அண்ணாமலை ஐபிஎஸ்: "ஒருநாளைக்கு 16 மணிநேரம் வரை கடுமையாக உழைப்பேன்"

அண்ணாமலை ஐபிஎஸ்

தமிழ் நாட்டின் கரூரை சேர்ந்த ஐபிஎஸ் அதிகாரி அண்ணாமலை குப்புசாமி, ஒன்பதரை ஆண்டுகள் கர்நாடகாவில் பணியாற்றிவிட்டு கடந்த 28ஆம் தேதி, தனது பதவியை ராஜிநாமா செய்வதாக அறிவித்தார். அவருடைய ராஜிநாமா முடிவு கர்நாடக மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

கர்நாடகவில் அதிரடி பாணியிலான போலீஸ் முறைக்கு பெயர் பெற்றவர் அண்ணாமலை. அவருடைய பல வீடியோக்கள் சமூக ஊடகங்களில் இன்றும் டிரெண்டிங்கில் இருக்கக்கூடியவை. இந்த அதிரடியினாலேயே அவர் கர்நாடகவின் 'சிங்கம்' போலீஸ் என்றும் அறியப்படுகிறார்.

அவருடைய ராஜிநாமா அறிவிப்பை தொடர்ந்து சமூக ஊடகங்களில் பலரும் வருந்தி கருத்துகளை பதிந்துவந்த நிலையில், அண்ணாமலையை தொடர்பு கொண்டு பேசியது பிபிசி தமிழ்.

கேள்வி: உங்கள் பதவியை திடீரென்று ராஜினாமா செய்ய என்ன காரணம்?

பதில்: இது திடீரென எடுத்த முடிவு என்று சொல்ல முடியாது. கடந்த ஆறு மாதங்களாக இதுபற்றி சிந்தித்து கொண்டுதான் இருந்தேன். பொது சேவையை சுமார் 10 ஆண்டுகள் செய்துவிட்டேன். இப்போது எனக்கு 35 வயதாகிறது. சில காரியங்களை செய்வதற்கு போலீஸ் துறையைவிட நல்ல வழிமுறைகள் உள்ளன என்று நினைக்கிறேன்.

எனவே, வாழ்க்கையில் பிற வாய்ப்புக்களையும் ஆராய்ந்து கொண்டிருக்கிறேன். இதே பணி வாழ்க்கையை இதைவிட விரைவாகவும், செயல்திறனோடும் செய்கிற வழிகளை ஆராய்ந்து கொண்டிருக்கிறேன். இந்த ஆய்வை மேற்கொள்ளத்தான் இந்த கால இடைவெளியை எடுத்துள்ளேன்.

கேள்வி: பலருக்கு ஐபிஎஸ் பணி என்பது இன்றும் எட்டாக்கனியாக இருக்கிறது. இந்தப் பதவியை ராஜினாமா செய்வதற்கு அரசியல் அழுத்தங்கள் ஏதாவது இருந்ததா?

பதில்: அழுத்தங்கள் என்று ஒன்றும் இருக்கவில்லை. கர்நாடகாவில் எந்தவொரு அரசியல்வாதியிடமும் நான் கெட்ட பெயரை வாங்கவில்லை. எனது அணுகுமுறையையும், ஜனநாயக போக்கையும் அனைவரும் விரும்பினர். அரசியல்வாதிகளை ஒன்றிணைத்து சென்றேன்.

சில வேளைகளில் அவர்களோடு அமர்ந்து பேசியுள்ளேன். அவர்களை சம்மதிக்க வைத்துள்ளேன். தனிப்பட்ட முறையில் அவர்களோடு கலந்துரையாடியுள்ளேன். முடிவு எடுக்கும் நடைமுறைகளில், அவர்களையும் ஒன்றிணைத்து சென்றுள்ளேன். அரசியில்வாதிகளிடம் நல்ல உறவை பேணிவந்துள்ளேன்.

தொலைபேசி மூலம் உரையாடியே எல்லா விடயங்களுக்கும் தீர்வு காணும் அளவுக்கு அவர்களிடம் உறவு கொண்டிருந்தேன். அரசியல் அழுத்தம் என்பது நூறு சதவீதம் இல்லை. இதைத்தவிர்த்து, ஐபிஎஸ் வேலை என்றால் நிச்சயம் அதிக பளு இருக்கத்தான் செய்யும். முன்னிலையில் இருந்து கொண்டு 24 மணிநேரமும் சுறுசுறுப்பாக வேலை செய்ய வேண்டியிருக்கும்.

நான் சொன்னதுபோல, செயல்திறமிக்க வழியில் முடிவுகளை அடைகின்ற வழிகளை நான் ஆராய்ந்து கொண்டிருக்கிறேன்.

கேள்வி: இந்த பத்து ஆண்டுகளில் காக்கிச்சட்டை உங்களுக்கு ஒரு மனநிறைவு அளித்துள்ளதா?

பதில்: என்னால் உறுதியாக சொல்ல முடியும். ஒரு திருப்தியான மனநிறைவை கொடுத்துள்ளது. இந்த காவல்துறையில் பணியில் மிகத் தீவிரமாக நான் செயல்பட்டுள்ளேன். ஒருநாளைக்கு சுமார் 15 முதல் 16 மணிநேரம் தீவிரமாக பணி செய்துள்ளேன். ஒருவேளை நான் ராஜிநாமா செய்வதற்கு அதுகூட காரணமாக இருக்கலாம். நான் செய்யக்கூடிய எல்லையை அடைந்துவிட்டேன். வெளியே போகலாம். இன்னொரு வழியை ஆய்வு செய்து பார்ப்போம். நிறைய பேர் விரக்தியாலும், மோசமான உணர்வுகளாலும் வெளியேறுவார்கள். ஆனால், நான் சொன்னதுபோல முழு மகிழ்ச்சியோடு வெளியேறுகிறேன்.

கேள்வி: தமிழகத்தின் கரூரில் இருந்து தொடங்கிய உங்கள் பயணம் பற்றி?

பதில்: எனது அப்பா, அம்மா எல்லாரும் கரூர் பக்கத்துல சின்னதாராபுரம் அருகே தொட்டம்பட்டி என்கிற கிராமத்தை சேர்ந்தவர்கள். நானொரு விவசாய குடும்பத்தை சேர்ந்தவன். எனக்கு நல்ல கல்வியை வழங்க வேண்டும் என்பதில் எனது பெற்றோர் தெளிவாக இருந்தனர். அவர்களின் தேவைகளை குறைத்து கொண்டு எனக்கு உயர்க்கல்வி கிடைக்க வேண்டும் என்பதை உறுதிசெய்தனர். கோயம்புத்தூரில் பொறியியல் படித்துவிட்டு, பின்னர் லக்னோவில் எம்பிஏ படித்தேன். எம்பிஏ படித்ததில் இருந்து சிவில் சர்வீஸ் பணிக்கு வர வேண்டும் என்ற எண்ணம் எழுந்தது. 2008ம் ஆண்டு மும்பை தாக்குதல் நடைபெற்றது. உத்தர பிரதேசத்தில் நான் படித்த இடம்கூட சிவில் சர்வீஸ் பணிக்கு வர வேண்டும் என்று ஒரு தாக்கத்தை என்னுள் ஏற்படுத்தியது. இந்தப் பணிக்கு வந்தேன். கர்நாடகாவில்தான் என்னை பணிக்கு அமர்த்தினர். தீவிரமாக பணிபுரிந்தேன். கார்கலா, உடுப்பி, சிக்மங்களுர், பெங்களூரு ஆகிய இடங்களில் பணிபுரிந்தேன்.

அரசு என்னை மிகவும் நன்றாகவே நடத்தியது. அதிக இடம்மாற்றம் செய்யவில்லை. என்னை எப்போதும் பொதுப் பணியில் முன்னிலையில் நிறுத்தி பணிபுரிய வைத்தனர்.

மிகவும் கவனமாக செய்யக்கூடிய பதவிகளில்தான் அமர்த்தப்பட்டேன். இப்போது நான் வெளியேறும் நேரம் வந்துவிட்டது. நல்ல மாற்றத்திற்காக.

கேள்வி: உங்கள் ரோல்மாடல்கள் யார்? உங்கள் கடித்தத்தில் மதுக்கர் ஷெட்டி பற்றி குறிப்பிட்டுள்ளீர்கள். அவர் யார்?

பதில்: ஓய்வுபெற்ற ஐபிஎஸ் அதிகாரி விஜயகுமாரை நான் மிகவும் உயர்வாக மதிக்கிறேன். அதேபோலத்தான் மதுக்கர் ஷெட்டியும்.

இவர்கள் இருவரையும் எனது ரோல்மாடல்களாக பார்க்கிறேன். மதுக்கர் ஷெட்டி உயரிய மதிப்பீடுகளோடு வாழ்ந்த மனிதர். அந்த மாதிரியான ஓர் அதிகாரிகயை நீங்கள் பார்க்கவே முடியாது. அவர் பேணிவந்த உயரிய அறநெறியும் இதற்கு காரணம்.

47வது வயதில், மரடைப்பால் அவர் இறந்துபோனார். அவரது உடல் தகனத்திற்கு நான் போயிருந்தேன். இதை எல்லாம் என்னை சிந்திக்க வைத்தன. இந்த பூமியிலுள்ள நமது வாழ்க்கையின் காலம் மிகவும் சிறியதே. அவர் பணி செய்துவிட்டார். கடவுள் எடுத்துக்கொண்டார்.

அனைவருக்கும் அவரவருக்கென்று ஒரு வாழ்க்கை உள்ளது. அது எப்போது வரும், எப்போது முடிவடையும் என்று பார்க்காமல் பணிபுரிய வேண்டும். கவனம் சிதறாமல் சிந்தித்து, வேலை செய்து, செய்து முடிக்க வேண்டும் என்பது மதுக்கர் ஷெட்டியின் வாழ்க்கையில் எனக்கு கிடைத்த படிப்பினை.

கேள்வி: உங்களுடைய அடுத்த திட்டம் என்ன?

பதில்: கையில் எந்தவொரு திட்டமும் இல்லை. இது பற்றி நான் யாரிடமும் பேசவில்லை. ஓர் இடைவெளி (பிரேக்) வேண்டும் என்று எண்ணினேன். ஒரு முடிவு எடுக்கும்போது, தெளிவாக எடுக்க வேண்டும். சிந்தித்து எடுக்க வேண்டும்.

அதிக அழுத்தங்கள் கொண்ட தேர்தலை இப்போதுதான் முடித்துள்ளோம். சிறிய இடைவெளி (பிரேக்) எடுக்க வேண்டும். இந்தியா முழுவதும் பயணம் மேற்கொள்ள வேண்டும். எல்லா வழிகளையும் ஆய்வு செய்து பார்க்க வேண்டும்.

இதெல்லாம் செய்தால், சில தெளிவுகளை பெறுவேன். மக்களுக்கான பொதுப் பணியை (Public Service) மேற்கொள்ள சாத்தியமுடைய எல்லா வாய்ப்புகளையும் ஆய்வு செய்து வருகிறேன். எனக்கும், அனைவருக்கும் நல்லதாக இருக்கின்ற ஒரு முடிவை எடுப்பேன்.

கேள்வி: சொந்த ஊருக்கு திரும்பியவுடன் விவசாயம் செய்ய திட்டமுள்ளதா?

பதில்: குறுகியகால ஆசையாக, விவசாயம் செய்யலாம் என்றுதான் அந்த கடிதத்தில் எழுதியிருந்தேன். பணம் சம்பாதிக்க வேண்டும் என்றில்லை. ஆத்ம திருப்திக்காக, மகிழ்ச்சிக்காக. எனது உணவை நானே உழைத்து சம்பாதித்து கொள்வது என்பதைபோல. எனக்கே உரித்தான வழிமுறையில் விவசாயத்தை தொடர்ந்து செய்யதான் போகிறேன்.

குடும்பத்திற்கு நேரம் ஒதுக்குவதை எல்லாரும்தான் செய்கிறார்கள் நானும் நேரம் ஒதுக்குகிறேன். நேரத்தை தரமாக பயன்படுத்தி கொள்ளுதல்தான் இது.

கேள்வி: உங்களை பின்தொடர்பவர்களுக்கு என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?

பதில்: 2018ம் ஆண்டு இந்தியாவுக்கும், 2019ம் ஆண்டு இந்தியாவுக்கும் ரெம்ப வித்தியாசம் உள்ளது.

இன்றைய இந்தியாவில் மக்களுக்கான பொதுப் பணியை (Public Service) நீங்கள் நிச்சயமாக செய்ய முடியும். மக்களுக்கான பொதுப் பணி என்கிறபோது, சிவில் சர்வீஸ் மட்டும்தான் என்றில்லை. இந்த கருத்தை எப்போதும், பணியில் இருந்தபோது ஆற்றிய உரைகளிலும் நான் சொல்லியிருக்கிறேன். உங்களுக்கு என்ன தோன்றுகிறதோ அதனையே செய்யுங்கள் என்று கூறியிருக்கிறேன்.

சிவில் சர்வீஸ் உயரிதொரு பணி என்றே இன்றும் நினைக்கிறேன். இந்த அரசுப் பணியில் இணைத்து பணியாற்றுவது மிகவும் சிறப்பானது. இதில் எனக்கு மாற்றுக் கருத்து இல்லை. என்னை ரோல்மாடாலாக வைத்திருப்பவாகள் என்னுடைய கொள்கைள், எனது வாழ்க்கையை நான் வாழ்ந்த விதத்தால் என்னை ரோல்மாடாலாக பார்த்தார்களே ஒழிய, ஒரு ஐபிஎஸ் அதிகாரி என என்னை இரண்டாவதாகவே பார்த்தார்கள்.

அவர்கள் என்னை மனிதனாக பார்த்தார்கள் என்று நினைக்கிறேன். நான் எனக்காக வகுத்து கொண்ட உயரிய மதிப்பீடுகளை நான் கடைபிடிப்பேன். இதில் நான் தவறு செய்ய போவதில்லை. எனவே, பிறர் விரும்பாத எதையோ நான் தேடுவதாக யாரும் எண்ணிவிட வேண்டாம். இதற்கு நான் வாக்குறுதி அளிக்க முடியும்.

கேள்வி: அரசியல் கட்சியில் இணையப் போகிறீர்களா?

அரசியலையும், அரசியல்வாதிகளையும் நான் எதிர்மறையாகப் பார்ப்பதில்லை. மக்களுக்கான பொதுப் பணியை செய்வதற்கான உயரிய வழிமுறை அரசியல் என்று கிரேக்க தத்துவவியலாளர் ஒருவர் கூறியுள்ளார். இவர் மக்களால் தேர்ந்தெடுக்கப்படுபவர். அரசியல்வாதிகள் அதிக பொறுப்புடையவர்கள். அரசியலை எதற்காக எதிர்மறையாக பேசுகிறோம் என்றால், அரசியல்வாதியாக இருக்கும் ஒருவர், வெற்றிகரமாக இருக்கமாட்டார் என்று எண்ணுவதால்தான். நான் ஏற்கெனவே சொன்னதுபோல, எல்லா வழிகளையும் ஆய்வு செய்து மூன்று அல்லது நான்கு மாதங்களில் முடிவெடுப்பேன்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்