நந்தா தேவி மலையில் காணாமல் போன மலையேறும் வீரர்கள்

நந்தா தேவி படத்தின் காப்புரிமை Getty Images

இந்தியாவின் இரண்டாவது உயரமான மலையான நந்தா தேவியில் மலை ஏறும் வீரர்கள் எட்டு பேரை காணவில்லை.

13ஆம் தேதி மே மாதம் இமய மலையின் 7816 மீட்டர் உயரம் கொண்ட நந்தா தேவி மலையின் கிழக்கு உச்சிக்கு ஏற தொடங்கினர்.

மலையேற சென்ற எட்டு பேரில் நான்கு பேர் பிரிட்டனை சேர்ந்தவர்கள்.

அவர்கள் திட்டமிட்டபடி மலையடிவார முகாமிற்கு திரும்பி வராததால் அவர்களை மீட்க குழு ஒன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இருப்பினும் அதிகமழை மற்றும் பனிப்பொழிவு என வானிலை மோசமாக இருப்பதால் தேடுதல் பணி பாதிப்படையும் என உள்ளூர் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

"அவர்கள் தங்கு முகாமிற்கு திரும்பி வரவில்லை என்பதால் நாங்கள் அவர்களை தேடுவதற்கான பணிகளை தொடங்கிவிட்டோம். ஆனால் மோசமான வானிலையால் தேடுதல் பணி பாதிப்படைகிறது" என பிதோரகர் மாவட்டத்தின் ஆட்சியர் விஜய் குமார் ஏஎஃப்பி செய்தி முகமையிடம் தெரிவித்துள்ளார்.

ஞாயிறன்று காலை இந்திய விமானப் படையை சேர்ந்த ஹெலிக்காப்டர் ஒன்றும் தேடுதல் பணியில் பயன்படுத்தப்படும் என்று தெரிவித்தனர்.

பிரிட்டனை சேர்ந்த நால்வர், அமெரிக்கர்கள் இரண்டு பேர், ஆஸ்திரேலியாவை சேர்ந்த ஒருவர் மற்றும் இந்தியாவை சேர்ந்த ஒருவர் என மொத்தம் எட்டு பேர் அந்த குழுவில் இருந்தனர்.

அவர்கள் மலையேறுதலில் அனுபவம் மிக்க பிரிட்டனை சேர்ந்த மார்டின் மொரானால் வழிநடத்தப்பட்டனர்.

ஸ்காட்லாந்தில் உள்ள அவரின் நிறுவனத்தின் சார்பாக இமய மலையில் பல பயணங்கள் மேற்கொள்ளப்பட்டன.

மொரானின் முகநூல் பக்கத்தில் மலை ஏறுதல் தொடங்குவதற்கு ஒருநாள் முன்னதாக "போவாலியில் உள்ள நீம் கரோலி பாபா கோயிலில் இருந்து புறப்படுகிறோம்" என்ற வாசகத்துடன் புகைப்படம் ஒன்றை பகிர்ந்துள்ளார்.

படத்தின் காப்புரிமை AFP

அதனை அடுத்து மே 22ஆம் தேதி 4,870 மீட்டர்கள் உயரத்தில் உள்ள அவர்களின் இரண்டாம் முகாமில் இருந்து எடுக்கப்பட்ட புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.

மேலும் அதில் அந்தக் குழு இதுவரை மலையேறுதலில் செல்லாத உயரத்துக்கு செல்லும் என பகிர்ந்துள்ளார்.

அந்தக் குழு எப்போது திரும்பும் என்பதில் பல முரணான தகவல்களும் உள்ளன. இருப்பினும் உள்ளூர் ஊடகத்தின் படி, அவர்கள் நந்தா தேவி மலை அடிவார முகாமிற்கு மே 31ஆம் தேதி வருவதாக இருந்தது என்றும் அருகாமையில் உள்ள முன்சியாசிரி கிராமத்துக்கு ஜூன் 1ஆம் தேதி வருவதாக இருந்தது என்றும் தெரிய வருகிறது.

பிரிட்டனின் வெளிநாடு மற்றும் காமன்வெல்த் அலுவலகத்தின் செய்தி தொடர்பாளர் ஒருவர், "இந்தியாவின் இமய மலையில் பிரிட்டனை சேர்ந்த நான்கு பேர் காணாமல் போனதாக வந்த செய்தியை தொடர்ந்து இந்திய அதிகாரிகளுடன் தொடர்பில் உள்ளோம். எங்கள் உதவி தேவைப்படும் பிரிட்டிஷ் மக்களுக்கு எங்களால் ஆன உதவியை நாங்கள் செய்வோம்" என்று தெரிவித்துள்ளார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்