வாஜ்பேயி வசித்த பங்களாவில் குடியேறுகிறார் அமித் ஷா

அமித் ஷா படத்தின் காப்புரிமை Getty Images

இந்திய நாளிதழ்கள் சிலவற்றில் வெளியான சில முக்கிய செய்திகளை தொகுத்து வழங்குகிறோம்.

தினமலர் : வாஜ்பேயி வசித்த பங்களாவில் குடியேறுகிறார் அமித் ஷா

படத்தின் காப்புரிமை Getty Images

டெல்லியில், மறைந்த முன்னாள் பிரதமர், வாஜ்பேயி வசித்த பங்களாவில், மத்திய அமைச்சரும், பா.ஜ.க தலைவருமான, அமித் ஷா விரைவில் குடியேற உள்ளார் என தினமலர் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

டெல்லியில், அமைச்சர்கள், வி.வி.ஐ.பி.,க்கள் வசிக்கும், மத்திய டெல்லி பகுதியில் உள்ள, கிருஷ்ண மேனன் மார்க் பகுதியில் உள்ள பங்களாவில், வாஜ்பேயி, தன் குடும்பத்தினருடன் வசித்து வந்தார். பிரதமராக இருந்த போது, பிரதமரின் அதிகாரப்பூர்வ இல்லத்தில் வசித்த அவர், 2004ல், நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பிறகு, ஆட்சியை இழந்ததும் கிருஷ்ண மேனன் மார்க் பகுதியில் உள்ள பங்களாவுக்கு மாறினார். அது முதல் கடந்த ஆண்டு ஆகஸ்டில், அவர் இறக்கும் வரை, குடும்பத்தினருடன் அங்கு வசித்தார்.

வாஜ்பேயி இறந்ததை அடுத்து, நவம்பரில், அவரின் குடும்பத்தினர் பங்களாவை காலி செய்தனர். தற்போது யாரும் குடியேறவில்லை. அந்த பங்களா, அமித் ஷாவுக்கு ஒதுக்கப்பட உள்ளது .சில நாட்களுக்கு முன், அங்கு சென்ற அமித் ஷா சில மாற்றங்களை செய்ய உத்தரவிட்டார். விரைவில் அங்கு அவர் குடியேற உள்ளார். தற்போது அவர், டெல்லியில், அக்பர் சாலை 11ம் எண் பங்களாவில் வசிக்கிறார்.

கடந்த முறை பிரதமரானதும், 'டில்லியில் தலைவர்கள் வசித்த இல்லங்கள், நினைவிடங்களாக மாற்றப்படாது' என மோதி உத்தரவிட்டார். அதன்படி, வாஜ்பேயி வசித்த பங்களாவும், நினைவிடமாக மாற்றப்படவில்லை. எனினும், டெல்லியில் தலைவர்களுக்காக நினைவிடங்கள் கட்டுவதற்காக ஒதுக்கப்பட்டுள்ள இடத்தில், அவருக்கு நினைவிடம் கட்டப்பட்டுள்ளது.

இவ்வாறாக அந்நாளிதழ் செய்தி விவரிக்கிறது.

தி இந்து - எந்திரன் பட வழக்கு

படத்தின் காப்புரிமை STRDEL/GETTY

ஆரூர் தமிழ் நாடன் எழுதிய 'ஜூகிபா' என்ற சிறுகதையைப் போலவே இயக்குநர் சங்கரின் எந்திரன் படம் இருப்பதற்கான முகாந்திரம் இருப்பதால், சங்கர், தயாரிப்பாளர் கலாநிதி மாறன் ஆகியோருக்கு எதிரான நீதிமன்ற நடவடிக்கையை நிறுத்தி வைக்க சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளை மறுத்துள்ளது.

காப்புரிமைச் சட்டத்தின் பிரிவு 63இன் கீழ் நடவடிக்கை எடுக்க முகாந்திரம் இருப்பதாக நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

1996இல் வெளியான தனது சிறுகதையைப் போலவே எந்திரன் படம் இருப்பதாக ஆரூர் தமிழ் நாடன் 2010இல் வழக்கு தொடர்ந்திருந்தார்.

தயாநிதி மாறன் தயாரிப்பாளர் என்பதால் அவருக்கும் படத்தின் கதைக்கும் தொடர்பில்லை என்று தெரிவித்துள்ள நீதிமன்றம் அவருக்கு எதிரான நடவடிக்கைகளை நிறுத்திவைக்க அனுமதியளித்துள்ளது.

சென்னை எழும்பூரில் உள்ள எட்டாவது பெருநகர குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் இந்தக் காப்புரிமை மீறல் வழக்கு நடந்து வருகிறது.

தினமணி: 'உலக அரங்கில் தேசத்தின் மதிப்பு உயர்ந்துள்ளதாக இந்தியர்கள் கருதுகின்றனர்'

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர்

உலக அரங்கில் கடந்த ஐந்து ஆண்டுகளில் இந்தியாவின் மதிப்பு அதிகரித்துள்ளதாக நாட்டு மக்கள் கருதுகின்றனர். தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு தொடர்ந்து இரண்டாவது முறையாக ஆட்சி அமைக்க இதுவும் முக்கிய காரணம் என வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் கூறியதாக தினமணி நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

டெல்லியில் இந்திய தொழில்துறை கூட்டமைப்பு சார்பில் வியாழக்கிழமை ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஜெய்சங்கர், அரசு மற்றும் வெளியுறவு அமைச்சகத்தின் செயல்பாடுகள் மீதான மக்களின் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளதாக கூறினார்.

இந்திய பொருளாதாரத்தின் பெரும்பகுதி ஏற்றுமதியை சார்ந்துள்ளதாக குறிப்பிட்ட அவர், இதனால் சர்வதேச சந்தைகளில் இந்திய நிறுவனங்களுக்கான வாய்ப்புகள் அதிகரிக்கும் வகையில் நமது வெளியுறவுக் கொள்கை இருப்பதற்கான தேவை எழுந்துள்ளதாக தெரிவித்தார்.

"உலகமயமாதல் மிகுந்த நெருக்கடியில் உள்ளது. குறிப்பாக சந்தை அணுகல் மற்றும் தொழிலாளர் இடப்பெயர்வு பாதிக்கப்பட்டுள்ளது. உலக வர்த்தக அமைப்பு செயல்படாத நிலையில், இருதரப்பு இலவச வர்த்தக ஒப்பந்தங்கள் அதிகரித்துள்ளன. உலக வர்த்தக அமைப்பு போன்றவற்றை மேலும் திறனுள்ளதாக மாற்றுவதற்கான வழிகளை இந்தியா கண்டறிய வேண்டும்" என்று அமைச்சர் ஜெய்சங்கர் பேசியதாக அந்நாளிதழ் செய்தி மேலும் விவரிக்கிறது.

தி இந்தியன் எக்ஸ்பிரஸ் - விடுப்பில் வந்த ராணுவ வீரர் சுட்டுக்கொலை

ஜம்மு - காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டத்தில் ரம்ஜான் கொண்டாட விடுப்பில் தனது சொந்த கிராமத்துக்கு வந்திருந்த இந்திய பிராந்திய ராணுவ வீரர் ஒருவர் தீவிரவாதிகள் என்று சந்தேகிக்கப்படும் நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.

வியாழனன்று, சதூரா கிராமத்தில் சுடப்பட்ட மன்சூர் அகமது பெய்க் உயிரிழந்ததாக பிராந்திய ராணுவம் வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆயுதம் ஏதும் இன்றி இருந்த மன்சூர் முகமூடி அணிந்த இரு நபர்களால் அவரது வீட்டில் சுடப்பட்டார். அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது, அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர் என்கிறது தி இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழ் செய்தி.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :