மோதியின் 2.0: "அடுத்த 100 நாட்களில் மிகப் பெரிய மாற்றங்களை எதிர்பார்க்கலாம்"

மோதி படத்தின் காப்புரிமை Getty Images

முக்கிய இந்திய நாளிதழ்கள் சிலவற்றில் வெளியான கட்டுரைகள் மற்றும் செய்திகளைத் தொகுத்து வழங்குகிறோம்.

இந்து தமிழ்: "அடுத்த 100 நாட்களில் மிகப் பெரிய மாற்றங்களை எதிர்பார்க்கலாம்"

2-வதுமுறையாக பிரதமராக பொறுப்பேற்றுள்ள மோதியின் ஆட்சியில் அடுத்த 100 நாட்களில் நாட்டில் மிகப்பெரிய பொருளாதார சீர்திருத்தங்கள் நடைபெற இருக்கின்றன என்று நிதிஆயோக் துணைத் தலைவர் சூசகமாகத் தெரிவித்துள்ளதாக இந்து தமிழ் செய்தி வெளியிட்டுள்ளது.

"பிரதமர் மோதியின் 2-வது கட்ட ஆட்சியில் அடுத்த 100 நாட்களில் மிகப்பெரிய பொருளாதார சீர்திருத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட உள்ளன. குறிப்பாக வெளிநாட்டு முதலீட்டாளர்கள் மகிழ்ச்சி அடைவதற்கான காரணங்கள் இருக்கும்.

குறிப்பாக தொழிலாளர் சட்டங்களில் ஏராளமான முரண்பாடுகள் இருக்கின்றன. இவை வரும் ஜூலை மாதம் நடைபெற உள்ள நாடாளுமன்றக் கூட்டத்தில் மக்களவையில் வைத்து திருத்தம் கொண்டுவரப்படும். தொழிலாளர் சட்டங்களில் இருக்கும் 44 பிரிவுகள் ஒருங்கிணைக்கப்படும்.

வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு தேவையான நிலங்களை, அதாவது அரசு நிறுவனங்களுக்கு சொந்தமாக பயன்படுத்தப்படாமல் இருக்கும் நிலங்களை அரசு கையப்படுத்தி அவர்கள் தொழில்தொடங்குவதற்கு வழங்கும்.

அரசுசார்பில் நிர்வகிக்கப்பட்டு வரும் 42 நிறுவனங்கள் இருக்கின்றன இவற்றை வரும் மாதங்களில் முழுமையாக தனியார்மயமாக்குதல் அல்லது மூடுவது குறித்து ஆலோசிக்கப்படும்" என்று நிதி ஆயோக் துணைத் தலைவர் ராஜீவ் குமார் தெரிவித்துள்ளதாக அந்த செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினத்தந்தி: "ஆசிரியர் பயிற்சி படிப்புக்கான தகுதி மதிப்பெண் அதிகரிப்பு அரசு அறிவிப்பு"

படத்தின் காப்புரிமை Getty Images

தரமான ஆசிரியர்களை உருவாக்கும் விதமாக ஆசிரியர் பயிற்சி படிப்புகளில் சேருவதற்கு தகுதி மதிப்பெண்ணை அதிகரித்து அரசு உத்தரவு பிறப்பித்துள்ளதாக தினத்தந்தி செய்தி வெளியிட்டுள்ளது.

"அதன்படி, எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர் பயிற்சி பள்ளிகளில் சேருவதற்கு முன்பெல்லாம் தேர்ச்சி மதிப்பெண் பெற்று இருந்தால் போதும். ஆனால் புதிய உத்தரவுப்படி, குறைந்தது 45 சதவீதம் தகுதி மதிப்பெண் பெற்று இருக்க வேண்டும். அதேபோல், பொது பிரிவினர் 50 சதவீதம் தகுதி மதிப்பெண் பெற வேண்டும்.

பி.சி. மற்றும் எம்.பி.சி. பிரிவினருக்கு தகுதி மதிப்பெண்ணில் அந்த மாற்றமும் இல்லை. ஏற்கனவே உள்ள 45 சதவீத தகுதி மதிப்பெண் அடிப்படையில் ஆசிரியர் பயிற்சி படிப்புகளில் சேரலாம். இந்த நடைமுறை நடப்பு கல்வி ஆண்டில் இருந்து கொண்டு வரப்படுகிறது என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது" என்று அந்த செய்தியில் விவரிக்கப்பட்டுள்ளது.

தினமணி: "நாடாளுமன்றம் 17-இல் கூடுகிறது"

படத்தின் காப்புரிமை Getty Images

பதினேழாவது மக்களவையின் முதல் கூட்டத் தொடர், வரும் ஜூன் 17-ஆம் தொடங்குகிறது. இந்தக் கூட்டத் தொடர், ஜூலை 26-ஆம் தேதி வரை நடைபெறும் என்று தினமணி செய்தி வெளியிட்டுள்ளது.

"பிரதமர் மோதி தலைமையிலான மத்திய அமைச்சரவை வியாழக்கிழமை பதவியேற்றுக் கொண்ட பிறகு, முதல் மத்திய அமைச்சரவைக் கூட்டம் தில்லியில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், நாடாளுமன்றக் கூட்டத் தொடரை எப்போது தொடங்குவது உள்ளிட்டவை தொடர்பான முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன.

நாடாளுமன்றம் கூடும் முதல் நாளான 17-ஆம் தேதி, இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உரையாற்றவுள்ளார். இக்கூட்டத் தொடரில் மத்திய பட்ஜெட், ஜூலை 5-ஆம் தேதி தாக்கல் செய்யப்படவுள்ளது.

மத்திய நிதியமைச்சராக பொறுப்பேற்றுள்ள நிர்மலா சீதாராமன், தனது முதல் நிதிநிலை அறிக்கையைத் தாக்கல் செய்யவுள்ளார். பட்ஜெட் தாக்கலுக்கு முந்தைய நாள், ஜூலை 4-ஆம் தேதி, பொருளாதார ஆய்வறிக்கை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படவுள்ளது.

மக்களவையின் தற்காலிகத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள முன்னாள் மத்திய அமைச்சர் மேனகா காந்தி, புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள எம்.பி.க்கள் அனைவருக்கும் பதவிப் பிரமாணம் செய்து வைக்கவுள்ளார்" என்று அந்த செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

பிற செய்திகள் :

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்