இந்தி படிப்பது கட்டாயம்: தமிழகத்தில் கிளம்பும் எதிர்ப்பு

#StopHindiImposition #TNAganistHindiImposition படத்தின் காப்புரிமை Getty Images

தேசியக் கல்விக் கொள்கையை வடிவமைத்த கஸ்தூரி ரங்கன் குழுவினர் அளித்துள்ள பரிந்துரைகளின்படி இந்தி மொழி பேசாத மாநிலங்களில் இந்தியை பயிற்றுவிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

கஸ்தூரி ரங்கன் குழு இந்திய அரசின் மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்துக்கு அளித்துள்ள பரிந்துரைகளில் மும்மொழிக் கொள்கையை கட்டாயமாக்க வேண்டும். இந்தி பேசாத மாநிலங்களில் அந்தந்த மாநில மொழி மற்றும் ஆங்கிலம் தவிர இந்தி மொழியைக் கட்டாயப் பாடம் ஆக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

இந்தி பேசப்படும் மாநிலங்களிலும் ஆங்கிலம், இந்தி தவிர வேறு இந்திய மொழி ஒன்று மூன்றாவது மொழியாகப் பயிற்றுவிக்கப்பட வேண்டும் என்றும் அக்குழு பரிந்துரை செய்துள்ளது.

இருமொழிக் கொள்கைதான் தொடர முடியும் என்று தமிழக அரசு மத்திய அரசுக்கு கடிதம் எழுதியுள்ளதாக தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியைப் பள்ளிகளில் கட்டாயப் படமாக்க தமிழகத்தைச் சேர்ந்த அரசியல் தலைவர்கள் பலரும் தங்கள் எதிர்ப்பைப் பதிவு செய்து வருகின்றனர்.

நாட்டின் ஒருமைப்பாட்டையும், செம்மொழியாம் தாய்த் தமிழைச் சிறுமைப்படுத்தி ஒதுக்கவும், மொழி வாரி மாநிலங்களின்தேசிய உணர்வுகளில் வெந்நீர் ஊற்றும் விதத்திலும், "ப்ரீ ஸ்கூல்முதல் 12 ஆம் வகுப்பு வரை இந்திவழிக் கல்வி என்ற விபரீதமானநாட்டைப் பிளவுபடுத்தும்  பரிந்துரையை இந்தக் குழு அளித்திருப்பது பேரதிர்ச்சியளிக்கிறது என்று திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டுமக்களையும், மாணவர்களையும் தூண்டிவிட்டு மீண்டும் ஒருமொழிப் போராட்டத்திற்கு மத்திய பாஜக அரசு வழி அமைத்துவிடாது என்றே இன்னும் நம்புகிறேன் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

'மொழிப் போராட்டத்தைவிட பன்மடங்கு போராட்டம்'

பண்டித ஜவஹர்லால் நேரு, இந்தி பேசாத மாநில மக்கள் மீது இந்தி மொழி திணிக்கப்பட மாட்டாது என்று அளித்த உறுதிமொழியை மீறி, புதிய கல்விக் கொள்கை மூலம் இந்தி மொழியைத் திணிக்கும் முயற்சியில் மோடி அரசு ஈடுபட்டால், இந்தித் திணிப்பை எதிர்த்து 1965 மொழிப் போராட்டத்தை விட பன்மடங்கு எழுச்சியுடன் தமிழ்நாட்டில் போராட்டம் வெடிக்கும் என்பதை இந்தி எதிர்ப்புப் போரில் களம் கண்டவன் என்ற முறையில் எச்சரிக்கிறேன் என்று மதிமுக பொது செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.

Image caption கோப்புப் படம்

கல்வியை அரசுப் பொறுப்பிலிருந்து முற்றிலும் விடுவித்து, கார்ப்பரேட், தனியாரிடம் ஒப்படைக்கும் வகையில் தேசியக் கல்விக் கொள்கையை உருவாக்கி உள்ள கஸ்தூரி ரங்கன் குழு பரிந்துரைகளை மத்திய அரசு ஏற்கக்கூடாது என்று வலியுறுத்துகிறேன் என வைகோ தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

எந்த காலத்திலும் மொழி திணிப்பை திமுக எதிர்க்கும். மொழி திணிப்புக்கு எதிராக திமுக குரல் கொடுக்கும். எந்த மொழி திணிப்பாக இருந்தாலும், அது இந்தியாக இருந்தாலும் திமுக எதிர்க்கும். நாடாளுமன்றத்தில் இந்தி திணிப்பை திமுக எதிர்க்கும் என்று திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கூறியுள்ளார்.

'நாட்டின் பன்முகத்தன்மையைச் சீர்குலைத்துவிடும்'

இந்தி திணிப்புக்கு எதிராக ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ள அமமுக பொது செயலாளர் டிடிவி தினகரன், 8ஆம் வகுப்பு வரை இந்தி கட்டாய பாடமாக்கப்படும் என்று மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கை வரைவு அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருப்பது கண்டனத்திற்குரியது என்று கூறியுள்ளார்.

இந்தி பேசாத மாநில மக்களின் மீது இந்தியைத் திணிக்கும் இம்முயற்சி நாட்டின் பன்முகத்தன்மையைச் சீர்குலைத்துவிடும். இந்தி பேசாதவர்களை இரண்டாந்தர குடிமக்களாக மாற்றிவிடும். எனவே இத்திட்டத்தினை மத்திய அரசு உடனடியாக கைவிட வேண்டும் .

தமிழ்நாட்டில் இந்தி திணிப்பு என்பது கந்தக கிடங்கில் தீ வைப்பது போன்றது. இந்தி திணிப்பை எதிர்க்க திமுக என்ன விலையை வேண்டுமானலும் தரும் என்று திமுக நாடாளுமன்ற உறுப்பினர் திருச்சி சிவா தெரிவித்துள்ளார்.

'வரவேற்கத்தக்க வகையில் பல அம்சங்கள்'

மத்திய அரசின் வரைவு தேசியக் கல்விக் கொள்கையில் வரவேற்கத்தக்க வகையில் பல அம்சங்கள் இடம்பெற்றுள்ளன.அதேநேரத்தில் மும்மொழிக் கொள்கை என்ற பெயரில் தமிழ்நாடு உள்ளிட்ட இந்தி பேசாத மாநிலங்களில் இந்தி மொழியைத் திணிக்கும் முயற்சியை அனுமதிக்க முடியாது என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.

1968-ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப் பட்ட கல்விக் கொள்கையில் மும்மொழிக் கொள்கை அறிவிக்கப்பட்டது. கடந்த 50 ஆண்டுகளாக இந்த நடைமுறை தொடர்கிறது. அதன்படி உள்ளூர் மொழி, ஆங்கிலம் ஆகியவற்றுடன் இந்தியையும் ஒரு மொழிப்பாடமாக படிப்பது கட்டாயமாக்கப்பட்டிருக்கிறது. கடந்த 50 ஆண்டுகளாக இந்நடைமுறை மத்திய இடைநிலைக் கல்வி வாரியப் பாடத்திட்டத்தை பின்பற்றும் பள்ளிகளில் மட்டும் கடைபிடிக்கப் பட்டு வந்த நிலையில், இனிவரும் காலங்களில் மாநிலப்பாடத்திட்ட பள்ளிகளுக்கும் மும்மொழிக் கொள்கை நீடிக்கப்படும் என்று தேசியக் கல்விக் கொள்கையுயில் கூறப்பட்டிருப்பது அதிர்ச்சியளிக்கிறது என்று ராமதாஸ் கூறியுள்ளார். .

இதே நேரத்தில் இருமொழிக் கொள்கைதான் தொடர முடியும் என மத்திய அரசுக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியுள்ளதாக தமிழக பள்ளிக்கல்வி துறை அமைச்சர் செங்கோட்டையன் ஊடகங்களில் தெரிவித்துள்ளார்.

பிற செய்திகள் :

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்