நரேந்திர மோதி: தேநீர் கடை முதல் நாடாளுமன்றம் வரை - வாழ்க்கைப் பயணம் முழு தொகுப்பு

நரேந்திர மோதி: தேநீர் கடை முதல் நாடாளுமன்றம் வரை - வாழ்க்கைப் பயணம் முழு தொகுப்பு

இந்தியாவின் 17வது மக்களவையின் பிரதமராக மீண்டும் இன்று (வியாழக்கிழமை) பதவியேற்க இருக்கிறார் நரேந்திர மோதி.

அவரது வாழ்க்கை பயணம், கூறியவை, செய்தவை என அனைத்தையும் முழுமையாக இங்கே தொகுத்துள்ளோம்.

56 அங்குல மார்பு

2014ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பு நடந்த சம்பவம் இது. தேர்தல் பிரசாரத்தில் பேசிய முலாயம் சிங் யாதவ், "உத்தரப்பிரதேசத்தை குஜராத்தாக மாற்ற மோதியால் முடியாது" என்று குறிப்பிட்டார்.

அதற்கு அடுத்த நாள் தனது தேர்தல் பிரசாரத்தில் பேசிய நரேந்திர மோதி, முலாயமின் பாணியிலேயே பதிலளித்தார். மோதியால் உத்தரப்பிரதேசத்தை இரண்டாவது குஜராத்தாக மாற்ற முடியாது என்று ஒரு தலைவர் சொல்கிறார். இரண்டாவது குஜராத்தை உருவாக்க முக்கியமானது எது என்று தெரியுமா? 56 அங்குல அளவு கொண்ட மார்பு.

இந்த ஒற்றை வார்த்தை, தேர்தல் களத்தில் மோதியை வலிமையானவராக முன்னெடுத்துச் சென்று மக்களை ஈர்த்து, அவரை பெரும்பான்மை பலத்துடன் ஆட்சியில் அமரச் செய்தது.

ஆனால் அகமதாபாதில் மோதியின் துணிகளை தைக்கும் 'ஜெட் ப்ளூ' என்ற கடையை மோதியின் வாழ்க்கை வரலாற்றை எழுதிய நீலஞ்சன் முகோபாத்யாய் அணுகியபோது மோதியின் மார்பளவை உறுதி செய்யமுடியவில்லை. தையற் கலைஞரிடம் மோதியின் உண்மையான மார்பு அளவைப் பற்றி நீலஞ்சன் கேட்டபோது அவர் மெளனமாகவே இருந்தார். ஆனால் மோதியின் மார்பளவு 56 அங்குலம் இல்லை என்று மட்டும் அவர் தெரிவித்தார்.

பிறகு, பீமாராவ் அம்பேத்கர் பல்கலைக்கழக அதிகாரிகளுக்கு மோதியின் குர்தாவை தைக்கும் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டபோது நரேந்திர மோதியின் மார்பளவு 50 அங்குலம் என்ற உண்மை வெளியானது.

சிறுவனாக இருக்கும் போதே விவாதிக்கும் பழக்கம்

பள்ளிப்பருவத்தில் ஒரு சராசரி மாணவராகவே இருந்தார் மோதி. பி.என் உயர்நிலைப் பள்ளியில் படித்த மோதியின் ஆசிரியர் பிரஹ்லாத் பாயி படேலிடம் உரையாடியபோது அவர் கூறியவற்றை நிலஞ்சன் முகோபாத்யாய் எழுதிய மோதியின் வாழ்க்கை வரலாறு புத்தகத்தில் அவர் குறிப்பிட்டிருக்கிறார்.

"மாணவராக இருந்தபோதே அதிக விவாதங்கள் செய்வார் நரேந்திரா. ஒரு முறை வீட்டுப்பாடங்கள் எழுதியவற்றை, வகுப்பின் மானிட்டரிடம் காட்டச் சொல்லியிருந்தேன். அதற்கு, என்னுடைய வேலையை ஆசிரியரிடம் மட்டுமே காண்பிப்பேன், வேறு யாருக்கும் காண்பிக்க மாட்டேன் என்று மோதி தெளிவாக சொல்லிவிட்டார்," என்று "நரேந்திர மோதி- த மேன், த டைம்ஸ்" புத்தகத்தில் மோதியின் ஆசிரியரின் கருத்தை பதிவு செய்திருக்கிறார் நீலஞ்சன் முகோபாத்யாய்.

முதலைகள் நிரம்பிய ஏரியை கடந்த தீரம்

மோதியின் பரம விரோதிகள் கூட அவரது தன்னம்பிக்கையின் மீது சந்தேகம் எழுப்ப மாட்டார்கள். எழுத்தாளர் ஏண்டி மோரோ எழுதிய "Narendra Modi: A Political Biography" என்ற மோதியின் வாழ்க்கை வரலாற்றில் கீழ்கண்ட சுவராசியமான சம்பவத்தை குறிப்பிட்டுள்ளார்.

"மோதியின் பால்ய வயதில் நடந்த சம்பவம் இது. சர்மிஷ்டா ஏரிக்கு அருகில் ஒரு கோவில் இருந்தது. சுபநாட்களில் கோவிலின் கொடி மாற்றப்படும். கனமழை பெய்த சமயத்தில், கொடியை மாற்ற வேண்டிய சந்தர்பம் வந்தது. அப்போது, அந்த ஏரியை கடந்து சென்று கொடியை மாற்ற முடிவு செய்தார் மோதி. அப்போது அந்த ஏரியில் முதலைகள் அதிகமாக இருந்ததால், அவற்றை விரட்டுவதற்காக கரையோர மக்கள் தமுக்கு (பறை) அடித்தார்கள். அப்போது நரேந்திர மோதி ஏரியை தனியாகவே நீந்திக் கடந்து சென்று கோவிலில் இருந்த கொடியை மாற்றிவிட்டு வந்தார். அவர் திரும்பி வந்ததும், கூடியிருந்த மக்கள் அவரை தோளில் தூக்கி வைத்துக் கொண்டாடினார்கள்."

தேநீர்க்கடை

சிறுவயதில் இருந்தே வீட்டு வேலைகளில் உதவி செய்யும் பழக்கம் கொண்டவர் மோதி. தினசரி பள்ளி முடிந்ததுமே, வட்நகர் ரயில் நிலையத்தில் இருக்கும் தந்தையின் தேநீர் கடைக்கு சென்றுவிடுவார் நரேந்திர மோதி. நான் தேநீர் விற்றவன் என்று மோதி எப்போதுமே பெருமையாக குறிப்பிடுவார். ஒரு முறை அசாம் தேயிலை தோட்டத் தொழிலாளர்களுடன் பேசும்போது, "உங்கள் அசாமின் தேநீரை மக்களுக்கு விற்றுத்தான் இந்த நிலைக்கு வந்திருக்கிறேன்," என்று மோதி குறிப்பிட்டார்.

அரசியல் அறிவியல் படிப்பில் எம்.ஏ

பள்ளிப்படிப்பிற்கு பிறகு ஜாம்நகரில் உள்ள சைனிக் பள்ளியில் சேர மோதிக்கு ஆசை இருந்தாலும், குடும்பத்தின் பொருளாதார நிலை அதற்கு இடம் கொடுக்கவில்லை.

அதுமட்டுமல்ல, படிப்புக்காக தனது மகன் சொந்த ஊரை விட்டு வெளியே செல்வதை மோதியின் தந்தையும் விரும்பவில்லை. எனவே, உள்ளூர் கல்லூரியில் இளங்கலை பட்டப்படிப்பில் சேர்ந்தார் நரேந்திர மோதி.

ஆனால் வருகைப்பதிவு குறைந்த காரணத்தால் கல்லூரி படிப்பை அவரால் தொடர முடியவில்லை. பிறகு தொலைதூரக் கல்வி திட்டத்தின் மூலமாக டெல்லி பல்கலைகழகத்தில் இளங்கலைப் பட்டமும், பிறகு குஜராத் பல்கலைக்கழகத்தில் அரசியல் அறிவியலில் முதுகலை பட்டம் பெற்றார் நரேந்திர மோதி.

தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் நரேந்திர மோதியின் எம்.ஏ பட்டப்படிப்பு குறித்த தகவலை குஜராத் பல்கலைக்கழக்கத்தில் பெற்றபோது, 1983ஆம் ஆண்டு முதல் வகுப்பில் அவர் தேர்ச்சியடைந்ததாக தெரியவந்தது. மோதியின் பட்டப்படிப்பு சான்றிதழில் குறிப்பிடப்பட்டுள்ள பாடப்பிரிவுகள் எம்.ஏ பாடத்திட்டத்திலேயே இல்லை என்று அந்த பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் ஜயந்திபாயி படேல் மற்றொரு சந்தர்ப்பத்தில் கூறிய கருத்து சர்ச்சைகளை ஏற்படுத்தியது. ஆனால், குஜராத் பல்கலைக்கழகம் இந்த குற்றச்சாட்டுகளை மறுத்தது.

எசோதாபென்னுடன் திருமணம்

நரேந்திர மோதிக்கு 13 வயதாக இருந்தபோது, குடும்பத்தினர் அவருக்கு 11 வயதேயான எசோதாபென்னுடன் திருமணம் செய்து வைத்தார்கள். திருமணமான சில நாட்களில் மோதி வீட்டை விட்டு வெளியேறிவிட்டார். நரேந்திர மோதிக்கு திருமணமான விஷயம் 2014 மக்களவைத் தேர்தலில் வேட்புமனு தாக்கல் செய்யும்போதுதான் உலகத்திற்கு தெரியவந்தது.

இதில் வேடிக்கையான விஷயம் என்னவென்றால், மோதி பிரதமராக பதவி ஏற்ற பிறகு, அரசு நடைமுறைகளின்படி, எசோதாபென்னுக்கு பாதுகாப்பு வழங்கியபோது அவருக்கு சங்கடமாக இருந்தது. தான் பொதுப் போக்குவரத்தில் பயணிப்பதாகவும், பாதுகாப்பு போலீசாரின் வாகனங்கள் தனது பேருந்தை பின் தொடர்வதாகவும் ஃபர்ஸ்ட் போஸ்ட் என்ற பத்திரிகைக்கு ஜசோதாபென் அளித்த பேட்டியில் தெரிவித்திருந்தார்.

மோதியின் 'வக்கீல் குரு'

மோதியை ஆர்.எஸ்.எஸ் அமைப்பிற்கு கொண்டு வந்து சேர்த்தது வக்கீல் ஐயா என்று அனைவராலும் அழைக்கப்படும் லஷ்மணராவ் இமான்தார். அந்த காலகட்டத்தில் குஜராத்தில் ஆர்.எஸ்.எஸ் பிரசாரகராக இருந்தவர் அவர்.

எம்.வி.காமத் மற்றும் காலிந்தி ரண்டேரி எழுதிய 'Narendra Modi: The Architect of a Modern State' என்ற புத்தக்கத்தில், "ஒருமுறை தீபாவளிக்கு மகன் வரவில்லை என்று மோதியின் பெற்றோருக்கு வருத்தமாக இருந்தது. ஏனெனில் அன்று அவரை ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் உறுப்பினராக சேர்த்து விட்டார் வக்கீல் ஐயா" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

1984ஆம் ஆண்டு வக்கீல் ஐயா இறந்துவிட்டாலும் அவரை மோதி மறக்கவேயில்லை. மற்றொரு ஆர்.எஸ்.எஸ் உறுப்பினரான ராயாபாயி நேனே என்பவரும் இணைந்து வக்கீல் ஐயாவைப் பற்றி 'சேதுபந்த்' என்ற புத்தக்கத்தை எழுதியுள்ளார் நரேந்திர மோதி.

மோதியின் நல்லொழுக்கங்கள் தான் மற்றவர்களை அவரிடம் ஈர்த்தது. மூத்த பத்திரிகையாளர் ஜி. சாம்பத் இவ்வாறு கூறுகிறார்: ஆர்,எஸ்.எஸ்ஸில் சேர மோதிக்கு சிறுவயதில் இருந்தே ஆர்வம் இருந்தது. ஏனெனில், அங்கு ஒருவர் கட்டளையிடுவார், மற்றவர்கள் அனைவரும் அவருக்கு கீழ்படிவார்கள் என்பதுதான் காரணம் என்று மோதியின் மூத்த சகோதரர் சோமாபாய் கூறுகிறார்.

ஒரு காலத்தில் மோதிக்கு நெருங்கிய நண்பராக இருந்து பிறகு அரசியல் எதிரியாக மாறிய ஷங்கர் சிங் வகேலா இவ்வாறு கூறுகிறார், "எந்தவொரு செயலையும் வித்தியாசமாக செய்வது மோதிக்கு பிடிக்கும். வழக்கமாக மற்றவர்கள் நீளமான சட்டை அணிந்தால், அவர் நீளம் குறைந்த சட்டை அணிவார். நாம் காக்கி நிற ஷார்ட்ஸ் அணிந்தால், அவர் வெண்ணிற உடையை தேர்ந்தெடுப்பார்."

வாஜ்பேயின் மொபைல் அழைப்பு

2001, அக்டோபர் முதல் நாளன்று, விமான விபத்தில் உயிரிழந்த தனது பத்திரிகையாளர் நண்பரின் இறுதிச் சடங்கில் மோதில் கலந்து கொண்டார். அப்போது, மோதியில் மொபைல் ஒலித்தது. பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பேயி தான் மோதியை அழைத்தார். எங்கே இருக்கிறீர்கள் என்று கேட்டு பேச்சைத் தொடங்கினார் வாஜ்பேயி. அன்று மாலை இருவரும் சந்திப்பதாக முடிவானது. மாலை ஏழு மணிக்கு ரேஸ்கோர்ஸ் சாலைக்கு மோதி சென்றபோது, அவரிடம் நகைச்சுவையாக பேசிய வாஜ்பேயி, "நீங்கள் கொஞ்சம் அதிகமாகவே பெருத்துவிட்டீர்கள். டெல்லியில் அதிக நாள் இருந்துவிட்டதால் பஞ்சாபி உணவை சாப்பிட்டு எடை அதிகமாகிவிட்டது என்று நினைக்கிறேன். எனவே, குஜராத்திற்கு சென்று வேலை பாருங்கள்" என்று அன்புக் கட்டளையிட்டார்.

கட்சியின் செயலாளராக குஜராத்தில் பணியாற்றும் பொறுப்பையும் கூடுதலாக கொடுப்பார்கள் என்று முதலில் மோதி நினைத்ததாக சொல்கிறார் எண்டி மரினோ. "வாஜ்பாயின் அன்புக்கட்டளைக்கு தாழ்மைமையுடன் பதிலளித்த மோதி, தற்போது தான் கவனித்து வரும் மாநிலங்களின் பொறுப்பை பார்க்க முடியாதா என்று கேட்டார். கேஷுபாயி படேலுக்கு பிறகு குஜராத்தின் அடுத்த முதலமைச்சராக மோதி பதவியேற்கவேண்டும் என்று பதிலளிக்கப்பட்டது. அதையும் தன்மையாகவே ஆனால் உறுதியாக மறுத்துவிட்டார் மோதி".

குஜராத்தில் கட்சியை சீரமைப்பதற்கு மாதத்தில் பத்து நாட்களை ஒதுக்கமுடியும்; ஆனால் முதலமைச்சராக பதவி வேண்டாம் என்று கூறினார் மோதி. வாஜ்பேயி அவரை சமாதானப்படுத்திய போதிலும் மோதி ஒத்துக்கொள்ளாததால், அத்வானி தொலைபேசி மூலம் நரேந்திர மோதியிடம் பேசி சமாதானப்படுத்தினார். அனைவரும் உங்களைத் தான் கைக்காட்டுகிறார்கள். பதில் பேசாமல், குஜராத்துக்கு சென்று பதவியேற்றுக் கொள்ளுங்கள் என்று அத்வானி இறுதியாக கூறிவிட்டார். வாஜ்பேயின் மொபைல் அழைப்பு வந்த ஆறாவது நாளான 2001, அக்டோபர் ஏழாம் தேதியன்று குஜராத் முதலமைச்சராக பதவியேற்றுக் கொண்டார் நரேந்திர மோதி.

குஜராத் கலவரங்கள், மோதியின் பெயரை களங்கப்படுத்தினாலும், பதவியேற்ற நான்கு மாதங்களிலேயே மோதியின் தலைமை கேள்விக்குள்ளாக்கப்பட்டது. அயோத்தியில் இருந்து கோத்ராவுக்கு திரும்பிக் கொண்டிருந்த கர சேவகர்களின் ரயில் பெட்டியில் வைக்கப்பட்ட தீயில் 58 பேர் கொல்லப்பட்டனர். அடுத்த நாள், விஷ்வ இந்து பரிஷத், குஜராத் மாநிலத்தில் முழு அடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுத்தது.

பிறகு நடைபெற்ற இந்து முஸ்லிம் மதக் கலவரமும் அதில் இரண்டாயிரத்துக்கும் அதிகமானவர்கள் உயிரிழந்ததும் மோதியின் நிர்வாகத் திறனை கேள்விக்குள்ளாக்கியது. போதுமான நடவடிக்கைகள் எடுத்து நிலைமையை அவர் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரவில்லை என்ற குற்றச்சாட்டும் சுமத்தப்பட்டது. அப்போது, "ஒவ்வொரு செயலுக்கும் சரியான எதிர்வினை உண்டு" என்ற மோதியின் பேச்சுக்கு ஏற்பட்ட எதிர்வினைகளும் கடுமையானதாகவே இருந்தது.

ஒரு நாள் கழித்து அவர் அளித்த தொலைகாட்சி நேர்காணல் ஒன்றில், "வினை மற்றும் எதிர்வினைகள் சங்கிலித் தொடர் போன்றவை. நாம் வினையையோ அல்லது எதிர்வினையையோ ஆற்ற விரும்பவில்லை" என்று தெரிவித்தார்.

அதற்கு பிறகு சில நாட்களில், வன்முறையால் பாதிக்கப்பட்டவர்கள் தங்கியிருந்த முகாமில் வசிக்கும் முஸ்லிம்கள் பற்றி "நாம் ஐவர், நமக்கு இருபத்தைந்து" என மற்றுமொரு சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்தார் மோதி. பிறகு ஒரு நேர்க்காணலில் பேசிய அவர், நிவாரண முகாம்களில் இருப்பவர்களை பற்றியல்ல, நாட்டில் உள்ள மக்கள்தொகை பிரச்சனையைப் பற்றி பேசியதாக விளக்கம் அளித்தார்.

இந்த சம்பவங்கள் நடைபெற்று பல ஆண்டுகள் ஆன பிறகு, அடல் பிஹாரி வாஜ்பேயி, குஜராத் வன்முறை சம்பவங்கள் தொடர்பாக மோதியை ஏன் கண்டிக்கவில்லை என்று வாஜ்பேயின் முதன்மைச் செயலாளராக பதவி வகித்த ப்ரஜேஷ் மிஷ்ராவிடம் ஒரு பத்திரிகையாளர் கேள்வி எழுப்பினார்.

அதற்கு பதிலளித்த ப்ரஜேஷ் மிஷ்ரா, "மோதி பதவி விலகவேண்டும் என்று வாஜ்பேயி விரும்பினார். ஆனால் அப்போது வாஜ்பேயி, அரசின் தலைமை பொறுப்பில் இருந்தாலும், கட்சியின் பொறுப்பில் இருக்கவில்லை. மோதி பதவி விலகவேண்டும் என்று கட்சி விரும்பாததால், வாஜ்பேயிக்கு கட்சியின் முடிவை ஏற்றுக் கொள்வதைத் தவிர வேறு வழியில்லாமல் போனது. பிஜேபி அன்று மட்டுமல்ல, இன்றும் காங்கிரஸை போன்றதல்ல," என்று தெரிவித்தார்.

ஒருமுறை மெளலானா சையத் இமாம் மோதிக்கு வலை தொப்பி ஒன்றை அணிய கொடுத்தபோது, அதை ஏற்றுக் கொள்ள மறுத்த மோதி, தொப்பி போடுவதால் 'செக்யூலர்' ஆகிவிட முடியாது என்று பதிலளித்தார். ஆனால் 2014 தேர்தல் பிரசாரத்தின்போது, சீக்கியர்களின் தலைப்பாகை உட்பட பலவிதமான தொப்பிகளையும் மோதி அணிந்துக் கொள்ள நேர்ந்தது.

'மியா', 'இளவரசர்'

குஜராத் மாநில முதலமைச்சராக இருந்தபோது, அவர் தேர்தல் பிரசாரங்களில் நடத்திய தாக்குதல்களில், முஸ்லிம்கள் பயன்படுத்தும் அடைமொழிகளை வேண்டுமென்றே பயன்படுத்துவது வழக்கம். உதாரணமாக முஸ்லிம்களை குறிப்பிடும்போது, 'மியா முஷரஃப், மியா அஹ்மத் படேல் என்று சொல்வார். 2014 தேர்தலின்போது, ராகுல் காந்தி விரதம் இருந்தபோது, அவரை இளவரசர் என்ற பொருள்படும் 'ஷெஹசாதே' என்ற உருது வார்த்தையை பயன்படுத்தினார். ராஜகுமாரன் என்ற எளிய வார்த்தையை பயன்படுத்தாமல், வேண்டுமென்றே 'ஷெஹசாதே' என்ற வார்த்தையை குறிப்பாக பயன்படுத்தி அவரை இஸ்லாமியருக்கு நெருக்கனமானவராக காட்ட முயன்றார்.

நரேந்திர மோதி தலைமையிலான பாரதிய ஜனதா கட்சி, முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர் இல்லாத கட்சி ஒன்று, ஆட்சி அமைக்கிறது என்ற புதிய வரலாற்றை இந்தியாவில் உருவாக்கியது. பின்னர், அவரது அமைச்சரவையில் அமைச்சராக பதவியேற்றுக் கொண்ட அமைச்சர்கள் அனைவருமே மக்களால் தேர்தெடுக்கப்பட்ட எம்.பிக்கள் கிடையாது என்பதும், சிலர் மாநிலங்களவை எம்.பிக்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

குஜராத் மாதிரி

குஜராத் வன்முறைகளால் பாதிக்கப்பட்ட நரேந்திர மோதின் பிம்பத்தை மாற்றும் முயற்சியில் தனது எஞ்சிய முதலமைச்சர் காலத்தை பயன்படுத்திக் கொண்டார் மோதி.

குஜராத்தின் பொருளாதார வளர்ச்சியை விளம்பரப்படுத்திக் கொண்டு, அதற்கு 'குஜராத் மாதிரி' என்று பெயரும் வைத்தார். அதில் தனியார் துறைக்கு உத்வேகம் அளிப்பது, பொதுத்துறை நிறுவனங்களில் மேம்பட்ட நிர்வாகம், மற்றவர்களை கவரக்கூடிய 10 சதவிகித வளர்ச்சி என குஜராத் முன்னேறியிருப்பதாக மக்களின் முன் எடுத்துரைத்தார்.

2008ஆம் ஆண்டு மேற்கு வங்காளத்தின் சிங்கூரில் டாடா மோடர்ஸ் நிறுவனம் அமைப்பதற்கு எதிரான போராட்டத்தின்போது, அந்த நிறுவனத்தை தானாகவே முன்வந்து குஜராத்துக்கு அழைத்து வந்தார் மோதி. அதுமட்டுமல்ல, மேற்கு வங்காளத்தில் அந்த நிறுவனம் பிரச்சனைகளை எதிர்கொண்டதற்கு மாறாக, குஜராத்தில் நிலம் ஒதுக்கினார், வரி விலக்கு மற்றும் தேவையான பிற வசதிகளையும் ஏற்பாடு செய்து தந்தார்.

இந்த ஊக்கத்தால் மகிழ்ந்த தொழிலதிபர் ரத்தன் டாடா, மோதியை மனம் குளிர பாராட்டினார். ஆனால், குஜராத் மாதிரி குறித்து பல்வேறு தரப்பில் இருந்தும் விமர்சனங்கள் எழுந்தன. பிரபல பத்திரிகையாளர் ரூதம் வோரா இந்து பத்திரிகையில் எழுதிய ஒரு கட்டுரையில் இவ்வாறு குறிப்பிட்டிருக்கிறார்.

"வைப்ரண்ட் குஜராத் திட்டத்தின் கீழ் 84 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான முதலீட்டு ஒப்பந்தங்கள் கையெழுத்திட்டன. ஆனால், இவற்றில் பெரும்பாலானவை பூர்த்தி செய்யப்படவில்லை. தனிநபர் வருமானத்தின் அடிப்படையிலும் குஜராத் நாட்டின் ஐந்தாவது இடத்தில் இருப்பது உண்மைதான். ஆனால், நரேந்திர மோதி பொறுப்புக்கு வருவதற்கு முன்னரும் குஜராத் வளர்ச்சி பெற்ற மாநிலங்களில் ஒன்றாகவே இருந்தது" என்று குறிப்பிட்டுள்ளார்.

பிராண்ட் மோதியை உருவாக்கியவரும் மோதி தான்

நரேந்திர மோதிக்கு இந்தியாவில் மட்டுமல்ல, உலகின் பல இடங்களிலும் பரவலாக எதிர்ப்பு எழுந்தை காணமுடிந்தது. ஒரு காலகட்டத்தில் மோதிக்கு விசா வழங்க அமெரிக்கா மறுப்பு தெரிவித்திருந்தது. நாடாளுமன்ற விவாதங்களில் நரேந்திர மோதி மற்றும் குஜராத் வன்முறைச் சம்பவங்கள் இடம் பெற தவறியதில்லை. இத்தனைக்கும் பிறகும் அவருக்கு மக்கள் எப்படி பரவலாக ஆதரவு கொடுக்கிறார்கள்?

'Centerstage-Inside Modi Model of Governance' என்ற மோதியின் மற்றுமொரு வாழ்க்கை வரலாற்றை எழுதிய உதய் மாஹுர்கர் இவ்வாறு சொல்கிறார், "மோதி என்ற பிராண்டை, பிம்பத்தை உருவாக்க நரேந்திர மோதி தானே கடுமையாக உழைத்தார். மீண்டும் மீண்டும், விரல்களில் வெற்றிச் சின்னத்தை காட்டுவது, தன்னம்பிக்கை நிறைந்த அல்லது அகந்தை நிறைந்த கம்பீரமான நடை, அவரது 'டிரேட் மார்ட்' முழங்கால் வரையிலான குர்தா, இறுக்கமான கால்சட்டை என கச்சிதமான ஆடைகள் மூலம் தனது பாணியை திட்டமிட்டு உருவாக்கினார் மோதி".

மோதி ஒரு நவீன சிந்தனை கொண்ட மனிதர் என்று உலகத்தின் முன் காட்டப்படுகிறார். மடிக்கணினியை பயன்படுத்துவது, அவருடைய கைகளில் வெளிநாட்டு பத்திரிகையும், 'DLS' கேமராவும் இருப்பதை புகைப்படங்களில் பார்க்கமுடியும். ஒபாமாவின் வாழ்க்கை வரலாற்றை படிக்கிறார் என்று ஒரு முறை செய்தி வந்தால், டிராக் சூட் போட்டுக் கொண்டும், பிரபலமான கெளபாய் தொப்பி அணிந்த புகைப்படங்கள் என அவ்வப்போது விதவிதமான புகைப்படங்கள் வெளியாகி அவரது பன்முக தோற்றத்தை உலகிற்கு காட்டி, அவர் ஒரு வித்தியாசமான மனிதர் என்று காட்டும்.

மோதி ஒரு 'சோசியலிச' அரசியல்வாதி போன்று கசங்கிய இயல்பான உடை உடுத்துபவர் இல்லை, அதுமட்டுமல்ல, காக்கி நிற டவுசர் அணிந்து கையில் தடியுடன் செல்லும் ஆர்.எஸ்.எஸ்ஸின் கரசேவகரும் இல்லை. அவரது சட்டைப் பாக்கெட்டில் Mont Blanc பேனா எப்போதும் இருக்கும். அவரது மணிக்கட்டை அலங்கரிப்பதோ ஆடம்பரமான மோவாடோ (movado) கைக்கடிகாரம். குரல்வளம் பாதிக்கும் என்பதால் அவர் எப்போதுமே குளிர்ச்சியான நீரைக்குடிக்கமாட்டார்.

அவர் பாக்கெட்டில் எப்பொழுதுமே சீப்பு ஒன்று இருக்கும். அவரது தலைமுடி கலைந்திருக்கும் ஒரு புகைப்படத்தைக்கூட பார்க்க முடியாது. காலையில் நான்கு மணிக்கே எழுந்திருக்கும் மோதி, யோகா செய்வார், ஐ-பேடில் செய்தித்தாள்கள் வாசிப்பார், கடந்த இரண்டு தசாப்தங்களில் அவர் ஒரு நாள் கூட விடுமுறை எடுத்ததில்லை.

பிரபல பத்திரிகையாளர் வினோத் கே. ஜோஸ் 'கர்வார்' என்ற பத்திரிகையில் எழுதிய 'முடிசூடா சக்ரவர்த்தி: நரேந்திர மோடியின் எழுச்சி' (The Emperor Uncrowned. The rise of Narendra Modi) என்ற கட்டுரையில் , மோதி எப்படி தனது முழுமையான நாடகத்தன்மையால் வெற்றி பெற்றார் என்பதைப் பற்றிக் குறிப்பிடுகிறார்.

"மோதி உறுதியானவர், திடமானவர், தன்னம்பிக்கை அதிகம் கொண்டவர். அனைவரையும் தனது கட்டுப்பாட்டிற்குள் வைத்திருப்பாதாக தனது ஆதரவாளர்களை நம்ப வைக்கும் திறமை கொண்ட தலைவர். கையில் எழுதப்பட்ட உரையை வைத்துக் கொள்ளாமலேயே மக்களை நேரடியாக கண்ணோடு கண் பார்த்து பேசும் ஆற்றல் கொண்டவர். மோதி பேசத் தொடங்கினால் மக்கள் அமைதியாகிவிடுவார்கள், தங்கள் செல்பேசிகளை இயக்குவதை நிறுத்திவிட்டு, அவரது பேச்சை ஆழ்ந்து கவனிக்கும் வகையிலான அனைவரையும் ஈர்க்க்கூடிய வகையில் பேசும் திறன் படைத்தவர். சிலரோ திறந்த வாயை மூடாமல் அவரது பேச்சை கேட்டு வியந்து போவார்கள்".

உறவினர்கள் இல்லை என்றால் ஊழலும் இல்லை

'puritanical rigidity' நரேந்திர மோதி என்று பிரபல சமூக அறிவியல் பேராசிரியர் ஆஷீஷ் நரேந்திர மோதியை குறிப்பிடுகிறார். 'puritanical rigidity' என்ற வார்த்தைக்கு விரிவான விளக்கம் அளிக்கும் அவர், "திரைப்படம் பார்க்காதவர்கள், மது அருந்தமாட்டார்கள், சிகரெட் புகைக்க மாட்டார்கள், காரசாரமான உணவை உண்ண மாட்டார்கள். தேவைப்பட்டால் மிகவும் எளிமையான உணவை உண்பார்கள், தனிமையிலும் இருப்பார்கள். சிறப்பு தினங்களில் விரதம் இருப்பார்கள். அதிலும் குறிப்பாக நவராத்திரி போன்ற சமயங்கள் நாள் முழுவதும் எலுமிச்சை பழ ரசம் அல்லது தேநீர் மட்டுமே குடிப்பார்கள்."

இது பற்றி மேலும் குறிப்பிடும் நந்தி, "தாய், நான்கு சகோதர சகோதரிகள் என பல உறவினர்கள் இருந்தாலும், மோதி தனியாக வாழ்கிறார். அவர்களுடன் நெருங்கிய தொடர்பு வைத்துக் கொள்ளவில்லை. தாயிடம் ஆசீர்வாதம் வாங்கினார், தாயை சக்கர நாற்காலியில் அமரவைத்து தள்ளிக் கொண்டு போவது போன்ற சில புகைப்படங்களும் தகவல்களும் எப்போதாவது வெளியாகும். குடும்பம் என்ற ஒன்று இருக்கிறது, ஆனால் அதிலிருந்து போதுமான இடைவெளியில் இருக்கிறேன் என்று காண்பிக்க இதுவே அவருக்கு போதுமானதாக இருக்கிறது.

இமாச்சலப் பிரதேசத்தின் ஹமீர்புரில் தேர்தல் பொதுக்கூட்ட த்தில் ஒரு முறை பேசியபோது, "எனக்கு குடும்பத்துடன் பெரிய அளவில் தொடர்பு இல்லை. நான் தனியாள். நான் யாருக்காக முறைகேடுகள் செய்ய வேண்டும்? என்னுடைய உடலும், மூளையும் பொதுவாழ்க்கைக்கும், நாட்டிற்கும் அர்ப்பணித்துவிட்டேன்" என்று உருக்கமாக கூறியிருந்தார்.

ஹசீனாவிற்கு புகழ்மாலை

பொதுவாக மோதி, பெண்கள் அனைவரையும் பகிரங்கமாக புகழ்ந்து பேசுவார் என்றபோதிலும், வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா வாஜேதை அவர் புகழ்ந்து பேசியது பிரபலமானது. பெண்ணாக இருந்தாலும் ஷேக் ஹசீனா, மிகவும் தைரியமாக விரவாதத்தை கட்டுப்படுத்துகிறார் என்று தெரிவித்தார். அப்போது, 'Dispute Being Women ' என்ற ஹேஷ்டேக் சமூக ஊடகங்கள் வைரலானது. ஆனால் அது மோதியை எந்தவிதத்திலும் பாதிக்கவில்லை. 'India's Modi Delivered the World's Worst Compliment' என்று வாஷிங்டன் போஸ்ட் பத்திரிக்கை கட்டுரை எழுதியதையும் மோதி பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.

மோதியால் வேலைவாய்ப்புகளை உருவாக்க முடியவில்லை

2014ஆம் ஆண்டு தேர்தலில் இரண்டு விஷயங்களை முன்வைத்து வெற்றிபெற்றார் மோதி. காங்கிரஸின் ஆட்சியில் மக்கள் முன்னேற முடியாமல் தவிப்பதாக கூறிய மோதி, நாட்டில் இளைஞர்களுக்கு உத்வேகம் ஊட்டுவதாக வாக்களித்தார். ஓர் ஆண்டிற்குள் ஒரு கோடி வேலைவாய்ப்புகளை உருவாக்குவதாக பெரிய கனவை இளைஞர்களிடம் விதைத்தார். வேறுவிதமாக கூறவேண்டுமானால் மாதந்தோறும் 8 லட்சத்து 40 ஆயிரம் வேலை வாய்ப்புகளை உருவாக்கிக் கொடுப்பதாக வாக்களித்தார்.

மோதியை தீவிரமாக ஆதரிப்பவர்கள் கூட இந்த ஐந்தாண்டுகளில் மோதியால் இந்த வாக்குறுதியை நிறைவேற்றமுடியவில்லை என்பதுதை ஒப்புக் கொள்வார்கள். 133 கோடி மக்கள் தொகை கொண்ட ஒரு நாட்டில் கல்வியின் தரம் தொடர்ந்து உயர்ந்துவரும் நிலையில், மாதாமாதம் ஐந்து லட்சம் புதிய வேலைவாய்ப்புகள் அங்கும் மாதந்தோறும் குறைந்தது ஐந்து லட்சம் புதிய வேலைவாய்ப்புகள் தேவை.

இந்த லட்சியத்தை அடையாதது, மோதி அரசின் மிகப்பெரிய தோல்வியாகும். ஆனால், இந்தியாவின் காலாண்டு பொருளாதார வளர்ச்சி வெறும் 6.6 சதவிகிதமாக இருந்தாலும், இது கடந்த ஐந்து ஆண்டுகளில் குறைவான வளர்ச்சி விகிதமாகும்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :