பாஜக இணையதளம் ஹேக் செய்யப்பட்டு மாட்டிறைச்சி புகைப்படங்கள் பதிவு

பாஜக இணையதளம் ஹேக் செய்யப்பட்டு மாட்டிறைச்சி புகைப்படங்கள் பதிவு படத்தின் காப்புரிமை Facebook

முக்கிய இந்திய நாளிதழ்கள் சிலவற்றில் வெளியான கட்டுரைகள் மற்றும் செய்திகளைத் தொகுத்து வழங்குகிறோம்.

தினத்தந்தி - "பாஜக இணையதளம் ஹேக் செய்யப்பட்டு மாட்டிறைச்சி விருந்து புகைப்படங்கள் பதிவு"

பாஜக இணையதளம் ஹேக் செய்யப்பட்டு மாட்டிறைச்சி புகைப்படங்கள் வெளியிடப்பட்டதாக தினத்தந்தி செய்தி வெளியிட்டுள்ளது.

"பிரதமர் மோதி தலைமையில் இரண்டாவது முறையாக பாஜக கூட்டணி அரசு நேற்று மத்தியில் பதவியேற்றது. இதற்கிடையே பா.ஜனதா கட்சியின் டெல்லி பிராந்திய இணையதளம் ஹேக் செய்யப்பட்டுள்ளது. இணையதளம் முழுவதும் மாட்டிறைச்சி புகைப்படங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஹேக்கர்கள் Bharatiya Janata Party என்பதை Beef Janata Party என மாற்றியுள்ளனர். மாட்டிறைச்சி கட்சி, மாட்டிறைச்சி வரலாறு என அனைத்து பக்கங்களையும் மாற்றியுள்ளனர். இணையதளம் முழுவதும் மாட்டிறைச்சி புகைப்படத்தால் நிரம்பியுள்ளது. இதனையடுத்து இணையதளத்தை சரிசெய்யும் பணியை பாஜக மேற்கொண்டது" என்று அந்த செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்து தமிழ் - "விமானத்தை தவறவிட்டுத் திரும்பிய ரங்கசாமி"

Image caption ரங்கசாமி

நரேந்திர மோதி பிரதமராகப் பதவியேற்ற விழாவில் துணைநிலை ஆளுநர், முதல்வர், எம்.பி. என முக்கியத் தலைவர்கள் டெல்லி சென்று பங்கேற்றனர். இந்நிலையில் இவ்விழாவில் பங்கேற்கச் சென்று சென்னையில் விமானத்தைத் தவறவிட்டு பாஜகவுடன் கூட்டணி வைத்திருந்த என்.ஆர். காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி திரும்பியதாக இந்து தமிழ் செய்தி வெளியிட்டுள்ளது.​​

பாஜக கூட்டணியில் உள்ள அனைத்துக் கட்சித் தலைவர்களையும் பிரதமர் பதவியேற்பு விழாவில் பங்கேற்க அழைப்பு விடுத்ததாக தெரிவிக்கப்பட்டது. அந்தவகையில் என்.ஆர்.காங்கிரஸுக்கும் அழைப்பு வந்ததாகத் தெரிவித்தனர். இதனையடுத்து பிரதமராக மோதி இரண்டாம் முறையாக பதவியேற்று கொள்ளும் நிகழ்ச்சியில் பங்கேற்க புதுச்சேரியிலிருந்து ரங்கசாமி புறப்பட்டார்.

ரங்கசாமி சென்னையில் விமானத்தைத் தவறவிட்டதால் மீண்டும் புதுச்சேரிக்குத் திரும்பினார். ஏற்கெனவே அவர் முதல்வராக இருந்தபோதும் விமானத்தைத் தவறவிட்ட சம்பவங்கள் நிகழ்ந்துள்ளது. வழக்கமாக டெல்லி பயணத்தை தவிர்க்கும் ரங்கசாமி இம்முறையும் செல்லவில்லை என்பது குறிப்பிடத்தக்கது" என்று அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி: "உரிமம் இன்றி இனி சிகரெட் விற்க முடியாது"

படத்தின் காப்புரிமை Getty Images

பீடி, சிகரெட் ஆகிய புகையிலை பொருள்களை விற்பனை செய்வதற்கு தனி உரிமம் பெறும் நடைமுறை நிகழாண்டுக்குள் அமலாக்கப்பட உள்ளது. அதற்கான வரைவுத் திட்டத்தை விரைவில் அரசின் ஒப்புதலுக்காக சுகாதாரத் துறை அதிகாரிகள் அனுப்ப உள்ளதாக தினமணி செய்தி வெளியிட்டுள்ளது.

"புதிய விதிகள் நடைமுறைப்படுத்தப்பட்ட பிறகு, பீடி மற்றும் சிகரெட்டுகளை மட்டும் விற்பனை செய்வதற்கான உரிமம் கடைகளுக்கு வழங்கப்படும். அக்கடைகளில் அவற்றைத் தவிர, வேறு எந்த பொருள்களையும் விற்பனை செய்ய அனுமதி வழங்கப்படமாட்டாது. அதேபோன்று, பெட்டிக் கடை, தேநீர் கடைகளில் தற்போது உள்ளதைப் போல வரும் நாள்களில் பீடி, சிகரெட் விற்க முடியாது.

அந்த விதிகளை மீறும் பட்சத்தில், சம்பந்தப்பட்டவர்களின் கடை​​களுக்கான உரிமத்தை ரத்து செய்யவும், சட்ட நடவடிக்கை எடுக்கவும் அந்த வரைவுத் திட்டத்தில் விதிகள் வகுக்கப்பட்டுள்ளன.

புகையிலைப் பயன்பாட்டை கட்டுப்படுத்தும் நோக்கில் இந்த திட்டத்தை முன்னெடுக்க உள்ளதாக, சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பிற செய்திகள் :

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்