ராஜராஜ சோழன் விவகாரம்: இயக்குநர் ரஞ்சித் மீது வழக்குப்பதிவு

இயக்குனர் ரஞ்சித்
Image caption இயக்குனர் ரஞ்சித்

இந்தியாவின் முக்கிய நாளிதழ்களில் வெளியான செய்திகளை இங்கே தொகுத்து வழங்குகிறோம்.

தினமணி - இயக்குநர் ரஞ்சித் மீது வழக்குப்பதிவு

கும்பகோணம் அருகே ராஜராஜ சோழனை அவதூறாக பேசியாக பதிவு செய்யப்பட்ட புகார் மீது காவல்துறை செவ்வாய்க்கிழமை ரஞ்சித் மீது வழக்குப்பதிவு செய்துள்ளது.

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகேயுள்ள திருப்பனந்தாளில் ஜூன் -5 ஆம் தேதி உமர்பாரூக் நினைவு நாள் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய திரைப்பட இயக்குநர் பா.ரஞ்சித், ராஜராஜ சோழனைப் பற்றிப் பேசியது இந்திய இறையாண்மைக்கு எதிரானது மேலும் சாதிகளுக்கு இடையே பிரிவினை மற்றும் பிளவை ஏற்படுத்தும் வண்ணம் உள்ளது எனவே ரஞ்சித்தை தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும் என திருவிடைமருதூர் காவல் துணை கண்காணிப்பாளரிடம் இந்து மக்கள் கட்சியின் முன்னாள் மாவட்ட செயலர் ஒருவர் திங்கள் கிழமை புகார் கொடுத்திருக்கிறார்.

இதையடுத்து ரஞ்சித் மீது இந்திய தண்டனைச் சட்டம் 153ன்படி கலவரத்தைத் தூண்டும் வகையில் பேசியது, பல்வேறு பிரிவினரிடையே விரோதத்தை உருவாக்கி பொது அமைதிக்கு குந்தகம் விளைவிப்பது ஆகிய பிரிவுகளின் கீழ் காவல்துறை செவ்வாய்க்கிழமை வழக்குப் பதிவு செய்துள்ளதாக இந்நாளிதழின் செய்தி கூறுகிறது.

தினத்தந்தி - அரசு பள்ளிகளில் கூடுதலாக 2 லட்சம் மாணவர் சேர்க்கை

''தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் கடந்த ஆண்டை விட இரண்டு லட்சம் மாணவர்கள் கூடுதலாக சேர்ந்திருக்கிறார்கள். ஆண்டுக்கு ஆண்டு அரசுப் பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

மிக விரைவில் தனியார் பள்ளிகளை மிஞ்சும் அளவுக்கு அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கைக்கான நடவடிக்கை எடுக்கப்படும்.

பொறியியல் படிப்பில் மாணவர்கள் சேராததற்கு வேலைவாய்ப்பின்மையும் ஒரு காரணம் '' என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் நிருபர்களிடம் கூறியுள்ளார்.

தினகரன் - உத்தரபிரதேசத்தில் வெயில் கொடுமைக்கு 4 தமிழர்கள் பலி?

ஆன்மீக சுற்றுலா சென்றுவிட்டு உத்தரப்பிரதேசத்திலிருந்து கோயம்புத்தூர் திரும்பிக்கொண்டிருந்த தமிழக பக்தர்கள் 4 பேர் வெயிலின் தாக்கத்தை தாங்க முடியாமல் கேரளா எக்ஸ்பிரஸ் ரயிலிலேயே உயிரிழந்ததாக தினகரன் செய்தி வெளியிட்டுளள்து.

படத்தின் காப்புரிமை NARINDER NANU

கோவை மற்றும் தமிழகத்தின் பல பகுதிகளைச் சேர்ந்த 70 வயதுக்கு மேற்பட்ட 68 பேர் கொண்ட குழுவொன்று வாரணாசி மற்றும் ஆக்ராவுக்கு ரயில் மூலம் சுற்றுப்பயணம் சென்றது.

சாதாரண படுக்கை வசதியில் பயணம் செய்த அவர்களின் ரயில் ஜான்சி ரயில் நிலையம் வந்தபோது அப்பகுதியில் 113 டிகிரி செல்சியசுக்கு மேல் வெப்பநிலை நிலவியுள்ளது. இதனால் வெப்பத்தை தாங்க முடியாமல் பலருக்கு மூச்சு திணறல் ஏற்பட்டுள்ளது. மூவர் ரயிலிலேயே உயிரிழந்ததாகவும் மற்றொருவர் மருத்துவமனை கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்ததாகவும் ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இவர்களின் பிரதே பரிசோதனை அறிக்கை வெளிவந்த பின்னரே முழு உண்மை தெரியவரும் என்றும் அந்தச் செய்தி கூறுகிறது.

தி இந்தியன் எக்ஸ்பிரஸ் - இடைக்கால சபாநாயகராகிறார் வீரேந்திர குமார்

வீரேந்திர குமார் இந்திய நாடாளுமன்றத்தின் மக்களவை இடைக்கால சபாநாயகராக செயல்படுவார் என அதிகாரபூர்வ செய்திகள் தெரிவிக்கின்றன.

படத்தின் காப்புரிமை virendra kuamr/ fb

தலித் சமூகத்தைச் சேர்ந்தவரும், ஏழு முறை நாடாளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டவருமான வீரேந்திர குமாருக்கு தற்போது 65 வயது. புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் ஜூன் 17-ம் தேதி பொறுப்பேற்றுக் கொள்வார்கள்.

ஜூன் 19-ம் தேதி நடக்கும் சபாநாயகர் தேர்தலையும் அவரே மேற்பார்வையிடுவார்.

கடந்த பாஜக அரசில் அவர் பெண்கள் மற்றும் குழந்தைகள் நல இணை அமைச்சராகவும் சிறுபான்மையினர் விவாகரங்களுக்கான இணை அமைச்சராகவும் பணியாற்றியுள்ளார்.

பிற செய்திகள் :

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்