"நாங்கள் இளம் பெண்கள், ஏன் ஜீன்ஸ், டி-சர்ட் அணியக்கூடாது?"

மேற்கு வங்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் படத்தின் காப்புரிமை Twitter

நாடாளுமன்றத்திற்கு வெளியே எடுத்துக்கொண்ட புகைப்படங்களுக்காக கேலிக்குள்ளான திரிணாமுல் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மிமி சக்ரவர்த்தியும், நுஸ்ரத் ஜஹானும் அதற்கு பதிலளித்துள்ளனர்.

முதல்முறையாக நாடாளுமன்ற உறுப்பினர்கள் மிமி சக்ரவர்த்தியும், நுஸ்ரத்தும் தங்கள் மீதான கேலிக்கு பதிலளித்துள்ளனர். மிகவும் தெளிவாகவும், நேரடியாகவும் அவர்கள் கருத்துக்களை தெரிவித்துள்ளனர்.

நாடாளுமன்றத்திற்கு வெளியே புகைப்படங்களை முதல் முறையாக எடுத்துக்கொண்டபோது, இவர்கள் ஜீன்ஸ் மற்றும் டி-சர்ட் அணிந்திருந்ததால், இணையத்தில் கேலிக்கு உள்ளானார்கள்.

பிபிசிக்கு அளித்த பிரத்யேக பேட்டியில், ""நாங்கள் இளம் பெண்கள், ஏன் ஜீன்ஸ், டி-சர்ட் அணியக்கூடாது" என்று மிமி கேட்டார்.

"இவர்கள் எங்கள் ஆடைகள் பற்றி அதிகம் கவலைப்படுகிறார்கள். ஆனால், குற்றப் பின்னணி கொண்டு, ஊழல் மிகுந்து, கறை படிந்திருந்தாலும், புனிதமாக ஆடைகளை அணிந்து வரும் நாடாளுமன்ற உறுப்பினர்களை பற்றி ஏன் கவலைப்படுவதில்லை?" என்று அவர் கேள்வி எழுப்புகிறார்.

மிமியும், நுஸ்ரத்தும் நாடாளுமன்றத்திற்கு முன்னால் இவ்வாறு உடை அணிந்து புகைப்படம் எடுத்துக்கொண்டதற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

"இது நாடாளுமன்றமா அல்லது பேஷன் அணிவகுப்பு நடக்கும் இடமா?" என்று ட்விட்டர் பதிவு ஒன்று தெரிவிக்கிறது.

நுஸ்ராத் ஜிஹானுக்கு 29 வயது. மிமி சக்ரவர்த்திக்கு வயது 30.

"நான் இளைஞர்களை பிரதிநிதித்துவப்படுத்துகிறேன். அவர்கள் அணிவதையே நான் அணிவதை பார்கிற இளைஞர்கள் பெருமிதமடைவார்கள்" என்கிறார் மிமி சக்ரவர்த்தி.

தனது திரைப்பட வாழ்க்கையால் அரசியலில் நுழைந்தாக தெரிவித்துள்ள மிமி, இளைஞர்களால்தான் மாற்றத்தை கொண்டுவர முடியும் என்று உறுதியாக நம்புகிறார்.

நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்கு தேர்ந்தெடுக்கப்பட்டபோது, நுஸ்ரத் அதிக விமாசனங்களை எதிர்கொண்டார். தான் வெற்றிபெற்றது அத்தகைய விமர்சகர்களுக்கு அளிக்கப்பட்ட சரியான விடை என்று அவர் தெரிவிக்கிறார்.

மேற்கு வங்காளத்தின் பாசர்ஹாட் மக்களவைத் தொகுதியில் மூன்று லட்சத்துக்கும் அதிக வாக்குகள் வித்தியாசத்தில், நுஸ்ரத் ஜஹான் வென்றார்.

"எனது ஆடைகள் முக்கியமானவை அல்ல. என்னுடைய வேட்பாளர் நிலைக்கு எதிராக கேள்வி கேட்டவர்களுக்கு எனது வெற்றி எவ்வாறு விடையாக அமைந்ததோ, அதுபோல எனது பணி இத்தகைய கேலிகளுக்கு எல்லாம் விடையாக இருக்கும். இதுவொரு தொடர் போராட்டமாக இருக்கும். ஆனால், அதற்கு நான் தயாராக இருக்கிறேன்" என்கிறார் அவர்.

நாடாளுமன்றத்திற்கு வருகிறபோது, ஒருவர் இப்படித்தான் வர வேண்டுமென ஆடை அணிவதற்கான எந்தவொரு விதிமுறையும் இல்லை.

அரசியலில் உள்ள ஆண்களை விட பெண்களின் ஆடைகள் பற்றி அதிகமாக கருத்துகள் தெரிவிக்கப்படுகின்றன.

மம்தா பேனர்ஜி, ஜெயலலிதா மற்றும் மாயாவதியின் ஆடை பாணிகள் வெளிப்படையாகவே பேசப்பட்டுள்ளன.

திரைத்துறையில் இருந்து ஒரு பெண் அரசியலுக்கு வந்தால், இது இன்னும் மேலதிகமாக பேசப்படுகிறது.

மிமி சக்ரவர்த்தியும், நுஸ்ரத் ஜஹானும் தெலுங்கு திரைத்துறையில் பிரபலமான நடிகைகள்.

“மாற்றங்களை மக்கள் ஏற்றுக்கொள்ள அதிக காலம் எடுக்கும். இளம் பருவமுடைய ஆண் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்து ஜீன்ஸ் அணிந்து வந்தால், யாரும் எதிர்ப்பு தெரிவிக்கமாட்டார்கள். ஆனால், இதையே ஒரு பெண் செய்துவிட்டால் பிரச்சனை எழுந்துவிடுகிறது" என்று மிமி தெரிவிக்கிறார்.

இத்தகைய கேலி கிண்டல்கள் எழுந்தாலும், சமூக ஊடகங்களில், இவர்களின் செயலுக்கு ஆதரவும் இருக்கதான் செய்கிறது.

நுஸ்ரத் இது பற்றி கூறுகையில், மாற்றத்தை மக்கள் புரிந்து கொள்ளும் நேரமிது. இது உடனடியாக நடந்துவிடப் போவதில்லை. ஆனால், புரிந்துகொள்ளுதல் தொடங்கியுள்ளது" என்கிறார்.

தெலுங்கு திரைத்துறையை சேர்ந்தவர்களுக்கு இதற்கு முன்னரும் திரிணாமுல் காங்கிரஸ் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கியுள்ளது.

பிற கட்சிகள் எல்லாவற்றோடும் ஒப்பிடுகையில், மக்களவைத் தேர்தலில் பெண்கள் போட்டியிடுவதற்கு திரிணாமுல் காங்கிரஸ் 40 சதவீதம் வாய்ப்பு வழங்கியுள்ளது.

போட்டியிட்ட மொத்தம் 17 பெண்களில், 4 பேர் திரை நட்சத்திரங்கள். அதில் 3 பேர் வெற்றி பெற்றுள்ளனர்.

இந்த முறை மிமி சக்ரவர்த்தியும், நுஸ்ரத் ஜஹானும் வெற்றிபெற்ற நிலையில், மூன்று முறை நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த ஷதாப்தி ராயும் இந்த முறை வெற்றிபெற்றுள்ளார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :