இலங்கை முஸ்லிம் அமைச்சர்களின் ராஜிநாமா: பிரச்சனையின் முடிவா? ஆரம்பமா?

படத்தின் காப்புரிமை ISHARA S. KODIKARA

(இந்த கட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்ள கருத்துகள் அனைத்தும் கட்டுரையாளரின் சொந்தக் கருத்துகளே. இவை பிபிசியின் கருத்துகள் அல்ல. - ஆசிரியர்)

இலங்கை நாடாளுமன்றத்திலுள்ள முஸ்லிம் அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள் மற்றும் பிரதி அமைச்சர்கள் அனைவரும் ஒட்டுமொத்தமாக தமது பதவிகளை இராஜினாமா செய்திருப்பது அரசியலில் ஒரு அதிர்வை ஏற்படுத்தியிருக்கின்றது. அத்துரெலிய ரத்தன தேரர் முன்னெடுத்த உண்ணாவிரதப் போராட்டமும், பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் முன்வைத்த காலக்கெடுவும் கடுமையான பதற்ற நிலையை உருவாக்கியிருந்த நிலையில், தமது பதவிகளைத் துறப்பதென்ற முடிவை முஸ்லிம் அரசியல் தலைவர்கள் எடுத்தார்கள். பதற்ற நிலை இதன் மூலம் முடிவுக்கு வந்திருக்கின்றது என்பது உண்மையாக இருக்கலாம்.

ஆனால், இது பிரச்சினையின் முடிவா? அல்லது புதிய பிரச்சனை ஒன்று ஆரம்பமாகியிருக்கின்றதா? என்பதுதான் இப்போது ஆராயப்பட வேண்டிய கேள்வி.

Image caption ஹிஸ்புல்லாவின் ராஜிநாமா கடிதம்

இரண்டு முஸ்லிம் ஆளுநர்களையும், அமைச்சர் ஒருவரையும் பதவி நீக்குமாறு கோரியே தமது போராட்டங்களை அத்துரெலிய ரத்தன தேரரும், ஞானசார தேரரும் ஆரம்பித்திருந்தார்கள். இதற்குப் பதிலாக முஸ்லிம் அமைச்சர்கள் அனைவரும் ஒட்டுமொத்தமாக பதவி துறந்திருப்பது அரசியலில் புதிய களநிலை ஒன்றை ஏற்படுத்தியிருக்கின்றது. பதவி துறந்திருப்பவர்களில் ஆளும் ஐக்கிய தேசியக் கட்சியைச் சேர்ந்த கபீர் ஹாசிமும் ஒருவர்.

நெடுஞ்சாலைகள், வீதி அபிவிருத்தி மற்றும் பெற்றோலிய வள அபிவிருத்தி அமைச்சராக இவர் இருந்துள்ளார். ஐ.தே.க.வின் தவிசாளரான இவர், அக்கட்சியின் பொதுச் செயலாளர் உட்பட பொறுப்பான பதவிகளிலும் இவர் இருந்துள்ளவர் என்பதும் முக்கியமானது. பெருமளவுக்கு சிங்கள மக்களின் வாக்குகளால் தெரிவாகும் இவரும் பதவியைத் துறந்திருப்பது ஐ.தே.க. தலைமைக்கு நிச்சயமாக அதிர்ச்சியைக் கொடுத்திருக்கும்.

முஸ்லிம் அமைச்சர் ஒருவர் மீதும் ஆளுநர்கள் மீதும் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்கள், முற்றுமுழுதாக இனவாத அடிப்படையிலானவை என்பதை உணர்த்தும் வகையிலேயே இந்த "கூண்டோடு இராஜினாமா" என்ற முடிவை முஸ்லிம் அமைச்சர்கள் எடுத்தார்கள்.

படத்தின் காப்புரிமை Getty Images

அத்துடன் எழுந்தமானத்துக்கு குற்றச்சாட்டுக்களை முன்வைத்து போராட்டங்களை முன்னெடுத்த பௌத்த மதத் தலைவர்களும், சிங்களக் கடும் போக்காளர்களும் அதற்கான ஆதாரங்களை முறையாக முன்வைக்கத் தவறிவிட்டார்கள் என்பதும் இந்த நிலைமைகளுக்குக் காரணம். எழுந்தமானமான குற்றச்சாட்டுக்களும், அவற்றின் அடிப்படையில் முஸ்லிம்களுக்கு எதிராக முன்வைக்கப்பட்ட கருத்துக்களும், முரண்பாடுகளால் பிரிந்திருந்த முஸ்லிம் அரசியல் தலைவர்களை ஒன்றுபடுத்தியுள்ளது. இது இலங்கையின் அரசியல் கள நிலையில் புதிய மாற்றம், அல்லது புதிய போக்கு ஒன்றுக்குக் காரணமாகியுள்ளது.

அத்துரெலிய ரத்தன தேரரின் போராட்டம்

அமைச்சர் ரிஷாட் பதியூதீன், மேல் மாகாண ஆளுநர் அசாத் சாலி மற்றும் கிழக்கு மாகாண ஆளுநர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா ஆகியோரையே பதவி நீக்குமாறு வலியுறுத்தி, நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரெலிய ரத்தன தேரர் கடந்த 31ஆம் தேதி முதல் தொடர் உண்ணாவிரத போராட்டத்தை ஆரம்பித்திருந்தார். கண்டி தலதா மாளிகைக்கு முன்னபாக தேரரினால் ஆரம்பிக்கப்பட்ட இந்தப் போராட்டம் நான்காவது நாளாகவும் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டுவந்த நிலையிலேயே திங்கட்கிழமை முஸ்லிம் அமைச்சர்களின் பதவி துறப்பு இடம்பெற்றிருக்கின்றது.

அத்துரெலிய ரத்தன தேரருக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், கண்டி தலதா மாளிகைக்கு ஞாயிற்றுக்கிழமை சென்ற பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரர் விசேட அறிவிப்பொன்றை விடுத்திருந்தார். திங்கட்கிழமை நண்பகல் 12 மணிக்கு முன்னதாக குறித்த முஸ்லிம் அரசியல்வாதிகள் பதவி நீக்கம் செய்யப்பட வேண்டும் என கலகொட அத்தே ஞானசார தேரர் காலக்கேடு விதித்தார்.

இந்தக் காலக்கெடுதான் பிரச்சினையை உச்ச கட்டத்துக்குக் கொண்டு சென்றது. திங்கட்கிழமை கண்டி நகரிலுள்ள அனைத்து வர்த்தக நிலையங்களையும் மூடுமாறு கண்டி வர்த்தக சங்கம் அறிவித்தல் விடுத்தது. நாடு முழுவதிலும் ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்றன. இவற்றில் பெருமளவுக்குப் பிக்குகளும் பங்குகொண்டார்கள். பதற்ற நிலையும் - அச்ச நிலையும் நாடு முழுவதிலும் உருவாக்கப்பட்டிருந்தது.

இலங்கையின் அரசியலில் அதிகளவில் செல்வாக்கைச் செலுத்தும் மகாசங்கத்தினரும் இந்தப் போராட்டங்களுக்கு ஆதரவு தெரிவித்திருந்தார்கள். பௌத்த மகாசங்கத்தினரின் நிலைப்பாட்டுக்கு முரணாக ஒருபோதும் செல்வதற்குத் துணியாத அரசாங்கத்துக்கு, இந்த நிலைமை பெரும் நெருக்கடியைக் கொடுப்பதாக இருந்தது. இந்தப் பின்னணியில்தான், ஆளுநர்களின் பதவிதுறப்பையடுத்து முஸ்லிம் அமைச்சர்கள் அனைவரும் ஒட்டுமொத்தமாகப் பதவிகளைத் துறப்பதென்ற முடிவை எடுத்தார்கள். உருவாகியிருந்த பதற்ற நிலையை இது தணித்திருக்கலாம். அரசாங்கம் எதிர்கொண்ட அழுத்தங்களை இது இல்லாமல் செய்திருக்கலாம். ஆனால், பிரச்சினை இதனுடன் முடிந்துவிட்டதா?

முஸ்லிம்கள் இல்லாத அமைச்சரவை

முஸ்லிம்கள் எவரும் இல்லாத அமைச்சரவை ஒன்று இன்று உருவாகியிருக்கின்றது. இலங்கை அரசியல் வரலாற்றில் இது முதல்தடவையாக இருக்கலாம். 1930 களில் "தனிச் சிங்கள அரசாங்கம்" ஒன்று அமைக்கப்பட்டது. யாழ்ப்பாண இளைஞர் காங்கிரஸ் தேர்தலைப் பகிஷ்கரித்த போது இந்த நிலை ஏற்பட்டது. அதேபோல, தமிழ் மக்களுக்கு எதிரான அடக்குமுறைகள் கட்டவிழ்த்துவிடப்பட்ட போது, இரு துருவங்களாகச் செயற்பட்ட எஸ்.ஜே.வி. செல்வநாயகமும், ஜீ.ஜீ.பொன்னம்பலமும் இணைந்து 1976இல் தமிழர் விடுதலைக் கூட்டணியை அமைத்தார்கள். அதேபோல, தனித்தனித் துருவங்களாகச் செயற்பட்ட முஸ்லிம் தலைவர்கள் அனைவரும் இப்போது ஒன்றாக இணைந்திருக்கின்றார்கள்.

பௌத்த பேரினவாத அழுத்தம் ஒன்றிணைந்து செயற்படவேண்டிய வரலாற்று நிர்ப்பந்தம் ஒன்றை அவர்களுக்கு ஏற்படுத்திவிட்டிருக்கின்றது. இலங்கையின் அரசியல் வரலாற்றில் இது முக்கியமான ஒரு திருப்பம்.

ஈஸ்டர் தாக்குதலின் பின்னர் முஸ்லிம் மக்களுக்கு எதிராகத் தூண்டிவிடப்பட்ட இனவாதம் கடந்த ஒன்றரை மாத காலத்தில் பல்வேறு வடிவங்களில் வெளிப்பட்டிருக்கின்றது. முஸ்லிம்களின் வர்த்தக நிலையங்கள், வீடுகள் இலக்கு வைத்துத் தாக்கப்பட்டிருக்கின்றது. பெருமளவு சொத்துக்கள் அழிக்கப்பட்டிருக்கின்றன.

படத்தின் காப்புரிமை ISHARA S. KODIKARA

கடந்த மாதம் இடம்பெற்ற இந்த வன்முறைகளில் மூன்று முஸ்லிம்கள் கொல்லப்பட்டார்கள். முஸ்லிம் அரசியல் தலைவர்களுக்கு எதிரான பிரச்சாரங்கள் முழு அளவில் முன்னெடுக்கப்பட்டன. அதனைவிட முஸ்லிம் மருத்துவர்கள், உணவகங்களுக்கு எதிரான பரப்புரைகளும் தீவிரப்படுத்தப்பட்டன. குறிப்பிட்ட சில ஊடகங்களும் இவ்வாறான பிரச்சாரங்களின் பின்னணியில் செயற்பட்டன.

இந்தப் பரப்புரைகளில் பெரும்பாலானவை ஆதாரங்களற்றவை. ஆனால், நன்கு திட்டமிடப்பட்ட முறையில், முஸ்லிம்களுடைய பொருளாதாரத்தை இலக்கு வைத்தவையாக இருந்துள்ளன. இந்தப் பிரச்சாரங்கள் முஸ்லிம்களுடைய பொருளாதாரம், சுதந்திரமான நடமாட்டம் என்பவற்றில் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தியது.

இவை அனைத்துக்கும் உச்சகட்டமாக முஸ்லிம்களுக்கு எதிரான செயற்பாடுகளை முன்னின்று நடத்திய ஞானசார தேரர் பொது மன்னிப்பு கொடுக்கப்பட்டு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனாவினால் விடுவிக்கப்பட்டார். நீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டில் 6 வருட சிறைத் தண்டனையைப் பெற்றிருந்த தேரர், ஒன்பது மாத காலம் பூர்த்தியாவதற்கு முன்னதாகவே பொது மன்னிப்பில் விடுவிக்கப்பட்டமைக்கான நியாயமான காரணங்கள் எதுவும் ஜனாதிபதி தரப்பில் முன்வைக்கப்பட்டிருக்கவில்லை.

ஜனாதிபதியைப் பொறுத்தவரையில் அவரது சொந்த அரசியல் உபாயங்களுக்கு ஞானசாரரை விடுவிக்க வேண்டிய தேவை இருந்திருக்கலாம். ஆனால், அவர் விடுவிக்கப்பட்ட கால கட்டம் மிகவும் மோசமானது. முஸ்லிம்களுக்கு எதிரான உணர்வுகள் பௌத்த சிங்களவர்கள் மத்தியில் கடுமையாகத் தூண்டிவிடப்பட்டிருந்த ஒரு கால கட்டத்தில்தான் தேரர் வெளியே வந்தார்.

விடுவிக்கப்பட்ட தேரர், தியானத்தைச் செய்துகொண்டிருப்பார் என்பதை யாரும் எதிர்பார்த்திருக்கவில்லை. கொழுந்துவிட்டு எரிந்துகொண்டிருந்த முஸ்லிம் விரோத உணர்வுகளுக்கு அவரும் தனது பங்கிற்கு பெற்றோல் ஊற்றினார்.

தன்னிடம் பல உண்மைகளும், தகவல்களும் இருப்பதாகக் கூறிய ஞானசாரர் அவற்றை ஊடகங்களுக்கு வெளியிட ஆரம்பித்தார். ஈஸ்டர் தாக்குதலை நடத்திய தேசிய தௌஹீத் ஜமாத் அமைப்பின் செயற்பாடுகள் குறித்த தகவல்கள் அவரிடம் இருந்திருக்கலாம். இவ்வாறான தகவல்கள் இலங்கையின் புலனாய்வுத்துறையினரிடம் கூட இருந்துள்ளதை உறுதிப்படுத்தும் தகவல்கள் ஏற்கனவே வெளியாகிக்கொண்டுள்ளன.

இந்த நிலையில், ஞானசாரர் வெளிப்படுத்திய தகவல்கள் வெறுமனே முஸ்லிம்களுக்கு எதிரான உணர்வுகளைத் தூண்டிவிடுவதற்கு மட்டுமே உதவியதாக முஸ்லிம் தலைவர் ஒருவர் குறிப்பிடுகின்றார். அத்துடன், தன்னிடம் ஆதாரங்கள் இருப்பதாகக் கூறி அவர் சில தகவல்களை வெளியிட்டிருந்தாலும் கூட, அந்த ஆதாரங்களை அவர் வெளிப்படுத்தவில்லை என்பதும் சுட்டிக்காட்டப்பட்டது.

முஸ்லிம் தலைவர்கள் எடுத்த முடிவு

கண்டியில் உண்ணாவிரதமிருந்த அத்துரேலிய ரத்தன தேரரைப் பார்வையிடம் பின்னர் ஞானசாரர் வழங்கிய காலக்கெடு, திங்கட்கிழமை நண்பகல் 12 மணிக்கு முடிவுக்கு வந்தபோது கண்டியில் மட்டுமன்றி நாடு முழுவதிலுமே பெரும் பதற்ற நிலையை ஏற்படுத்தியிருந்தது. அரசாங்கத்துக்கும் நெருக்கடி ஏற்பட்டிருந்தது. இந்தப் பின்னணியில், பதற்றத்தைத் தணிக்கவும் அரசாங்கத்துக்கு ஏற்பட்டிருந்த நெருக்கடியைத் தணிக்கவும் முதலில் ஆளுநர்கள் பதவி துறந்தார்கள். பின்னர் ஒட்டுமொத்தமாக முஸ்லிம் அமைச்சர்கள் பதவி துறந்தார்கள்.

பதவி துறப்பதென்ற முடிவை எடுத்த பின்னர் அலரி மாளிகை சென்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் தமது முடிவை அவர்கள் அறிவித்த போது, அமைச்சர்கள் மங்கள சமரவீரவும், மனோ கணேசனும் அதனை ஏற்றுக்கொள்ள மறுத்தார்கள். இது தொடர்பில் அமைச்சர் மனோ கணேசன் குறிப்பிடுகையில், "இது இனவாதிகளுக்குப் பணிந்து இடம் கொடுக்கும் ஒரு பிழையான முன்னுதாரணமாக அமைந்துவிடும் என நாம் கூறினோம். எனினும் முஸ்லிம் அமைச்சர்கள் தம் நிலைப்பாட்டில் உறுதியாக இருந்தார்கள்" எனத் தெரிவித்தார்.

உருவாகியிருந்த பதற்ற நிலையைத் தணிப்பதற்கும், தம்மீது முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் வெறுமனே இனவாத அடிப்படையிலானவை என்பதை உணர்துவதற்காகவும் இவ்வாறான துணிச்சலான முடிவை முஸ்லிம் தலைவர்கள் எடுத்திருக்கின்றார்கள்.

ஆனால், இது அமைச்சர் மனோ கணேசன் குறிப்பிட்டிருப்பதைப்போல மிகவும் மோசமான ஒரு முன்னுதாரணம்தான். பௌத்த சிங்கள இனவாதத்துக்கு பணிந்தே எந்தவொரு அரசாங்கமும் செயற்படுவதுதான் இலங்கையின் வரலாறு. இப்போது, அந்த இனவாதத்துக்குப் பணிந்து முஸ்லிம் அமைச்சர்கள் அனைவரும் கட்சி அரசியலுக்குப் அப்பாற்பட்ட முறையில் பதவிகளைத் துறந்திருக்கின்றார்கள். இதன்மூலம், அவர்கள் சொல்லும் செய்தி என்ன?

அமைச்சர் பதவிகளைத் துறந்தாலும், அரசாங்கத்துக்கான ஆதரவைத் தாம் விலக்கப்போவதில்லை என்பதையும் அவர்கள் அறிவித்திருக்கின்றார்கள். அதனால், அரசாங்கத்துக்கு உடனடியான ஆபத்துக்கள் எதுவும் இல்லை. ஆனால், முஸ்லிம்களுக்கு இந்த நாட்டில் பாதுகாப்பு இல்லை என்ற செய்தியை இதன் மூலம் அவர்கள் சர்வதேசத்துக்குச் சொல்லியிருக்கின்றார்கள்.

படத்தின் காப்புரிமை LAKRUWAN WANNIARACHCHI

இது ஒட்டுமொத்தமாக இலங்கைக்குப் பாதகமானது. இந்த நிலைமையைத் தொடரவிடுவது முஸ்லிம் மக்களை தனிமைப்படுத்துவதாகவும், சிங்கள இனவாதிகளை உற்சாகப்படுத்துவதாகவும் அமைந்துவிடும். தமிழ் மக்கள் விடயத்தில் கற்றுக்கொண்ட வரலாற்று அனுபவம் அதுதான்.

முஸ்லிம் அமைச்சர்களின் பதவி விலகல் சிங்கள இனவாதிகளுக்கு முதலாவது வெற்றியாக இருக்கலாம். இனி தமது அடுத்த இலக்கை நோக்கி அவர்கள் காய்நகர்த்த முற்படுவார்கள் என நிச்சயமாக எதிர்பார்க்கலாம்.

அதாவது, அமைச்சர்களின் பதவி விலகல் பிரச்சனைக்கான தீர்வாக இருக்காது. மற்றொரு புதிய பிரச்சனைக்கான ஆரம்பமாகவே இருக்கும். இந்தப் பிரச்சனையைக் கையாளக்கூடிய தரிசனமும், அரசியல் முதிர்ச்சியும் உள்ள சிங்களத் தலைவர்கள் யாராவது உள்ளார்களா? ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் இடையில் நடைபெறும் அதிகாரப் போட்டியும், கிடைக்கக்கூடிய சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி தம்மைப் பலப்படுத்திக்கொள்ள முற்படும் எதிர்க்கட்சியும் (பொது ஜன பெரமுன) உள்ள நிலையில், இந்தப் பிரச்சினைக்கு உறுதியான தீர்வு ஒன்றை எவ்வாறு எதிர்பார்க்க முடியும்?

பிற செய்திகள் :

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :