கருணாநிதி: “இந்தி எதிர்ப்புப் போராட்டமும் நானும்” 

அண்ணாதுரை படத்தின் காப்புரிமை TWITTER

(முன்னாள் முதலமைச்சர் மு. கருணாநிதியின் பிறந்த நாளை முன்னிட்டு, 1965ஆம் ஆண்டு நடைபெற்ற இந்தி எதிர்ப்புப் போராட்ட அனுபவங்கள் அவரது நெஞ்சுக்கு நீதி நூலில் இருந்து தொகுத்து இங்கே தரப்படுகின்றன ).

பேரறிஞர் அண்ணா 25.01.1965 நள்ளிரவில் கைதுசெய்யப்பட்டார். குளித்தலையிலே கூட்டத்தை முடித்துக்கொண்டு கோவை நோக்கி கண்டனக் கூட்டத்தில் கலந்துகொள்ளப் பயணம் செய்துகொண்டிருந்த என்னை இரவு ஒரு மணி அளவில் பசுபதிபாளையத்தில் வழியிலே வந்து வளைத்துக்கொண்டனர் காவல்துறையினர். மற்ற கழக முன்னணியினருக்கும் காத்திருந்தது சிறைவாசம். 

1965 ஜனவரி 25ல் தமிழகம் எங்கணும் உள்ள மாணவர் இந்தித் திணிப்பிற்கு எதிர்ப்பைத் தெரிவித்து ஆங்காங்கே மாபெரும் கண்டன ஊர்வலங்களை நடத்தினர்.  அன்று மாலை 5.30 மணி அளவில் சென்னை மெரீனா கடற்கரையில் மாணவர்கள் கூட்டம் நடைபெற்றது. அங்கே வெள்ளமெனத் திரண்டிருந்திருந்த இரண்டு லட்சத்திற்கு மேற்பட்ட பொதுமக்கள் முன்னிலையில் சில இந்தி மொழிப் புத்தகங்களுக்கு எரியூட்டப்பட்டது. 

மதுரையில் வடக்குமாசி வீதி வழியாக மாணவர்கள்ஊர்வலம் சென்றபோது அர்பன் ஜில்லா காங்கிரஸ் குழு அலுவலகத்தின் முன்னால் காங்கிரஸ்காரர்கள் அரிவாள், ஈட்டி முதலான ஆயுதங்களுடன் பாய்ந்து வந்து மாணவர்களைத் தாக்கினர். ஒரு கல்லூரி மாணவர் படுகாயம் அடைந்து உயிர் ஊசலாடும் நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். 

இந்த மதுரைச் சம்பவம் உடனே மாநிலமெங்கும் பரவியது காட்டுத்தீயாக. அமைதியாக அறப் போரிலே ஈடுபட்ட மாணவர்களின் நெஞ்சிலே ஆத்திரக்கனலை அது மூட்டிவிட்டது. 

25ஆம் தேதி இரவுதான் அண்ணாவும் நாவலரும் நானும் மற்ற கழக முன்னணியினரும் ஆங்காங்கே இரவோடு இரவாக தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டோம்.  தமிழ்நாட்டில் மட்டுமின்றி கேரளம், கர்நாடகம், ஆந்திரம்,வங்காளம் முதலான மற்ற மாநிலப் பகுதிகளிலும் அந்நாள் துக்க நாளாகவே கொண்டாடப்பெற்றது. 

அன்று கழகக் கண்மணிகள் கறுப்புச் சின்னங்கள் அணிந்து தத்தம் இல்லங்களிலே கறுப்புக்கொடி ஏற்றித் தங்கள் வேதனையினை வெளிப்படுத்தினர். பொது இடங்களுக்குப் போகாமல் அவரவருக்குச் சொந்தமான இடங்களில் மட்டுமே நின்று கழகத்தவர் துக்கங்கொண்டாடிய போதிலும் கறுப்புச் சின்னங்களும் கறுப்புக் கொடிகளும் காங்கிரசாரின் கண்களை உறுத்தினபோலும். எனவே வேண்டுமென்றே வீண் வம்பு இழுப்பதற்கு என்றே அவர்கள் ஏவிவிட்டனர் குண்டர் படை ஒன்றை. 

தமிழர்களுக்காக துடித்தாரா? (அ) துரோகமிழைத்தாரா? - கருணாநிதியின் கதை

இதனால் தெருவிலே நடமாட முடியாதபடி கறுப்புச் சின்னம் அணிந்த கழகத் தோழர்கள் துரத்திப்பிடிக்கப்பட்டனர். சென்னை ராயபுரத்தில் உள்ள கழகத்தின் தலைமை நிலையமான அறிவகத்தின் மாடி மீது ஏற்றப்பட்டிருந்த கறுப்புக் கொடியை அறுத்தெறிந்தார்கள் காங்கிரஸ்காரர்கள். முரசொலி அலுவலகத்தின் முன்பும் குண்டர்கள் வந்து கூச்சல்போட்டவாறே கற்களை வீசினர். கலகம் விளைவித்தனர். அங்கே ஏற்றப்பட்டிருந்த கறுப்புக்கொடியும் இறக்கப்பட்டது. துணையாசிரியர்கள் தடியடிக்கு ஆளாகி கைதுசெய்யப்பட்டனர்.  

சென்னை நுங்கம்பாக்கம் அவென்யு சாலையில் உள்ள அண்ணா அவர்களின் இல்லத்தின் முன்பும் தேனாம்பேட்டையில் லட்சிய நடிகர் எஸ்.எஸ். ராஜேந்திரன் இல்லத்தின் முன்பும் கோபாலபுரத்தில் உள்ள என்னுடைய வீட்டின் முன்பும் கறுப்புக் கொடிகளை இறக்கி கலவரங்களை உருவாக்கிட முயன்றனர் சிலர்.  

இந்தித் திணிப்பினை எதிர்த்திடவும் மதுரையிலே மாணவர் ஒருவர் வெட்டப்பட்ட வன்முறைச் செயலைக் கண்டித்திடவும் ஊர்வலம் ஒன்றை நடத்தினர் சிதம்பரம் அண்ணாமலை பல்களைக்கழக மாணவர்கள். 

27.01.1965 அன்று காலை ஏறத்தாழ 9.30 மணியளவில் அவர்கள் ஊர்வலமாகக் கிளம்பி  சிதம்பரத்தில் நான்கு பெருந்தெருக்களையும் வலம் வந்திட முற்பட்டனர். ஆனால், புகைவண்டி நிலையத்தருகில் நெருங்கிடும்போதே தடுத்து நிறுத்தப்பட்டனர்.  அவர்களுடைய நியாயமான கோரிக்கைகள் நிராகரிக்கப்பட்டன. தடியடிகள் நடத்தப்பட்டன. மாணவர்கள் தாறுமாறாகத் தடுக்கிவிழும் வகையில் ஓடஓட விரட்டப்பட்டனர். திடீரென்று துப்பாக்கிக் குண்டுகள் வெடித்தன. 

அண்ணாமலை நகரில் அருமை மாணவர் ராசேந்திரனின் உடல் மண்ணிலே சாய்ந்திட்ட பிறகும் இளங்கோவனின் உயிர் துப்பாக்கிக் குண்டுகளுக்கு இரையாகிய பின்னரும் தடியடி தர்பார் தடைப்படவில்லை. அடக்குமுறை கொடுந்தீ அடங்கிடவில்லை. துப்பாகிகள் வெடிப்பதும் ஓய்ந்திடவில்லை. 

இதற்கிடையில் குடியரசு நாளுக்கு முந்தின நாள் இரவு கைதுசெய்யப்பட்ட அண்ணா அவர்களும் கழக முன்னணியினர் சிலரும் யாரும் எதிர்பாராதவகையில் 1965 பிப்ரவரி முதல் தேதி விடிவதற்கு முன்னர் இரண்டு மணி அளவில் விடுதலை செய்யப்பட்டனர். திருச்சி துணைச் சிறையில் அடைக்கப்பட்டிருந்த நானும் மற்ற நண்பர்களும் பிப்ரவரி 2ஆம் நாள் மாலை ஆறுமணி அளவில் விடுதலை செய்யப்பட்டோம். 

ஆட்சிமொழி பற்றிய விதியினை அரசியல்அமைப்புச் சட்டத்திலே திருத்தாவிட்டால் நேருவின் உறுதிமொழிக்கும் சட்டவடிவம் தரப்படாவிட்டால் இந்தியா பல துண்டுகளாகச் சிதறுண்டுவிடும் என்று பல்வேறு வழக்கறிஞர் சங்கங்களும் கண்டனக் கணைகளைத் தொடுத்தன. 

1965 பிப்ரவரி இரண்டாவது வாரத்திலே தமிழகத்தில் துப்பாக்கிக் குண்டுகளின் வெடிச் சத்தங்கள் விண்ணைப் பிளந்தன. ஒரே நாளில் ஒன்பது இடங்களிலே துப்பாக்கிச் சூடு, பதினைந்து இடங்களில் துப்பாக்கிச் சூடு என்றெல்லாம் செய்திகள் வரும் அளவுக்கு குருவிகளைப் போலச் சுட்டுத்தள்ளப்பட்டனர். 

அந்த சமயம் இந்தியாவி்ல தமிழ் இனமே வீழ்ச்சிப் பாதாளத்தில் வீழ்ந்துவிடப் போகிறதே என்று ஆத்திரங்கொண்ட போலீஸ்கராரர் ஒருவர் மதுராந்தகம் சப்-ஜெயிலைத் தாம் காவல் காத்திடும் கடமைகளைக்கூட மொழிப்பற்றால் ஒருகணம் மறந்துவிட்டு அருகில் இருந்த அஞ்சல் பலகையில் காணப்பட்ட இந்தி எழுத்துக்களைச் சுட்ட மறக்கவொண்ணா நிகழ்ச்சியும் உண்டு.

படுகாயமுற்றோர் - பரிதாபமாக உயிரிழந்தோர் பட்டியல் நாளுக்கு நாள் நீளமாகிக்கொண்டே செல்வதைக் கண்ட அண்ணா அவர்களின் நெஞ்சமோ பதறிற்று. தூய உள்ளத்துடனும் தொண்டாற்றும் பண்புடனும் ஒரு கடும் போராட்டத்துக்குத் தம்மை காணிக்கை ஆக்கிக்கொண்டுவிட்ட மாணவர்களைப் பாராட்டிய அவர், கிளர்ச்சிகளையும் நேரடி நடவடிக்கைகளையும் தற்காலிகமாக நிறுத்திவைக்குமாறு வேண்டுகோள் விடுத்தார். 

ஆளவந்தார்களின் அலட்சியப்போக்கால் ஆணவப் பேச்சால் ஆங்காரம் அடைந்தித்திட்ட மாணவ மணிகளும் கிளர்ச்சிகளின் விளைவுகள் பற்றித் தீவிரமாகச் சிந்தித்தனர். போராட்டத்தையும் ஒத்திவைக்க இசைந்தனர்.

அப்பாடா புயல் ஓய்ந்தது என்று என்னைப் போன்றவர்கள் நெடுமூச்செறிந்தோம், நிம்மதி வந்துவிடப்போவதாக நினைத்து. ஆனால், அடுத்த ஒரு வாரத்திற்குள்ளோ? இரவோடு இரவாக என்னை நோக்கிப் பாய்ந்தது இந்திய பாதுகாப்புச் சட்டம். பருந்தாகத் தூக்கிச்சென்றது பாளையங்கோட்டைக்கு. 

இந்தியப் பாதுகாப்புச் சட்டம் 30 (1) பிரிவின்படிதான் நான் கைதுசெய்யப்பட்டு பாளையங்கோட்டைச் சிறையிலே அடைக்கப்பட்டேன். அந்தச் சட்டப்படி முதன் முதலில் கைதுசெய்யப்படும் பேறு பெற்றிட்ட கழகத் தொண்டன் நான்தான் என்பது குறிப்பிடத்தக்கது. 

அதற்கு அடக்கு முறைய அவிழ்த்துவிட்ட அரசுத் தரப்பிலே கூறப்பட்ட காரணம், இந்தி எதிர்ப்புக் கிளர்ச்சியிலேயே மாணவ மணிகளை ஈடுபடுத்துவதிலே நான்தான் முன்னிலையில் முனைந்து நின்றேன்; அவர்களைத் தூண்டிவிட்டேன் என்பதாகும். 

1965 ஜனவரி 26 - குடியரசு நாளைத் துக்க நாளாகக் கொண்டாட வேண்டும் என்பதே கழகம் எடுத்திட்ட முடிவாகும். அதற்குக் கட்டுப்பட்டே நானும் மற்ற கழக முன்னணியினரும் கண்ணியத்துடன் கடமையாற்றிடப் பொதுமக்களின் ஆதரவைத் திரட்டின எழுத்துமூலமும் பேச்சு மூலமும் முற்பட்டோம். 

மாணவச் செம்மல்களோ அந்தக் குடியரசு நாளைக்கு ஒரு நாள் முன்னதாகவே இந்தியை எதிர்த்து கண்டன ஊர்வலங்களும் கூட்டங்களும் நடத்துவது என்றும் தட்சிண பாரத இந்தி பிரச்சார நூல்களைச் சென்னைக் கடற்கரையிலே தீயிட்டுக் கொளுத்துவது என்றும் தீர்மானம் நிறைவேற்றிவிட்டனர். அதன்படியே செயலிலும் இறங்கிவிட்டனர். 

அரசு அவிழ்த்துவிட்ட அடக்கு முறை - துப்பாக்கிச் சூடுகள் காரணமாக அமைதியாகத் தொடங்கிய மாணவரின் அறப்போர் எரிமலையாக வெடித்திட்டபோது தனைப் பயன்படுத்திக்கொண்டு சமூக விரோதிகள் வன்முறைகளுக்கும் வழிவகுத்தபோது போராட்டத்தைக் கைவிடுமாறு அறிவுரைகள் வழங்கி அறிக்கை வெளியிட்டவர் அண்ணா அவர்கள்தான். 

என்னை மாணவத் தலைவர்கள் சந்தித்தபோது அண்ணாவின் அந்தக் கட்டளைக்குக் கட்டுப்பட்டு நடப்பதே கழக மாணவரின் தலையாய கடமையாகும் என்பதையே நான் அழுத்தமாக வலியுறுத்தினேன். 

ஆனால், காங்கிரஸ் அரசோ மாணவர்களைத் தூண்டிவிட்டேன் என்று என் மீதே குற்றத்தைச் சுமத்தியது. பாளையங்கோட்டை கொட்டடியிலும் பூட்டிக் களித்தது.  பாளையங்கோட்டை சிறைக்குச் சென்ற ஒரு வாரத்திற்கெல்லாம் இனிக்கும் செய்தியொன்று என் செவிக்கு எட்டியது. 

தமிழக மாணவர்களின் இந்தி எதிர்ப்பு போராட்டக்குழு தனது இந்தி எதிர்ப்புக் கிளர்ச்சியைக் காலவரையின்றி ஒத்திவைத்துவிட்டது என்பதே அந்தச் செய்தி. 

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்