நவீன் பட்நாயக்: ஒரிய மொழியே தெரியாதவர் ஒடிஷாவின் முதல்வரான கதை

நவீன் பட்நாயக்: மொழியே தெரியாதவர் மாநிலத்தின் முதல்வரான கதை படத்தின் காப்புரிமை Getty Images

நவீன் பட்நாயக் ஒடிசா மாநில முதல்வராக ஐந்தாவது முறையாக இன்று பொறுப்பேற்றார்.

அவருடன் 11 அமைச்சர்களும், 9 துணை அமைச்சர்களும் பொறுப்பேற்றனர்.

மொத்தம் உள்ள 147 தொகுதிகளில் 112 தொகுதிகளில் பிஜு ஜனதா தளம் வெற்றி பெற்றுள்ளது. பாஜக 23 தொகுதிகளில் வெற்றி பெற்றது.

நவீனின் கதை

தமிழ் தெரியாதவர் தமிழக முதல்வராக வர முடியுமா, இந்தி தெரியாதவர் உத்தர பிரதேச முதல்வராக வரமுடியுமா? சிரமம்தானே?

ஆனால், நவீன் பட்நாயக்கிற்கு மொழி ஒரு தடையாக இருக்கவில்லை.

அரசியல் என்பது ரத்தம் சிந்தாத போர்; போர் என்பதோ ரத்தம் சிந்தும் அரசியல் என்று குறிப்பிட்டார், சீனாவில் கம்யூனிசப் புரட்சியை ஏற்படுத்திய மாசேதுங். ரத்தம் சிந்தாத அரசியல் போரில் மக்களை கவர மொழி ஒரு முக்கிய கருவி. அந்த கருவியை சர்வதேச அளவில் பெரும்பாலான அரசியல் தலைவர்கள் சரியாக பயன்படுத்தி இருக்கிறார்கள். அந்த கருவியை கொண்டே வெற்றியும் பெற்று இருக்கிறார்கள். ஆனால், அந்த கருவியே இல்லாமல் அரசியலில் வென்று இருக்கிறார் நவீன்.

மொழி தெரியாத முதல்வர்

நவீன் பட்நாயக்கிற்கு அந்த மாநிலத்தின் முதன்மை மொழியான ஒரிய மொழியை படிக்கத் தெரியாது.

நவீன் பட்நாயக்கின் சுயசரிதையை எழுதிய ரூபன் பானர்ஜி, "2000ம் ஆண்டு தேர்தலில் போட்டியிட நவீன் ஒடிசா வந்தபோது, அவருக்கு ஒரிய மொழி பேசக் கூட வராது. ஏனெனில், அதுவரை தனது வாழ்வின் பெரும்பாலான நாட்களை ஒடிஷாவுக்கு வெளியேதான் கழித்தார் நவீன். தேர்தல் பிரசாரத்தின் போது, பேச வேண்டிய விசயத்தை, ஒரிய வார்த்தைகளை ஆங்கில வரிவடிவத்தில் எழுதி வைத்து கொள்வார். அதை அப்படியே வாசிப்பார்" என்கிறார்.

படத்தின் காப்புரிமை Getty Images

அவர் நல்ல பேச்சாளரும் இல்லை. அவருடைய பிரசாரங்கள் எந்த உயிர்ப்பும் இல்லாமல் ரோபோ பேசுவது போல இருக்கும். ஆனால், இது எதுவும் மக்கள் அவருக்கு வாக்களிப்பதை தடுக்கவில்லை.

இதன் காரணமாகவே மக்கள் அவரை வித்தியாசமான அரசியல் தலைவர்களாக கருதினார்கள். அவர் தன்னை காப்பார் என நினைத்தார்கள். அதனாலேயே அவருக்கு மக்கள் வாக்களித்தார்கள்.

அவருக்கு இப்போதாவது ஒரிய மொழி தெரியுமா என்றால்? தெரியும் ஆனால் சரளமாக பேச வராது.

வித்தியாச மாநிலம்

நவீனின் ஒடிசா மாநிலம் வித்தியாசமானது. ஏராளமான முரண்களை உடைய மாநிலம் இது. இந்தியாவில் ஏழைகள் அதிக எண்ணிக்கையில் இருக்கிறார்கள். ஆனால் புவனேஷ்வர், கட்டாக் மற்றும் புரி நகர வீதிகளில் மிக மிக குறைந்த எண்ணிக்கையிலே பிச்சைக்காரர்களை பார்ப்பீர்கள். இந்தியாவிலேயே கல்வியறிவு குறைவான மாநிலம் இது. ஆனால், போட்டி தேர்வுகளில் ஒடிசா மாணவர்களின் வெற்றி வியக்கதக்க வகையில் இருக்கும். புள்ளி விவர கணக்குகளில் ஒடிசாவில் பொது சுகாதாரம் பின் தங்கி இருக்கும். ஆனால், அந்த மாநிலத்தின் வீதிகள் ஒப்பிட்டளவில் சுத்தமாகவே இருக்கும்.

அமைதி, அமைதி, மிக மிக அமைதி

இந்தியாவிலேயே அமைதியான அரசியல்வாதியாக அறியப்படுபவர் நவீன். அவர் ஆக்ரோஷமாக பேசுவதை அரிதினும் அரிதாகவே பிறர் கண்டிருக்கிறார்கள்.

ரூபன் பானர்ஜி, "அவரிடம் பேசினால், உண்மையில் அவர் அரசியல்வாதிதானா? என்று சந்தேகம் எழும். அந்த அளவுக்கு அமைதியான மனிதர்.ஆனால் அவர் அளவுக்கு ஓர் அரசியல் தலைவரை நீங்கள் ஒடிசாவில் பார்க்க முடியாது." என்கிறார்.

மூன்று நாடுகளின் கதாநாயகன்

நவீன் பட்நாயக் ஓர் அரசியல் வாரிசு. நவீனின் தந்தை பிஜு பட்நாயக் ஒடிசா முதல்வராக மட்டும் இருக்கவில்லை. அவர் அனைவரும் அறிந்த ஒரு சுதந்திரப் போராட்ட வீரர் மற்றும் விமானி.

இரண்டாவது உலகப் போரில் பிஜு பட்நாயக்கின் பங்களிப்பு, இந்தோனீசியா விடுதலைப் போராட்டத்தில் அவர் பங்கு , 1947 இந்தியாவை பாகிஸ்தான் தாக்கிய போது ஒரு விமானியாக இவர் ஆற்றிய எதிர்வினை என அனைத்தும் இப்போதும் நினைவு கூறப்படுகிறது.

இரண்டாவது உலகப் போரின் போது ரஷ்யப் படைவீரர்களுக்கு ஆயுதங்களை வழங்க விமானத்தை ஓட்டிக் கொண்டு அஜர்பைஜான் சென்றார். 1942ம் ஆண்டு ஜப்பான் முற்றுகையினால் பர்மாவில் சிக்கிக் கொண்ட பிரிட்டன் வீரர்களை குண்டு வெடிப்புகளுக்கு மத்தியில் சென்று மீட்டார்.

பிஜுவின் மரணத்திற்கு பின், அவரது உடல் வைக்கப்பட்டிருந்த சவப்பெட்டியின் மீது இந்தியா, ரஷ்யா மற்றும் இந்தோனீஷியா உள்ளிட்ட மூன்று நாடுகளின் கொடிகள் போர்த்தப்பட்டிருந்தன.

டெல்லி வாழ்வு

பிஜு பட்நாயக் உயிரோடு இருந்தவரை நவீன் பட்நாயக் அரசியலிலிருந்து தள்ளியே இருந்தார்.

டெல்லியில் இருந்த போது பெரும் செல்வந்தர்கள் மத்தியில் மிகவும் செல்வாக்கோடு இருந்துவந்தார் நவீன். சஞ்சய் காந்தி இவரது வகுப்பு தோழர்.

படத்தின் காப்புரிமை Getty Images

நவீனுக்கு கலை இலக்கியங்களில் பெரும் ஈடுபாடு இருந்தது. மேற்கத்திய நடையில் ஆங்கிலம் பேசுவார் அவர்.

கென்னடியின் மனைவி ஜாக்குலினின் நண்பர் நவீன். ஜாக்குலின் 1983ம் ஆண்டு இந்தியா வந்த போது, அவருடன் உதய்பூர், ஜெய்ப்பூர், ஜோத்பூர், லக்னோ, ஹைத்ராபாத் சென்று இருக்கிறார் நவீன்.

ஒபராய் ஓட்டலில் சிறு கடையை நடத்தி வந்த நவீன் 1988ம் ஆண்டு வெளியான டெசீவர்ஸ் எனும் ஆங்கில திரைப்படத்தில் சிறு காட்சியில் நடித்திருக்கிறார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :