நரேந்திர மோதி பதவியேற்பு: அமைச்சரவையில் அதிமுக இடம்பெற வாய்ப்பு?

நரேந்திர மோதி பதவியேற்பு விழா: ஸ்டாலினுக்கு அழைப்பு இல்லாதது ஏன்? படத்தின் காப்புரிமை Getty Images

முக்கிய இந்திய நாளிதழ்கள் சிலவற்றில் வெளியான கட்டுரைகள் மற்றும் செய்திகளைத் தொகுத்து வழங்குகிறோம்.

இந்து தமிழ்: 'மத்திய அமைச்சரவையில் அதிமுக இடம்பெற வாய்ப்பு?'

மத்திய அமைச்சரவையில் இடம் பெற அதிமுகவுக்கு வாய்ப்பு உள்ளதா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ள நிலையில் அக்கட்சியின் துணை ஒருங்கிணைப்பாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான ஆர்.வைத்திலிங்கம், முதல்வர் பழனிசாமியை சந்தித்துப் பேசியுள்ளார் என்கிறது இந்து தமிழ் நாளிதழ் செய்தி.

நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் 303 இடங்களில் வென்று தொடர்ந்து 2-வது முறையாக பாஜக ஆட்சி அமைக்கிறது. சிவசேனா (22), ஐக்கிய ஜனதா தளம் (16), லோக்ஜனசக்தி (6), அகாலிதளம் (2), அதிமுக (1) உள்ளிட்ட கூட்டணி கட்சிகளுக்கு 50 இடங்கள் கிடைத்துள்ளன. பிரதமர் நரேந்திர மோதி தலைமையிலான அமைச்சரவை இன்று இரவு 7 மணிக்கு பதவியேற்கிறது.

பாஜகவுக்கு தனிப்பெரும்பான்மை கிடைத்தாலும் கூட்டணி கட்சிகளுக்கு அமைச்சரவையில் இடம் அளிக்கப்படும் என பிரதமர் மோடி உறுதி அளித்திருந்தார். அதன்படி சிவசேனா, ஐக்கிய ஜனதா தளம், லோக் ஜனசக்தி, அகாலி தளம் ஆகிய கட்சிகளுக்கு அமைச்சர் பதவி கிடைப்பது உறுதியாகியுள்ளது. தமிழகத்தில் அதிமுக கூட்டணியில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ரவீந்திரநாத் குமார் (தேனி) மட்டுமே வெற்றி பெற்றுள்ளார்.

படத்தின் காப்புரிமை facebook

கடந்த 2014-ல் ஒரு எம்.பி. மட்டுமே உள்ள கூட்டணி கட்சிகளுக்கு அமைச்சர் பதவி வழங்கப்படவில்லை. இதனால்தான் பாஜக கூட்டணியில் வென்ற பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸுக்கு அமைச்சர் பதவி கிடைக்கவில்லை. 2014-ல் பாஜக பின்பற்றிய அணுகுமுறையின்படி அதிமுகவுக்கு அமைச்சர் பதவி கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. துணை முதல்வர் ஓபிஎஸ் தனது மகனுக்கு அமைச்சர் பதவியைப் பெறும் முயற்சியில் தீவிரம் காட்டுவதாக கூறப்படுகிறது.

ஆனால், அதிமுகவில் பெரும்பாலானோர், ''பாஜக தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சியில் அமர்வதால் அமைச்சரவையில் இடம்பெற்று பலன் இல்லை. அப்படி இடம்பெற்றால் அடுத்து வரும் உள்ளாட்சித் தேர்தல், சட்டப்பேரவைத் தேர்தல்களில் பாஜகவுடன் கூட்டணி அமைக்க வேண்டிவரும். அடுத்த மாதம் நடக்கவுள்ள மாநிலங்களவைத் தேர்தலிலும் ஒரு இடத்தை பாஜக கேட்கும். எனவே, அமைச்சரவையில் இடம்பெறுவது அதிமுகவுக்கு பாதகத்தையே ஏற்படுத்தும்" என கருதுவதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், முதல்வர் பழனிசாமி நேற்று மாலை தனது இல்லத்தில் அதிமுக துணை ஒருங்கிணைப்பாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான ஆர்.வைத்திலிங்கம், அமைச்சர்கள் பி.தங்கமணி, எஸ்.பி.வேலுமணி உள்ளிட்டோருடன் ஆலோசனை நடத்தினார். அப்போது அமைச்சரவையில் இடம் பெறுவது குறித்து ஆலோசிக்கப்பட்டதாக அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அமைச்சரவையில் அதிமுக இடம் பெற்றால் ஆர்.வைத்திலிங்கம், ரவீந்திரநாத் குமார் ஆகியோருக்கு அமைச்சர் பதவி கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கிடையே, டெல்லியில் முகாமிட்டுள்ள பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ், அமைச்சர் பதவிக்காக உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உள்ளிட்ட பாஜக தலைவர்களை சந்தித்து வருவதாக கூறப்படுகிறது. தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், பொன்.ராதாகிருஷ்ணன், எச்.ராஜா, வானதி சீனிவாசன் உள்ளிட்டோரும் டெல்லியில் முகாமிட்டு கட்சியின் மேலிடத் தலைவர்களை சந்தித்து வருகின்றனர்.

பாஜக தேசிய அமைப்பு பொதுச்செயலாளர் ராம்லால், பொதுச்செயலாளர் பி.முரளிதரராவ், மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் ஆகியோரையும் அவர்கள் சந்தித்துப் பேசினர். தமிழக பாஜக தலைவர்களில் ஒருவருக்கு அமைச்சர் பதவி வழங்கப்படலாம் என்பதால் பதவியைப் பிடிக்க தீவிரமாக முயற்சி செய்து வரு கின்றனர்.

இந்நிலையில், பிரதமர் மோதி பதவியேற்பு விழாவில் பங்கேற்பதற்காக முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓபிஎஸ், அமைச்சர்கள் எஸ்.பி. வேலுமணி, பி.தங்கமணி உள்ளிட்டோர் இன்று காலை டெல்லி புறப்பட்டுச் செல்கின்றனர்.அமைச்சரவையில் அதிமுக இடம் பெற்றால் ஆர்.வைத்திலிங்கம், ரவீந்திரநாத் குமார் ஆகியோருக்கு அமைச்சர் பதவி கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.தினத்தந்தி: 'தமிழக அணைகளில் தண்ணீர் அளவு?'

மாநிலம் முழுவதும் அடுத்த 4 மாதங்களுக்கு (120 நாட்கள்) தங்கு தடையின்றி குடிநீர் வழங்குவதற்கு தேவையான தண்ணீர் தமிழக அணைகளில் இருப்பதாக குடிநீர் வடிகால் வாரியம் கூறியுள்ளது என்கிறது தினத்தந்தி நாளிதழ் செய்தி.

தமிழகத்தில் பருவமழை பொய்த்து உள்ளதால், ஏரிகளில் போதுமான தண்ணீர் இல்லை. எனவே மக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்ய முடியாத நிலை உள்ளது. மேலும் நிலத்தடி நீரும் அதல பாதாளத்துக்கு சென்றுவிட்டது. இதனால் தமிழகம் முழுவதும் தற்போது அதிகம் பேசப்படும் வார்த்தை 'குடிநீர் தட்டுப்பாடு' என்பது தான்.

படத்தின் காப்புரிமை Getty Images

ஆனால் மாநிலம் முழுவதும் சுமார் 4 மாதங்களுக்கு (120 நாட்கள்) குடிநீர் வழங்குவதற்கு போதுமான நீர் தமிழக அணைகளில் இருப்பதாக மாநில குடிநீர் வடிகால் வாரியம் கூறியுள்ளது. இது தொடர்பாக வாரியத்தின் மேலாண்மை இயக்குனர் சி.என்.மகேஸ்வரன் கூறியதாவது, "சேலம், ஈரோடு, நாமக்கல், கரூர், திருச்சி, அரியலூர், தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர் மற்றும் கடலூர் மாவட்டங்களுக்கு மேட்டூர் அணை மூலம் குடிநீர் வினியோகிக்கப்படுகிறது. இந்த பகுதிகளுக்கு தினசரி 1,016.07 மில்லியன் லிட்டர் தண்ணீர் தேவைப்படுகிறது. இதற்காக மேட்டூர் அணையில் இருந்து தினசரி ஆயிரம் கன அடி தண்ணீர் திறக்கப்படுகிறது.

93 ஆயிரத்து 470 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட இந்த அணையில் 16 ஆயிரத்து 172 மில்லியன் கன அடி தண்ணீர் இருப்பு உள்ளது. இதில் காவிரி மூலம் 120 நாட்களும், கொள்ளிடம் ஆறு மூலம் நூறு நாட்களுக்கும் குடிநீர் விநியோகிக்க முடியும்.

ஈரோடு மாவட்டத்தின் மற்றொரு பகுதிக்கு குடிநீர் வினியோகம் செய்யும் பவானிசாகர் அணையில் 5 ஆயிரத்து 274 மில்லியன் கன அடி தண்ணீர் உள்ளது. இந்த பகுதிகளுக்கு தினசரி 122.58 மில்லியன் லிட்டர் தண்ணீர் தேவைப்படுகிறது. இதற்காக தினசரி 200 கன அடி தண்ணீர் திறக்கப்படுகிறது. தொடர்ந்து 150 நாட்களுக்கு குடிநீர் வினியோகிக்க போதுமான தண்ணீர் உள்ளது.

கரூர், திருப்பூர், திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களின் குடிநீர் தேவையை சமாளிக்கும் அமராவதி அணையில், 235 மில்லியன் கன அடி தண்ணீர் இருப்பு உள்ளது. இந்த பகுதிகளுக்கு தினசரி 25.93 மில்லியன் லிட்டர் தண்ணீர் தேவைப்படுகிறது. தற்போது இருக்கும் தண்ணீர் மூலம் அடுத்த 100 நாட்களுக்கு குடிநீர் விநியோகிக்க முடியும்.

தேனி, திண்டுக்கல் மாவட்டங்களின் ஒரு பகுதி மற்றும் மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களுக்கு வைகை அணையில் இருந்து குடிநீர் வினியோகிக்கப்படுகிறது. இந்த அணையில் 645 மில்லியன் கன அடி தண்ணீர் உள்ளது. இந்த பகுதிகளுக்கு தினசரி 58.58 மில்லியன் லிட்டர் தண்ணீர் தேவைப்படுகிறது. இதற்காக தினசரி 60 கன அடி தண்ணீர் திறக்கப்படுகிறது. தற்போது இருக்கும் தண்ணீர் மூலம் அடுத்த 90 நாட்களுக்கு குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய முடியும்.

நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களுக்கு குடிநீர் வழங்கும் பாபநாசம் அணையில் 58 மில்லியன் கன அடி தண்ணீர் உள்ளது. குடிநீருக்காக தினசரி 25 கன அடி தண்ணீர் திறக்கப்படுகிறது. இதேபோல் மணிமுத்தாறு அணையில் 1,184 மில்லியன் கன அடி இருப்பு உள்ளது. குடிநீருக்காக தினசரி 275 கன அடி தண்ணீர் திறக்கப்படுகிறது. இதன் மூலம் அடுத்த 120 நாட்களுக்கு குடிநீர் வினியோகிக்க முடியும். இந்த பகுதிகளுக்கு தினசரி 300.20 மில்லியன் லிட்டர் தண்ணீர் தேவைப்படுவது குறிப்பிடத்தக்கது.

குமரி மாவட்டத்துக்கு பேச்சிப்பாறை மற்றும் பெருஞ்சாணி அணைகள் மூலம் குடிநீர் வினியோகிக்கப்படுகிறது. இதில் பேச்சிப்பாறை அணையில் தற்போது 134 மில்லியன் கன அடி தண்ணீர் உள்ளது. இங்கிருந்து குடிநீருக்காக தினசரி 65 கன அடி தண்ணீர் திறக்கப்படுகிறது. இதேபோன்று பெருஞ்சாணி அணையில் 185 மில்லியன் கன அடி தண்ணீர் இருப்பு உள்ளது. இப்பகுதிகளுக்கு தினசரி 41.78 மில்லியன் லிட்டர் தண்ணீர் தேவைப்படுகிறது. அடுத்த 120 நாட்களுக்கு போதுமான தண்ணீர் இருப்பு உள்ளது.

கிருஷ்ணகிரி, தர்மபுரி மாவட்டங்களுக்கு கிருஷ்ணகிரி அணையில் இருந்து தென்பெண்ணை ஆறு மூலம் குடிநீர் வினியோகிக்கப்படுகிறது. இந்த அணையில் 325 மில்லியன் கன அடி தண்ணீர் இருப்பு உள்ளது. இந்தப்பகுதிகளுக்கு தினசரி 20.58 மில்லியன் லிட்டர் தண்ணீர் தேவைப்படுகிறது. தினசரி 42 கன அடி தண்ணீர் குடிநீருக்காக திறக்கப்படுகிறது. இதன் மூலம் அடுத்த 90 நாட்களுக்கு குடிநீர் விநியோகிக்க முடியும்.

மேலும் கோவை, திருப்பூர் ஆகிய மாவட்டங்களுக்கு சோலையாறு, பரம்பிக்குளம், ஆழியாறு, திருமூர்த்தி, சிறுவாணி அணை மற்றும் பில்லூர் நீர்த்தேக்கத்தில் இருந்து குடிநீர் வினியோகிக்கப்படுகிறது. இதில் சோலையாறு அணையில் 255 மில்லியன் கன அடியும், பரம்பிக்குளம் அணையில் 2 ஆயிரத்து 204 மில்லியன் கன அடியும், ஆழியாறு அணையில் 575 மி.க.அடியும், திருமூர்த்தி அணையில் 309 மி.க.அடியும், சிறுவாணியில் 22.04 மில்லியன் கன அடியும், பில்லூர் நீர்த்தேக்கத்தில் 1,182 மி.க.அடியும் தண்ணீர் உள்ளது.

பரம்பிக்குளத்தில் இருந்து 150 நாட்களுக்கும், சிறுவாணியில் இருந்து 90 நாட்களுக்கும், பில்லூர் நீர்தேக்கத்தில் இருந்து 170 நாட்களுக்கும் குடிநீர் வழங்க முடியும். இதைப்போல சாத்தனூர் அணையில் 825 கனஅடி தண்ணீர் உள்ளது. இதன் மூலம் திருவண்ணாமலை, விழுப்புரம் மாவட்டங்களுக்கு அடுத்த 120 நாட்களுக்கு குடிநீர் விநியோகிக்க முடியும்." என்று அவர் கூறியதாக விவரிக்கிறது அந்நாளிதழ்.

தினமணி: 'பிளஸ் 2 தாவரவியல் பாடநூலில் இடம்பெற்றார் நெல் ஜெயராமன்'

பாரம்பரிய நெல் ரகங்களைப் பாதுகாக்கும் முயற்சியில் ஈடுபட்ட நெல் ஜெயராமனின் குறிப்புகள் பிளஸ் 2 தாவரவியல் பாடநூலில் இடம்பெற்றுள்ளன.

தமிழகத்தில் 1, 6, 9, 11 ஆகிய வகுப்புகளுக்கு கடந்த ஆண்டு புதிய பாடத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்ட நிலையில், பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 ஆகிய வகுப்புகளுக்கும் புதிய பாடத் திட்டம் இந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதில், பிளஸ் 2 தாவரவியல் பாடநூலில் நெல் ஜெயராமன் பற்றிய குறிப்புகள் சேர்க்கப்பட்டுள்ளன.

திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி அருகே உள்ள கட்டிமேடு கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயி நெல் ஜெயராமன். இயற்கை வேளாண் செயற்பாட்டாளர் நம்மாழ்வார் வழியைப் பின்பற்றும் இவர், 174 அரிய நெல் வகைகளை மீட்டெடுத்ததுடன், கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக, தமிழகத்தின் பாரம்பரிய நெல் ரகங்களை சேகரித்து பாதுகாத்து வந்தார். புற்றுநோயால் பாதிக்கப்பட்ட நெல் ஜெயராமன் கடந்த ஆண்டு டிசம்பர் 6-ஆம் தேதி உயிரிழந்தார்.

இந்நிலையில், பிளஸ் 2 தாவரவியல் பாடநூலில் விவசாயம் தொடர்பான ஆராய்ச்சி மற்றும் பாரம்பரிய விதைகளை மீட்டெடுப்பது தொடர்பாக ஆராய்ச்சியாளர்கள் நாமன் போலக், எம்.எஸ்.சுவாமிநாதன், நெல் ஜெயராமன் ஆகியோர் பற்றிய குறிப்புகள் இடம்பெற்றுள்ளன.

அதில் நெல் ஜெயராமன் 2005- ஆம் ஆண்டு முதல் தன் பண்ணையில் நெல் விதைத் திருவிழா நடத்தியது, 2016 -இல் ஆதிரங்கத்தில் நடைபெற்ற நெல் விதைத் திருவிழாவில் தமிழகத்தில் உள்ள 7 ஆயிரம் விவசாயிகள் பங்கேற்றது, அப்போது, 156 வகையான பாரம்பரிய நெல் விதைகள் கண்காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தது ஆகியவை குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதவிர, நெல் ஜெயராமன் 2011- இல் சிறந்த விவசாயிக்கான மாநில விருது பெற்றது, 2015 -ஆம் ஆண்டு சிறந்த மரபணு பாதுகாப்பாளர் என்ற தேசிய விருது பெற்றது போன்ற தகவல்களும் பாடநூலில் இடம்பெற்றுள்ளன.

இதைத் தொடர்ந்து, நெல் ஜெயராமனின் மனைவி சித்ரா, அவரது மகன் ராஜீவ் ஆகியோர் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் ஆகியோருக்கு நன்றி தெரிவித்துள்ளனர்.

தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்: 'கோதாவரி - காவிரி இணைப்பு சாத்தியமில்லை'

மத்திய அமைச்சர் நிதின் கட்கரி முன் வைத்த கோதாவரி - காவிரி இணைப்பு சாத்தியமில்லை என ஓய்வுப் பெற்ற பொது பணித்துறை பொறியாளர் ஏ. வீரப்பன் கூறி உள்ளார் என்கிறது தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழ் செய்தி.

இந்த நதிகளை இணைப்பதால் வெள்ளம் வரும்போது நான்காண்டுகளுக்கு ஒரு முறை 20 அல்லது 30 தினங்களுக்கு மட்டுமே உபரி நீர் கிடைக்கும். மற்ற தினங்களில் எல்லாம் அவை வறண்டே இருக்கும். அது மட்டுமல்ல, இதனால் சூழலியலும், பழங்குடிகளும் பாதிக்கப்படுவார்கள் என்கிறது அந்நாளிதழ்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்