ஜெகன் மோகன் ரெட்டி - 'நான் அமைப்பை சுத்தம் செய்ய வந்துள்ளேன்'

ஜெகன் மோகன் ரெட்டி

ஆந்திர மாநிலத்தின் புதிய முதல்வராக பொறுப்பேற்கவுள்ள ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியின் தலைவர் மற்றும் ஒருங்கிணைந்த ஆந்திர மாநிலத்தின் முன்னாள் முதல்வர் ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டியின் மகன் ஜெகன் மோகன் ரெட்டி பிபிசிக்கு பிரத்யேக அளித்த நேர்காணல்.

கேள்வி: பாஜக மக்களவையில் 250 இடங்களில் மட்டுமே வென்றிருக்கலாம் என்று டெல்லியில் செய்தியாளர்களிடம் கூறினீர்கள். ஏன்?

பதில்: ஒரு வேலை பாஜக 250 இடங்களில் மட்டும் வென்றிருந்தால் ஆந்திரப் பிரதேசத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் ஒப்புதல் இந்நேரம் கிடைத்திருக்கும். அந்த நிலை வர வேண்டும் என்று கடவுளை வேண்டினேன். ஆனால் எங்களுக்கு காட்டியதைப் போலவே கடவுள் பாஜகவுக்கும் கருணை காட்டியுள்ளார்.

ஆந்திர மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கப்படும் என்ற வாக்குறுதி நாடாளுமன்றத்தில் அளிக்கப்பட்ட பின்னரே மாநிலம் இரண்டாகப் பிரிக்கப்பட்டது. அதை நாங்கள் தொடர்ந்து வலியுறுத்துவோம். இதற்காக பிரதமரை மாதம்தோறும் அல்லது இரு மாதங்களுக்கு ஒருமுறை சந்திப்பேன். ஒரு நாள் அந்த அந்தஸ்தை நாங்கள் அடைவோம்.

கேள்வி: நரேந்திர மோதி உடனான சந்திப்பு எப்படி இருந்தது? அவர் ஆந்திர மாநிலத்துக்கு உதவுவார் என்ற நம்பிக்கை தெரிகிறதா?

பதில்: எங்கள் ஒரு மணி நேர உரையாடலில் அவர் நேர்மைறையாகவே பேசினார். மாநிலத்தின் தேவைகளுக்கு உறுதுணையாக இருப்பதாக கூறினார். இரண்டாவது முறை பிரதமராக பொறுப்பேற்கும் முன்னரே என்னை அவர் சந்தித்தது மகிழ்ச்சி.

படத்தின் காப்புரிமை Getty Images

சிறப்பு அந்தஸ்து ஆந்திர மாநிலத்துக்கு ஏன் தேவை என்று விவரித்தேன். அதை அவரும் பொறுமையுடன் கேட்டுக்கொண்டார். அது எப்படி சாத்தியமாகிறது என்று பார்ப்போம்.

கேள்வி: மத்திய அரசு ஒரு வேளை ஆந்திர மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கவில்லை என்றால் உங்கள் திட்டம் என்ன?

பதில்: நான் ஒரு மாநிலத்தின் முதல்வராக இருக்கிறேன். மோதி பிரதமராக இருக்கிறார். மாநிலம் பிரிக்கப்பட்டபோது மாநிலத்தின் கடன் 97,000 கோடி ரூபாயாக இருந்தது. இப்போது 2.58 லட்சம் கோடி ரூபாயாக இருக்கிறது. ஆண்டுக்கு 20,000 கோடி ரூபாய் வட்டியாக மட்டுமே செலுத்த வேண்டியுள்ளது. ஆண்டுதோறும் திரும்ப செலுத்தப்படும் அசல் தொகையையும் சேர்த்தால் 40,000 கோடி ரூபாய். இந்த சூழலில் நடுவண் அரசின் உதவி தேவைப்படும்.

ஆனால், நடுவண் அரசுக்குத் தேவைப்படும் சூழலில் நாங்கள் இப்போது இல்லை. 340-350 உறுப்பினர்கள் ஆதரவு அவர்களுக்கு இருக்கும்போது, நாங்கள் அவர்களை ஆதரிக்கிறோமா இல்லையா என்பது அவர்களுக்கு கவலையில்லை.

எங்களுக்கு அவர்களால் வேலை ஆகவேண்டியுள்ளது. எனவே, அவர்களுடன் நாம் இயைந்துபோக வேண்டியுள்ளது.

கேள்வி: உங்கள் தேர்தல் பிரசாரத்தின்போது சிறப்பு அந்தஸ்துதான் மையக்கருவாக இருந்தது. போராடி வெல்வீர்கள் என்று கூறிய நீங்கள் இப்போது இயைந்து செயல்படுவோம் என்கிறீர்கள். இந்த மாற்றத்துக்கு என்ன காரணம்?

பதில்: நான் என்ன செய்ய வேண்டும் என்று நீங்களே கூறுங்கள். என்னால் என்ன செய்ய முடியும் என்று நினைக்கிறீர்கள்? உங்கள் ஆலோசனையை ஏற்றுக்கொள்ள நான் தயார். சொல்லுங்கள்.

கேள்வி: நீங்கள் மாநில முதல்வராக எடுக்க வேண்டிய முடிவு இதுவா?

பதில்: இதற்குத் தீர்வே கிடையாது. சந்திரபாபு நாயுடு சிறப்பு அந்தஸ்து கோரிக்கையை புறந்தள்ளி, ஏமாற்றியபோதும் நான் சமரசம் செய்துகொள்ளவில்லை. இந்த கோரிக்கை என்னால்தான் உயிர்ப்புடன் உள்ளது. இப்போதும் நடுவண் அரசுக்கு அழுத்தம் கொடுக்க நான் தயாராக உள்ளேன். பாஜகவுக்கு 348 உறுப்பினர்கள் ஆதரவு இருக்கும்போது அவர்கள் ஏன் என்னைப்பற்றி கவலைப்படப் போகிறார்கள். தேசிய ஊடகங்களில் பேசி என்னால் அழுத்தம் தர முடியும். வேறு என்ன செய்ய முடியும்?

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption சந்திரபாபு நாயுடு

கேள்வி: மாநில அரசு கடன்சுமையில் இருப்பதாக நீங்கள் சொல்கிறீர்கள். நீங்கள் முன்மொழிந்துள்ள திட்டங்களை நிறைவேற்ற 56,000 கோடி ரூபாய் தேவை என கணக்கிடப்பட்டுள்ளது. என்ன செய்ய போகிறீர்கள்?

பதில்: நான் அறிவித்துள்ள ஒன்பது முக்கிய திட்டங்களைப் பற்றி யாரும் கவலைப்பட வேண்டாம். அடுத்த சில ஆண்டுகளில் அவற்றை எப்படி நிறைவேற்றுவோம் என்று அறிவிப்போம். ஒவ்வொரு வாக்குறுதியையும் நிறைவேற்றுவோம். கிராமங்களில் இருந்து தன்னார்வலர்களை அழைத்துவருவோம்.

கேள்வி: ஊழல் இல்லாத ஆட்சியளிப்போம் என்று உறுதியளித்துள்ளீர்கள். உங்கள் மீதே சிபிஐ ஊழல் வழக்கு உள்ளதே?

பதில்: இந்த வழக்குகள் எப்போது, யாரால் பதியப்பட்டது என்று கேட்கிறேன். ஆந்திர மக்களுக்கு என்னைப்பற்றி தெரியும். என் அப்பா உயிருடன் இருந்தவரை என் மீது வழக்குகள் இல்லை. அவர் இறந்தபின், நான் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகியபின் இந்த வழக்குகள் பதியப்பட்டன.

தெலுங்கு தேசம் மற்றும் காங்கிரஸ் கட்சயினர்தான் இந்த வழக்குகளில் புகார் அளித்தவர்கள்.

ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டி முதல்வராக இருந்தபோது நான் எந்த அமைச்சரையோ அதிகாரியையோ அழைத்ததில்லை. தலைமைச் செயலகத்துக்குள் காலடிகூட எடுத்து வைத்ததில்லை. நான் என் குடும்பத்துடன் பெங்களூருவில் என் வேலைகளை கவனித்துக்கொண்டு இருந்தேன்.

கேள்வி: முதல்வரானபின் உங்கள் முதல் நடவடிக்கை என்னவாக இருக்கும்?

பதில்: ஊழல் எங்கெல்லாம் நடக்கிறது என்று தகவல் சேகரிக்கப்படும். தரவுகள் கிடைத்தபின் நடவடிக்கை தொடங்கும். நான் அமைப்பை சுத்தம் செய்ய வந்துள்ளேன். என் அரசு விடும் ஏலங்கள் வெளிப்படையாக இருக்கும்.

பதவியில் உள்ள நீதிபதி ஒருவரின் தலைமையில் ஒரு நீதி விசாரணை ஆணையம் அமைக்கப்படும். ஒவ்வொரு திட்டத்துக்கும் ஏலம் விடப்படும் முன், அந்த ஆணையத்துக்கு அவை அனுப்பப்படும். அந்த ஆணையம் பரிந்துரைக்கும் மாற்றங்கள் மேற்கொள்ளப்படும். வெளிப்படைத்தன்மை உறுதி செய்யப்பட்டபின்னரே ஏலம் விடப்படும்.

பிற செய்திகள் :

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :