குடிநீர்ப் பஞ்சம்: சென்னை மெட்ரோவில் நிறுத்தப்பட்ட குளிர்சாதன வசதி - பயன் என்ன?

தண்ணீர் படத்தின் காப்புரிமை MANJUNATH KIRAN

சென்னையில் குடிநீர்ப் பஞ்சம் உச்சகட்டத்தை எட்டியிருக்கும் நிலையில், தண்ணீரைச் சேமிக்கும் வகையில் மெட்ரோ ரயில் நிலையங்களில் குளிர்சாதன வசதியை நிறுத்த சென்னை மெட்ரோ நிர்வாகம் முடிவெடுத்திருக்கிறது. இதனால் எந்த அளவுக்கு தண்ணீர் சேமிக்கப்படும்?

சென்னையில் தற்போது கடுமையான குடிநீர்ப் பஞ்சம் நிலவிவருகிறது. சென்னைக்குக் குடிநீர் வழங்கும் முக்கிய நீர் ஆதாரங்களான நான்கு ஏரிகளுமே தற்போது வறண்டுபோயுள்ளன. இந்தக் குடிநீர் பற்றாக்குறையின் காரணமாக, சென்னை மெட்ரோ ரயில் நிலையங்களில் குளிர்சாதன வசதியை நிறுத்த முடிவெடுத்திருப்பதாக அந்த நிறுவனம் தெரிவித்திருக்கிறது.

சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் தற்போது சென்னையில் இரு வழித்தடங்களில் சுமார் 45 கி.மீ. தூரத்திற்கு மெட்ரோ ரயில் சேவையை வழங்கி வருகிறது. இதற்கென 32 ரயில் நிலையங்கள் அமைக்கப்பட்டிருக்கின்றன. இவற்றில் 19 ரயில் நிலையங்கள் பூமிக்கு அடியிலும் 13 ரயில் நிலையங்கள் தரை மட்டத்தில் இருந்து உயர்த்தப்பட்ட ரயில் நிலையங்களாகவும் செயல்பட்டுவருகின்றன.

இந்த 32 ரயில் நிலையங்களில் பூமிக்கு அடியில் உள்ள 19 ரயில் நிலையங்களில் குளிர்சாதன வசதி செய்யப்பட்டிருக்கிறது. இவரை மையப்படுத்தப்பட்ட குளிர்சாதன இயந்திரங்களின் மூலம் குளிரூட்டப்பட்டு வருகின்றன. அங்கு வெப்பநிலை 26 டிகிரி சென்டிகிரேட்டில் எப்போதும் வைக்கப்பட்டிருக்கும்.

ஒட்டுமொத்தமாக 32 மெட்ரோ ரயில் நிலையங்களுக்கும் சேர்த்து, குளிரூட்டும் வசதி, கழிப்பறை, குடிநீர் ஆகியவற்றை வழங்க ஒரு நாளைக்கு இரண்டு லட்சம் லிட்டர் அளவுக்கு தண்ணீர் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

இதில் சுரங்க ரயில் நிலையங்களைக் குளிரூட்ட மட்டும் சுமார் ஒரு லட்சத்து ஐம்பதாயிரம் லிட்டர் தண்ணீர் செலவாவதாக கணக்கிடப்பட்டுள்ளது. அதாவது ஒரு சுரங்க ரயில் நிலையத்திற்கு ஒட்டுமொத்தமாக 9,000 லிட்டர் நீரும், அதில் குளிரூட்டும் வசதிக்காக மட்டும் 7,000 லிட்டர் நீரும் பயன்படுத்தப்படுவதாக மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவிக்கிறது.

படத்தின் காப்புரிமை ARUN SANKAR

உயர்த்தப்பட்ட ரயில் நிலையங்களில் சில இடங்கள் மட்டும் குளிர்சாதன வசதி செய்யப்பட்டுள்ளன. இதற்கு தினமும் 3 ஆயிரம் லிட்டர் நீர் செலவாகிறது.

தினமும் காலை 4.30 மணியிலிருந்து இரவு 11 மணியவரை இந்த ரயில் நிலையங்கள் இயங்கிவருகின்றன. மெட்ரோ ரயில் நிலையத்தில் ஒருவர் அதிகபட்சமாக 8 முதல் 10 நிமிட நேரம் வரை காத்திருக்க வேண்டியிருக்கும்.

இருந்தபோதும், போதுமான காற்றோட்ட வசதிகள் செய்யப்பட்டிருப்பதாகவும் சுரங்க ரயில் நிலையங்களில் ஆக்ஸிஜன் கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாகவும் மெட்ரோ ரயில் நிறுவனம் தெரிவிக்கிறது. மிகவும் வெப்பமான சூழலில் சிறிது நேரம் ரயில் நிலையங்கள் குளிரூட்டப்படுவதாகவும் அந்நிறுவனம் கூறுகிறது.

மெட்ரோ ரயில் பெட்டிகளைப் பொறுத்தவரை, பயணிகள் சௌகர்யமாக பயணிக்கும் வகையில் அவை 25 டிகிரி சென்டிகிரேட் நிலையில் இருப்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாகவும் இதனை ரயில் ஓட்டுனர் தொடர்ந்து கண்காணிப்பார் எனவும் மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்து வருகிறது.

மெட்ரோ ரயில் நிலையத்திற்கான நீர் முழுவதுமே சென்னைக் குடிநீர் வாரியத்திடமிருந்துதான் பெறப்பட்டு வருகிறது. தற்போது சென்னையில் கடுமையான குடிநீர் பற்றாக்குறை நிலவுவதால், குடிநீர் வாரியத்தின் சேவையைப் பெறுவர்கள் அனைவருக்குமே அவர்கள் தேவையைவிட குறைவான அளவிலேயே தண்ணீர் வழங்கப்பட்டு வருகிறது.

சென்னையைப் பொறுத்தவரை, நபர் ஒன்றுக்கு 130 லிட்டர் தண்ணீர் தினமும் வழங்க வேண்டும். ஆனால், பற்றாக்குறையின் காரணமாக நபர் ஒருவருக்கு சுமார் 50 லிட்டர் அளவில்தான் தண்ணீர் வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் மெட்ரோ ரயில் நிலையங்கள் போன்றவை முன்னுரிமை படிநிலையில் குடிநீருக்கு அடுத்த நிலையில்தான் இருக்கின்றன என்பதால், அவற்றுக்கு வழங்கப்படும் தண்ணீரும் குறைவாகவே வழங்கப்பட்டு வருகிறது.

ரயில் நிலையங்களில் குளிர்சாதன வசதிகள் நிறுத்தப்படுவதை சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் தற்போது அதிகாரபூர்வமாக அறிவித்திருந்தாலும், சில மாதங்களுக்கு முன்பாகவே கூட்டம் அதிகம் இருக்காத நேரமான நண்பகல் 12 மணி முதல் மாலை 4 மணி வரை குளிர்சாதன வசதி நிறுத்தப்பட்டிருந்தது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :