நரேந்திர மோதி பதவியேற்பு விழா: ஸ்டாலினுக்கு அழைப்பு இல்லாதது ஏன்?

மு.க. ஸ்டாலின் படத்தின் காப்புரிமை M.K.Stalin
Image caption மு.க. ஸ்டாலின்

இந்தியாவின் 17-வது மக்களவைத் தேர்தலில் பாஜக பெரும் வெற்றி பெற்றதை அடுத்து, பிரதமர் நரேந்திர மோதி அடுத்து அமையவுள்ள இந்திய அரசுக்கான பிரதமராக மீண்டும் நாளை வியாழக்கிழமை பதவியேற்கிறார்.

தமிழ்நாட்டைச் சேர்ந்த மக்கள் நீதி மய்யத் தலைவரும் நடிகருமான கமல் ஹாசன், நடிகர் ரஜினிகாந்த் ஆகியோர் இந்த நிகழ்வுக்கு அழைக்கப்பட்டுள்ள நிலையில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அழைக்கப்படவில்லை.

சமீபத்தில் நடந்து முடிந்த சட்டப் பேரவை இடைத் தேர்தல் பிரசாரத்தின்போது மகாத்மா காந்தியைக் கொன்ற நாதுராம் கோட்சேவை குறிப்பிட்டு, நாட்டின் முதல் பயங்கரவாதி ஓர் இந்து பயங்கரவாதி என்று பேசிய கமல்ஹாசனுக்கு பாஜகவினரும், அவரது ஆதரவாளர்களும் மிகக் கடுமையான எதிர்ப்பைக் காட்டியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption புதுவை முதல்வர் நாராயணசாமி

நாடெங்கும் பாஜக பெரும் எண்ணிக்கையில் வெற்றி பெற்றுள்ள நிலையில், அதற்கு மாறாக தமிழ்நாட்டில் பாஜக கூட்டணிக்கு திமுக தலைமையிலான கூட்டணி மோசமான தோல்வியைத் தந்துள்ள நிலையில் ஸ்டாலின் அழைக்கப்படவில்லை.

பிரதமர் பதவியேற்பு விழாவுக்கு யாரை அழைப்பது என்பதற்கு ஏதாவது நெறிமுறை உள்ளதா என்று மத்திய அமைச்சராக இருந்து, பிரதமர் அலுவலக விவகாரத்தை கவனித்தவரும், தற்போதைய புதுவை முதல்வருமான வி.நாராயணசாமியைக் கேட்டது பிபிசி தமிழ்.

"யாரை அழைப்பது என்பதை முடிவு செய்ய அவர்களுக்கு உரிமை உள்ளது. இதில் மரபு மட்டும்தான் உள்ளது. ஆனால், கடந்த காலங்களில் பிரதான எதிர்க் கட்சி தவிர, பிற கட்சிகளின் தலைவர்களும் அழைக்கப்பட்டிருக்கிறார்கள். மு.க.ஸ்டாலின் அழைக்கப்பட்டிருக்கவேண்டும்," என்று கூறினார் நாராயணசாமி.

படத்தின் காப்புரிமை Raveendran
Image caption ஆ.ராசா

யாரை அழைப்பது என்பதற்கு ஏதேனும் விதிமுறை உள்ளதா என்று கேட்டதற்கு "அப்படி ஏதும் இருப்பதாகத் தெரியவில்லை. அது அவர்கள் விருப்பம்தான்" என்று கூறினார் முன்னாள் மத்திய அமைச்சரும், மக்களவை திமுக கொறடாவுமான ஆ.ராசா.

மூத்த பத்திரிகையாளர் ஆர்.இளங்கோவனிடம் இதுபற்றிக் கேட்டபோது, "மு.க.ஸ்டாலின் முதல்வரும் அல்ல, திமுக நாடாளுமன்றக் குழுவிலும் அவர் இல்லை. ஆனால், இந்த விதிமுறை என்பதையெல்லாம் தாண்டி, கமல் ஹாசன், ரஜினி எல்லாம் அழைக்கப்பட்டுள்ள நிலையில், மக்களவையில் மூன்றாவது பெரிய கட்சியின் தலைவர் என்ற முறையில் ஸ்டாலினுக்கு அழைப்பு விடுத்திருக்கலாம். அது அரசியல் நாகரிகமாக இருந்திருக்கும்" என்று கருத்துத் தெரிவித்தார்.

இது குறித்து பாஜக முக்கிய நிர்வாகி ஒருவரிடம் கேட்டபோது, "மம்தா பானர்ஜி உட்பட மாநில முதல்வர்கள் அனைவரும் அழைக்கப்பட்டிருக்கிறார்கள். இது தவிர குடியரசுத் தலைவர் மாளிகையில் நடக்கும் எல்லா விழாக்களுக்கும், பத்ம விருது பெற்றவர்கள் குடியரசுத் தலைவரின் விருந்தினர்களாக அழைக்கப்படுகிறார்கள். அந்த அடிப்படையில் கமல் ஹாசன், ரஜினிகாந்த் ஆகியோர் அழைக்கப்பட்டிருக்கலாம்" என்று கூறினார்.

பிற செய்திகள் :

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :