நீட் தேர்வு: 'மதிப்பெண்களை வைத்து குழந்தைகளை மதிப்பிடும் மனநிலை மாற வேண்டும்'

கடந்த ஆண்டு நீட் தேர்வில் தோல்வி அடைந்ததால் தற்கொலை செய்துகொண்ட திருச்சி சுபஸ்ரீ.
Image caption கடந்த ஆண்டு நீட் தேர்வில் தோல்வி அடைந்ததால் தற்கொலை செய்துகொண்ட திருச்சி சுபஸ்ரீ.

திருப்பூர் வெள்ளியங்காடு பகுதியில் வசிக்கும் செல்வராஜ் ராஜலட்சுமி தம்பதியரின் மகள் ரித்துஸ்ரீ என்பவர் ஜூன் 5ம் தேதி , நீட் தேர்வு முடிவுகள் வெளியான அன்று தற்கொலை செய்து கொண்டார். ரித்து ஸ்ரீயின் பெற்றோர் திருப்பூர் பின்னலாடைத் தொழிற்சாலையில் வேலைசெய்பவர்கள். வேலைக்காக தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டியில் இருந்து இடம்பெயர்ந்து திருப்பூரில் குடியேறியவர்கள்.

ரித்து ஸ்ரீ , திருப்பூர் ஜெய்வாபாய் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் படித்தவர். பொருளாதார வசதியின்மை காரணமாக தனியார் நீட் பயிற்சி வகுப்புகள் ஏதும் செல்ல இயலாததால் பள்ளியிலேயே இலவச நீட் பயிற்சி வகுப்புகளில் படித்து மருத்துவ நுழைவுத் தேர்வாகிய நீட் தேர்வை எழுதியுள்ளார்.

ரித்து ஸ்ரீயின் பெற்றோர் , நீட் தேர்வு முடிவுகள் வெளியானதால் பின்பு , அத்தேர்வில் மதிப்பெண்கள் குறைவாக இருந்ததால் தங்களது மகள் தற்கொலை செய்து கொண்டதாக 5ம் தேதி மாலை புகார் அளித்ததன் அடிப்படையில் , திருப்பூர் தெற்கு காவல்நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு ரித்து ஸ்ரீயின் உடலை உடற்கூறாய்வு சோதனைக்கு அனுப்பினர்.

நேற்று 6ம் தேதி உடற்கூறாய்வு சோதனை மற்றும் காவல்துறை விசாரணைக்கு பின்பு தற்கொலை என்று முடிவானதன் பின் உடலை பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.

ரித்து ஸ்ரீயின் பெற்றோர், இது குறித்து ஊடகங்களிடமோ, அரசியல் கட்சிகளிடமோ எதுவும் பேச விரும்பவில்லை எனவும் தெரிவித்து விட்டனர்.

ரித்து ஸ்ரீயின் பள்ளியில் இந்த சம்பவம் குறித்து கேட்டபொழுது, அந்த மாணவி பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் 500க்கு 461 மதிப்பெண்களும், 11ம் வகுப்பு பொதுத்தேர்வில் 321 மதிப்பெண்களும், 12ம் வகுப்பயிற்சி பொதுத்தேர்வில் 292 மதிப்பெண்களும் எடுத்துள்ளார் என்று தெரிவித்தனர். பள்ளியில் நடத்தப்படும் நீட் பயிற்சி வகுப்பில் அவர் கலந்து கொண்டார் என பள்ளி ஆசிரியர் ஒருவர் பிபிசி தமிழிடம் தெரிவித்தார்.

Image caption ரித்து ஸ்ரீ

பள்ளியில் மிகவும் கவனமாகவும், பணிவோடும் நடந்து கொள்ளும் மாணவி, அவரைப் பற்றி எந்த புகாரும் சொல்ல முடியாது , ஏன் இப்படி முடிவெடுத்தார் என வருத்தமாக இருக்கின்றோம் என ரித்து ஸ்ரீயின் ஆசிரியர்கள் வருத்தப்படுகின்றனர்.

தமிழகத்தின் பிற பகுதிகளிலும் இந்த ஆண்டு நீட் தேர்வு முடிவுகள் உண்டாக்கிய மன அழுத்தத்தால் மாணவிகள் தற்கொலை செய்துகொண்டதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.

மதிப்பெண்களால் நடைபெறும் மரணங்கள் தொடர்ந்து நடைபெற்றுக்கொண்டுள்ளன, பெரிய பொருளாதார பின்புலம் இல்லாத அரசுப்பள்ளியில் படிக்கும் மாணவ மாணவிகள், பொதுத் தேர்வில் வெற்றி பெற்ற பின்பும் நுழைவுத் தேர்வுகளில் மதிப்பெண்கள் பற்றாக்குறையால் தற்கொலை செய்து கொள்ளும் சம்பவங்களும் நடந்து கொண்டிருக்கின்றன.

இது குறித்து மனநல மருத்துவர் சிவபாலன் இளங்கோவனிடம் பேசிய பொழுது, தேர்வு முடிவுகள் தொடர்பான தற்கொலைகள் இங்கு தொடர்ந்து நடை பெற்றுக் கொண்டு இருக்கின்றன. மதிப்பெண்கள் குறைந்துவிட்டதால் என்பதைவிட, இதற்கு பின்பு இந்த சமூகத்தினை எப்படி எதிர்கொள்வது என்ற அச்சத்தினால் தான் இது போன்ற சம்பவங்கள் நடைபெறுகின்றன.

படத்தின் காப்புரிமை Getty Images

இதனை ஒரு தனிப்பட்ட பலவீனமாக , அந்த மாணவியின் துணிச்சல் குறைவினால் இது நடந்தது என்று சொல்லிவிட முடியாது, ஒட்டு மொத்த சமூகமும் ஒரு வகையில் இதற்கு பொறுப்பேற்க வேண்டியுள்ளது. மதிப்பெண்களை வைத்து குழந்தைகளை மதிப்பிடுகின்ற சமூகத்தின் மனநிலை மாற வேண்டும். முதலில் குடும்பங்கள் நமது குழந்தைகளை மதிப்பெண்களை வைத்து மதிப்பிடுதல் தவறு என்பதனை புரிந்து கொள்ள வேண்டும்.

ஒவ்வொரு தேர்வு முடிவுகளுக்கு பின்பும் இது போன்ற மரணங்கள் நடந்து கொண்டுதான் இருந்தன.

ஆனால், அப்பொழுது நடைபெற்ற மரணங்களுக்கும், இப்பொழுது நடைபெற்றுக் கொண்டிருக்கும் மரணங்களுக்கும் மிகப்பெரிய வேறுபாடு, முன்பெல்லாம் தேர்வுகளில் தோல்வியடைந்தவர்தான் தற்கொலை செய்து கொள்வர்.

இப்பொழுது நீட் தேர்வுகளுக்கு பின்பு தேர்வுகளில் மிக நன்றாக மதிப்பெண்கள் எடுத்தவர், தேர்வில் வெற்றிபெற்றவர்கள் தற்கொலை செய்து கொள்கின்றனர்.

யார் ஒரு சிக்கலில் அதிகம் பாதிக்கப்பட வாய்ப்பு இருக்கின்றதோ அவர்களை பாதுகாப்பதுதான் சரியானது. இந்த மாதிரி பாதிப்புகுள்ளாக வாய்ப்புள்ள குழந்தைகளைப் பாதுகாக்க வேண்டியது அவசியம் என்ற புரிந்துணர்வோடு அரசும் சமூகமும் செயல்பட வேண்டியது அவசியம் என்கிறார் மருத்துவர் சிவபாலன் இளங்கோவன்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :