ஆதித்யநாத் குறித்த பதிவு: கைது முதல் விடுதலை வரை - நடந்தது என்ன?

யோகி படத்தின் காப்புரிமை Getty Images

சனிக்கிழமையன்று உத்தரப் பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் குறித்து டிவீட் செய்ததால் கைது செய்யப்பட்ட பத்திரிகையாளரை விடுவிக்க கோரி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பிரஷாந்த் கனோஜியா என்னும் அந்த பத்திரிகையாளர், தனக்கும் ஆதித்யநாத்துக்கு தொடர்பு இருப்பதாக ஒரு பெண் கூறுவது போன்ற வீடியோ ஒன்றை பகிர்ந்து இருந்தார்.

அந்த வீடியோவில், "வாழ்க்கையின் மீதியுள்ள நாட்களை தன்னுடன் கழிக்க விருப்பமா என அந்தப் பெண் கேட்டுள்ளார்."

முதலைமைச்சரை "அவமரியாதை" செய்தார் என போலிஸார் கனோஜியாவை வீட்டிலிருந்து பிடித்துச் சென்றனர்.

என்ன நடந்தது?

இந்த ட்வீட்டை கனோஜியா பதிவு செய்தவுடன் போலீஸார் அவரின் வீட்டிற்கு வந்து, முதலமைச்சரை "அவமரியாதை" செய்ததாக கூறி அவரை கைது செய்தனர்.

மேலும் இரண்டு தொலைக்காட்சி செய்தியாளர்கள், அனுஜ் ஷுக்லா மற்றும் இஷிகா சிங் சனிக்கிழமையன்று கைது செய்யப்பட்டனர். ஆதித்யநாத்தை "அவமரியாதை" செய்யும் விதமாக விவாதத்தை நடத்தியதாக அவர்கள் மீது குற்றம் சுமத்தப்பட்டது.

ஆனால் கனோஜியா பகிர்ந்த வீடியோதான் இதற்கு காரணமா என்று தெரியவில்லை.

மேலும் பத்திரிகையாளர்கள் அல்லாத மூன்று பேர் ஆதித்யநாத்துக்கு எதிர்மறையான கருத்துக்களை பகிர்ந்ததாக கூறி கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதையெல்லாம் சேர்த்து கடந்த மூன்று நாட்களில் மட்டும் ஆதித்யநாத் குறித்த சமூக வலைதள பதிவுக்கு ஆறு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

திங்களன்று, கனோஜியாவின் கைது குறித்து அவரின் மனைவி ஜிகிஷா அரோரா நீதிமன்றத்தில் முறையீடு செய்தார்.

கனோஜியா மீதான குற்றச்சாட்டுகள் என்ன?

அவமதிப்பு குற்றத்துக்காக இந்திய குற்றவியல் சட்டப் பிரிவு 500-ன் கீழ் மற்றும் கணினி மூலம் நேர்மையற்ற அல்லது மோசடியான குற்றச்சாட்டுகள் தொடர்பாக விசாரிப்பதற்கான இந்திய தகவல் தொழில்நுட்ப சட்டப்பிரிவு 66-ன் கீழ் கனோஜியா கைது செய்யப்பட்டுள்ளார்.

படத்தின் காப்புரிமை PRASHANT KANOJIA'S FAMILY

"பிரிவு 500ன் கீழ் கைது செய்ய முடியாது. முதலில் உங்கள் வழக்கு குறித்து நிரூபிக்க வேண்டும். பிறகு உங்களுக்கு சம்மன் வழங்கப்படும். உங்களுக்கு தீர்ப்பு வழங்கும் வரை உங்களை கைது செய்ய முடியாது. இந்த கைது சட்டம் தவறாக பயன்படுத்தப்பட்டுள்ளது என்பதை காட்டுகிறது." என பிபிசி செய்தியாளர் வினீத் கரேவிடம் வழக்கறிஞர் அர்ஜூன் ஷேரான் தெரிவித்தார்.

ஹேக்கிங் குறித்து பேசும் பிரிவு 66ம் இதில் சேர்க்கப்பட்டுள்ளது.

"இந்த கருத்துக்கள் அவமதிப்பு செய்யும் வகையில் உள்ளது என்று ஆதித்யாத் நினைத்திருந்தால் அவர் வழக்கு தொடர்ந்திருக்க வேண்டும். அதன்பிறகு யார் மீது குற்றம் சுமத்தப்பட்டதோ அவருக்கு சம்மன் வழங்கப்படும் பின் அவருக்கு தண்டனை வழங்கப்படும்." என்று அவர் தெரிவித்தார்.

என்ன சொல்கிறது நீதிமன்றம்?

"ஒரு குடிமகனின் சுதந்திரத்துக்கான உரிமை மீறப்பட்டுள்ளது. நாங்கள் தரவுகளை ஆராய்ந்து பார்த்தோம். ஒவ்வொருவருக்கும் ஒரு கருத்து இருக்கலாம். இந்த மாதிரியான கருத்துகளை பதிவிடாமல் இருந்திருக்கலாம்." என இதுகுறித்த மனுக்களை விசாரித்த உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது, ஆனால் ஏன் கைது செய்ய வேண்டும்? என்றும் உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

படத்தின் காப்புரிமை Getty Images

அந்த பத்திரிகையாளர் கொலைக்குற்றம் ஏதும் செய்யவில்லை என்று தெரிவித்துள்ள உச்சநீதிமன்றம். மேலும் அவர் ஜெயிலில் இருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது குறித்தும் வருத்தம் தெரிவித்துள்ளது.

நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு அவரின் விடுதலைக்கும் வழிவகுக்க வேண்டும் என செய்தியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

`இது ஒரு கடத்தல் நிகழ்வு கைது அல்ல`

பிபிசி செய்தியாளர் வினித் கரே

ஜூன் 8ஆம் தேதி பத்திரிகையாளர் பிரஷாந்த் கனோஜியா மளிகை பொருட்கள் வாங்குவதற்காக வீட்டிலிருந்து வெளியே சென்றிருந்தார்.

அவர் வீடு திரும்பியபோது இரண்டு அதிகாரிகள் வீட்டிற்கு வெளியே நின்றிருந்தனர்

அவர்கள் அழைத்து செல்லும்போது ஆதித்யநாத் குறித்த டிவீட்டிற்காக அவர் அழைத்து செல்லப்படுகிறார் என்று கூறப்பட்டது என கனோஜியாவின் மனைவி ஜகிஷா அரோரா தெரிவித்துள்ளார்.

இது அனைத்துமே ஒருசில நிமிடங்களில் நடந்து விட்டது.

“அவர்கள் எந்த ஒரு கைது ஆணையையும் வழங்கவில்லை” என ஜகிஷா தெரிவித்தார்.

அவர் மாநில காவல்துறையை தொடர்பு கொண்டுள்ளார். ஆனால் எந்த பதிலும் வரவில்லை.

இது அரசால் நடத்தப்பட்ட ஒரு கடத்தல் நிகழ்வு. இது ஒரு கைது அல்ல என வழக்கறிஞர் அர்ஜூன் ஷேரான் என்னிடம் தெரிவித்தார்.

இம்மாதிரியான நடவடிக்கைகள் விமர்சனங்களை ஒடுக்கும் ஒரு செயல் என்று அவர் தெரிவித்தார்.

கைது குறித்து என்ன சொல்கிறார்கள்?

குறுகிய காலத்தில் இத்தனை கைதுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. மேலும் கருத்துச் சுதந்திரத்தை ஒடுக்கும் செயல் இது என பலர் தெரிவித்துள்ளனர்.

இந்த கைது குறித்து கண்டனம் தெரிவித்துள்ள காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, உத்தரப் பிரதேச முதல்வர் முட்டாளதனமாக நடந்து கொள்கிறார் என்று தெரிவித்துள்ளார்.

நீதிமன்றத்தின் இந்த தீர்ப்புக்கு பிறகு பத்திரிகையாளர்களிடம் பேசிய கனோஜியாவின் மனைவி,"நான் இப்போது மகிழ்ச்சியாக இருக்கிறேன். எனக்கு இந்திய அரசமைப்பில் நம்பிக்கை உள்ளது. எனது கணவர் எந்த ஒரு குற்றத்தையும் செய்யவில்லை." என்று தெரிவித்துள்ளார்.

காதலை நீங்கள் மறைக்க நினைத்தாலும் மறைக்க முடியாது என்ற இந்தி பாட்டுடன் அந்த வீடியோவை பகிர்ந்துள்ள கனோஜியாவின் பதிவு "கோபத்தை வரவழைக்கக்கூடியது" என்று அரசு சார்பு வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.

நீதிமன்ற தீர்ப்பு குறித்து கருத்து தெரிவிக்க மறுத்த அவர், இந்த விஷயம் குறித்து இன்னும் ஆராய வேண்டியுள்ளது என்று தெரிவித்தார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :