அரசு அலுவலகங்கள் முதல் ரயில்கள் வரை - தொடரும் இந்தி எழுத்து அழிப்பு சம்பவங்கள்

அரசு அலுவகங்கள் முதல் ரயில்கள் வரை - தொடரும் இந்தி எழுத்து அழிப்பு சம்பவங்கள் படத்தின் காப்புரிமை Facebook

இந்தியாவின் முக்கிய நாளிதழ்கள் சிலவற்றில் வெளியான செய்திகளை தொகுத்து வழங்குகிறோம்.

தினத்தந்தி: 'அரசு அலுவகங்கள் முதல் ரயில்கள் வரை - தொடரும் இந்தி எழுத்து அழிப்பு சம்பவங்கள்'

திருச்சி ரயில் நிலைய நடைபாதை மேம்பாலம் மற்றும் ரயிலில் இந்தி எழுத்துகள் அழிக்கப்பட்டுள்ளது. தொடரும் சம்பவங்களால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது என்று தினத்தந்தி செய்தி வெளியிட்டுள்ளது.

"மத்திய அரசின் புதிய கல்வி கொள்கை வரைவு அறிக்கையில் இந்தி மொழி கட்டாயம் படிக்க வேண்டும் என்ற அறிவிப்புக்கு தமிழகத்தில் பலத்த எதிர்ப்பு கிளம்பியதால் அதனை மத்திய அரசு உடனடியாக திரும்பப்பெற்று, 3-வது மொழியை மாணவர்களே தேர்வு செய்து விருப்பப்பட்டு அதனை படிக்கலாம் என்று தெரிவித்தது.

இந்நிலையில், இந்தி மொழிக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக திருச்சியில் மத்திய அரசு அலுவலகங்களான தலைமை தபால் நிலைய அலுவலகத்தின் பெயர் பலகை, தபால் பெட்டிகள், பி.எஸ்.என்.எல். அலுவலகத்தின் பெயர் பலகை, விமான நிலையத்தின் வெளியே அறிவிப்பு பலகை ஆகியவற்றில் எழுதப்பட்டிருந்த இந்தி எழுத்துகள் கருப்பு மையினால் அழிக்கப்பட்டிருந்தது. திருச்சியில் நேற்று முன்தினம் இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில், திருச்சி ரயில் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த எக்ஸ்பிரஸ் ரயில் மற்றும் நடை மேம்பாலத்திலுள்ள தகவல் பலகை மற்றும் அதே நடைபாதை மேம்பாலத்தில் 6, 7-வது நடைமேடைக்கு இறங்கும் இடத்தில் உள்ள பலகையிலும் இந்தி எழுத்துகள் அழிக்கப்பட்டுள்ளன" என்று தினத்தந்தி செய்தி வெளியிட்டுள்ளது.

இந்து தமிழ் - "லண்டன் மைதானத்தில் விஜய் மல்லையா உற்சாகம்"

படத்தின் காப்புரிமை ANI

இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான லீக் ஆட்டத்தை, லண்டன் ஓவல் மைதானத்தில் விஜய் மல்லையா கண்டுகளித்தார் என்று இந்து தமிழ் செய்தி வெளியிட்டுள்ளது.

"இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் மோதும் போட்டியை காண நேற்று விஜய் மல்லையா ஓவல் மைதானத்துக்கு வந்தார். வழக்கமாக கிரிக்கெட் போட்டிகளை காண அதிகமாக ஆர்வம் காட்டுபவர் விஜய் மல்லையா.

இந்தநிலையில் வங்கிக்கடன் மோசடி வழக்கில் தேடப்படும் குற்றவாளியாக உள்ள மல்லையா லண்டன் தப்பிச் சென்றார். அங்கு வசித்து வரும் அவரை இந்தியா அழைத்து வர சிபிஐ நடவடிக்கை எடுத்து வருகிறது.

இதனிடையே லண்டனில் இந்திய அணி பங்கேற்கும் கிரிக்கெட் போட்டி இன்று நடைபெறுவதால் மைதானத்துக்கு வந்த அவர் வழக்கம்போல் உற்சாகமாக கண்டுகளித்தார்" என்று அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி: ஆந்திரம், தமிழகத்திலும் பாஜக ஆட்சி - மோதி

படத்தின் காப்புரிமை Getty Images

ஆந்திரப் பிரதேசம் மற்றும் தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில் பாஜக ஆட்சி அமைக்கும் என்று பிரதமர் நரேந்திர மோதி கூறியதாக தினமணி செய்தி வெளியிட்டுள்ளது.

ஆந்திர மாநிலம், திருப்பதியில் நடைபெற்ற நன்றி தெரிவிக்கும் கூட்டத்தில் உரையாற்றியபோது அவர் இவ்வாறு கூறினார்.

”நான் பிரதமராக பதவியேற்ற பின் 2-ஆவது முறையாக ஏழுமலையானை தரிசித்து ஆசீர்வாதம் பெற திருப்பதிக்கு வந்துள்ளேன். தேர்தல், அரசியல் உள்ளிட்டவற்றைக் கடந்து நாட்டில் உள்ள 130 கோடி மக்களுக்கும் நல்லாட்சியை ஏற்படுத்த பாஜக முயன்று வருகிறது.

ஆந்திரத்தில் விவசாயம் முதல் தொழில்நுட்பம் வரை மக்கள் சிறந்து விளங்கி வருகின்றனர். மிகவும் வளங்கள் பொருந்திய ஆந்திரத்திற்கு நல திட்டங்களை வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

ஆந்திரம் மற்றும் தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில் பாஜக ஆட்சிக்கு வரும்" என்று மோதி பேசியதாக அந்த செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

உங்களிடம் இருந்து திருடப்படும் தகவல்கள்

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :