இந்தி எதிர்ப்புப் போராட்டமும் இரண்டாம் உலகப்போரும் - என்ன தொடர்பு?

பெரியார் படத்தின் காப்புரிமை DHILEEPAN RAMAKRISHNAN

(இந்தி திணிப்பு எதிர்ப்புப் போராட்டம் தொடர்பான பிபிசி தமிழின் மூன்று பாகங்கள் கொண்ட கட்டுரைத் தொடரின் முதல் பாகம் இது.)

இந்தி திணிப்புக்கு எதிரான குரல்கள் தமிழகத்தின் அரசியல் மற்றும் பொது வெளிகளில் மீண்டும் ஒலிக்கத் தொடங்கியுள்ளன.

அதற்குக் காரணம் இந்தியாவின் புதிய தேசியக் கல்விக்கொள்கையை அமைக்க உருவாக்கப்பட்ட கஸ்தூரிரங்கன் குழுவின் வரைவு அறிக்கையில் நடுநிலைப் பள்ளிவரை இந்தி, ஆங்கிலம், தொடர்புடைய மாநிலத்தின் மொழி ஆகியவற்றை உள்ளடக்கிய மும்மொழிகளையும் கொண்ட பாடத்திட்டம் கட்டாயமாக்கப்பட வேண்டும் என்று இந்திய அரசின் மனிதவள மேம்பாட்டுத் துறைக்கு பரிந்துரை செய்துள்ளதுதான்.

இந்தியாவிலேயே இந்தி திணிப்பு எதிர்ப்புப் போராட்டங்களுக்கு பெயர்போன மாநிலமான தமிழகத்தில் இந்தப் பரிந்துரைக்கும் கடுமையான எதிர்ப்புக் கிளம்பியது.

சனியன்று, #StopHindiImposition, #TNAganistHindiImposition ஆகிய ஹேஷ்டேகுகள் ட்விட்டரில் உலக அளவில் இரண்டாம் மற்றும் நான்காம் இடத்தைப் பெற்றன.

இவற்றைத் தொடர்ந்து, இந்தி கட்டாயமாக்கப்படாது என்று மத்திய, மாநில அரசுகளின் தரப்பிலிருந்து உடனடியாக பதிலும் வந்தது.

மீண்டும் ஒரு மொழிப்போருக்கு வழிவகுக்க வேண்டாம் என்று சில தமிழக அரசியல் தலைவர்கள் வன்மையாக தங்கள் எதிர்ப்பைப் பதிவு செய்தனர்.

படத்தின் காப்புரிமை Getty Images

இந்தச் சூழலில் மொழிப்போரின் தாக்கம் தமிழகத்தில் எவ்வளவு ஆழமாக இருந்தது அதன் பின்னணி ஆகியவற்றை இந்தக் கட்டுரை விளக்குகிறது.

இந்திதிணிப்பு எதிர்ப்புப் போராட்டங்கள் - முதல் அத்தியாயம்

இந்தியா விடுதலை அடையும் முன்னரே 1937-இல் பிரிக்கப்படாத மதராஸ் மாகாணத்தில் ராஜாஜி என்று பரவலாக அறியப்படும் சி.ராஜகோபாலாச்சாரி தலைமையிலான காங்கிரஸ் அரசு, நடுநிலைப் பள்ளி வகுப்புகளில் (6,7,8ஆம் வகுப்புகள்) இந்தி கற்பிப்பதைக் கட்டாயமாக்கியது.

அப்போது மதராஸ் மாகாணத்தில் இருந்த பள்ளிகளில் மாணவர்களுக்கு விருப்ப மொழிப் பாடமாக இருந்த தமிழ், தெலுங்கு, கன்னடம் அல்லது மலையாளம் ஆகிய மொழிகளில் ஒன்றுடன் இந்தி பயில்வதும் கட்டாயமானது.

மதராஸ் மாகாண காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் சிலரே இதற்கு எதிர்ப்புத் தெரிவித்தாலும் இந்தியாவில் பரவலாகப் பேசப்படும் மொழியைப் படிக்க வேண்டும் என முதலமைச்சர் ராஜாஜி உறுதியாக இருந்தார்.

சுதந்திரம் அடையும் முன்னர் தேவனாகிரி எழுத்து வடிவில் எழுதப்படும் இந்தி 'இந்துஸ்தானி' என்ற பெயரிலேயே பரவலாக வழங்கப்பட்டது. நவீன இந்தி, உருது ஆகிய மொழிகளை உள்ளடக்கிய பொது வடிவமாகவே இந்துஸ்தானி இருந்தது.

தேசப் பிரிவினைக்குப் பிறகு, வட இந்திய மொழியான கடிபோலியை அடிப்படையாகக் கொண்ட தேவனாகிரி எழுத்து வடிவம் கொண்ட இந்துஸ்தானி 'இந்தி' என்றும், அரபு மற்றும் பாரசீக மொழிச் சொற்களின் தாக்கம் அதிகம் கொண்ட, பாகிஸ்தான் பகுதிகளில் பரவலாக வழங்கப்பட்ட, தேவனாகிரி எழுத்து வடிவம் கொண்ட இந்துஸ்தானி உருது என்றும் வழங்கப்படுகின்றன என்பது இந்தி எதிர்ப்புப் போராட்டத்துடன் தொடர்பில்லாத கூடுதல் தகவல்.

படத்தின் காப்புரிமை rajyasabha.nic.in

கட்டாய இந்திக்கு எதிராக நீதிக் கட்சியும், பெரியார் தலைமையில் பின்னர் திராவிட கழகமாக உருவான சுயமரியாதை இயக்கமும் போராட்டத்தில் இறங்கின.

தமிழர் படை

1938 ஆகஸ்டு 1ஆம் தேதி 'தமிழர் படை' என்ற பெயரில் இந்தித் திணிப்பு எதிர்ப்பாளர்கள் உறையூரில் தொடங்கி தமிழகம் முழுதும் கிராம நகர வேறுபாடின்றி மாபெரும் பேரணியாகச் சென்று பட்டிதொட்டியெங்கும் 87 பொதுக்கூட்டங்களை நடத்தினர்.

மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் மற்றும் குமாரசாமி பிள்ளை உள்ளிட்டோர் அடங்கிய இந்தக் குழுவினர், செப்டம்பர் 11, 1938 அன்று மதராஸ் (இன்றைய சென்னை) நகரில் இருந்த பிரிட்டிஷ் - இந்திய அரசின் அலுவலகங்களை முற்றுகையிட்டு சிறை சென்றனர்.

இந்தத் தமிழர் படை பெரியாரின் சுயமரியாதை இயக்கம் மற்றும் முஸ்லிம் லீக் ஆகியவற்றால் கூட்டாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

தமிழகமெங்கும் கட்டாய இந்தி திணிப்பை எதிர்த்துப் போராடிய ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். போராட்டங்களில் கலந்து கொண்டு கைது செய்யப்பட்ட நடராசன் மற்றும் தாளமுத்து ஆகியோர் 1939இல் ஜனவரி மற்றும் மார்ச் மாதங்களில் அடுத்தடுத்து மரணம் அடைந்தது போராட்டத்தைத் தீவிரப்படுத்தியது.

இருவருமே சிறையில் நோய்வாய்ப்பட்டு, விடுதலைக்காக மன்னிப்பு கடிதம் கொடுக்க மறுத்ததால் உயிரிழந்தனர்.

அவர்கள் இருவரின் இறுதி ஊர்வலங்களிலும் பல்லாயிரம் பேர் கலந்துகொண்டனர். அவர்கள் மொழிப்போர் தியாகிகளாக இன்றளவும் கொண்டாடப்படுகின்றனர்.

இரண்டாம் உலகப்போரும் இந்தி திணிப்பு எதிர்ப்புப் போராட்டமும்

பிரிட்டிஷ் இந்தியா இரண்டாம் உலகப்போரில் பங்கேற்பதை எதிர்த்து நாடெங்கும் உள்ள காங்கிரஸ் மாகாண அரசுகள் நவம்பர் 1939இல் பதவி விலக வேண்டும் என்று அப்போது காங்கிரஸ் கட்சி முடிவு செய்தது.

இரண்டாம் உலகப்போர் தொடங்கியபோதே இந்தியா அதில் பங்கேற்க கூடாது என்று காங்கிரஸ் கட்சி தீர்மானம் நிறைவேற்றி இருந்தது.

அப்போதைய வைஸ்ராய் விக்டர் ஹோப் பிரிட்டிஷ் - இந்திய வீரர்களை இரண்டாம் உலகப்போரில் பங்கேற்க வைக்கும் முடிவுக்கு எதிராக காங்கிரஸ் தலைமை இந்த பதவி விலகல் முடிவை எடுத்தது.

பாம்பே, பிகார், ஐக்கிய மாகாணம், மத்திய மாகாணம், ஒரிசா ஆகிய மாகாண அரசுகள் 1939 அக்டோபர், நவம்பர் மாதங்களில் ஆட்சியிலிருந்து விலகின.

இந்தி பாடத்தைக் கட்டாயமாக்கிய ராஜாஜி தலைமையிலான மதராஸ் காங்கிரஸ் அரசும் அப்போது விலகியது.

அனைத்து மாகாணங்களும் பிரிட்டிஷ் அரசால் நியமிக்கப்பட்ட ஆளுநர்களின் ஆட்சியின்கீழ் வந்தன.

அதே ஆண்டில் இந்தி எதிர்ப்புப் போராட்டங்களை நிறுத்திய பெரியார் பள்ளிகளில் கட்டாய இந்தி என்ற ஆணையைத் திரும்பப் பெற வேண்டும் என்று ஆளுநரிடம் வலியுறுத்தினார்.

தீவிரமாக நடந்த போராட்டங்களைத் தொடர்ந்து, பிப்ரவரி 21, 1940-இல் அப்போதைய மதராஸ் மாகாண ஆளுநர் ஜான் எர்ஸ்கின், இந்தி கற்பதை கட்டாயமாக்கும் அரசின் உத்தரவைத் திரும்பப் பெற்றார்.

போராட்டத்தின் தாக்கம்

தமிழகத்தில் திராவிடக் கொள்கைகளைப் பரவலாக்கவும், மக்கள் ஆதரவைப் பெறவும் இந்தி எதிர்ப்புப் போராட்டத்தின் முதல் அத்தியாயம் முக்கியப் பங்காற்றியது.

இந்தப் போராட்டம் நடந்து சுமார் கால் நூற்றாண்டு காலத்துக்குப் பிறகு, நடந்த இந்தி எதிர்ப்புப் போராட்டத்தின் இரண்டாம் அத்தியாயம் இன்றுவரை தமிழகத்தை ஆட்சி செய்யும் திராவிட அரசியலை நிலைபெறச் செய்வதில் முக்கியப் பங்காற்றியது.

மக்கள் ஆதரவைப் பெற்றிருந்த காமராஜர் போன்ற தலைவரே தேர்தலில் தோற்கும் அளவுக்கு காங்கிரஸ் கட்சிக்கு எதிரான அலையை உருவாக்கியது அந்தப் போராட்டம்.

அது ஏன் நடந்தது, அதன் பின்னர் உண்டான தாக்கம் என்ன போன்றவற்றை, நாளை வெளியாகவுள்ள இந்தத் தொடரின் இரண்டாம் பாகத்தில் பார்க்கலாம்.

பிற செய்திகள் :

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்