுநிலை, இளநிலை பொறியியல் படிப்புகளைக் கைவிடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன.

இந்தப் படிப்புகளில் மாணவர் சேர்க்கையை முழுமையாக நிறுத்த ஏஐசிடிஇ அனுமதி அளித்திருப்பதோடு, இந்தக் கல்லூரிகளின் பட்டியலை இணையதளத்திலும் வெளியிட்டுள்ளது.

127 முதுநிலை படிப்புகள்: அதன்படி, 9 நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள் உள்பட 50 பொறியியல் கல்லூரிகளில் 127 முதுநிலை பொறியியல் படிப்புகளில் மாணவர் சேர்க்கையை முழுமையாக நிறுத்தப்பட்டுள்ளன.

அதுபோல 4 நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள் உள்பட 39 பொறியியல் கல்லூரிகள் 61 இளநிலை பொறியியல் படிப்புகளில் மாணவர் சேர்க்கையை முழுமையாக நிறுத்தியுள்ளன.

படத்தின் காப்புரிமை இந்து தமிழ்

தினத்தந்தி: 'பெங்களூரு சிறையில் சசிகலாவுடன் டி.டி.வி. தினகரன் சந்திப்பு '

நாடாளுமன்ற தேர்தலுக்கு பிறகு பெங்களூரு சிறையில் சசிகலாவை டி.டி.வி.தினகரன் எம்.எல்.ஏ. சந்தித்து பேசினார் என்கிறது தினத்தந்தி நாளிதழ் செய்தி.

பின் வருமாறு அந்நாளிதழ் செய்தி விவரிக்கிறது,

சொத்து குவிப்பு வழக்கில் சிறை தண்டனை விதிக்கப்பட்ட சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். நாடாளுமன்ற தேர்தல் மற்றும் சட்டசபை இடைத்தேர்தல் பிரசாரத்தில் அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் தீவிரமாக இருந்தார்.

அந்த தேர்தல்கள் முடிவடைந்த நிலையில் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் சசிகலாவை டி.டி.வி.தினகரன் எம்.எல்.ஏ. நேற்று நேரில் சந்தித்து பேசினார். காலை 11.45 மணிக்கு சிறைக்குள் சென்ற டி.டி.வி.தினகரன் சசிகலாவை சந்தித்துவிட்டு மதியம் 1 மணிக்கு சிறையில் இருந்து வெளியே வந்தார்.

பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தபோது கூறியதாவது:-

சிறப்பாக பணியாற்றுங்கள்

தேர்தலில் வெற்றி தோல்வி என்பது சகஜமானது. தோல்வியை கண்டு யாரும் சோர்வடையாமல் அடுத்து வரும் தேர்தல்களில் சிறப்பாக பணியாற்றுங்கள் என்று சசிகலா கூறினார்.

நடைபெற்ற தேர்தலில் எனக்கு கிடைத்த தகவலின்படி 30 தொகுதிகளில் அமைந்திருந்த 588 வாக்குச்சாவடிகளில் எங்கள் கட்சிக்கு ஒரு ஓட்டுகூட விழவில்லை. எனது வாக்குச்சாவடியில் எங்கள் கட்சிக்கு 14 ஓட்டுகள் தான் வந்துள்ளன.

தமிழக பா.ஜனதா தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், அ.ம.மு.க.வினர் வாக்குச்சாவடி முகவர்களை நியமித்தார்களா? என்று கேட்டுள்ளார். ஆதாரம் இல்லாமல் தேர்தல் ஆணையத்தில் முறையிட முடியாது. அதனால் ஆதாரங்களை திரட்டி வருகிறோம். இதுகுறித்து தேர்தல் ஆணையத்தில் முறையிடுவோம்.

நாங்குநேரி இடைத்தேர்தலுக்கு தயார்

எங்கள் கட்சியின் ஒன்றிய செயலாளர் வசித்து வரும் பகுதியில் உள்ள வாக்குச்சாவடியில் எங்கள் கட்சிக்கு ஒரு ஓட்டுகூட கிடைக்கவில்லை. இது எப்படி சாத்தியம். இவை எல்லாவற்றுக்கும் கிடைக்கும் ஆதாரங்களை தேர்தல் ஆணையத்திடம் வழங்குவோம். தேனி தொகுதியில் முறைகேடு நடந்திருப்பதாக ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் கூறியிருக்கிறார். அதையேதான் நாங்கள் கூறுகிறோம்.

வருகிற 1-ந்தேதி கட்சியின் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடக்கிறது. இதில் கட்சியை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்வது குறித்து ஆலோசனை நடத்தப்படும். அடுத்து நடைபெறும் நாங்குநேரி சட்டமன்ற இடைத்தேர்தல் மற்றும் வேலூர் நாடாளுமன்ற தொகுதி தேர்தலுக்கு தயாராவோம்.

மோடி அலை வெற்றி பெற்றதா?

தேர்தலில் வாக்குச்சீட்டு முறையே சிறந்தது. இதற்காக சந்திரபாபுநாயுடு உள்பட பல்வேறு கட்சிகளின் தலைவர்கள் குரல் கொடுத்து வருகிறார்கள். அமெரிக்கா உள்ளிட்ட வளர்ந்த நாடுகளில் வாக்குச்சீட்டு முறை தான் பயன்படுத்தப்படுகிறது. மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் தவறுகள் நடைபெற வாய்ப்புள்ளது.

தேர்தலில் எங்கள் கட்சி நிர்வாகிகள் யாராவது தவறு செய்திருந்தால் அத்தகையவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். தமிழக சட்டசபையில் நம்பிக்கையில்லா தீர்மானம் வரும்போது, எங்கள் 'சிலிப்பர் செல்கள்' வெளியே வருவார்கள். நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வருவதற்கு தி.மு.க.விடம் தான் பலம் உள்ளது.

மோடியின் அலையால் பா.ஜனதா வெற்றி பெற்றதாக நடிகர் ரஜினிகாந்த் கூறியுள்ளார். அது அவரது கருத்து. ஆனால் என்னை பொறுத்தவரையில் நாடாளுமன்ற தேர்தலில் வாக்குப்பதிவு எந்திரங்கள் வெற்றி பெற்றுள்ளது.

இவ்வாறு டி.டி.வி.தினகரன் கூறினார்.

தோனி, ராகுல் அதிரடியில் இந்தியா மகத்தான வெற்றி - 'டைம்ஸ் ஆஃப் இந்தியா

படத்தின் காப்புரிமை Getty Images

2019 ஐசிசி உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் வரும் மே 30-ஆம் தேதியன்று பிரிட்டனில் துவங்கவுள்ள நிலையில், செவ்வாய்க்கிழமையன்று நடந்த தனது இரண்டாவது மற்றும் இறுதி பயிற்சி ஆட்டத்தில் இந்தியா வங்கதேசத்தை 95 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது குறித்த செய்தியை டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளிதழ் வெளியிட்டுள்ளது.

நியூஸிலாந்துக்கு எதிரான முதல் பயிற்சி ஆட்டத்தில் இந்தியா 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோல்வியுற்ற நிலையில், வங்கதேசம் அணிக்கு எதிராக கார்டிப்பில் நடந்த போட்டியில் முதலில் பேட் செய்த இந்தியா தொடக்கத்தில் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தியது.

ரோகித் சர்மா 19 ரன்களும். தவான் 1 ரன்னும் எடுத்து ஆட்டமிழக்க, கேப்டன் விராட் கோலி 46 பந்துகளில் 47 ரன்கள் எடுத்தார்.

இந்த போட்டியில் ஆரம்பம் முதலே அதிரடி ஆட்டத்தில் ஈடுபட்ட கே எல் ராகுல் 99 பந்துகளில் 109 ரன்கள் எடுத்தார்.

இதற்கு பிறகு களமிறங்கிய மகேந்திர சிங் தோனியின் ஆட்டம்தான் இந்தியாவின் ரன்குவிப்பில் பெரும் மாறுதலை ஏற்படுத்தியது. சிறப்பாக விளையாடிய தோனி 78 பந்துகளில் 113 ரன்கள் குவித்தார். இதில் 7 சிக்ஸர்களும், 8 பவுண்டரிகளும் அடங்கும்.

நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு இந்தியா 359 ரன்கள் குவித்தது.

360 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் களமிறங்கிய வங்கதேசம் 264 ரன்களுக்கு ஆட்டமிழந்ததால், இந்தியா 95 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.

படத்தின் காப்புரிமை Getty Images

பயிற்சி ஆட்டங்கள் அனைத்தும் முடிவடைந்த நிலையில், நாளை (வியாழக்கிழமை) இங்கிலாந்து மற்றும் தென் ஆப்ரிக்கா இடையே முதல் போட்டி தொடங்கவுள்ளது.

இந்து தமிழ்: 'அரசு பள்ளிகளுக்கு முன்னாள் மாணவர்கள் உதவ வேண்டும்'

அரசுப் பள்ளிகளுக்கு முன்னாள் மாணவர்களும் சமூக அக்கறை கொண்ட நிறுவனங்களும் உதவ வேண்டும் என பள்ளிக்கல்வி அமைச்சர் கே.ஏ.செங்கோட்டை யன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதுதொடர்பாக நேற்று அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: பள்ளிகளில் மாணவர்களின் இடைநிற்றலை தடுத்து அவர்களுக்கு சிறந்த கல்வி வழங்குவதற்காக தமிழக அரசு 15 வகையான நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகிறது. இதன் காரணமாக, கல்வித் துறையில் தமிழகம் மற்ற மாநிலங்களுக்கு முன்னுதாரணமாக திகழ்கிறது. 2019-2020-ம் நிதி ஆண்டில் பள்ளிக்கல்வித் துறைக்கு தமிழக அரசு ரூ.28 ஆயிரத்து 757 கோடியை ஒதுக்கியது. அரசு அதிகளவில் நிதி ஒதுக்கினாலும், இது என் பள்ளி, அதன் வளர்ச்சியில் நானும் பங்கெடுப்பதில் பெருமை கொள்கி றேன் என்ற எண்ணம் பள்ளியின் முன்னாள் மாணவர்களின் மனதில் உருவானால்தான் அரசு பள்ளிகளின் தரத்தை மென்மேலும் மேம்படுத்த முடியும்.

அந்த வகையில், அரசு பள்ளிகளில் படித்து தற்போது பல்வேறு தொழில்நிறுவனங்களில் உயர்ந்த பொறுப்பில் இருக்கும் முன்னாள் மாணவர்களும் தொழிலதிபர்களாக இருக்கும் முன்னாள் மாணவர்களும் சமூக அக்கறை கொண்ட நிறுவனங்களும் தங்களின் சமூக பொறுப்புணர்வு நிதி மூலம் அரசு பள்ளிகளை தத்தெடுத்து பள்ளிகளின் உட்கட்டமைப்பு, சுற்றுச்சுவர், வர்ணம் பூசுதல், இணைய வசதிகள் , சுகாதாரமான கழிப்பறைகள், ஆய்வகங்கள், நூலகங்கள் போன்ற அடிப்படை வசதிகளை மேம்படுத்த வர வேண் டும்.

ஏற்கெனவே நான் விடுத்திருந்த அழைப்பை ஏற்று பல்வேறு நிறுவனங்கள் தங்கள் சிஎஸ்ஆர் திட்டம் மூலம் 519 அரசுப் பள்ளி களில் ரூ.58 கோடி மதிப்பில் உள்கட்டமைப்பு வசதிகள் நிறை வேற்றி தந்ததற்கு நன்றி.

அரசு பள்ளிகளை தத்தெடுக்க விரும்பும் சமூக அக்கறை கொண்ட நிறுவனங்களுக்கு எவ்வித தடையும் தாமதமும் இன்றி உடனடியாக பணிகள் மேற்கொள்ள அனுமதி வழங்க வேண்டும் என்று அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கும் அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. எனவே, அரசுப் பள்ளி முன்னாள் மாணவர்களும் தொழில் நிறுவனங்களும் தங்களுக்கு அருகில் உள்ள அரசுப் பள்ளிகளுக்கு உதவிட முன்வருமாறு அழைப்பு விடுக்கிறேன்.

அரசின் பணியோடு தங்களின் பங்களிப்பும் இணையும்போதுதான் கல்வியின் தரம் மேலும் சிறக்கும். அரசுப் பள்ளிகள் மேலும் பலம் பெற அனைவரும் கரம்கோர்த்து செயல்படுவோம்.

இவ்வாறு அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :