ஜெய்சங்கர்: மோதி அமைச்சரவையில் இடம் பெற்றுள்ள இந்த புதுமுகம் யார்? சுவாரஸ்ய தகவல்கள்

சுப்பிரமணியம் ஜெய்சங்கர் படத்தின் காப்புரிமை Hindustan Times
Image caption சுப்பிரமணியம் ஜெய்சங்கர்

பிரதமர் நரேந்திர மோதியின் புதிய அமைச்சரவையில் சுப்பிரமணியம் ஜெய்சங்கர் என்ற பெயர் இடம் பெற்றிருந்தது பலருக்கும் ஆச்சரியம் தரும் விஷயமாக அமைந்தது.

பெரும்பாலும், கடந்த அமைச்சரவையில் இடம் பெற்றவர்களே இந்த முறையும் இடம் பெற்றிருக்கிறார்கள். பதவியேற்று கொண்ட 25 கேபினட் அமைச்சர்களில் மூன்று பேர் மட்டுமே புதுமுகங்கள். அதில் ஒருவர் சுப்பிரமணியம் ஜெய்சங்கர். இவர் இந்தியாவின் முன்னாள் வெளியுறவுத்துறை செயலாளராக இருந்தவர்.

கடந்த முறை வெளியுறவுத்துறை அமைச்சராக இருந்த சுஷ்மா ஸ்வராஜ், உடல்நிலை காரணங்களால், இந்த முறை மக்களவைத் தேர்தலில் போட்டியிடவில்லை. தேர்தலில் போட்டியிடாமல், அமைச்சரவையில் இடம் பெற்றிருக்கும் ஜெய்சங்கர், வெளியுறவுத்துறை அமைச்சராக பொறுப்பேற்றுக் கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

2013ஆம் ஆண்டு அமெரிக்காவுக்கான இந்திய தூதராக ஜெய்சங்கர் நியமிக்கப்பட்டார். அவர் அந்த பொறுப்பேற்றுக் கொண்டவுடன் சர்ச்சைக்குரிய தெய்வானி கோப்ரகடே வழக்கை இவர் கையாள வேண்டியிருந்தது. இந்திய வெளியுறவு அதிகாரியாக அமெரிக்காவில் பணியாற்றி வந்த தெய்வானி, விசா மோசடி குற்றச்சாட்டுகளுக்காக கைது செய்யப்பட்டார். அவரை விடுவித்து இந்தியாவுக்கு திருப்பி அனுப்பியதில் ஜெய்சங்கருக்கு முக்கிய பங்குள்ளது.

அதே போல குஜராத் கலவர வழக்கையடுத்து அமெரிக்காவுக்குள் நுழைய நரேந்திர மோதிக்கு அனுமதி மறுக்கப்பட்டிருந்தது. 2014ஆம் ஆண்டு பிரதமரானவுடன் அத்தடை நீக்கப்பட்டு, முதல் முறையாக அமெரிக்கா சென்றார் மோதி. செப்டம்பர் 2014ஆம் ஆண்டு மோதியின் அமெரிக்க பயணித்திற்கு திட்டமிட்டதோடு, அங்கு அவரை வரவேற்று, இந்திய அமெரிக்க மக்களோடு விருந்து ஏற்பாடு செய்திருந்தார் ஜெய்சங்கர்.

படத்தின் காப்புரிமை Getty Images

ஜெய்சங்கர் குறித்த சில சுவாரஸ்ய தகவகல்கள்

 • தமிழகத்தை சேர்ந்த ஜெய்சங்கர், 1955ஆம் ஆண்டு டெல்லியில் பிறந்தார். இவரது தந்தை கே. சுப்பிரமணியம் சர்வதேச மூலோபாய விவகாரங்களின் ஆய்வாளராக இருந்தார்.
 • ஜெய்சங்கரின் மனைவி க்யோக்கோ ஜெய்சங்கர், ஜப்பான் நாட்டை சேர்ந்தவர்.
 • 1977ஆம் ஆண்டு இந்திய வெளியுறவுப் பணியில் சேர்ந்த இவர், முதலில் ரஷ்யாவில் உள்ள இந்திய தூதரகத்தில் பணியாற்றினார்.
 • 1985ல் அமெரிக்காவில் உள்ள இந்திய தூதரகத்தில் செயலாளராக நியமிக்கப்பட்டார்.
 • 1988ஆம் ஆண்டு இலங்கை ராணுவத்திற்கும், தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையே நடந்த போரின்போது, இந்தியாவின் அமைதி காக்கும் படையின் செயலாளரகவும், அரசியல் ஆலோசகராகவும் ஜெய்சங்கர் செயல்பட்டார்.
 • 2000ல் செக் குடியரசின் இந்திய தூதராக நியமிக்கப்படும் முன்பு, ஹங்கேரி மற்றும் ஜப்பான் நாட்டில் உள்ள இந்திய தூதரங்களில் முக்கிய பொறுப்புகளை வகித்துள்ளார்.
 • இந்திய அமெரிக்க அணுஆயுத ஒப்பந்த பேச்சுவார்த்தைகளில் ஜெய்சங்கர் முக்கிய பங்காற்றியுள்ளார்.
படத்தின் காப்புரிமை TWITTER
 • 2009ஆம் ஆண்டு சீனாவுக்கான இந்திய தூதராக இவர் நியமிக்கப்பட்டார்.
 • மன்மோகன் சிங் பிரதமராக இருந்தபோது, வெளியுறவுத்துறை அமைச்சர் பொறுப்புக்காக ஜெய்சங்கரின் பெயர் பரிந்துரைக்கப்பட்டது.
 • 2015ஆம் ஆண்டு, இந்தியாவின் வெளியுறவு செயலாளராக நியமிக்கப்பட்டார் ஜெய்சங்கர்.
 • கடந்தாண்டு டாடா குழுமத்தின் உலகளாவிய கார்ப்பரேட் விவகாரங்களின் தலைவராக பணியாற்றினார்.
 • மோதியின் அமைச்சரவையில் உள்ள அரசியல் சாராத ஒரே நபர் சுப்பிரமணியம் ஜெய்சங்கர்.
 • ஜெய்சங்கருக்கு தமிழ், ஆங்கிலம், இந்தி, ரஷ்யன், மேண்டரின் ஆகிய மொழிகள் தெரியும்.

அலறித் துடித்த சோனியா: மரணிப்பதற்குமுன் ராஜீவின் மனநிலை எப்படி இருந்தது? | rajiv gandhi death |

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்