காஷ்மீர் கத்துவா சிறுமி கூட்டுப் பாலியல் வல்லுறவு வழக்கு: 3 குற்றவாளிகளுக்கு ஆயுள்; 3 குற்றவாளிகளுக்கு 5 ஆண்டுகள் சிறை

கத்துவா படத்தின் காப்புரிமை Jean-Francois DEROUBAIX

காஷ்மீர் மாநிலம் கத்துவாவில் 8 வயது பெண் குழந்தை கூட்டுப் பாலியல் வல்லுறவு செய்யப்பட்டு கொல்லப்பட்ட வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கிய பதான்கோட் நீதிமன்றம் இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 6 பேர் குற்றவாளிகள் என்று தீர்ப்பு வழங்கியது.

தீபக் கஜூரியா, பர்வேஷ் குமார், சாஞ்ஜி ராம், ஆகியோருக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டுள்ளது. இவர்களுக்கு தலா ஒரு லட்சம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.

ஆனந்த் தத்தா, திலக் ராஜ், சுரீந்தர் ஆகியோருக்கு ஐந்தாண்டுகள் சிறை தண்டனையோடு, தலா 50 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

சாஞ்ஜி ராமின் மகன் விஷால் குற்றமற்றவர் என்று விடுவிக்கப்பட்டுள்ளார்.

"இப்போதுதான் எனது மனம் நிம்மதி அடைந்துள்ளது. ஆனால், இந்த சம்பவத்துக்கு மூளையாக செயல்பட்ட சஞ்சி ராம் மற்றும் விசாரணையின்போது பாராமுகத்துடன் செயல்பட்ட காவல்துறை அதிகாரி தீபக் கஜூரியா ஆகியோருக்கு மரண தண்டனை அளித்தால்தான் நீதி நிலைநாட்டப்படும்.

எனது மகளின் நினைவுகள் என்னை வாட்டுகிறது. அவளது வயதிற்குட்பட்ட குழந்தைகள் விளையாடுவதை பார்க்கையில் எனது மனம் கனக்கிறது" என்று பாலியல் வல்லுறவு செய்யப்பட்டு கொல்லப்பட்ட குழந்தையின் பெற்றெடுத்த தாய் பிபிசியிடம் கூறினார்.

படத்தின் காப்புரிமை Getty Images

2018-ம் ஆண்டு ஜனவரி மாதம் 10ம் தேதி காணாமல் போன இந்த சிறுமியின் சடலம் பிறகு கண்டெடுக்கப்பட்டது. நாடோடி குஜ்ஜர் சமூகத்தைச் சேர்ந்த இந்தப் பெண் கடத்தப்பட்டு, கோயில் ஒன்றில் கட்டிவைக்கப்பட்டு, போதை மருந்து தரப்பட்டு பல நாள்களுக்கு பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கப்பட்டு கொல்லப்பட்டதாக குற்றம்சாட்டப்பட்டது.

போலீசார் இந்த வழக்கில் பாராமுகம் காட்டியதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தன. இப்போது தண்டனைக்குள்ளாகியுள்ள கஜூரியா அப்படி குற்றச்சாட்டுக்கு உள்ளான ஒரு போலீஸ் அதிகாரி என்பது குறிப்பிடத்தக்கது.

வழக்கில் கைது செய்யப்பட்டவர்களுக்கு ஆதரவாக நடந்த ஒரு பேரணியில் அப்போது காஷ்மீரில் ஆட்சியில் இருந்த மக்கள் ஜனநாயகக் கட்சி - பாஜக கூட்டணிக் கட்சியின் பாஜக அமைச்சர்கள் சௌதரி லால் சிங் மற்றும் சந்தர் பிரகாஷ் கங்கா இருவரும் கலந்துகொண்டனர்.

இந்த வழக்கைப் பற்றிய பழைய விவரங்களுக்கு: 8 வயதுக் குழந்தை, பலாத்காரம் செய்து கொலை: கொந்தளிப்பில் காஷ்மீர்

நாட்டின், உலகின் மனசாட்சியை உலுக்கிய இந்த வழக்கில் தீர்ப்பு வெளியாக இருந்த நிலையில் "எங்கள் மகள் எங்களுடன் தற்போது இல்லை. எங்கள் மகளுடன் நாங்கள் சென்ற இடங்களுக்கு போகாமல் தவிர்கிறோம். அந்த இடங்களை பார்க்க எங்களுக்கு கஷ்டமாக இருக்கிறது. அதை எங்களால் பார்க்க முடியவில்லை" என்று அந்தச் சிறுமியின் பெற்றோர் கூறியிருந்தனர்.

"எங்கள் மகள் கொலை செய்யப்பட்டாள். அவள் எந்த தவறும் செய்யவில்லை. எங்கள் மகள் கொல்லப்பட்டதில் இருந்து, நாங்கள் தொடர்ந்து பயத்தில் வாழ்ந்து வருகிறோம். நாங்கள் எங்கள் மற்ற மகள்களை எங்கும் தனியே அனுப்புவதில்லை. எங்கள் மகளுக்கு நீதி கிடைத்தால் மகிழ்ச்சி. என்னால் என் மகளுக்கு நேர்ந்ததை மறக்க முடியவில்லை. ஓராண்டு முடிந்துவிட்டது. எதாவது சிறுமிகளை பார்க்கும்போதும் மனம் வலிக்கிறது. இவர்களுடன்தான் என் மகள் விளையாடுவாள். அவளுக்கு நேர்ந்த கொடூர சம்பவத்தை நினைக்கும் போதெல்லாம் மனம் பதருகிறது" என்கிறார் பிபிசியிடம் பேசிய கத்துவாவில் பாலியல் வல்லுறவு செய்து கொலை செய்யப்பட்ட எட்டு வயது சிறுமியின் தாய்.

ஜனவரி 2018ல் எட்டு வயது முஸ்லிம் சிறுமி ஒருவர், போலீஸாரின் கூற்றுப்படி கடத்தி, போதை மருந்து ஊட்டப்பட்டு, பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். இதனால் ஜம்முவின் ரசனா பகுதியிலும் மற்ற சில பகுதிகளிலும் போராட்டங்கள் நடந்தன.

சர்வதேச ஊடகங்களிலும் இது செய்தியானது.

Image caption சிறுமியின் தாய்

இந்த சம்பவம் தொடர்பாக ஜம்மு காஷ்மிரின் குற்றப்பிரிவு போலீஸார், 18 வயதுக்குட்பட்ட நபர் உள்பட எட்டு பேரை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட அனைவரும் இந்து சமூகத்தை சேர்ந்தவர்கள். குற்றப்பிரிவு போலீஸார் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்த போது, உள்ளூர் வழக்கறிஞர்கள் போராட்டம் செய்ததை அடுத்து இதில் உச்சநீதிமன்றம் தலையிட்டது.

வழக்கு விசாரணையை பதான்கோட்டுக்கு மாற்றி உத்தரவிட்டது.

கொலை செய்யப்பட்ட அச்சிறுமியின் சகோதரி பிபிசியிடம் பேசுகையில், "தன் சகோதரியை கொலை செய்த அனைத்து குற்றவாளிகளும் தூக்கிலிடப்பட வேண்டும்" என்று கூறினார்.

Image caption சிறுமியின் சகோதரி

என் சகோதரி இல்லாமல் நாங்கள் எப்படி வாழ்கிறோம் என்பதை உங்களால் நினைத்துக்கூட பார்க்க முடியாது. அவளது பொம்மைகள், உடைகள், நாங்கள் ஒன்றாக சென்று விளையாடிய இடங்களை பார்க்கும் போது எனக்கு வலிக்கிறது. என் சகோதரிக்கு நடந்தது வேறு யாருக்கும் நடக்கக் கூடாது என அவர் மேலும் தெரிவித்தார்.

கொலை செய்யப்பட்ட சிறுமியின் வளர்ப்புத் தாய் என்று கூறுபவர் என்னிடம் பேசினார். என் கேள்வியை முடிப்பதற்கு முன்பே கோபத்தில் பேசத் தொடங்கினார்.

"நாங்கள் அச்சத்தில் இருக்கிறோம். கத்துவாவிற்கு மீண்டும் செல்ல மாட்டோம். எங்கள் குழந்தைகள் வெளியே சென்றால், சரியாக வீடு திரும்புவார்களா என்ற பயம் எங்களுக்கு உள்ளது. குற்றவாளிகள் தூக்கிலிடப்பட வேண்டும். எங்கள் மகளை கொலை செய்தவர்களுடன் எங்களுக்கு எந்தப் பிரச்சனையும் இல்லை. அவர்களின் கிராமத்து தெருக்களைக் கூட நாங்கள் பயன்படுத்த வேண்டும். குளிர் காலத்தில் கத்துவாவில் நாங்கள் தங்கியிருந்த போது, அவர்கள் இல்லாத தெருக்களில்தான் செல்வோம். எங்களை அந்தப் பகுதியில் இருந்து வெளியேற்றுவதே அவர்களின் நோக்கமாக இருந்தது. அதனால்தான் எங்கள் மகளை அவர்கள் கொன்றார்கள்" என்று தெரிவித்தார்.

நீதியின் மீது நம்பிக்கை இருப்பதாக அச்சிறுமியின் தந்தை கூறுகிறார். அதே நேரத்தில் கடந்த ஓராண்டாக எதுவும் செய்யாமல் வீட்டிலேயே அடைப்பட்டு இருக்கிறார்.

Image caption சிறுமியின் தந்தை

பிபிசியிடம் தொலைப்பேசியில் பேசிய அவர், "என் மகளுக்கு நடந்த சம்பவத்தை என்னால் மறக்க முடியவில்லை. அவளது புகைப்படத்தை பார்க்கும் போதெல்லாம் செத்துப் பிழைக்கிறேன்" என்றார்.

அந்த பாலியல் வல்லுறவு சம்பவத்தை தொடர்ந்து இந்து ஏக்தா மார்ச் அமைப்பினர் குற்றவாளிகளுக்கு எதிராக பேரணி நடத்தினார்கள். அதில் பாஜகவின் இரண்டு அமைச்சர்கள் கலந்து கொண்டிருந்தனர். பின்னர் இருவரும் தங்கள் பதவியை ராஜிநாமா செய்தனர்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :