நரேந்திர மோதியை புகழ்ந்ததால் காங்கிரசிலிருந்து நீக்கப்பட்ட முன்னாள் எம்.எல்.ஏ

மோதி படத்தின் காப்புரிமை The India Today Group

இந்தியாவின் முக்கிய நாளிதழ்களில் வெளியான செய்திகளை பிபிசி தமிழின் வாசகர்களுக்காக தொகுத்து வழங்குகிறோம்

தி இந்தியன் எக்ஸ்பிரஸ் - மோதியை புகழ்ந்ததால் காங்கிரசில் இருந்து நீக்கம்

பாரதிய ஜனதா கட்சிக்கு கிடைத்துள்ள மக்களவைத் தேர்தல் வெற்றி பிரதமர் நரேந்திர மோதியின் வளர்ச்சித் திட்டங்கள் மற்றும் வெளியுறவுக் கொள்கைகளுக்கு கிடைத்த வெற்றி என்று ஃபேஸ்புக் பதிவில் கூறிய கேரள மாநிலத்தைச் சேர்ந்த, காங்கிரஸ் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் அக்கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.

இதற்கு முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் இருந்த அவர் குஜராத் வளர்ச்சி மாதிரியை கேரளாவின் இடதுசாரி அரசும் பின்பற்ற வேண்டும் என்று கூறியதால் 2009இல் மார்க்சிஸ்ட் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார்.

படத்தின் காப்புரிமை AP Abdullakutty/fb
Image caption அப்துலாக்குட்டி

அப்துலாக்குட்டி பாஜகவில் இணைந்து எதிர்வரவுள்ள மஞ்சேஸ்வர் தொகுதிக்கான சட்டமன்ற இடைத் தேர்தலில் போட்டியிடுவார் என்று கூறப்படுகிறது என தி இந்தியன் எக்ஸ்பிரஸ் ஆங்கில நாளிதழ் தெரிவிக்கிறது.

தி இந்து ஆங்கிலம் - பாரதியாருக்கு காவி முண்டாசு

தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம் வெளியிட்டுள்ள 12ஆம் வகுப்புக்கான பொதுத்தமிழ் நூலின் அட்டையில், கவிஞர் பாரதியாரின் முண்டாசு, வழக்கமான வெள்ளை நிறத்துக்குப் பதிலாக காவி நிறத்தில் இருப்பது சர்சையைக் கிளப்பியுள்ளது.

இது கல்வியைக் காவிமயமாக்கும் முயற்சி என்று திமுகவைச் சேர்ந்த முன்னாள் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு கூறியுள்ளார்.

"இதில் மதத்தையோ அரசியலையே திணிக்கும் நோக்கம் இல்லை; தவறு நடந்திருந்தால் சரி செய்யப்படும்," என்று பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தின் தலைவர் வளர்மதி தெரிவித்துள்ளார் என்று தி இந்து செய்தி வெளியிட்டுள்ளது.

தமிழக பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையனைத் தொடர்புகொள்ள முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டும் அவரைத் தொடர்புகொள்ள இயலவில்லை என தி இந்து தெரிவிக்கிறது.

தினமணி - மன நல காப்பகவாசிகளுக்கு வேலைவாய்ப்பு

கீழ்ப்பாக்கம் மனநல காப்பகத்தில் சுமார் 100-க்கும் மேற்பட்ட நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர். உளவியல் மற்றும் மனநல ரீதியாக பாதிக்கப்பட்ட பலருக்கும் ஆண்டு சிகிச்சையளிக்கப்டுகிறது. பலர் பூரண குணமடைந்து வீடுகளுக்கு திரும்பினாலும் கைவிடப்பட்டவர்கள் அங்கேயே தங்கி தொழிற்பயிற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இவர்கள் வெளியே சென்று பணியாற்றுவதற்கான வாய்ப்பு வழங்கப்படவிருக்கிறது. மத்திய தொழிலாளர் நலத்துறையின் மாதிரி வேலைவாய்ப்புத் திட்டத்தின் கீழ் இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட விருக்கிறது. மாற்றுத்திறனாளிகள், பட்டதாரி இளைஞர்களுக்கு மட்டுமே இதுபோன்ற வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வந்தன. ஆனால் மாநிலத்திலேயே முதன்முறையாக மனநல காப்பகத்தில் உள்ளவர்களுக்கும் இத்தகைய பணி வாய்ப்புகளை ஏற்படுத்தித் தர நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டிருக்கிறது என்கிறது அச்செய்தி.

தினத்தந்தி - ''இந்தியைத் திணிப்பது தமிழர்களை உரசிப்பார்க்கும் செயல்'' - திமுக

''இந்தியை திணிக்க முயல்வது தமிழர்களை உரசிப்பார்க்கும் செயல். பன்மொழி பண்பாட்டோடு விளங்கும் ஒரு நாட்டில் மக்களின் கருத்தறியாமல் மத்திய அரசு எந்த முடிவையும் மேற்கொள்ளாது என நம்புகிறோம். அதேபோல தமிழர்களின் உணர்வோடு விளையாட வேண்டும். தமிழகத்தில் இரு மொழிக் கொள்கைக்கு ஆபத்து விளைவிக்கும் எந்தவொரு முடிவுகளையும் திமுக ஜனநாயக வழி நின்று மிகக் கடுமையாக எதிர்க்கும்'' என திமுகவின் மாவட்ட செயலாளர், நாடாளுமன்ற உறுப்பினர்கள், எம்.எல்.ஏக்கள் இடையே நடைபெற்ற கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது என செய்தி வெளியிட்டுள்ளது தினத்தந்தி.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்